கதை சொல்லும் ஓவியங்கள்
© Copyright 2021 https://wooarts.com/elayaraja-swaminathan/
இளையராஜா சுவாமிநாதன், இந்தியாவில் யதார்த்த பாணி உருவப் பட ஓவியங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். ஓவியங்களின் உணர்வுகளை ஓளிகீற்றுகளால் வெளிக் கொணர்ந்து உயிரூட்டியவர்; தமிழ்நாட்டு கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இவரது ஓவியங்களைப் பார்ப்பவர்கள் இது புகைப்படமா, ஓவியமா எனக் குழம்பும் வண்ணம் மிகத் தத்ரூபமான படைப்புகளை வழங்கியவர் – உலகரங்கில் பாராட்டுகளைப் பெற்று தனக்கென ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட இந்தக் கலைஞன் தனது 43 வயதில், சென்ற ஜூன் 6ஆம் நாள், கொரோனா பாதிப்பால் மரணித்துவிட்டார்.
இந்தியப் பின்னணியில் ராஜா ரவி வர்மா அவர்கள் உருவாக்கிய யதார்த்த உருவப் படங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான ரவி வர்மாவின் படைப்புகளில் பெரும்பாலானவை அவரது உறவுகள், நண்பர்களின் விருப்பத்தின் பேரில் வரையப்பட்டவை. அல்லது இதிகாசப் பின்னணியில் உருவானவை. அவருக்குப் பின்னர், இந்தியாவில் சாதனைகள் பல படைத்த ஓவியக் கலைஞர்கள், வெவ்வேறு பாணிகளில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தனர். எழுபதுகளில் துவங்கிய நவீன ஓவிய அலை, பின்னர் காண்டம்பரரி, அப்ஸ்டிராக்ட், ஃபேண்டஸி என வளர்ந்து வர, ஃபோட்டோ ரியலிசம் எனப்படும் யதார்த்த உருவப் படங்களுக்கான பாணி சற்று தடம் மாறி சர்-ரியலிசம், போர்றெய்ட் எனச் சென்றது.
96ல் ஓவியக் கல்லூரியில் சேர்ந்த இளையராஜாவும், ஃப்ரீ ஹேண்ட் ஸ்கெட்ச்சிங்கில் துவங்கி, வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக் என பல தளங்களில் பல்வேறு பாணிகளில் படைப்புகளைப் படைத்து வந்தாலும், ஃபிகரேடிவ் பெயிண்டிங் எனும் உருவப் படம் வரைவது அவரது உள்ளுணர்வில் கலந்து உயிரோட்டமாகவே மாறிவிட்டிருந்தது. சிறு வயது முதலே உருவங்கள் தலைப்பில் நடைபெறும் ஓவியப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார் இளையராஜா. அதற்குத் தனது பள்ளி ஓவிய ஆசிரியர் துரை அவர்களது ஊக்கமே காரணமென்று சொல்லியிருக்கிறார் இவர். ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கு இவருக்கு பயிற்சியளித்த மனோகர், சிவபாலன் எனும் ஓவியர்கள், இளையராஜாவைத் தவிர்த்துவிட்டு போர்ட்ரெய்ட் எனும் உருவச்சித்திரங்களை நினைத்துப் பார்க்க முடியாது எனுமளவுக்கு அவருக்குள் ரியலிசப் பாணி ஓவியம் நுழைந்துவிட்டிருந்தது என்கிறார்கள். பயிற்சி காலத்தில் தினமும் குறைந்தது 50 போர்ட்ரெய்டுகளையும் இன்னபிற பாணிகளையும் வரைந்துவிடுவார் இளையராஜா. ஐந்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு உருவப்படமென வரைந்து தள்ளுவான் அவன் என்கிறார்கள் அவர்கள்.
ஒவ்வொரு ஓவியக் கலைஞனுக்கும் தோன்றுவது போல ஓவியக் கண்காட்சியில் தனது படங்கள் இடம்பெற வேண்டுமெனும் எண்ணம் இளையராஜாவுக்கும் துளிர்விட்டுள்ளது. “அந்தச் சமயத்தில் எனக்குப் பலவிதப் பாணிகள் பரிச்சயமாகிவிட்டிருந்தன. கண்காட்சி நடத்தும் நிறுவனர்களிடம் எனது அனைத்து படைப்புகளையும் காண்பித்தபோது அதையெல்லாம் அவர்கள் பார்த்து, தள்ளி வைத்துவிட்டு, ‘இதெல்லாம் சரி .. உன்னுடைய தனித்தன்மையைக் காமிக்கற மாதிரி எதுவுமில்லையே’ என்று சொல்லிவிட்டனர். அப்போது தான், அவரவர் எதிர்பார்க்கும் வகையில் படைப்பவன் ஓவியத் தொழிலாளியாகிவிடுகிறான். தனக்காக படைக்கும் ஓவியனல்ல என்பது புரிந்தது எனக்கு” என்கிறார் அவர். அந்தச் சமயத்தில் தான், தனது சிறுவயது பலத்தையே வளர்த்துக் கொண்டால் என்ன தோன்றியுள்ளது அவருக்கு. தனது ஓவியக் குருக்களான அந்தோணிதாஸ், அல்போன்ஸ், சுரேந்திரநாத், மனோகர் ஆகியோரின் தாக்கமில்லாமல் வரைவதற்கு சிறிது காலம் பியத்தனப்பட்டார். தனது படைப்புகளுக்கான காட்சிக் களத்தை தேர்ந்தெடுக்க அவருக்கு கைகொடுத்தது அவரது கூட்டுக் குடும்ப அனுபவம். கும்பகோணத்தில் செம்பியவரம்பல் எனும் கிராமத்தில் ஐந்து மூத்த சகோதரர்கள், ஐந்து சகோதரிகளென பெரிய குடும்பம் அவருடையது. சகோதரர்கள் அனைவரும் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுவிட அவர்களது மனைவிகள், சகோதரிகளென இளையராஜாவைச் சுற்றி பெண்களாகவே இருந்துள்ளனர். அவர்களது முகங்கள் வெளிப்படுத்தும் மனவுணர்வுகள் இவருக்குள் மிக ஆழமாகப் பதிந்துவிட அதையே தனது படைப்புகளின் கருவாகவும், தனது கிராமச் சூழலையே பின்னணியாகவும் உருவாக்கிக் கொண்டார் அவர். இப்படியாக உருவானது தான் அவரது ‘திராவிடப் பெண்கள்’ ஓவிய கலெக்ஷன். ஓவ்வொரு கம்போசிஷனிலும் ஒளியமைப்புக்கும், அது உண்டாக்கும் பரிமாணங்களிலும் தனது தனித்தன்மையை நிலைநிறுத்தியிருப்பார் இளையராஜா.
அமெரிக்க ஓவியர் தாமஸ் கின்கேட் – லைட்டிங் ஓவியர் என்று புகழப்படுபவர். இவரது படைப்புகளின் கரு பட்டிக்காட்டுத்தனமான சிற்றூர் அல்லது கிராமியச் சூழல். இயற்கைபொங்கும் ஆறுகள், மலைகள், மரங்கள், பூச்செடிகளின் பின்னணியில் அழுக்கடைந்து, கூரை பிய்ந்திருக்கும் எளிமையான வீடுகள் என்பது தான் கருப்பொருளாகயிருக்கும். எந்தவித உயிர்ப்புமின்றி, இருளடைந்திருக்கும் சூழலை அந்த வீட்டுக்குள் எரியும் ஒரு விளக்கின் ஒளியில் ஜொலிக்கவைப்பதே தாமஸின் அசாத்தியத் திறனாகப் பேசப்பட்டது. அது போலவே இளையராஜாவின் ‘திராவிடப் பெண்கள்’ ஓவியத் திரட்டுகளில் ஒளி ஒரு அலாதியான ஈர்ப்பை உண்டாக்கிவிடும். இவரது கூடுதல் பலம், இயற்கையில் தோன்றும் சூரிய ஒளியே இவரது பெரும்பாலான படங்களில் அந்த ஜாலத்தை நிகழ்த்திவிடும். மாலை நேரத்து மஞ்சள் வெயிலை – க்ரோம் யெல்லொ, லெமன் யெல்லோ இந்த இரண்டு வண்ணங்களை குழைத்து மிருதுவான, மிதமான, அழுத்தமான தீண்டல்களில், தனது தூரிகையால் ஜாலம் படைப்பதில் வல்லவர் இவர்.
பொதுவாக உருவப்படங்கள் வரைபவர்கள் பின்னணி பொருட்களில் அவ்வளவு கவனம் செலுத்தியிருக்க மாட்டார்கள். அதற்கு காரணம் கருப்பொருளில் மக்கள் கவனம் செலுத்தவேண்டுமென்பதினால். ஆனால் இளையராஜாவின் படங்களில் பின்னணி பொருட்களும் மிகத் துல்லியமாகப் படைக்கப்பட்டிருக்கும். அது கதவின் கீல்கள், தாழ்ப்பாள், தூண்கள், சமையலறை பொருட்கள் ஒவ்வொன்றும் தத்ரூபத்துடன் மிளிரும். “நான் அவற்றை கூடுதல் பொருளாகப் பார்ப்பதில்லை. அவையும் எனது காட்சிப்பாத்திரங்கள். வண்ணக் குழைவுகளின் பல அடுக்குகளால் அவற்றை நேர்த்தியுடன் படைக்கப் பழகிக் கொண்டேன்” என்று சொல்லியிருக்கிறார் இளையராஜா.
தன் வீட்டைச் சுற்றியிருக்கும் பகுதிகளில், தனக்குத் தெரிந்த முகங்களை மாதிரிகளாகக் கொண்டு ஓவியங்களைப் படைப்பதை குறிக்கோளாகவே கொண்டது இவரது சிறப்பம்சம். காரை பேர்ந்த சுவர், பாசி படிந்த கோவில் குளம், இருளைடைந்த அடுக்களை, ஒழுங்கற்ற பாத்திரங்கள், மரத்தடி தெய்வங்கள், திறந்தவெளி முற்றம் என ஒவ்வொன்றும் தமிழ்நாட்டுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும். அம்மாவும் குழந்தையும், பூ கட்டும் பெண், கோயில் குளத்தருகே பெண், சமைக்கும் பெண், பிள்ளையாரை வணங்கும் பெண் குழந்தைகள் .. ஒப்பனை ஏதுமில்லாத மாநிற முகங்கள் ஒவ்வொன்றிலும் ததும்பும் ஜாஜ்வல்யம். அது இளையராஜாவுக்கே உரித்தான முத்திரை. “தெய்வச்சிலைகளை பார்க்கும் பொழுது நம்முள் தோன்றும் நிச்சலனத்தை அந்தப் பெண்களின் முகத்தில் கொண்டு வர முயல்கிறேன். இந்தப் பெண்களின் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். மனதில் கனவு ஓடிக்கொண்டிருக்கும். இதனை கூட்டுக் குடும்பத்தில் என் அண்ணிகளிடம், அக்காகளிடம் பார்த்திருக்கிறேன். எனது சுற்றத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களது முகங்களை எனது கற்பனைக்கு தகுந்தவாறு மாற்றி விடுகிறேன். அவர்களின் எதோவொரு நடவடிக்கை என்னை ஈர்க்கும்.. அதற்கேற்ற பின்னணி கிடைக்கும் பொழுது அதனை ஓவியமாக வரைவேன்” .
ஊடகப் பேட்டியொன்றில் இளையராஜா தன்னை நெகிழ வைத்த அனுபவமாகச் சொன்னது – “பெங்களூரிலிருந்து ஒரு குடும்பம் என்னைத் தொடர்புகொண்டு எனது ஓவியத்தை வாங்க வேண்டுமென கேட்டார்கள். நான் அவர்களுக்கு அருகிலிருக்கும் ஒரு கேலரியைச் சொல்லி, அங்கு எனது ஓவியங்கள் கிடைக்குமென்று சொன்னேன். சில நாட்கள் கழித்து எனது ஓவியங்களை வாங்கிவிட்டதாக என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்கள். என்னுடைய ஓவியம் அவர்களைக் கவர்ந்ததற்கான காரணத்தைப் பற்றி கேட்ட போது, ‘நீங்கள் எங்களுக்கு அறிமுகமாகு முன் எங்களது பையனுக்கு அறிமுகமாகி விட்டீர்கள். எங்கள் பிள்ளை ஒரு ஸ்பெஷல் சைல்ட். தனக்கு பசிப்பதையோ, வலிப்பதையோ கூட அவனுக்குச் சொல்லத் தெரியாது.. ஐ பேடில் எதாவது காணொளிகளை பார்ப்பது, பாடல்கள் கேட்பது மட்டுமே அவனது செயற்பாடுகளாக இருந்தது. ஒரு முறை எப்படியோ உங்களுடைய படமொன்று அவன் கண்ணில் பட்டுள்ளது. பாட்டு, இசை எந்த ஒலியுமில்லாமல் அவன் எதையோ பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட நாங்கள் அவன் ஒரு ஓவியத்தைப் பார்ப்பதைப் புரிந்துகொண்டோம். அடுத்த சில தினங்களில் அவன் எப்படியோ உங்களது படங்கள் இருக்கும் இணையப் பக்கத்தைத் தேடிக் கண்டுபிடித்து அந்தப் படங்களைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினான். அவன் அறியாமல் அவனை கவனித்தபோது ஓவியத்திலிருந்த பாத்திரங்களோடு எதோ பேச முயற்சித்துக் கொண்டிருந்தான்.. அதற்குப் பின்னர் தான் நாங்கள் உங்களைப் பற்றியும், உங்களது படைப்புகள் பற்றியும் அறிந்து கொண்டோம்’ என்றனர். பின்பு அந்தப் பிள்ளையின் காணொளியையும் எனக்கு அனுப்பியிருந்தார்கள். எனது ஓவியங்களைப் பார்த்த பொழுது அவன் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சி என் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது. எனக்குக் கிடைத்த அத்தனை விருதுகளும், அங்கிகாரங்களும் சிறுத்துப்போய் உண்மையான பாராட்டு கிடைத்தது போலிருந்தது”
இளையராஜா ஒரு கட்டத்துக்கு பிறகு தனது ஓவியங்களை, விற்பனைக்காக கேலரி நிறுவனங்களுக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டார். “விற்பனை நிறுவனங்கள் ஓவியத்துக்கு கிடைக்கும் விலையைப் பொருத்து, நான் எந்த வகையான ஓவியம் வரைய வேண்டுமென பணிக்கத் தொடங்கினார்கள். கலையின் மதிப்பு விலையல்ல.. எனது கருத்துகளைச் சுதந்திரத்துடன் சொல்ல முற்படுகிறேன்” என்றவர் “எத்தனையோ கலைஞர்கள் சரியான வாய்ப்பின்றித் தொலைந்து போய்விடுகிறார்கள்.. அவர்களை இந்நிறுவனங்கள் சுவிகரித்து, அறிமுகம் கொடுக்கவேண்டும் என விழைகிறேன்” என்ற கூடுதல் காரணத்தையும் சொல்லியிருந்தார்.
அவருடைய மனதில் என்ன தோன்றியதோ, 2020ல் ஒரு ஊடகப் பேட்டியில் ” எல்லாருக்கும் மரணம் நிச்சயம். கலைஞர்களுக்கு மட்டும் தான் மரணமில்லா வாழ்க்கைக் கிட்டும். ஒரு கலைஞன் விட்டுச் செல்லும் பணத்தைத் தாண்டி அவன் விட்டுச் செல்லும் படைப்புகள் நீடித்து நிற்கும். அவை தான் அவன் மரணிமின்றி வாழ்வதற்கான அடையாளங்கள்” என்று சொல்லியிருந்தார். தமிழ்ப் பண்பாட்டை, மண்ணின் மணத்துடன் ஓவியங்களாகப் படைத்து உலகப் புகழ்பெற்று வந்த நேரத்தில் அவர் மறைந்து விட்டார். மனதிலிருந்து அகலா நினைவுகளையும், படைப்புகளையும் அளித்துச் சென்ற இளையராஜா சுவாமிநாதன் அவர்களுக்கு, என்றுமே மரணமில்லை.
- ரவிக்குமார்.