நம்பிக்கையெனும் சிறை
“75 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, பிரபஞ்சத்தில் 76 கிரகங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கிரகத்தின் அரசனாக இருந்தவன் ஜீனு எனும் கொடுங்கோலன். தன் கிரகத்தில் கோடிக்கணக்கில் தீயவர்கள் அதிகரித்து வருவதைக் கண்ட ஜீனு, அவர்களை அழிக்க முற்பட்டான். தீட்டன் என அழைக்கப்பட்ட அவர்கள் அனைவரையும் DC-8 போன்ற விமானங்களில் ஏற்றி பூமிக்கு அனுப்பி, பல்லாயிரம் எரிமலைகளுக்கு அடியில் அவர்களைப் புதைத்துவிட்டான். பின்னர் அந்த எரிமலைகள் மீது அணுகுண்டுகளை வீசி வெடிக்கச் செய்தான். அப்பொழுது தீட்டன்களின் உடல்கள் வெடித்து சிதறி, அவர்களின் ஆன்மாத் துகள்கள் வெளியேறி அப்போதிருந்த மனிதர்களின் உடல்களில் புகுந்துவிட்டன. மனித உடல்களில் புக முடியாத ஆன்மாத் துகள்கள் வளிக்காற்றில் சுழன்றுகொண்டிருந்து, புதிதாகப் பிறக்கும் மனிதக் குழந்தைகளின் உடலில் புகுந்து வளரத் துவங்கின. அன்றிலிருந்து தீட்டன்கள் செய்த தீமைகள், அடுத்தடுத்த பிறவிகளில், மனித மனங்களில் ஒட்டிக்கொண்டு, படல் படலாகப் படியத் துவங்கிவிட்டன. அது வரையில் மகிழ்ச்சித் ததும்ப இருந்த பூமியின் மனித குலம் இந்தத் துன்ப நினைவுகளை அகற்ற முடியாது மேலும் மேலும் தீமைகளையும், அநீதிகளையும் செய்யத் துவங்கிவிட்டனர்.”
இது எதோ காமிக் புத்தகத்தின் கதைப்பகுதி என தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். இன்று பல நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு மதம் உருவாகக் காரணமாயிருந்த நிகழ்வு தான் இது. மற்ற மத இதிகாசக் கதைகளைப் போலில்லாமல், இந்த மதத்தை உருவாக்கியவரே இதைப் புத்தகத்தில் விரிவாக எழுதி, இப்படி சீரழிந்து போன மனிதக் குலத்தைச் ‘சுத்தப்படுத்து’வதே எனது மதத்தின் குறிக்கோள் என்கிறார். இந்த மனிதரின் பெயர் எல். ரான் ஹப்பர்ட் (L. Ron Hubbard); இவர் உருவாக்கிய மதத்தின் பெயர் ‘சயிண்டாலஜி’.
எல். ரான் ஹப்பர்ட்
சயிண்டாலஜி பற்றி தெரிந்துகொள்ள, ரான் ஹப்பர்டைத் தெரிந்து கொள்வது முக்கியமாகிறது. லாஃபெயட் ரானல்ட் ஹப்பர்ட், 1911 ஆண்டு மார்ச் 13ஆம் நாள், நெப்ராஸ்காவில் பிறந்தவர். அவரது தந்தை அமெரிக்கக் கப்பற்படையில் கமாண்டராக இருந்தவர். இவரது கணக்குப்படி, இவரது தாத்தா மாண்டானாவில் முக்காற்பகுதிக்குச் சொந்தக்காரர். ரான் அவரது கால்நடைப் பண்ணையில் வளர்ந்தார். ரானுக்கு சிறுவயது முதலே ஒரு தேடல் இருந்துகொண்டிருந்ததாம். உலகம் எப்படி உருவானது, எப்படி இயங்குகிறது என்ற சிந்தனை அவரது மனதுள் ஓடிக்கொண்டிருந்தது. மத நம்பிக்கை, மெய்யியல் தத்துவங்கள் குறித்த ஆர்வம் மிகுந்திருந்தது. அவரது தந்தை குவாம் எனும் அமெரிக்க ஒன்றியப் பகுதிக்கு மாற்றலானபோது ரான், தனது தாயுடன் கப்பலில் அங்குப் பயணிக்க நேர்ந்தது. இந்தச் சமயத்தில், ஹவாய் தீவுகள், ஷாங்காய், ஹாங்காங், மணிலா போன்ற நகரங்களுக்குச் செல்ல நேர்ந்தது. பிறகு வாஷிங்டன் டி.சி.யில், ஜார்ஜ் வாஷிங்டன் கல்லூரி படிப்பைத் தொடர முனைந்து பாதியிலேயே வெளியேறி விட்டார் ரான். புத்தகங்கள் எழுத பழகி, பரபரப்பான புனைவுக் கதைகள் எழுதத் தொடங்கியிருந்த சமயத்தில், 1941ஆம் ஆண்டு, அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் பங்கெடுக்க நேர்ந்தது. அமெரிக்கக் கப்பற்படையில் சேர்ந்த ரான், அங்கும் பெரிதாக மிளிரவில்லை. ஜப்பானியர்களுடன் போர் நடந்த சமயத்தில், ஜப்பானியக் கப்பலைக் கண்டதாகச் சொல்லி ஏராளமான குண்டுகளை ஏவி வெடிக்கச் செய்தார். ஆனால் அவர் காட்டிய திசையில் கப்பல் எதுவுமேயில்லை. மாயத்தோற்ற (Hallucination) உளநோய் பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட சமயத்தில், அவர் தனக்குத் தானே போலியான சிபாரிசுக் கடிதத்தை எழுதிக் கப்பற்படையில் சேர்ந்ததும் தெரியவந்தது. பின்னர் ஒருமுறை மாலுமிகளுக்காகக் கொண்டுவரப்படும் உணவுக் கூடையில், கோகோகோலா பாட்டிலில் வெடிகுண்டு கொண்டுவரப்பட்டதைக் கண்டுபிடித்ததாக இவர் குறிப்பிட, அந்தக் குண்டைத் தயாரித்து உணவுக் கூடையில் வைத்தவரே ரான் தான் என்பதைக் கண்டுபிடித்த அதிகாரிகள், அவரைக் கப்பற்படையிலிருந்து நீக்கிவிட்டனர். இதற்குப் பின் கலிஃபோர்னியாவின் பாசடீனாவில் குடியேறிய ரானுக்கு நண்பரானார் ஜாக் பார்சன். மத அமைப்பு ஒன்றை நடத்தி வந்த ஜாக்குடன் சேர்ந்து பிளாக் மேஜிக் (சூனிய மாயா ஜாலங்கள்) ஆராய்ச்சியில் இறங்கினார், ரான். 1940களில் ஹிப்னாடிசம் பயிலத் தொடங்கினார். மெதுமெதுவே ஹாலிவுட் பழக்கம் கிடைக்க, சின்னச் சின்ன பாத்திரங்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிட்டின. ஹாலிவுட்டில் தனது பிளாக் மேஜிக் எனப்படும் மாய வித்தைகளைக் காட்டி, தன்னை ஹிந்து மத சுவாமிஜியாக அறிமுகப்படுத்திக்கொண்டார். ஹிப்னாசிச அனுபவம் மற்றும் ஆசியப் பயணத்தில் அறிமுகமான புத்தமதத் தாக்கத்தினால் 1950ஆம் ஆண்டு ‘டயனடிக்ஸ் – நவீன மனநல அறிவியல்’ (Dianetics-Modern Science of Mental Health) என்ற புத்தகத்தை எழுதினார் ரான். அந்தச் சமயத்தில் அவரை, சாத்தானை அடக்கும் மந்திரவாதியாகவே பார்த்தனர் மக்கள்.
சயிண்டாலஜி
ரான் எழுதிய ‘டயனெடிக்ஸ்’ சயிண்டாலஜியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு வித்திட்டது. ‘Scientia‘ (scire) எனும் லத்தினிய சொல்லும் ‘ology’(logo) எனும் கிரேக்கச் சொல்லும் சேர்ந்து உருவானது தான் ‘சயிண்டாலஜி’ என்ற பெயர் – ‘எப்படி தெரிந்துகொள்வது என்பதைத் தெரிந்துகொள்’ (Knowing how to know) என்பது தான் இதன் உட்பொருள். ரான் ஹப்பர்ட் உருவாக்கிய கோட்பாட்டை விளங்கச்சொல்ல வேண்டுமென்றால், ஒருவன் தன்னுள் புதைந்திருக்கும் ஆன்மிகச் சிந்தையைத் தேடித் தெளிந்து, அவை எப்படி தன்னைச் சார்ந்த உறவுகளுடனும், பொருளியல் உலகத்தோடும் இயங்குகின்றன என்பதை துல்லியமாக உணர்ந்துகொள்ளும் பாதையே ‘சயிண்டாலஜி’. கட்டுரையின் துவக்கத்தில் சொன்னது போல 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அனுப்பப்பட்ட தீட்டன்கள், ஆன்மா வடிவில் மனிதருக்குள் புகுந்து விட்டனர். இந்த தீட்டன்களின் ஆன்மாக்கள் தான் ஒவ்வொரு மனிதன் செய்யும் பாவக் காரியங்களுக்கும், தீய செயல்களுக்கும் வித்திடுகின்றன. இந்தத் தீய தீட்டன்களை ஒரு மனிதனின் ஆன்மாவிலிருந்து ‘தணிக்கை’ செய்து பிரித்தெடுப்பதன் மூலம் அவன் அறிவெழுச்சி பெற்று, பாவங்களிலிருந்து விடுபட்டு, தூய்மையான மனதுடன் மேம்பட்ட வாழ்வையடைந்து புது மனிதனாகிறான். இந்தத் தணிக்கைக்கு தயாராவதற்கு ஒருவர் பயிற்சிபெற்ற தணிக்கையாளர்கள் ஆலோசனையின் பேரில், பல படிநிலைகளைக் கொண்ட பாடங்களைக் கற்று தேர்ச்சி பெறவேண்டும். இந்தத் தேர்வுகளில் வெற்றிபெறுவதன் மூலம் அவரும் ‘தணிக்கையாளராக’ மாறிவிடுகிறார்.
அறிவியல் கண்ணோட்டத்தில் சயிண்டாலஜியை விளக்கவேண்டுமென்றால், மனித மனங்களில் நினைவுப் படலங்கள் அடுக்கடுக்காக பதிந்து விடுகின்றன. இந்த நினைவுச் சூழல்களில் அவர்கள் சிக்குண்டு, வெளிவரத் தெரியாமல் தவிக்கின்றனர்; மனதில் பதிந்த எதிர்மறை நினைவுகள் அவர்களது விழிப்புணர்வு, நோக்கங்கள், எண்ணங்கள், உடல் மற்றும் செயலைக் கட்டுப்படுத்தி கட்டளையிடுகிறது. இந்த நினைவுகளை ‘என்கிராம்’ என்கிறார் ரான். இந்த நினைவுகளே ஒரு மனிதனின் இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் காரணமாகிவிடுகின்றன. இவற்றை அகற்ற அதிர்ச்சி வைத்தியம் போல், மனதைத் தூண்டி அந்த நிகழ்வுக்கு மீள அழைத்துச் சென்று, அந்த ̀நிகழ்வை விளக்குவதன் மூலம் அவர்கள் மனதிலிருந்து அந்த நினைவுகளை அகற்றி விடுகின்றனர்.
உதாரணத்திற்கு, ஒரு நபர் கார் விபத்தில் சிக்கினாரென்றால், அவர் மனதில் விபத்து நேர்ந்த சமயத்தில் பதிவான நினைவுகள், அவரது உடல் வலியை அதிகமாக்குகின்றன. அந்த அதிர்வுகள் மீண்டும் மீண்டும் மனதில் தோன்றி வலியிலிருந்து அவர் குணம் அடைவதைத் தாமதப்படுத்துகிறது அல்லது தடுக்கிறது. அந்த நபரின் நினைவலைகளை, ‘தணிக்கை’ மூலம் விபத்து நேர்பட்ட நொடிக்கு அழைத்துச் சென்று, விபத்தே நேரவில்லை அல்லது விபத்தில் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று பதிய வைத்துவிட்டால் அவர் விரைவில் குணமடைவார் என்பது தான் ரானின் கோட்பாடு.
இவ்வாறு பழைய, துன்ப நினைவுகள் அகற்றப்பட்ட ஒருவர் ‘சுத்தம்’ (Clean) அடைகிறார் . பாதிக்கப்பட்டவரின் மனதோடு உரையாடி அவர்களை நினைவுப் பாதையில் வழிநடத்திச் செல்பவர்கள் ‘தணிக்கையாளர்’கள் (Auditors) எனப்படுகிறார்கள். ஒருவரை, கிட்டத்தட்ட ஹிப்னாடிச முறையில், இப்படிச் சுத்தப்படுத்தும் செயலே ‘தணிக்கை’ (Audit) எனப்படுகிறது. இந்தத் தணிக்கையின் பொழுது தணிக்கையாளரிடம் கூறும் தகவல் வீடியோவாகப் பதியப்படுகிறது. தணிக்கைக்கு உட்படுபவர் உண்மையைத் தான் சொல்கிறாரா என்பதைக் கண்டறிய பாலிகிராஃப் (Polygraph) போன்றதொரு பொய்யறியும் (lie detector) கருவியும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் நினைவுப் பாதையில் பின்னோக்கிச் செல்லும் போது அவரது உடலில் வெளியாகும் அதிர்வலைகளை வைத்து அவரின் நினைவுகள் எந்தளவுக்கு அவரைத் துன்புறுத்துகிறது என்பதைத் தணிக்கையாளர் உணர்ந்துகொள்வார்.
தனது தொடர் ஆய்வின் மூலம், 1954 ஆம் ஆண்டு, ரான் அடுத்த கண்டுபிடிப்பையும் வெளியிட்டார். இதன்படி ஒருவர் முற்றிலும் சுத்தம் பெற வேண்டுமென்றால் அவரின் முந்தைய பிறப்புகளில் செய்த தவறுகள், துர்நிகழ்வுகளையும் அகற்ற வேண்டியுள்ளது. ரான், ஆசிய நாடுகளுக்கு பயணித்தபோது இந்து, புத்த மத கோட்பாடுகளினால் உந்தப்பட்டதன் தாக்கம் இது என்கின்றனர் அவரைப் பின்பற்றுபவர்கள். அழுக்கு நிறைந்த முற்பிறவி நினைவுப்படலங்களை அகற்றுவது ஒரு நீண்ட நெடிய செயல்முறையாகிவிடுகிறது. சிலர் முற்றிலுமாகச் ‘சுத்தம்’ பெற பல வருடங்களாகலாம். இவ்வாறு சுத்தமடைந்த ஒருவர் ‘ஆபரேடிங் தீட்டன்’ (Operating Thetan – OT) எனும் நிலையை அடைகிறார். ஒன்று முதல் எட்டு வரையுள்ள OT நிலைகளில், ஏழாம் நிலையை அடைந்த பிறகு ஒருவர் ‘தணிக்கையாளராக’ முடியும். உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரையும் தணிக்கைக்கு உட்படுத்தி, அவர்களுக்குள் புதைந்திருக்கும் அசுத்த நினைவு அடுக்குகளை, ‘தீட்டன்’களை அகற்றி, சுத்தப்படுத்துவதே சயிண்டாலஜியின் குறிக்கோள்.
அடிப்படையில் ஓவ்வொரு மனிதனும் கடவுளாக இருந்தவன் தான். வெளிக்கிரகத்திலிருந்து வந்த தீட்டன்கள் மனித ஆன்மாக்களில் புகுந்து அசுத்தப்படுத்தி விட்டனர். அவற்றை வெளியேற்றி, சுத்தப்படுத்துவதன் மூலம் மனிதன் மீண்டும் கடவுளாகி விடுகிறான். ஆபரேடிங் தீட்டன் நிலை 8 ஐ அடைந்த ஒருவர், கடவுளுக்கு நிகரான அமைதியும், ஞானமும் பெறுகிறார். இவர் எத்தனை பிறவிகள் எடுத்தாலும், துன்பங்கள் அண்டாத திவ்விய நிலையை எய்துவார் என்பது சைண்டாலஜிஸ்டுகளின் நம்பிக்கை.
அறிவியல்
ரான் ஹப்பர்டின் கூற்றுப்படி மனிதர்கள் பகுப்பாய்வதன் மூலம் துன்பங்களுக்கான காரணத்தை அறிந்து, அகற்றி, தெளிவான ஆன்மிக நிலையை அடைகிறார்கள். இது உளவியல், மற்றும் உளவியல் மருத்துவத்தின் ஒரு பிரிவு. ஆனால் அமெரிக்க உளவியல் மருத்துவக் கழகமும், பொது மருத்துவக் கழகங்களும் இவரது கூற்றுக்கு ஆதாரமில்லை என்று புறந் தள்ளிவிட்டனர். மெதுமெதுவே ரானின் கோட்பாடுகள் வலுவிழக்கத் துவங்கின. 1953ஆம் ஆண்டு வாக்கில் ரானின் தோழரான ஜாக் பார்சன் வழிகாட்டுதலின் பேரில், ‘சயிண்டாலஜி’யை ஒரு மதமாக அறிவித்தார் ரான். ‘எலக்ட்ரோசைக்கோ மீட்டர்’ (Electro Psychometer), சுருக்கமாக ‘இ-மீட்டர்’ (e-meter) எனப்படும் கருவியை அறிமுகப்படுத்தி, தணிக்கை அமர்வுகளில், மன அழுத்தங்களைத் துல்லியமாக அறிய முடிகிறது என விளம்பரப்படுத்தி, 20 மணி நேரப் பயிற்சி மற்றும் தணிக்கைக்கு $500 வசூலித்தார்.
மெதுவே இந்தத் தணிக்கைகள் பிரபலமடைய, 1954 ஆம் ஆண்டு ஹாட் ஸ்பிரிங்க்ஸ், கலிபோர்னியாவில் முதல் ‘சர்ச் ஆஃப் சயிண்டாலஜி’ உருவாக்கப்பட்டது. ரானின் ஹாலிவுட் நண்பர்களும், அம்மாநிலத்து வசதி படைத்தோரும் உறுப்பினர்களாகச் சேரத் துவங்கினர். சடசடவென பிரபலமடையத் துவங்கிய ‘சயிண்டாலஜி’ மத நம்பிக்கை விரைவில் இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சவுத் ஆஃப்ரிக்கா, பிரான்ஸ் எனப் பரவத் தொடங்கியது. தொடக்கத்தில் ‘சயிண்டாலஜி’ மதத் தலைவராக இருந்த ரான், பின்னர் ‘சீ ஆர்க்’ (Sea Org) என்ற அமைப்பைத் தொடங்கினார். ஏற்கனவே கப்பற்படையில் இருந்ததினால் பெரியளவில் கப்பல்களை வாங்கி, ‘சுத்தப்படுத்தும்’ ‘தணிக்கையாளர்’ படைகளை உருவாக்கத் தொடங்கினார். மிகப் புகழ் வாய்ந்த, பணக்காரக் குடும்பத்து இளைஞர்கள் இந்த அமைப்பில் போட்டிப் போட்டுச் சேர்ந்தார்கள்.
1970களின் பிற்பகுதியில் பிரெஞ்சு அரசாங்கம், ‘சீ ஆர்க்’ அமைப்பின் மீது சுங்க விதி மீறல், பணச் சுரண்டல் போன்ற வழக்குகளைப் பதிந்து ரான் ஹப்பர்டை கைது செய்ய முனைந்தது. அமெரிக்காவுக்குத் தப்பியோடி வந்த ரான், கலிபோர்னியாவில் ஒரு வாடகை அபார்ட்மெண்டில் தஞ்சமடைந்தார். அமெரிக்க அரசாங்கமும் மதப் பிரிவுகளின் அடிப்படையில் வரி ஏய்ப்பு செய்து வந்ததாக அவர் மீது குற்றஞ் சுமத்தி தேடி வந்தது. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் ‘சயிண்டாலஜி’ மதம் கனஜோராக வளர்ந்துவந்தது. 1960களில் தொழிலதிபர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் மட்டும் வந்து செல்லக் கூடிய வகையில் ‘செலிபிரிட்டி செண்டர்’ என்ற கட்டடம் கட்டப்பட்டு, ‘சயிண்டாலஜி’ மேலும் பரவியது. இன்று உலகம் முழுதும் 167 நாடுகளில் 11,000 சயிண்டாலஜி சர்ச்சுகள் உள்ளன; ஏறத்தாழ 15 மில்லியன் ‘சயிண்டாலஜிஸ்ட்’கள் இம்மதத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் பிரபலப் புள்ளிகளைத் தங்கள் மதத்தில் இணைத்து, அவர்கள் மூலம் விளம்பரப்படுத்தியே மேலும் பலருக்கு ஈர்ப்பை ஏற்படுத்துகிறார்கள். இதற்காகப் பல நாடுகளிலும், நகரங்களிலும் ‘பிரபலமானவர்களுக்கான மையம்’ (Celebrity Center) உருவாக்கப்பட்டுள்ளது.
முரண்கள்
“ஒரு மனிதனுடைய எண்ணங்கள் எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான்”, “நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ .. அதுவாகவே ஆகிறாய் ” , “ஒருவரது கர்மா உண்டாக்கிய பதிவுகள் (கர்ம வினை) படி தான் அவரது வாழ்க்கை அமைகிறது” – உலகிலுள்ள இன்ன பிற மதங்களும் இதைத்தான் சொல்கின்றன. ‘சயிண்டாலஜி’ அதை அறிவியலோடு இணைத்துப் பார்க்கிறது – அவ்வளவுதானே? இதிலென்ன முரண் என்று பலருக்கும் தோன்றலாம்.
சயிண்டாலஜியின் குறிக்கோள் உன்னதத்தன்மை மிகுந்திருந்தாலும், அந்த உன்னத நிலையை அடைய முயல்பவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். அவற்றில் முதலானது ஒரு ‘சுத்தம்’ அடைய செலவாகும் தொகை.
கட்டணம் / செலவு
ஒரு வணிக நிறுவனம் போல, முதல் கூட்டத்துக்கு மக்களை ஈர்க்கும் இந்த நிறுவனம், அவர்களுக்கான தொடர் வகுப்பு / பயிற்சி கட்டணங்களில் இரக்கம் காட்டுவதில்லை. இவர்களில் பெரும்பாலானோர் முதல் கூட்டச் சந்திப்பிலேயே மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாகி விடுகின்றனர். ஒவ்வொரு படி நிலையிலும் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 13 மணிநேர வகுப்பறை பயிற்சி அவசியம். சில நிலைகளுக்கு இது 30 மணி நேரம் வரை நீடிப்பதும் உண்டு. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் $800 முதல் $1100 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைத் தவிர, தணிக்கை அமர்வுகளுக்கான கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு $1000. இந்தக் கணக்குப்படி ஒருவர் ‘சுத்தம்’ பெறுவதற்கு குறைந்தபட்சம் $130,000 செலவாகக்கூடும். அதற்குப் பின்னர் OTIII (Operating Thetan – III) நிலை வரை செல்ல $38,000 செலவாகும். இறுதிகட்டமாக OT VIII (Operating Thetan – VIII) நிலையை எய்த கூடுதலாக $160,000 செலவாகும். ஆக மொத்தம் ஒருவர் ‘தணிக்கையாளர்’ நிலையை அடைய $330,000 வரை செலவாகலாம். அவர் மனதில் அழுக்கு எண்ணங்களும், நினைவுகளும் அதிகமிருந்தால் தொகை அதற்குத் தகுந்தாற்போல அதிகரிக்கும். வசதியில்லாத சிலருக்குக் கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால அவர் வாழ்நாள் முழுதும் சயிண்டாலஜி அமைப்புக்கு கட்டுப்பட்டவராகயிருக்க வேண்டும். பயிற்சிபெற்று வரும் தணிக்கையாளரிடம் நீங்கள் தணிக்கை செய்து கொள்ள முன்வந்தால் கட்டணம் குறையும் – ஆனால் தவறுகள் ஏற்பட்டு நேரம் அதிகரித்து அந்தச் சேமிப்பை ஈடுகட்டிவிடும் அபாயமும் உண்டு.
நிபந்தனைகள் / கட்டுப்பாடுகள்
உறுப்பினரது குடும்பங்கள் அல்லது உறவினர்கள், செலவுகள் / கட்டுப்பாடுகள் போன்றவற்றைக் காரணமாகச் சொல்லி, அவர்களைத் தொடர்ந்து ‘சயிண்டாலஜி’ பயிற்சிக்கு வரவிடாமல் தடுப்பது தெரிந்தால், அந்த உறுப்பினர்களுக்கு மூளைச் சலவை செய்து குடும்பங்களை பிரித்துவிடுவது சயிண்டாலஜி அமைப்பினரது வாடிக்கை. அந்த உறுப்பினர் கிட்டத்தட்ட இந்த அமைப்புக்கு அடிமையாகி விட்டது போன்ற நிலை தான். இது போன்ற மன உளைச்சல்களால் பல உறுப்பினர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதற்கு அடிபணியாத உறுப்பினர்கள் பலர் முகவரி தெரியாமல் தொலைந்துபோய் விடுவதும் உண்டு. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்ற எந்தத் தகவலும் வெளிவருவதில்லை. இது போன்ற பல வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த உறுப்பினர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள், வேறு எந்த மதக் கோட்பாட்டையும் பின்பற்றக் கூடாது. ஒரு சயிண்டாலஜிஸ்ட், ‘சுத்தம்’ அடைந்த இன்னொரு சயிண்டாலஜிஸ்டை தான் திருமணம் செய்ய முடியும்.
‘சீ ஆர்க்’ (Sea Org) என்ற உயர்ரகப் பயிற்சி பெறுபவர்களின் நிலை இன்னும் கடுமையானது. இவர்கள், உலக விஷயங்களில் கவனத்தைச் சிதறவிடாமலிருக்க, கப்பலில் ஏற்றப்பட்டு பல மாதங்கள் தொடர் பயணத்தில் செலுத்தப்படுவார்கள். பயிற்சி நேரம், தணிக்கை நேரம் போக மற்ற நேரங்களில் இவர்கள் ‘சயிண்டாலஜி’ மதம் தொடர்பான விஷயங்களை ஆவணப்படுத்துவதில் செலவிடுவார்கள். ஆக, உண்ணும் / உறங்கும் நேரம் தவிர இவர்களது எண்ணமெல்லாம் சயிண்டாலஜி குறித்து மட்டுமேயிருக்கும். இந்த உயர்நிலை அமைப்பில் சேர்பவர்கள் 1 பில்லியன் வருடம் ‘சயிண்டாலஜி’ மதத்தை விட்டு விலகாமல், இந்த மதத்துக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும். அதாவது அவர்கள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும், சயிண்டாலஜிஸ்டாகவே இருக்க ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தரவேண்டும்.
அந்தரங்கம் / தனியுரிமை தகவல்கள்
ஏற்கனவே குறிப்பிட்டது போல், தணிக்கை அமர்வுகள் அனைத்தும் ஒலி/ஒளி வடிவில் பதிவுசெய்யப்படுகின்றன. தணிக்கையாளர்கள் கேட்கும் அந்தரங்க / தனிப்பட்ட கேள்விகளுக்கு தணிக்கைக்கு உட்படுபவர்கள் ஒளிவு மறைவில்லாமல் உண்மையைச் சொல்ல நேரிடுகிறது. இவர்கள் எதோவொரு கட்டத்தில் சயிண்டாலஜி மதத்தைவிட்டு வெளியேற நினைத்தாலும், தணிக்கை நேரத்தில் தந்த தகவல்களைக் காட்டி பிளாக்மெயில் செய்யப்படுகிறார்கள். டாம் க்ரூஸ், ஜான் ட்ரவால்டோ போன்ற பல ஹாலிவுட் பிரபலங்கள் இப்படி சிக்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படி மனவுளைச்சலுக்கு ஆளாகும் சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் வழக்காகப் பதிவாகியுள்ளன. .
தணிக்கை சமயங்களில் தங்களைப் பற்றிய முழு உண்மையைச் சொல்லாமல் மறைப்பவர்க்ளை தணிக்கையாளர்கள் கண்டுபிடித்து மிகக் கொடூரமான வழியில் தண்டிப்பதாகச் சொல்கிறார்கள். விலகவும் முடியாமல் தொடரவும் முடியாமல் தவிப்பவர்களும் ஏராளம். 1990களில் ஜெர்மனியில் இப்படி பலர் தொலைந்து போன சம்பவங்களும், தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் சயிண்டாலஜிக்கு தடை விதிக்கும் அளவுக்கு விசுவரூபமெடுத்தன.
மருத்துவ முரண்கள்
நார்கோணன் என்பது சைண்டாலஜியின் மருந்து மறுவாழ்வு திட்டமாகும். மன அழுத்தம், மன உளைச்சல் சிக்கல்களுக்கு ‘சைக்கியாட்ரி’ சிகிச்சை பெறுவோருக்கு தரப்படும் மருந்துகள் நச்சு நிறைந்தவை; சயிண்டாலஜி மதப் பயிற்சியின் மூலம், ஆன்மீக குணப்படுத்துதலின் அடிப்படையில் மாற்று சிகிச்சையை ஊக்குவிக்கிறது இந்த அமைப்பு. அமெரிக்க மருத்துவர் சங்கம் மற்றும் விஞ்ஞானிகள் இந்த நார்கோணன் அமைப்புக்குத் தடைகோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.
வரி ஏய்ப்பு
ஆன்மீகம் என்ற பெயரில் தனது அமைப்பை உருவாக்கி, வளர்த்துவிட்டதினால் அரசாங்கத்தின் வரிச்சலுகைகள் பலவற்றை முறைகேடாகப் பயன்படுத்தத் துவங்கினார் ரான் ஹப்பர்ட். உலகின் பல பெருநகரங்களில், சயிண்டாலஜி சர்ச்சுகள், அலுவலகங்கள் என்ற பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்தார். கலிஃபோர்னியாவில் பல ஆயிரம் ஏக்கர் நிரம்பிய காட்டுப் பகுதிகள், மலைகள் என ஆக்கிரமிப்பு செய்துகொண்டார். ஃபிளாரிடா மாநிலத்தை சேர்ந்த பல தீவுகளையும் சொந்தமாக்கிக் கொண்டார். அமெரிக்க வரிச்சேவை நிறுவனம் இவர் மீது பல வழக்குகளைப் பதிவு செய்து தேடிய நிலையில் கலிஃபோர்னியாவில் சின்னஞ் சிறு அபார்மெண்ட்களில் தங்கினார். சில மாதங்களுக்கு ஒரு முறை தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே வந்த ரான், தன் சொத்துகளில் ஒரு பகுதியை தனது மனைவி பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்தார். சயிண்டாலஜியில் பிடித்தமில்லாத இவரது பிள்ளைகள் சிலரை, தன் பிள்ளைகளில்லை எனச் சட்டப்பூர்வ உயில்களை எழுதி விலக்கி வைத்தார். 1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் நாள் மரணமடைந்த ரான், தான் இறக்கும் நாள் வரை ஒற்றர்கள் மூலம் சர்ச் ஆஃப் சயிண்டாலஜி நிர்வாகத்தைக் கண்காணித்துவந்தார். அவர் மீதான வரி ஏய்ப்பு வழக்குகள் சில இன்னமும் நிலுவையிலுள்ளன.
புதிய தலைமை
ரானின் மறைவுக்குப் பிறகு, 1986 ஆம் ஆண்டு, தன்னைத் தானே ‘சர்ச் ஆஃப் சயிண்டாலஜி’யின் தலைவராக அறிவித்து, தலைமை நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவர் டேவிட் மிஸ்கேவேஜ். (DAVID MISCAVIAGE). தலைமை ஏற்றுக்கொண்டதிலிருந்து, மிஸ்கேவேஜுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குடும்ப உறுப்பினர்களைக் கட்டாயமாகப் பிரித்தல், கட்டாய நிதி வசூலித்தல், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சகர்களைத் துன்புறுத்துதல், தேவாலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள், போதகர்கள் மீது உடல்/உள ரீதியான அதிகார துஷ்பிரயோகம் செய்தல் எனப் பல பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
டேவிட் மிஸ்கேவேஜின் பெற்றோர்களான ரான் மிஸ்கேவேஜ் மற்றும் லோரி மிஸ்கேவேஜ் இருவரும் தான் தங்கள் பிள்ளைக்கு 12 வயதாகயிருக்கும் பொழுது சயிண்டாலஜியை அறிமுகம் செய்து வைத்தனர். நாளடைவில் சயிண்டாலஜியின் தில்லுமுல்லுகள் புரியவந்து அவர்கள் விலக முற்பட்ட நேரத்தில், பெற்றோர் என்பதையும் மறந்து, வீட்டுச் சிறையில் வைக்குமளவுக்கு ரான் சயிண்டாலஜியில் மூழ்கிவிட்டிருந்தார். சுமார் 42 வருடங்கள் சர்ச் ஆஃப் சயிண்டாலஜி வளாகத்தில் சிறைபிடிக்கப்பட்டிருந்த அவர்கள், காவலாளிகள் அசந்த நேரத்தில் தப்பி வந்து பல அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்தனர்.
டேவிட்டின் மனைவி ஷெல்லி மிஸ்கேவேஜும் சயிண்டாலஜிஸ்ட் தான். ‘சீ ஆர்க்’ அமைப்பைப் நிர்வகித்து வந்த ஷெல்லி, ஒரு கட்டத்தில், டேவிட்டின் நிலைபாட்டுக்கு எதிரான முடிவை எடுத்த அடுத்த நாள் முதல் ‘காணாமல்’ போய்விட்டார். 2007 ஆம் ஆண்டு தொலைந்து போன இவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்று போலிசார் தேடிவரும் நிலையில், டேவிட் ஷெல்லியை எங்கோ சிறைபிடித்து வைத்துள்ளார் என்கிறார்கள் அவரது பெற்றோர். தனது கட்டளைகளுக்கு கீழ்படியும், சயிண்டாலஜியை வலுப்படுத்தும் உறவுகளுக்கு ஏராளமான சொத்துகளை அள்ளித் தருவதும், அவர்கள் சயிண்டாலஜியை விட்டு வெளியேற நினைத்தால் அழித்து விடுவதும் டேவிட்டின் வழக்கம்.
ரான் ஹப்பர்டின் உறவுகள் சர்ச் ஆஃப் சயிண்டாலஜி கட்டிடங்களின் உரிமைகளைக் கோரிய போது அவர்களை நிர்மூலமாக்கி விட்டார் டேவிட். வரி ஏய்ப்பு, சொத்து / நில அபகரிப்பு, ஆட்கடத்தல், தற்கொலைக்கு உட்படுத்துதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தாலும், மதத் தலைவர் என்ற போர்வையில் அனைத்தையும் புறந்தள்ளி வருகிறார் டேவிட். சுருங்கச் சொன்னால் ‘ஆன்மீகம்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி வசூல் நிறுவனத்தை நடத்துகிறார் டேவிட் என்கிறார்கள் அவரிடமிருந்து தப்பித்து வந்தவர்கள்.
ஆன்மீக வியாபாரம்
இன்று வரையில் அதிகப் புனைவுப் புத்தகங்களை, எழுதி, வெளியிட்டவர் என்ற கின்னஸ் சாதனையாளராகவுள்ளார் ரான் ஹப்பர்ட். “புத்தகங்கள் எழுதிச் சம்பாதித்ததை விட இப்பொழுது அதிகம் சம்பாதிக்கிறேன். என் புத்தகங்களைப் புனைவு என்றவர்கள் ‘எனக்கு கப்பற்படையில் வேலை செய்த பொழுது பார்வை போய்விட்டது; சயிண்டாலஜி ஆய்வுகள்படி நான் திரும்பப் பார்வை பெற்றேன் என்று சொல்லியதை நிஜமென்று நம்பினார்கள்’. குறுகியக் காலத்தில் மில்லியனராக வேண்டுமெனில் புதிய ‘மதம்’ ஒன்றைத் தொடங்குவது தான் சிறந்த வழி” என்ற ‘பொன்மொழிகளை’ தனது சகாவான ஜாக்குடன் பகிர்ந்துள்ளார் ரான்.
அமைதிக்கான வழியைத் தன்னுள் தேடாமல் பிறரிடம் தேடும் நபர்கள் உள்ளவரையில் ரானின் பொன்மொழிகள் உயிர்பெற்றிருக்கும் என்றே தோன்றுகிறது.
- ரவிக்குமார்-