காட்டுத்தீயின் வடு
சமீபத்தில் மினசோட்டாவின் வடக்கே உள்ள வனப்பகுதிக்குள் சென்று திரும்பி கொண்டிருந்தபோது, மழை நன்றாகப் பிடித்துக்கொள்ள, மழைக்கு ஒதுங்க இடம் தேடி, ஹிங்க்லே (Hinckley) என்ற ஊரில் உள்ள ஃபயர் மியூசியத்திற்குள் நுழைந்தோம். ஃபயர் மியூசியம் என்றவுடன் முதலில் ஏதோ தீயணைப்பு நிலையம் பற்றிய மியூசியம் என்று தான் நினைத்தேன். பிறகு அங்குச் சென்றபின்பு தான் தெரிந்தது, 125 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரைச் சூறையாடி சென்ற காட்டுத்தீயின் நினைவுகளைப் பதிவு செய்து வைத்திருக்கும் காலப் பெட்டகம் என்று.
மினியாபொலிஸிலிருந்து துலூத் செல்லும் வழியில், சுமார் ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடக் கூடிய தொலைவில் (80 மைல்கள் தொலைவில்) உள்ளது ஹிங்க்லே என்ற இந்த அழகியச் சிற்றூர். இவ்வூரின் ஊராட்சி நிர்வாகத்தில் செயல்படும் ஹிங்க்லே ஃபயர் மியூசியத்தில், நாங்கள் சென்றிருந்த சமயத்தில் ஒரு தாத்தாவும் பாட்டியும் பணியாற்றிக் கொண்டு இருந்தனர். சொற்ப அளவிலேயே மக்கள் வந்து சென்று கொண்டிருந்தனர். அதனாலேயே வருபவர்களிடம் நன்றாகப் பேசினார்கள். ஆர்வத்துடன் பதிலளித்தார்கள். குசலம் விசாரித்தார்கள்.
ரயில் பாதையை ஒட்டி இருக்கும் இந்த மியூசியம், தீ விபத்தில் அழிந்துபோன ரயில் நிலையத்தை மீட்டெடுத்து, அதன் நினைவுகளைக் காலம் தாண்டி கடத்திக்கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் பாதையில் இன்றும் சரக்கு ரயில்கள் செயிண்ட் பாலில் இருந்து துலூத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றன. 1980 வரை பயணிகள் ரயிலும் இந்த வழியில் சென்று கொண்டிருந்தன. தற்சமயம் இந்தப் பாதையைப் பயன்படுத்தி அதிவிரைவுப் பயணிகள் ரயில் சேவை விடலாமா என்று பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம்.
ஹிங்க்லே தீ விபத்து குறித்த ஆவணப்படத்தை இங்குள்ள ஒரு சிறு அரங்கில் திரையில் ஒளிபரப்புகிறார்கள். அதைப் பார்த்துவிட்டு, இங்குள்ள பிற அறைகளுக்குச் சென்றால், அங்கு வரலாற்றுப் பதிவுகளாகக் காட்சியளிக்கும் பொருட்களின் தாக்கம் பெரியதாக இருக்கிறது. வட மினசோட்டாவில் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் எப்படி அங்குள்ள மரங்களை வெட்டி அந்தப் பகுதியில் வளத்தைக் கொண்டு வந்தனர் (முரணாக இருந்தாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை), மரங்களை எப்படி வெட்டினர், வெட்டிய மரங்களை எப்படி ஆறு, குதிரை வண்டி மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு சென்றனர், காட்டுத்தீ எப்படி உருவானது, அது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது, மக்கள் எப்படித் தப்பித்தனர், மீண்டும் இந்த ஊரை எப்படிச் சீர்ப்படுத்தினார்கள் என்பதை எல்லாம் அந்த ஆவணப்படத்தில் பார்த்துவிட்டு, அடுத்தடுத்த அறைகளுக்குச் செல்லும் போது, அந்தக் காலக்கட்டத்திற்கே சென்று வரும் அனுபவம் வாய்க்கிறது.
அந்தக் காலக்கட்டத்தில் பயன்படுத்திய ஆயுதங்கள், மரம் அறுக்கும் கருவிகள், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இச்சிற்றூரின் பிரமாண்ட மாதிரி, மீட்கப்பட்ட புத்தகங்கள், பொம்மைகள் போன்றவற்றைக் காணும் போது, கட்டிய கோட்டை தரைமட்டமாக்கப்படும் போது ஏற்படும் வலியை உணர முடிகிறது. இங்குள்ள ஊர் மாதிரியைப் பார்த்துவிட்டு, பிறகு வெளியே வந்து ஊரைச் சுற்றி பார்த்தால், நிர்மூலமாக்கப்பட்ட ஊரைக் கட்டியெழுப்பிய இவ்வூர் மக்களின் செயலூக்கத்திற்குத் தலை வணங்க நிச்சயம் தோன்றும்.
தீயின் கோரப்பிடியில் இருந்து நூற்றுக்கணக்கில் மக்களைக் காப்பாற்றியதில் ரயிலுக்கும், ரயிலில் பணியாற்றிய சில பணியாளர்களுக்கும் முக்கியப் பங்கு இருந்திருக்கிறது. விரைந்து பரவிய தீயில் இருந்து வேக வேகமாக மக்களை ரயில் பெட்டிகளில் ஏற்றி, தீ விரட்ட விரட்ட வேகமாக இங்கிருந்து ரயிலைக் கிளப்பி, நெருப்புடன் இங்குள்ள மரப்பாலத்தைத் தாண்டிய சாகசச் சம்பவங்களை அறிந்துக்கொள்ளும் போது, இதையே இப்போதுள்ள தொழில்நுட்பங்களுடன் படமாக எடுத்தால் விறுவிறுப்பிற்குப் பஞ்சமிருக்காது என்று தோன்றியது.
கோடைக்காலத்தில் மட்டும் இயங்கும் இந்த அருங்காட்சியகம், வாரத்தில் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை திறந்திருக்கும். பெரியவர்களுக்கு ஐந்து டாலர்களும், சிறியவர்களுக்கு இரண்டு டாலர்களும் நுழைவு கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஆறு வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு ஏதும் கட்டணம் இல்லை. இந்த அருங்காட்சியகம் குறித்த கேள்விகள் கொண்ட கேள்வித்தாளில் சரியாகப் பதிலளித்து (பதிலளித்துக் கொடுத்தாலே..) கொடுத்தால், தாத்தா சிறுவர்களுக்குப் பரிசாக ஒரு பென்சிலும், குச்சி மிட்டாயும் கொடுக்கிறார்.
இது போன்ற வரலாற்றுச் சம்பவங்கள் குறித்து ஆர்வமிருப்பவர்கள், ஹிங்க்லே வழியே சென்றால், நிச்சயம் இங்கு ஒரு விசிட் அடிக்கலாம்.
- சரவணகுமரன்