\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மெய்நிகர் செலாவணி

உலகப் பொருளாதாரத்தை நகர்த்திச் செல்லும் ‘கரென்சி’ எனும் செலாவணி பண்டைய காலந்தொட்டு பல மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. பண்டமாற்று முறை, தோல் நாணயங்கள், உலோக நாணயம், காகித பத்திரங்கள், நோட்டுகள், காசோலைகள் என பல்வேறு வகைகளில் செலாவணி, வர்த்தகத்தை இயக்கி வந்தது. இந்த வகை செலாவணிகள் யாவும், தருபவர்-பெறுபவர் இருவராலும் தொட்டு உணரத்தக்க வடிவில், புலப்படும் உருப்படியாக இருந்து வந்தன. நவீன உலகின் அசுரத்தனமான தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்காலத்தில் செலாவணி, ‘டிஜிட்டல்’ எனப்படும் எண்ணியல் அல்லது இலக்கமுறை வடிவமெடுத்துள்ளது. 

டிஜிட்டல் கரென்சி 

பொதுவாக நாம் ஒரு பொருளையோ, சேவையையோ பெறுவதற்கு, அதற்கு ஈடான ஒரு செலாவணியை நேரடியாகக் கொடுப்போம். இது பணம், டாலர், பவுண்டு, ரிங்கிட் எனப் பலப்பல வடிவங்களில் ஒன்றாக இருக்கலாம். காலப்போக்கில் இவ்வகையான செலாவணிகளைச் சேர்த்து வைப்பதில் களவு, போலி, பற்றாக்குறை என சிக்கல்கள் தோன்றத் துவங்கின. டிஜிட்டல் கரென்சி இவ்வகையான சிக்கல்களைத் தீர்க்கும் எளிமையானப் பணப் பரிவர்த்தனை முறை எனலாம். அதாவது நீங்கள் ஒரு பொருளை வாங்கும் பொழுது அதற்கு ஈடானப் பணத்தை தந்துவிடுமாறு நீங்கள் உங்கள் வங்கிக்குக் கட்டளையிடலாம். வங்கி நிறுவனம் உங்கள் கணக்கில் பற்று வைத்துக்கொண்டு அந்தப் பணத்தைக் கடைக்காரரிடம் கொடுத்து விடும். இந்தச் செயலுக்கானச் செலவீனமாக வங்கி ஒரு ‘சிறிய தொகை’யை தரகுப் பணமாக எடுத்துக் கொள்ளும். 

உதாரணத்துக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு, நீங்கள் ஒரு பொருள் / சேவையைப் பெற பணம், டாலர் போன்ற தொட்டு உணரக்கூடிய செலாவணியை விற்பனையாளரிடம் நேரடியாகக் கொடுத்து வாங்கியிருப்பீர்கள். இது தருபவரும் பெறுபவரும் நேரடியாகக் கைகுலுக்கிக் கொள்வதைப் போன்றது. 

வர்த்தகத் தொழில்நுட்பம் விரிவடைந்துள்ள நிலையில் அமெரிக்காவிலிருக்கும் நீங்கள் ஜப்பானிலிருக்கும் விற்பனையாளரிடமிருந்து பொருளையோ, சேவையையோ வாங்க முடியும். அதற்கு உங்களது அமெரிக்க டாலர், ஜப்பானிய யென்னாக மாற்றப்படவேண்டும். அந்தச் சூட்சுமம் உங்களுக்கோ அல்லது விற்பனையாளருக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக வந்து கைகொடுப்பது தான் டிஜிட்டல் செலாவணி. உங்கள் இருவருக்கும் இடையில் ஒரு வங்கி / நிறுவனம் தோன்றி உங்கள் கணக்கிலிருந்து டாலரையெடுத்து, யென்னாக மாற்றி விற்பனையாளரின் கணக்கில் போட்டுவிடும், இதற்குச் சேவைக் கட்டணமாக (செர்விஸ் சார்ஜஸ்) ஒரு தொகையை எடுத்துக் கொள்ளும். இது பெறுபவர், தருபவர் நடுவே இன்னொருவர் தோன்றி இருவர் கைகளையும் பிடித்துக் குலுக்குவதற்குச் சமமாகும். இதற்காக ஒரு சிறியத் தொகையை  அவர் எடுத்துக் கொள்வார். 

டிஜிட்டல் கரென்சியும் ஒரு வகையில் ஆணைச் செலாவணி (ஃபியாட் கரென்சி – Fiat Currency) தான். அதாவது ஆணைச் செலாவணியை வெளியிடும் அரசு / வங்கிகள் அதன் மதிப்புக்கான உத்தரவாதத்தை அளிக்கின்றன. நாளை அரசாங்கம் நினைத்தால் ‘டிமானிடைசேஷன்’ (Demonetization) என்று சொல்லி ஒரு பணம் / நாணயத்தின் மதிப்பை இழக்கச் செய்யலாம். (சரக்கு செலாவணி (கமாடிட்டி கரென்சி-Commodity Currency) என்பது தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நாணயங்கள். அந்த உலோகத்துக்கான மதிப்பு இருக்கும் வரை அந்த நாணயத்துக்கும், அந்த உலோகத்துக்கு ஈடான மதிப்பு இருக்கும்). 

ஆப்பிள் பே, கூகுள் பே, பே பால், வெண்மோ போன்றவை டிஜிட்டல் கரென்சிகளைக் கையாளும் மிகப் பிரபலமான நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் டிஜிட்டல் வாலட் (Digital Wallet) எனும் கணக்கினைத் தொடங்கி கரென்சிகளை சேர்த்து வைத்துக் கொள்ளலாம். இணையத் தொடர்புடைய கணினி அல்லது கைப்பேசி மூலம் செலவழிக்கவோ, வரவு வைக்கவோ முடியும். இவ்வகை டிஜிட்டல் பரிமாற்றங்கள் உடனுக்குடன் நடைபெறுவதால், இன்று பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ், டிப்ஸ் போன்ற உபரி வருமானத்தை டிஜிட்டல் முறையில் வழங்கி வருகின்றனர். 

சமீபக் காலங்களில் புழக்கத்துக்கு வந்திருக்கும் ‘கிரிப்டோ கரென்சி’கள் டிஜிட்டல் கரென்சிகளின் மேம்பட்ட வடிவமெனலாம்.

கிரிப்டோ கரென்சி

கிரிப்டோ (மறையாக்கம்-Crypto) கரென்சி என்பது செலாவணி பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மறையாக்கத்தைப் பயன்படுத்துகிறது. டாலர்கள், பவுண்டுகள், யூரோக்கள், யென் போன்ற சாதாரண பணத்துக்குச் சமமாகச் செயல்பட்டாலும், தொட்டுணர முடியாத மின்னணு வடிவத்தில் மட்டுமே உள்ளதென்பதால் இவற்றை டிஜிட்டல் கரென்சி என்றாலும், கிரிப்டோ கரென்சிகள் அவை இயங்கும் விதத்தில் மாறுபட்டவை. இரண்டு வகையான கரென்சிகளும் கிட்டத்தட்ட பொதுவான பரிவர்த்தனை முறைகளை கையாண்டாலும், அவற்றின் கோட்பாடுகள், வெளிப்படைத்தன்மை, அங்கிகரிப்பு முறைகள், மதிப்பீடுகளில் பாரிய வேறுபாடுகளைக் கொண்டவை.

 

உருவாக்கம்

‘பிட்காயின்’ எனப்படும் நாணயம் தான் உலகின் முதல் கிரிப்டோ கரென்சி. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 31ல் பிட்காயின் குறித்த வெள்ளையறிக்கையைச் சமர்பித்து, கிரிப்டோ கரென்சி என்ற நாணயமுறையை அறிமுகப்படுத்தியவர் ஜப்பானியரான சந்தோசி நாகமோட்டோ. மறைகுறியாக்கம் செய்யப்பட்ட நாணய எண்களை உருவாக்கி அவற்றைக் கண்டுபிடிப்பவர்கள், அந்த நாணயத்தை பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து அதன் மதிப்பீடு மாறலாம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது தான் பிட்காயின். பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த நாணயத்தை இயக்குவிக்கும் ‘பிட்காயின்.ஆர்க்’ (Bitcoin.org) எனும் வலையத்தை உருவாக்கி முதல் பரிவர்த்தனை தொகுப்பாக ‘ஜெனிஸிஸ் பிளாக்’ எனும் பதிவேட்டினைத் தொடங்கினார். அந்தச் சமயத்தில் அவர் வெளியிட்டது 1 மில்லியன் பிட்காயின்களுக்கான குறியீட்டு எண்கள் எனச் சொல்லப்படுகின்றது. 

பிட்காயின், தொடரேடு அல்லது பிளாக் செயின் எனப்படும் கணினிநுட்ப அடிப்படையில்  உருவாக்கப் பட்டது. நாணயங்கள் பரிமாற்றப்படும்பொழுது அவற்றை மறைகுறியாக்க எண்களாக பதிவு செய்ய வேண்டும். இதனை வங்கியில் கணக்காளர்கள் கடைபபிடிக்கும் கணக்குப் புத்தக லெட்ஜருடன் ஒப்பிடலாம். இந்த லெட்ஜரில் எந்தக் கணக்கிலிருந்து எந்தக் கணக்குக்கு, எந்தத் தேதியில், எவ்வளவு பரிமாற்றம் செய்யப்பட்டது என்ற விவரம் மட்டுமே இருக்கும். இந்த லெட்ஜரில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த வாடிக்கையாளரின் பரிவர்த்தனை அளவைப் பொருத்து கூடுதலானப் பக்கங்கள் சேர்க்கப்படும்.  பிளாக் செயினை இந்த லெட்ஜர் பக்ககளோடு ஒப்பிடலாம். பக்கம் முடிந்தவுடன் எப்படி புது பக்கம் சேர்க்கப்படுகிறதோ அது போல ஒரு பிளாக் தொகுப்பு முடிந்தவுடன் புதிதாக ஒரு பிளாக் தொகுப்பு உருவாக்கப்பட்டு இரண்டுக்கும் ஒரு தொடர்பு உருவாக்கப்படும். இவ்வாறு உருவாகும் தொடர்களின் ஏடு, பிளாக்குகளின் சேர்மானம் தான் பிளாக் செயின்.

இந்தப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ய எந்தவொரு குறிப்பிட்ட கணக்காளரும், பணியாளரும் நியமிக்கப்படுவதில்லை. இணையத் தொடர்பு கொண்ட, இணையர் வலையத்தில் (Peer to Peer Network) பதிவு செய்துக்கொண்டு, மறையாக்கம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட எவரும், உலகின் எந்த மூலையிலிருந்தாலும், ஏதோ இருவருக்கிடையில் நடந்த பரிவர்த்தனையைப் பதிவிட்டு அங்கிகரிக்கலாம்.  

கிரிப்டோ கரென்சியின் இயங்குமுறை புரியாததாலும், நம்பிக்கையளிக்காததாலும் தொடக்கத்தில் பிட்காயினின் மதிப்பு சொற்பமாகவே இருந்தது. 2010 மே மாத வாக்கில், பிட் காயின் மென்பொருள் செயலியை உருவாக்கிய குழுவில் ஒருவரான, ஃப்ளாரிடாவைச் சேர்ந்த, ‘லாஸ்லோ ஹனீஸ்’ 10000 பிட்காயின்கள் கொடுத்து, 2 டாமினோஸ் பீட்சாவை வாங்க முடிந்ததாகக் குறிப்பிட்டார். அந்த 10,000 பிட்காயின்களின் இன்றைய மதிப்பு 400 மில்லியன் டாலர்கள். 

2010 ஆம் ஆண்டு இறுதியில் நாகமோட்டோ 21 மில்லியன் பிட்காயின்களுக்கான மறையாக்க எண்களை உருவாக்கிவிட்டு எங்கோ மறைந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. இன்றும் சந்தோசி நாகமோட்டோ என்பவர் தனிமனிதர் தானா, அப்படியென்றால் அவர் உயிருடன் இருக்கிறாரா என்பது யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. 

இவ்வாறு கிரிப்டோ கரென்சிகளின் தொடக்கமாக அமைந்தது பிட்காயின். கடந்த பதினொரு ஆண்டுகளில் பல புதிய கிரிப்டோ கரென்சிகள் தோன்றியிருந்தாலும் இன்றும் பிட்காயின் கிரிப்டோ கரென்சிகளின் முதலிடத்தை வகித்து வருகிறது. 

 

வெளிப்படைத்தன்மை 

டிஜிட்டல் கரென்சிகளின் பரிமாற்ற நடவடிக்கைகள், டிஜிட்டல் வாலட்டை (கணக்கை) நிர்வகிக்கும் நிறுவனங்களின் பரிசீலணைக்கும், அங்கிகாரத்துக்கும் உட்பட்டவை.  ஒரு நாட்டின் தலைமை வங்கி, மற்றும் அந்தந்த அரசின் நிதிக் கோட்பாட்டு விதிகளுக்கும், செண்ட்ரலைசேஷன் (centralization) எனப்படும் மையப்படுத்தப்பட்ட அதிகாரங்களுக்கும் கட்டுப்பட்டவை. பரிவர்த்தனை தொடர்பான அனைத்து விவரங்களும் வங்கியாலும், அரசாங்கத்தாலும் கண்காணிக்கப்படலாம்.

ஆனால் கிரிப்டோ கரென்சிகள் எந்த ஒரு தனி நிறுவனத்தாலும், அரசாங்கத்தாலும் கண்காணிக்கபடுவதில்லை. இந்த கரென்சிகளில் கிரிப்டோகிராஃபி மறையாக்க குறிகள் பயன்படுத்துவதால், பரிவர்த்தனைகளின் வலுவான பாதுகாப்பு வளையத்துக்குள் எவரும் நுழைய முடியாது. யார் யாருக்கிடையே, எவ்வளவு தொகைக்கான பரிவர்த்தனை, எந்த நாளில், எதற்காக நடந்தது என்பதை கண்டுபிக்கவே முடியாதெனலாம். டி-செண்ட்ரலைசேஷன் (decentralization) எனப்படும் பரவலாக்க முறையில் இந்தப் பரிமாற்றங்கள் அங்கிகரிக்கப்படுகின்றன. உலகெங்கும் இருக்கக்கூடிய, இணையம் மூலம் இணைக்கப்பட்ட கோடிக்கணக்கான கணினிகளில் எதேனும் ஒன்றில் உங்களது வாலட் தொடர்பான விவரங்கள் மறையாக்க வடிவில் ஒளிந்திருக்கும். அந்தக் கணினி வைத்திருப்பவருக்கும் அது யாருடைய வாலட் என்பது தெரியாது. அவருக்குத் தெரிவதெல்லாம் அனுப்புநர், பெறுநரின் விசையாக்க (Key) குறிகளே. உங்கள் டிஜிட்டல் வாலட்டின் பரிவர்த்தனை, மற்றும் பணத்தின் மதிப்பை நீங்கள் மட்டுமே அறிய முடியும்.

 

பாதுகாப்பு

சாதாரண டிஜிட்டல் கரென்சியின் வாலட்டை (கணக்கை)   ஒருவர் எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஒரு கணக்கைத் துவக்கலாம்.  எந்த நேரத்திலும் அவரது வாலட் ஹேக் செய்யப்படலாம்; ஏற்கனவே உள்ள எல்லா பணத்தையும் இழக்க நேரலாம். சந்தேகத்திற்கிடமான  பரிவர்த்தனைகளாகப் புலப்பட்டால்  அரசாங்கமோ அல்லது வர்த்தக நிறுவனங்களோ இவ்வகையான பரிவர்த்தனைகளை அங்கீகரிக்காமல் தடுக்கலாம் அல்லது வாலட்டுகளை முடக்கலாம்.

கிரிப்டோ கரென்சி கணக்குகள் துவங்கும் பொழுது, ​​அவர்கள் தரும் தனிப்பட்டத் தகவல்கள் யாவும் மறைகுறியாக்கம் செய்யப்பட்டு ஒரு விசைகுறி தரப்படும். இந்த விசைகுறி இல்லாத எவராலும் கிரிப்டோ வாலட்டைத் திறக்கமுடியாது. மேலும், கிரிப்டோ கரென்சி பரிவர்த்தனை முடிந்ததும், அது தானாகவே ‘பிளாக்செயினில்’ (மறையாக்கப் பரிவர்த்தனைகளின் தொகுப்பு) சேர்க்கப்பட்டு எப்போதும் மாற்ற முடியாததாகிவிடும். எந்தவொரு கிரிப்டோ கணக்கையும் அரசாங்கம் உட்பட யாரும் தடுக்க முடியாது; நிதியை வேறு கணக்கிற்கு மாற்றவும் முடியாது. 

 

பரிமாற்றக் கட்டணம்

ஒவ்வொரு முறையும் டிஜிட்டல் பணப்பையின் மூலம் பணம் செலுத்தும்போது டிஜிட்டல் நாணயத்துடன் அதிக அளவு பரிவர்த்தனைக் கட்டணம் உள்ளது. ஆனால் கிரிப்டோ கரென்சிகளின் பரிமாற்றம் இடைத்தரகர்கள் இல்லாமல் மேற்கொள்ளப்படுவதால், பரிவர்த்தனைகள் தரகுக்கட்டணமின்றி அதிவேகமாக நடைபெறும். எந்தத் தனிப்பட்ட நிறுவனத்தின் பராமரிப்புச் செலவுகளும் இல்லாமல் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் இடைத்தரகு கட்டணமில்லாமல் மதிப்புமிக்க சொத்துக்கள் சம்பந்தப்பட்ட கனரக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களுக்கு கிரிப்டோகரன்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

நாணயத்தின் மதிப்பு

டிஜிட்டல் கரென்சியின் தற்போதைய மதிப்பீடு விகிதம் கிட்டத்தட்ட அரசாங்கத்தின் பணத்துக்கு சமமானது. உதாரணத்துக்கு நீங்கள் ஒரு பொருளை 10 டாலருக்கு வாங்க முடிந்தால், டிஜிட்டல் கரென்சியில் 10.05 டாலரைத் தரவேண்டி வரலாம். இந்த .05 டிஜிட்டல் பராமரிப்புச் செலவுகளுக்காக சேர்க்கப்படலாம். இவற்றின் மதிப்பை எளிதாகக் கணக்கிட முடிவதால் எந்தவொரு பரிவர்த்தனையையும் கையாள்வதற்கு முன் விரிவான ஆராய்ச்சி தேவையில்லை. 

ஆனால் கிரிப்டோ கரென்சியைப் பொறுத்தவரை, அதன் சந்தை மதிப்பு நொடிக்கு நொடி மாறும் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டது. ஒரு பொருளை வாங்க வேண்டி நீங்கள் பரிவர்த்தனையைத் தொடங்கும் பொழுது கிரிப்டோவின் மதிப்பு ஒன்றாகவும், பரிவர்த்தனையை முடிக்க வேண்டி நீங்கள் பொத்தானை அழுத்தும் சமயத்தில் மதிப்பு வேறுபட்டுமிருக்க வாய்ப்புகளுண்டு. கிரிப்டோக்களின் சந்தை நிலையைத் தெரிந்துகொள்ளாமல் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது சாத்தியமான ஆபத்தை கொண்டுள்ளது. 

கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு கிரிப்டோ கரென்சிகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. மக்களிடையே, குறிப்பாக இளந்தலைமுறையினரிடம் இவை வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சென்ற தலைமுறை, அதற்கு முந்தையவர்களிடம் இன்னமும் நம்பிக்கையைப் பெறவில்லை என்றே தோன்றுகிறது. அதற்கேற்றாற்போல கடந்த சில ஆண்டுகளாகச் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் அதிகமாகப் பயன்படுத்தியது கிரிப்டோ கரென்சியைத்தான். 

எடுத்துக் காட்டாக, கடத்தல் பேர்வழிகள், தரவுகளைக் களவாடும் ஹேக்கர்கள் போன்றவர்கள் மிகப் பாதுகாப்பாக, தடயமேதுமின்றி பணயத்தொகையைப் பெற்று வந்தனர். கிரிப்டோ பரிவர்த்தனைகளின்  மறையாக்கக் குறிகளை உடைத்து கயவர்களைப் பிடிப்பது கிட்டத்தட்ட இயலாத காரியமாகவே இருந்து வந்தது. சென்ற மே மாதம், டெக்ஸாஸில் கொலோனியல் பைப்லைன் எனும் எண்ணெய்க் கம்பெனியின் முக்கிய சேவையகக் கணினிகளைக் கைப்பற்றி, அந்நிறுவனத்தின் எண்ணெய் வழங்கலை நிறுத்திவிடுவதாக மிரட்டி $5 மில்லியன்களை பிட்காயின் வடிவில் பணயத்தொகையாகப் பெற்றுக்கொண்டனர். நீதித்துறையில் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள ‘டிஜிட்டல் எக்ஸ்டார்ஷன் டாஸ்க்ஃபோர்ஸ்’, சி.பி.ஐ யுடன் இணைந்து இந்தப் பணயத் தொகையை பெற்ற ‘டார்க் சைட்’ ஹேக்கர்ஸிடமிருந்து $2.4 மில்லியன்களை மீட்டுள்ளனர். 

சென்ற இரண்டாண்டுகளில் பிட்காயின் உட்பட கிரிப்டோக்களின் மதிப்பு எக்குத்தப்பாக உயர்ந்து வருவதும் கிரிப்டோ கரென்சிகள் மீதான நம்பிக்கையைப் பாதித்துள்ளது. போதாக்குறைக்கு டெஸ்லா போன்ற நிறுவனங்கள் பிட்காயின் போன்ற கிரிப்டோ பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். கிட்டத்தட்ட $60000 தொட்ட பிட்காயின் விலை $38000 க்கு சரசரவென வீழ்ந்தது. 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட டாட்.காம் பபிளைப் போல மீண்டுமொரு பொருளாதாரக் குமிழியை கிரிப்டோ கரென்சிகள் உருவாக்கிவிடுமோ என்ற அச்சமும் சூழ்ந்துள்ளது. 

  • ரவிக்குமார்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad