ஃபேமிலி மேன் 1 & 2
திரைப்படத்திற்கான ஆக்கமும் வரவேற்பும் மட்டும் வெப்சீரிஸ் தொடர்களுக்குக் கிடைக்கவில்லை, திரைப்படங்களுக்குக் கிடைக்கும் சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் வெப்சீரிஸ் தொடர்களுக்குக் கிடைத்து வருகின்றன. அப்படியான ஒரு எதிர்ப்பு தமிழர்களிடையே ஃபேமிலி மேன் இரண்டாவது சீசன் தொடருக்கு எழுந்துள்ளது.
ஃபேமிலி மேன் முதல் சீசன் 2019 ஆம் ஆண்டு அமேசான் ப்ரைமில் ஒளிப்பரப்பானது. மும்பையில் வெளிதோற்றத்திற்குச் சராசரி குடும்பஸ்தனாகக் காட்சியளிக்கும் ஶ்ரீகாந்த் திவாரி, வெளியுலகிற்குத் தெரியாமல் இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் டாஸ்க் (TASC) என்ற உளவுப்படையில் முக்கியப் பொறுப்பில் கடமையுணர்ச்சியுடன் பணியாற்றுகிறான். எப்போது இந்தியப் பாதுகாப்பிற்குப் பங்கம் ஏற்பட்டாலும், களத்தில் இறங்கி நாட்டைக் காப்பாற்ற ஓடத் தொடங்கிவிடுவான். இது தெரியாத அவனுடைய குடும்பத்திற்கு அவன் தோல்விக்குரியவனாகக் காட்சியளித்தாலும், குடும்பத்திற்குள் ஏற்படும் பிரச்சினைகளையும் தனது அலுவல்ரீதியான அதிகாரம் கொண்டு மறைவாகவே தீர்த்து வைக்கிறான்.
முதல் சீசனில் முஸ்லீம் தீவிரவாதக் குழுவிடம் இருந்து டில்லி மக்களுக்கு ஏற்பட இருந்த பெரும் சேதத்தைத் தவிர்த்த ஶ்ரீகாந்த் திவாரி, இந்தாண்டு ஜூன் மாதம் வெளியான இரண்டாவது சீசனில் ஈழப் போராளி குழுவிடம் இருந்து இந்தியப் பிரதமரைக் காக்கிறான். முதல் சீசனில் இடம் பெற்றிருந்த சில காட்சிகளுக்காகவும், வசனங்களுக்காகவும் ஆர். எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து கண்டனக்குரல் எழும்பியிருந்தது. இரண்டாவது சீசனில் ஈழப் போராளிகளை, தமிழர்களைக் காட்டியிருக்கும் விதத்தைக் கண்டித்துத் தமிழ் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புக் குரல் எழும்பியிருக்கிறது. ஒருபக்கம் இது வெப்சீரிஸ் வடிவத்தில் இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தியதால் உண்டான பின்விளைவோ என்று எண்ணத் தோன்றினாலும், இன்னொரு பக்கம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து அதன் மூலம் அதிகமான பார்வைகளைப் பெறுவதற்கான முயற்சியோ இது என்றும் எண்ணத் தோன்றுகிறது.
அமேசான் ப்ரைமில் வெளியான வெப் சீரிஸ் தொடர்களில் அதிகமாகப் பார்க்கப்பட்ட தொடர்களிலும், அதிகமாகப் பாராட்டப்பட்ட தொடர்களிலும் இத்தொடர் முன்னணியில் உள்ளது. மும்பையைச் சேர்ந்த ஹிந்தி பேசும் நாயகன் என்றாலும், அவனுடைய மனைவியான சுசி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். முதல் சீசனில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டு உதவியுடன் இயங்கும் இஸ்லாமியத் தீவிரவாத குழுவில் இணைந்து இந்தியாவிற்கு எதிராக வேலை பார்ப்பதாகக் காட்டியிருக்கிறார்கள். இரண்டாவது சீசனில் ஈழத் தமிழர்களும், அவர்களுக்கு ஆதரவாகச் சில தமிழர்களும் இந்திய அரசிற்கு எதிராகச் செயல்படுவதாகக் காட்டியுள்ளனர். இத்தகைய காட்சியமைப்பின் மூலம் வட இந்தியாவையும் மட்டுமில்லாமல் தென்னிந்தியாவையும் இத்தொடர்களைத் தொடர்ந்து காண வைத்துவிடுகிறார்கள். கதாபாத்திரங்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் நடிகர்களைக் காணும் போதும், அவர்களது இந்தத் தேசியளவிலான கவன ஈர்ப்பு நோக்கம் தெரிகிறது.
ஶ்ரீகாந்த் திவாரியாகப் பிரபல ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பேயி அனாயசமாக அதிரடி உளவுத்துறை அதிகாரியாகவும், சராசரி குடும்பத்தலைவனாகவும் நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாகச் சுசி ஐயராக நம்ம பருத்தி வீரன் ’முத்தழகு’ பிரியாமணி நடித்திருக்கிறார். முதல் சீசனில் போலீஸ் அதிகாரி பாஷாவாகக் கிஷோரும், ராணுவ கமெண்டர் கதாபாத்திரத்தில் சுதிப் கிஷனும் நடித்திருக்கிறார்கள். இரண்டாவது சீசனில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஈழ போராளி ராஜியாகச் சமந்தாவுடன் கதை தமிழகத்தில் நடப்பதால், ஏகப்பட்ட தமிழ் நடிகர்களும் நடித்துள்ளனர். அழகம் பெருமாள், மைம் கோபி, தேவதர்ஷினி, அபிஷேக் எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல் சீசனில் கதை கேரளாவில் தொடங்கினாலும், பின்பு பெருமளவு மும்பையிலும், காஷ்மீரிலும் நடைபெறுகிறது. அதனால் வசனங்கள் ஹிந்தியிலும், மலையாளத்திலும் இருந்தன. அந்தத் தொடரைத் தமிழிலும் வெளியிட்டு இருந்ததால் புரிந்துக்கொள்வதில் பிரச்சினை இருக்கவில்லை. இரண்டாவது சீசனின் ட்ரைய்லரைப் பார்த்தே சீமான், வைகோ மற்றும் தமிழக அரசின் சார்பிலும் எதிர்ப்புக் குரல் எழும்பவே, இந்தச் சீசனுக்கான தமிழ் மொழிமாற்றத்தை இதுவரை வெளியிடவில்லை. ஆனால், பெருமளவு தமிழ் கதாபாத்திரங்கள் தமிழில் பேசுவதால், இதிலும் புரிந்துக் கொள்வதில் பிரச்சினை இருக்கவில்லை. தற்சமயம் எதிர்ப்புக் குரல்களெல்லாம் அமுங்கி வருவதால், விரைவில் தமிழ் மொழிமாற்றத்தை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.
இந்தச் சர்ச்சைகளைத் தாண்டி இத்தகைய நிஜமும், பொய்யும் கலந்த கதைக்களங்களும், காட்சியமைப்புகளும் நம்முடைய கவனத்தை ஈர்த்துச் சுவாரஸ்யமாக, விறுவிறுப்புடன் இருக்கிறது என்பது உண்மை. இது உண்மை சம்பவங்களுடன் கூடிய வரலாற்றுத் தொடர் இல்லையென்பதால், ரொம்பவும் ஸ்ரிட்க்ட் ஆபிசர்களாக இருக்கத் தேவையில்லை. அதற்கு மேல், கெட்ட வார்த்தை வசனங்களை, ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளை, கலாசாரச் சீர்கேடு காட்சிகளைத் தவிர்க்க நினைத்தால், முக்கியமாகப் படம் பார்த்து உணர்வு புண்படும் மனநிலை இருப்பவர்கள் இத்தொடரைத் தவிர்த்துவிடுங்கள்.
- சரவணகுமரன்
Tags: Family man