இணைய மரத்தடிக் கூட்டங்கள்
கிராமப்புறங்களில் இரண்டு மூன்று பேர் சேர்ந்தால் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுவார்கள். அந்தப் பக்கம் போவோரும் அந்த மரத்தடிக் கச்சேரியில் நின்று கொஞ்சம் நேரம் அந்தப் பேச்சைக் கேட்டுவிட்டு, பேசி விட்டுச் செல்வார்கள். அது போலவே, நகர்புறங்களில் டீக்கடையைச் சொல்லலாம். உள்ளூர் அரசியல் மற்றும் இன்ன பிற வம்படி பேச்சுகளுக்கு டீக்கடை பெஞ்ச், சலூன், பேக்கரி, தெருமுனை என இது போன்ற இடங்கள் பல உள்ளன. இது போல, பிரச்சார, பிரசங்க கூட்டங்களுக்குத் தெருவில் மேடையைப் போடுவார்கள், அல்லது ஒரு அரங்கை ஏற்பாடு செய்வார்கள். இதையெல்லாம் இணையத்தில் செய்வதற்கு உதவ வந்துள்ள செயலிதான் க்ளப் ஹவுஸ் (Clubhouse) மற்றும் வேறு சில செயலிகளும்.
இணையத்தில் கருத்துப் பரிமாற்றத்திற்கெனப் பல்வேறு வகையான சமூக வலைத்தளங்கள் உள்ளன. வலைத்தளங்கள் எனப்படும் ப்ளாகுகள் தொடங்கி ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம், டிக்டாக், பின்ட்ரஸ்ட் எனப் பல வகையில் நமது எண்ணங்களை, கருத்துகளை, படைப்புகளைப் பரிமாறிக்கொள்ள எண்ணற்ற தளங்களைக் கடந்து வந்துள்ளோம். அதில் கருத்துகளைப் பேச்சு மூலம் பகிர வந்துள்ள செயலி தான் க்ளப்ஹவுஸ் (Clubhouse). கடந்தாண்டு ஐஃபோனுக்கான செயலியாக வெளிவந்த இது, கடந்த சில மாதங்களாகச் சமூக வலைவெளியில் சலசலப்பைக் கிளப்பி வருகிறது.
அனைவராலும் இந்தச் செயலியை உடனடியாகத் தரவிறக்கி பயன்படுத்திவிட முடியாது. முதலில், இதற்கான அழைப்பிதழ் தேவை. இதைப் பயன்படுத்தும் நண்பர்கள் யாரேனும் அழைப்பிதழ் அனுப்பினால், அதன் மூலம் இதில் சேர்ந்து இதைப் பயன்படுத்த தொடங்கலாம். புதுச் செயலியின் பயன்பாட்டைச் சிறிது சிறிதாகப் பழுது நீக்கி பயனாளிகளிடம் கொண்டு செல்வதற்காக இத்தகைய ஏற்பாடு. நமது ஆர்வத்திற்கேற்ப, விருப்பத்திற்குரிய தலைப்பில் நடைபெறும் கூட்டத்திற்குச் சென்று அங்குப் பேசப்படுவதைக் கேட்கலாம். நீங்களும் பேச விரும்பினால், அங்கு உங்கள் கையை உயர்த்தலாம். கூட்டத்தை நடத்துபவர்கள் அனுமதித்தால், உங்களுக்குப் பேச அனுமதி கிடைக்கும். நீங்களும் சொற்பொழிவாற்றலாம்.
இங்குத் தொழில்நுட்பம், கல்வி, மொழி, கலை, வணிகம், இசை, விளையாட்டு போன்ற பல்வேறு வகைக் குழுக்கள் (Clubs) உள்ளன. அந்தக் குழுக்கள் சார்பாகப் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்படும். இக்குழுக்களில் இணைந்தோமானால், இந்தக் கூட்டங்கள் நடைபெறும் பொழுது நமக்குத் தகவல் வந்து சேரும். நேரம் ஒத்துழைத்தால் சேர்ந்து சிறப்பிக்கலாம்.
தற்சமயம் க்ளப் ஹவுஸில் 10 மில்லியன் பயனர்கள் உள்ளனர். இந்தாண்டு ஜனவரியில் 2 மில்லியனாக இருந்த எண்ணிக்கை, ஐந்தே மாதத்தில் 10 மில்லியனாக உயர்ந்துள்ளதை, அனைத்து சமூக வலைத்தள ஜாம்பவான்களும் உன்னித்துக் கவனித்து வருகிறார்கள். டிவிட்டர் இதை வாங்குவதற்கு 4 பில்லியன் டாலர்களுக்குப் பேரம் பேசி பார்த்தார்கள். பேரம் படியாததால், தங்களது தயாரிப்பில், பரிசோதனையில் இருந்த ஸ்பேசஸ் (Spaces) வசதியை ட்விட்டரில் அனைவருக்குமான பயன்பாடாக வெளியிட்டது. க்ளப்ஹவுஸ் போல ட்விட்டரின் இந்த வசதிக்கும் நல்ல வரவேற்பு கிடைக்க, ட்விட்டர் செயலியில் இதற்கு முக்கிய இடத்தை வழங்க உள்ளது.
நீங்கள் ட்விட்டர் பயனர் என்றால் இதைக் கவனித்திருக்கலாம். இரவு பகல் பாராமல் ஏதேனும் ஸ்பெஸ் கூட்டம் நடந்துக்கொண்டே இருக்கும். இளையராஜா பற்றி, மருத்துவர்களின் கோவிட் சேவை பற்றி, தடுப்பூசி சந்தேகங்கள் பற்றி, அரசியல் கட்சிகள் பற்றி, படங்கள் பற்றி யாரேனும் எப்போதும் கூட்டங்கள் நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் கலந்துக்கொண்டு கேட்டுக்கொண்டோ, அல்லது பேசி விட்டோ செல்கிறார்கள்.
சாமானியர்களின் திண்ணைப் பேச்சு, மொன்னைப் பேச்சு மட்டுமில்லாமல் பிரபலங்கள், ஊடக நிறுவனங்களும் இதில் கூட்டம் நடத்தத் தொடங்கி உள்ளனர். சமீபத்தில் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ட்விட்டர் ஸ்பேஸில் நடந்து முடிந்தது. இதில் படத்தின் நாயகன் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பாடகர்கள் தீ, அறிவு, பாடலாசிரியர் விஜய் எனப் பலர் கலந்துக்கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். 17 ஆயிரம் பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, ஸ்பேஸின் சிறு வரலாற்றில் இதுவரையிலான பெரிய கூட்டம் எனப் பதியப்பட்டுள்ளது. வரும் காலத்தில் இதிலும் மில்லியன், பில்லியன் கணக்கில் சாதனைகள் காட்டுவார்கள்.
இது தவிர, ஃபேஸ்புக், ஸ்பாடிஃபை, ரெட்டிட், ஸ்லாக் போன்ற நிறுவனங்களும் இவ்வகை வசதியைத் தங்களது செயலிகளில் கொண்டு வரவுள்ளனர்.
தற்சமயம் இவ்வகைத் தொழில்நுட்பத்தின் ஆரம்பக் காலம் என்பதால் பல்வேறு வகைப் பிரச்சினைகளைக் காண முடிகிறது. சில கூட்டங்களில் இருந்து பயனர் தானாகவே வெளியே தள்ளிவிடப்படுதல், கூட்டம் அதுவாகவே முடிவுறுதல் போன்ற தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஒரு பக்கம் என்றால், தனிநபர் தகவலைக் கூட்டத்தில் பகிர்தல், கூட்டத்தில் பேசப்படும் பேச்சைப் பதிவு செய்து வெளியிடுதல் சார்ந்த பிரச்சினைகள் மற்றொரு பக்கம். இது இல்லாமல், இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இன்னொரு சர்ச்சை. சொல்லகம் என்று கவிஞர் மகுடேஸ்வரன் க்ளப் ஹவுஸிற்குப் பெயர் வைக்க, அது எப்படி ஒரு செயலியின் பெயரைத் தமிழ்படுத்தலாம் என்று மற்றவர்கள் கேள்வி கேட்க, அந்த விவாதமும் ஓடிக்கொண்டிருக்கிறது.
எவ்வித கருத்துகளையும் நமது குரலில் கேட்போரிடம் நேரடியாகப் பகிர்ந்துக்கொள்ளச் செய்திடும் இவ்வகை வசதி, சமூக ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமானதொன்றாக எண்ணத் தோன்றுகிறது. எளியவர்களின் குரலை எல்லோரிடமும் கொண்டு சேர்த்திட இந்த வசதி உதவிடுமானால், அதை விடப் பெரிய வெற்றி இச்செயலிகளுக்கு என்ன இருந்துவிடப் போகிறது? அதே சமயம், பயனர்களும் தங்களுக்குக் கிடைத்துள்ள இந்தக் கருத்து சுதந்திர வசதியை, கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும், பொறுப்புடனும் பயன்படுத்தினால், இதன் பயன்கள் முழுக்க நமது சமூகத்திற்கே.
- சரவணகுமரன்