\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஒற்றைக் கட்சி – ஒற்றை ஆட்சி

பண்டைய காலங்களில் கிழக்காசியப் பகுதியான சீனா, நாகரிகமடைந்த, பொருளாதாரத்தில் ‘பெருஞ்சக்தி’ பெற்ற நாடாக விளங்கியது. சியா வம்சம் தொடங்கி, வழிவழியாக வந்த சீன அரசகுல மன்னர்கள் கடற்பயனங்கள் மேற்கொண்டு, பல பகுதிகளை தங்கள் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனர். திசைகாட்டி, காகிதம், அச்சுக்கலை என பலவற்றை உருவாக்கிய பெருமையும் சீனர்களுக்கே உண்டு. சீனாவுடன், அதன் அண்டை நாடான இந்தியாவின் வளங்களும் இணைந்து உலக வர்த்தகச் சந்தையின் மையமாக விளங்கியது இந்த ஆசியப்பகுதி. 

மன்னராட்சி

பதினெட்டாம் நூற்றாண்டு இறுதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அறிவியல், தொழிற்துறை புரட்சிகளால் இயந்திரங்கள், வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள், ஆயுதங்கள் என்று உற்பத்தியை விரிவுபடுத்திய காலத்தில், சீனாவின் நிலை தலைகீழாக மாறிவிட்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு மத்தியில், சீன தேயிலை மீது மோகம் கொண்ட பிரிட்டன் அரசு பேசிய வியாபாரம் படியாத நிலையில், சீனர்களை மயக்கத்தில் ஆழ்த்த நினைத்த பிரிட்டன் ‘ஓபியம்’ போதைச் செடிகளை கப்பல்களில் அனுப்பிவைத்தது. அப்போது சீனாவை ஆண்டுகொண்டிருந்த கிங் அரசவம்சத்தினர் இக்கப்பல்களை எரித்து அழித்ததால், சினமடைந்த பிரிட்டன் ஆயுதங்களுடன் கதவைத் தட்டியபோது, சீனர்களால் எதிர்த் தாக்குதலைத் தக்கவைக்க முடியாமல், ஒரு பகுதியை (ஹாங்காங்) இழந்தது. 1912 ஆம் ஆண்டு சீனாவில் ஏகாதிபத்திய அரச வம்சங்கள் முடங்கி, சீனக் குடியரசு உருவானது. குவோ மிண்டாங் எனப்படும் சீனத் தேசியக் கட்சி உருவாகி நாட்டில் சீர்திருத்தங்களை உருவாக்க முனைந்தபோது உள்நாட்டு பனிப்போர் வெடித்தது. சோவியத் யூனியனில் ஏற்பட்ட கம்யூனிசப் புரட்சியினால் ஈர்க்கப்பட்ட சீனர்கள் மார்க்ஸ், லெனின் பொதுவுடைமைக் கொள்கைகளை இணைத்து 1921ஆம் ஆண்டு ‘சீனப் பொதுவுடைமைக் கட்சி’யை தோற்றுவித்தனர். இக்கட்சியைத் தோற்றுவித்த முக்கியமானவர்கள் செள என்லாய், ஷென் டுக்ஸ்லு, லீ டாஸோ, மா சேதுங் எனலாம். இதற்குப் பின்னர் தேசிய சீனக் கட்சியுடன் ஏற்பட்ட பனிப்போர் உள்நாட்டுப் போராக மாறியது. 

1930 களில், ஜப்பான் தொடுத்த தாக்குதலில் முற்றிலுமாக உருக்குலைந்து போனது சீனா. உலகப் பொருளாதாரப் பேரரசாக விளங்கிய நாடு, சுமார் நூறாண்டுகளில், பல்வேறு இனக்குழுக்களாகப் பிரிந்து, ஒற்றுமையிழந்து, பஞ்சம், வறுமையில் சிக்கிச் சீரழிந்தது. 

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவில் தோன்றிய முதலாளித்துவக் கொள்கை (Capitalism) பெரும் வெற்றி பெற அமெரிக்கப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளும் ‘கேப்பிடலிச’ பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டன. தடையில்லா ‘கட்டற்ற சந்தை’ சித்தாந்தத் தந்தையான மில்டன்  ஃப்ரீட்மென்னின் ‘ஒரு வியாபாரத்தின் சமூகப் பொறுப்பு அதில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு வருமானத்தைப் பெருக்கித் தருவது’ (The social responsibility of a  business is to increase its profits) என்ற மேற்கோள் உலக நாடுகளின் வேதவாக்காக மாறியது.  இந்த நேரத்தில் தனது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சீரமைக்கத் தொடங்கினார் மா சேதுங். மக்கள் விடுதலைப் படை (PLA People’s Liberation Army) என்ற அமைப்பை உருவாக்கி சீன தேசியக் கட்சியின் இராணுவப் படையை எதிர்த்துப் போரிடத் தொடங்கினார்கள் கம்யூனிஸ்டுகள். 

மாசே துங்

1949 ஆம் ஆண்டு, சீன விடுதலை அறிவிக்கப்பட்ட பின்பு சீன மக்கள் அரசின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டார் மா சேதுங். சீன பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் பெரிதும் போராடிய மா சேதுங், மேற்கத்திய கேப்பிடலிசக் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்த்தார். 1954 இல் சீனாவைக் குடியரசு நாடாக அறிவித்த மாசேதுங்  ஸ்டாலினின் சோசலிஷத்துக்குச் சிற்சில மாற்றங்களைச் சேர்த்து, முற்றிலும் இடது சாரி சிந்தனைகொண்ட ‘மாவோயிசம்’ என்ற புதுக் கொள்கையை உருவாக்கினார். தொழிற்புரட்சியை  உருவாக்க முயன்ற மா சேதுங் ‘வலிமையும் வளமும் மிகுந்த சீனா’ என்ற இலட்சிய இலக்கை நிர்ணயித்து நவீன தொழில் முன்னேற்றம் அடைந்த நாட்டை நிறுவ முயன்றார். ‘ஓபியம்’ போதைக்கு அடிமையான சீனர்களின் புனரமைப்புக்கு வழிவகுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க திட்டங்கள் வகுத்தார். நில சீர்திருத்தத்தங்கள் இயற்றப்பட்டு பெரும் நிலச்சுவான்தார்களிடமிருந்த அபரிமிதமான நிலங்கள் கைப்பற்றப்பட்டு, ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன; இது பொருளாதார சமத்துவமின்மையை கணிசமாகக் குறைத்தது. எனினும், இவருடைய தெளிவற்ற சமூக, அரசியல் திட்டங்களின் காரணமாக சீனாவின் வளர்ச்சி முடங்கி, பொருளாதாரம் சீர்குலைந்து, சமூகக் கொந்தளிப்புகள் உருவாகி, பரவலான பட்டினி நிலை ஏற்பட்டது; மில்லியன் கணக்கில் மக்கள் மாண்டனர்.  முன்னாள் தலைவரான கோமிண்டாங்கின் ஆதரவாளர்கள், அதிகாரிகள் மாசே துங்கை எதிர்த்து பிரச்சாரங்கள் மேற்கொண்ட போது, பொருளாதாரச் சந்தையைச் சீர்குலைப்பதாக வழக்குகள் பதிந்து, மரணதண்டனை விதிக்கப்பட்டனர். பல நூறாயிரம் பேர் இப்படி மரணமடைந்ததாக பின்னாட்களில் பல நாடுகள்  கூறின. சில நல்ல மாற்றங்களை முன்னெடுத்தாலும், மிகக் கடுமையான சர்வாதிகாரப் போக்கைக் கடைபிடித்ததால், மாசே துங்கின் புகழ் மெதுவே மங்க ஆரம்பித்தது. இருந்தாலும் மேற்கத்திய முதலாளித்துவச் சிந்தனையைத் தடுத்து சீன கம்யூனிசக் கொள்கைக்கு மாசே துங் வித்திட்டது சீனாவின் முதல் புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. 1976 செப்டம்பர் மாதம் மாசே துங் மரணித்தார். 

டெங் சியோபிங்

மாசே துங்கிற்குப் பிறகு சீன மக்கள் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார் உவா கோபெங்கு. தெளிவான தலைமை நிர்வாகத் திறன் இல்லாததால் தடுமாறியவரிடமிருந்து, டெங் சியோபிங் பதவியை வாங்கிக் கொண்டார். மாசே துங்கின் பதவிக்காலத்தில் முக்கிய இடம் வகித்த டெங் சியோபிங், தளர்வுகளுடன் கூடிய மாவோயிச கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். சீன அரசின் பல உயர்பதவிகளை வகித்த இவர், 1983 ஆம் ஆண்டு சீன மக்கள் கட்சியின் தலைவரான பிறகு கொண்டுவந்த பொருளாதாரத் திருத்தங்கள் சீனாவின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டன. தென்கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள், சீனாவில் பஞ்சம் ஏற்பட்டபோதும் நிலையான வளர்ச்சியடைந்து வருவதைக் கண்டார். சிங்கப்பூருக்குப் பயணம் செய்த இவர் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் மட்டுமே அவர்களது பொருளாதார நிலையை உயர்த்துவதைக் கண்டு, முதன் முதலாக ஹாங்காங் பகுதியில் அன்னிய நாட்டு முதலீடுகளை அனுமதித்தார். மிக உன்னிப்பாக இந்தப் பகுதியின் வளர்ச்சியைக் கண்காணித்து வந்தவர், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் அன்னிய முதலீடுகள் குவிவதை உணர்ந்து கொண்டார். மெதுமெதுவே இந்த உள்கட்டமைப்பு விரிவாக்கத்தை நாடு முழுதும் ஏற்படுத்தத் துவங்கினார் டெங் சியோபிங். மாசேதுங் உண்டாக்க நினைத்த தொழிற்புரட்சி தானாக உருவாகியது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த பெரும்பான்மையான கிராம மக்கள், மெதுவே நகரங்களை நோக்கி நகர்ந்தனர். பல்வேறு கோணங்களில் பொருளாதார சீர்திருத்தங்களை அணுகிய டெங் சியோபிங், அன்னிய முதலீடுகள் அதாவது சந்தைப் பொருளாதார மாற்றங்கள் எந்தெந்தத் துறையில், எந்தெந்த மாகாணங்களில் அனுமதிக்கப்படவேண்டும் என்பதைத் துல்லியமாகக் கணித்தார். தொழிற்துறை, விவசாயத் துறை, பாதுகாப்புத் துறை, அறிவியல் & தொழில்நுட்பத் துறை என  நான்கு முக்கியத் துறைகளிலும் சீரான வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ‘ஃபோர் மாடர்னசைஷேன்’ எனும் திட்டத்தின் படி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு கடலோர மாகாணங்களில் நிறுவப்பட்டன. கம்யூனிச, சோஷலிஸ கொள்கைகளை வேண்டுமளவிற்கு தளர்த்தி பொருளாதார நவீனமயமாக்கலுக்கு  உறுதியான அடித்தளம் அமைத்தார். 1978ல் $149,500 பில்லியன் என இருந்த சீனாவின் மொத்த உற்பத்தி, 1989ல், டெங் சியோபிங்கின் பதவிக்காலம் முடியும் தறுவாயில்  $458,167 பில்லியனாக உயர்ந்திருந்தது. டெங் சியோபிங்கின் இந்த் பத்தாண்டு பதவிக்காலம் சீனாவின் இரண்டாவது புரட்சியாகக் கருதப்படுகிறது. 

ஜியாங் செமின் மற்றும் ஹூ ஜிண்டாவ்

டெங் சியோபிங்கிற்கு பின் பொறுப்பேற்றுக்கொண்ட ஜியாங் செமின், மாவோ, டெங் ஆகியோரின் பொருளாதாரத் திருத்தங்களின் தொடர்ச்சியாக சீனாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் சென்றார். மார்க்சீயம் & லெனினிசம், மாவொயிசம், டெங் சியோபிங் கொள்கைகளை கலவையாக்கி ‘3 ரெப்ரெசன்ட்ஸ்’ என அறிவித்தார். சீனாவுக்கு, மேற்கத்திய நாடுகளுடன் அனுகூலமான நட்புறவை ஏற்படுத்தியவர் ஜியாங். ஆனாலும் சொந்த நாட்டில் கம்யூனிசக் கொள்கைக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். 1997ல் ஐக்கிய இராச்சியத்திடமிருந்து ஹாங்காங்கையும், 1999ல் போர்ச்சுகலிடமிருந்து மக்காவ்வையும் மீட்டெடுத்த பெருமையும் ஜியாங்கையே சேரும். 

2004 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தலைவராக பொறுப்பேற்றவர் ஹூ ஜிண்டாவ். உலக நாடுகள் பலவும் ‘டாட்.காம்’ (காளான்களாக உருவான இணைய நிறுவனங்களின் வீழ்ச்சியால் உண்டான பொருளாதார நெருக்கடி) மற்றும் வங்கிகளின் வீழ்ச்சியால் கடுமையான பொருளாதார மந்தநிலையினால் பாதிக்கப்பட்டபோதும் கூட, சீனா தொடர்ந்து வளர்ச்சி கண்டதற்கு ஹூவின் தலைமை மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், சீனாவின் சர்வதேச அந்தஸ்தை பெருமளவில் அதிகரித்தார். உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், சீனாவின் முதல் மனிதர்கள் கொண்ட விண்வெளி ஆய்வு, இரண்டு சர்வதேச நிகழ்வுகளின் வெற்றி (2008 பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் 2010 ஷாங்காய் எக்ஸ்போ) ஆகியவையும் ஹூவின் பதவிக்காலத்தில் நடந்தன.  சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவை மேம்படுத்திய பெருமையும் இவரைச் சாரும். மேல்தட்டு மக்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் இடையில் நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வு இடைவெளிகளைக் குறைக்கும் வகையில், குறைந்தபட்ச ஊதிய விதிகளை அறிமுகம் செய்தது, நடுத்தர அல்லது அதற்கு கீழ் வருமானம் கொண்டவர்களுக்கு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை விரிவாக்கியது போன்றவை ஹூவின் சாதனைகளாகும். நாட்டில் தலைவிரித்தாடிய ஊழலை தடுக்க முயன்றபோது, ஹூ பல எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டி வந்தது. உள்நாட்டு அரசியல் அரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், சர்வதேச நாடுகளிடையே சீனாவின் மதிப்பு உயர முக்கிய காரணமாக அமைந்தவர்களில் ஹூ ஜிண்டாவும் ஒருவர். 

ஷி ஜின்பிங்

2008ஆம் ஆண்டு தொடங்கி, சீனாவின் துணை அதிபராகப் பதவி வகித்த ஷி ஜின்பிங், அப்போதைய அதிபர் ஹூ ஜிண்டாவின் திட்டங்களைத் துல்லியமாக செயல்படுத்தினார். ஒலிம்பிக் போட்டிகள், ஷாங்காய் எக்ஸ்போ போன்ற நிகழ்வுகள் மூலம் உலகரங்கில் எல்லோரையும் சிலிர்க்க வைத்து, ஆச்சரியப்பட வைத்தவர் ஷி ஜின்பிங். துணை அதிபராக இருந்த நாட்களிலேயே தென் அமெரிக்க நாடுகளுடன் நீண்ட கால வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தினார். 2012 இல் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் உலகமயமாக்கல் உட்பட பல அச்சுறுத்தும் சவால்கள் காத்திருந்தன.  கடுமையான சீர்திருத்தங்கள் மூலம் அதிரடியான மாற்றங்களைக் கொணர்ந்த ஷி சீனாவை வியத்தகு முறையில் மாற்றி, புதிய எண்ணங்கள் மற்றும் கொள்கைகளைப் பரப்பி தனது அடையாளத்தைப் பதித்துள்ளார்.

வலுப்பெற்ற நிலையான சமூகத்தை அமைக்க மக்களின் ஏழ்மையை விரட்டவேண்டும் என்று முடிவெடுத்தவர், அதிகாரிகளை நியமித்து அந்தச் சமூகங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் திட்டங்களைச் செயல்படுத்தினார். இதன் மூலம் மக்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பர் என்ற தன்னலமும் அதில் கலந்திருந்தது. 2012 இல் “சீனாவின் கனவு ; இரு நூற்றாண்டுகள்” என்ற தலைப்பில் கொள்கைகளை உருவாக்கி பட்டித் தொட்டியெங்கும் இந்த கோஷத்தைப் பரவச் செய்தார். அதன் நோக்கம், 2021, சீனக் கம்யூனிசக் கட்சியின் நூற்றாண்டு விழா நடைபெறும் தருணத்தில் சீனா வளமிக்க நாடாக மாற வேண்டும். 2050க்கு முன்னர் சீனா வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும். ஷியின் முக்கிய குறிக்கோள், சீனா அரச வம்சாவளியினர் காலத்தில் எவ்வாறு உற்பத்தி, பொருளாதாரம், கலை, நாகரிகம் என மிளிர்ந்து செழிப்புடன் உலக நாடுகளை வழிநடத்தியதோ அதே இடத்துக்கு, தற்கால சீனாவை உயர்த்துவது; பலம் பொருந்திய, புத்துயிர் பெற்ற, வல்லரசான சீன நாட்டை மீளக் கொணர்வது என்பது தான். சீனாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் சீன குடிமக்களிடையே பொருளாதார செழிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தைப் பலப்படுத்தி ஆட்சியையும் வலுப்படுத்தியது. சமூகச் சூழல் விழிப்புணர்வு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றங்களைக் கொணர்ந்தது இவரது மிகப்பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.

உற்பத்தி அடிப்படையில் சீனாவின் பொருளாதாரத்தை வலுவாக்க விரும்பிய ஷி ஜின்பிங், டெங் ஷியாபிங்கின் கொள்கைகள் வழியில் பொருளாதாரத் தடைகளை அகற்றுவது,  சுதந்திரமான வர்த்தகச் சந்தையைத் திறந்து விடுவது, தனியார் மயமாக்கலை ஊக்கப்படுத்துவது போன்ற உத்திகளை மேற்கொண்டார். அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும், அரசாங்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருவார்கள்.  அவரது இந்தச் சிந்தனை அந்நாட்டு கம்யூனிசச் சித்தாந்தத்திலிருந்து முற்றிலும்  மாறுபட்டது. சீனாவின் முழு அரசியல் அதிகாரமும் ஷி ஜின்பிங்கின் கைகளுக்குள் அடங்கிவிட்டதாகக் கட்சிக்குள் சலசலப்பு உருவாகிக் கொண்டிருந்தாலும் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றமேற்படுத்தியவர் என்பதால், மக்களின் ஆதரவு தொடர்ச்சியாகப் பெருகி வருகிறது. 

ஒருபுறம் தன்னை உலகமயமாக்கலின் சாம்பியனாக நிலைநிறுத்த ஷி முயன்றாலும், மறுபுறம் உலகநாடுகளின் முதலீடு, தகவல் மற்றும் பொருட்களின் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, அனைத்து செயல்களும் தனது ஒப்புதலுடன் மட்டுமே நடக்கவேண்டும் என நினைப்பது, இயல்பான பொருளாதாரச் சந்தையைப் பாதிக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.  சீனாவின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி நாட்டில் ஏற்படக்கூடாது என நினைத்து அதிபர் பதவிக்கான கால வரம்பு கட்டுப்பாட்டை நீக்கினார். அதாவது, புதிய தலைமை வர நேர்ந்தால் சீனாவின் வளர்ச்சிப்பாதையில் தடைகள் தோன்றக்கூடும் என்ற போர்வையில், கம்யூனிசக் கட்சியின் முக்கியக் கொள்கையான ஒரு தலைவருக்கு இரண்டு பதவிக்காலங்கள் என்ற விதியை, 2017 ஆம் சீனக் கம்யூனிசக் கட்சியின் 19ஆவது மாநாட்டில், வாக்கெடுப்பு நடத்தி,  உடைத்தெறிந்தார். இதனால் 2022 இல் முடியவேண்டிய தனது பதவிக்காலத்தை எல்லையின்றி நீட்டித்து, பெரியளவில் எதிர்ப்புகள் கிளம்பும் வரை அல்லது தான் விரும்பும் வரையில் தலைமையில் நீடிக்கலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டார். அரசியல் அரங்கில் இது அதிர்வலைகளை உண்டாக்கினாலும் சீனாவின் மக்கள், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடைந்து, ஒரு பாதுகாப்பான சூழல் இருப்பதால், ஷியின் ஒற்றைக் கட்சி, ஒற்றைத் தலைமை ஆட்சியை எதிர்க்கத் தற்போதைக்குத் தயாராக இல்லை. 

அதே சமயம், சீனாவில் வாழும் அனைவரும் இப்படியான மனநிலையில் இருப்பதாகவும் தெரியவில்லை. 

ஒரு நாட்டின் ஜனநாயகத் தன்மையை அளவிடும் பிரிட்டனின் ஒரு நிறுவனம், தன்னுடைய ஆய்வின் அடிப்படையில்,  ஜனநாயக அளவீட்டுக் குறியில், சீனா பத்திற்கு 3.1 புள்ளிகள் மட்டுமே பெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறது. அதாவது, சீனா ஒரு சர்வாதிகார ஆட்சியைச் செலுத்துவதாகவே இந்த அளவீடு சொல்கிறது. பல உலக நாடுகளும், அரசியல் அறிஞர்களும் சீனாவைப் பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயமும் அதுவே. எப்படி மாசே துங்கும், டெங் சியோபிங்கும் சீனாவின் முதல் மற்றும் இரண்டாம் புரட்சியை உண்டாக்கினார்களோ அதே போல், ஷி ஜின்பிங் மூன்றாவது புரட்சிக்கு வித்திட்டவர் என்ற பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை. 

சீன கம்யூனிசக் கட்சியின் நூற்றாண்டு நிறைவு

2021, ஜூலை முதல் நாள், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுற்றதைக் குறிக்கும் வகையில், ஷி ஜின்பிங் தியன்மென் சதுக்கத்தில் பார்வையாளர்களிடம், நாட்டின் எழுச்சியை உறுதிசெய்யும் ஒரே சக்தி கம்யூனிசக் கட்சி மட்டுமே என்று கூறினார். “சீன மக்கள் எந்தக் காலத்திலும் மற்ற நாடுகளின் மக்களை கொடுமைப்படுத்தவோ, ஒடுக்கவோ அல்லது அடிமைப்படுத்தவோ நினைத்து இல்லை; கடந்த காலத்தில் மட்டுமல்ல இப்போதும் அப்படி நினைப்பதில்லை; இப்போது மட்டும் இல்லை எதிர்காலத்திலும் அப்படி நினைக்கப் போவதில்லை.  அதே நேரத்தில், சீன மக்கள் ஒருபோதும் வெளிநாட்டு சக்திகள் தங்களைக் கொடுமைப்படுத்தவோ, ஒடுக்கவோ அல்லது அடிமைப்படுத்தவோ அனுமதிக்க மாட்டார்கள். அப்படி நமக்குத் தீங்கிழைக்க முயல்பவர்கள், 1.4 பில்லியன் சீன மக்களின் சதை மற்றும் இரத்தத்திலிருந்து எழுப்பப்பட்ட எஃகு போன்ற பெரிய சுவரில் இரத்தம் சிந்துவார்கள்.” என்ற எச்சரிக்கையையும் விடுத்தார். மேலும் “தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க சீன மக்களின் உறுதியான உறுதிப்பாடு, உறுதியான விருப்பம் மற்றும் சக்திவாய்ந்த திறனை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்று எதிர்க்கட்சியினருக்கும் சவால் விட்டவர், வருங்காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி “சீன தேசத்தின் பெரும் புத்துயிர் பெறுவதற்கான வாகனமாக இருக்கும்” என்பதையும் அழுந்தப் பதிவிட்டார்.

இந்த நூற்றாண்டு விழாவை, கட்சியின் பழம்பெருமைகள், தற்கால வெற்றிகள், எதிர்காலச் சாதனைகள் ஆகியவற்றின் கலவையான ஒரு பிரசாரத்திற்கு அதன் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. சாமானிய மக்களுக்கான கட்சியாகவே இக்கட்சி தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம் என்றும் உயர்தட்டு மக்களைத் திருப்திப்படுத்துவது இதன் நோக்கமன்று என்பதைத் தனது உரைகள், உத்தரவுகளில் அடிக்கோடிட்டுக் காட்டி வருகிறார் ஷீ.

சீன கம்யூனிஸ்ட் கட்சி “சீன மக்களின் மகிழ்ச்சிக்காக உண்மையிலேயே பாடுபடுகிறது” என்பதைக் காட்டும் விதமாகப் பிரசாரத்தை பலப்படுத்த வேண்டும்” என்று அவர் சமீபத்தில் கூறினார். கம்யூனிஸ்ட் ஆட்சியின் அதிகாரத்தைத் தொடந்து நிலைநிறுத்தும் விதமாக, அதன் பிரசார தளங்கள், கல்வியாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கூட அணி திரட்டப்பட்டுள்ளனர். அண்மையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பயணத் திட்டத்தின் வெற்றியின் போது கூட ஒரு விண்வெளி வீரர் “கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தின் 100 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வீர அத்தியாயத்தை இது குறிக்கிறது,” என்று கூறினார். 1944 ஆம் ஆண்டில் மாவோ சேதுங் பயன்படுத்திய ‘மக்கள் சேவை’ என்ற இச்சொல்லாடல், கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற குறிக்கோளாகவே கொள்ளப்பட்டுவிட்டது. அதிபர் ஷி ஜின்பிங் ஆட்சியின் கீழ் இது மீண்டும் எழுச்சி பெற்றதாகத் தெரிகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடிகளை சமாளிப்பதற்கும் மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வதற்கும் “சுய சீர்திருத்த” திறன் பெற்றிருப்பதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. குறுகிய கால அரசியல் நன்மைகளால் வழிநடத்தப்படும் ஜனநாயக அமைப்பைப் போல் அல்லாமல், தொலை நோக்குப் பார்வையுடன், தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் திறனுடன் விளங்கும் கட்சி என்பது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினரின் முழக்கமாகவுள்ளது. தனது முடிவுரையில் “நாம் இப்போது எல்லா வகையிலும் சீனாவை ஒரு சிறந்த நவீன சோசலிச நாடாக கட்டியெழுப்புவதற்கான இரண்டாம் நூற்றாண்டு இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறோம்” எனக் கூறினார் ஷி.

உலக நாடுகளின் பார்வை 

சீன கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் எழுச்சியைக் கொண்டாடுகையில், அதன் சர்வதேச நற்பெயர் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக ஒரு புதிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் (குறிப்பாக ஜப்பான்) உள்ள நாடுகளில் பெரும்பான்மையினர் சீனாவைப் பற்றி சாதகமற்ற கருத்துக்களைக் கொண்டுள்ளனர் என்று ஆராய்ச்சி அமைப்புகள் தெரிவிக்கின்றன. 

1949-ம் ஆண்டு, சீனாவில் மாவோ தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. அன்றிலிருந்து இன்று வரை, ‘ஒரே நாடு ஒரே கட்சி’ எனப் பயணித்துக்கொண்டிருக்கிறது சீனா. 72 ஆண்டுகளாக ஒரே கட்சியின் ஆளுமையிலிருக்கும் சீனாவில், சோஷியலிச ஜனநாயகம் நிலவுவதாக சீனா சொல்லிக்கொள்வது வேடிக்கையாகவுள்ளது என்று கருதுகின்றன பல நாடுகள். 

நட்பு நாடு என சொல்லிக்கொள்ளும், சீனாவின் நோக்கங்கள் தொடர்பான கேள்விகள் பல எழுப்பப்படுகின்றன. உதாரணமாக, சீனாவிடம் இருந்து வாங்கிய கடனை இலங்கை செலுத்த தவறிவிட்டதால், தனது அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இலங்கை. இதே போன்ற பிடியில்தான் பாகிஸ்தான், கிர்கிஸ்தான் உட்பட பல நாடுகளும் சீனாவிடம் சிக்கியுள்ளன.  ஜனநாயக அடிப்படையில் இயங்கும் தீவான தைவானை சீனாவுடன் சேர்ப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. 1997 ஆம் ஆண்டிலிருந்து சீனாவுடன் இணைந்த பின்னரும், ஒரு நாடு, இரண்டு அமைப்புகளின் கொள்கையில் இயங்கி வந்தது ஹாங்காங் பகுதி. அதாவதுய் வெளிநாட்டு உறவுகள் மற்றும் இராணுவப் பாதுகாப்பு தவிர அரசாங்கத்தின் அனைத்து பகுதிகளையும் நிர்வகிக்க ஹாங்காங் அரசாங்கத்தை அனுமதித்தது சீனா. ஆனால் ஹாங்காங் அரசப் பதவியை ஏற்றுக்கொண்டவர், சீனக் கம்யூனிஸ்டுகளின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்ளாததால் பல அரசுப் பொறுப்புகளை அவரிடமிருந்து பறித்துக் கொண்ட சீனா, தனக்குச் சாதகமானவர்களை தேர்தல்களில் ஜெயிக்க வைத்து, படிப்படியாக உரிமைகளைப் பறித்து வருகிறது. இன்று, ஒவ்வொரு நாளும், ஹாங்காங்கிற்கும் மற்ற சீனாவிற்கும் இடையிலான எல்லை வேகமாக மங்கிவருகிறது என்ற அச்சம் கொண்டுள்ளனர் ஹாங்காங் வாசிகள்.

இந்தியா உட்பட பல அண்டை நாடுகளில் எல்லைமீறிய ஊடுருவல் என்ற குற்றமும் சீனா மீது சுமத்தப்பட்டுள்ளது.

மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்கா கோவிட் நோயைக் கட்டுப்படுத்துவதில் அடைந்த தோல்வியை ஏளனம் செய்து கம்யூனிச நாடான தாங்களும், ரஷ்யாவும் வெற்றிகரமாக தொற்றைக் கட்டுப்படுத்தியதாக சீன அதிகாரிகள் தம்பட்டம் அடித்தது பலரையும் காயப்படுத்தியுள்ளது. பதிலடித் தர சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நாடுகள் ஏராளம். 

சீனர்களின் பார்வை

அடிப்படைத் தேவைகள் நிரம்பிய மக்கள், சில சுதந்திரமான வாழ்வை விரும்புகிறார்கள். கருத்துச் சுதந்திரமின்மை இவர்களது முக்கியமான குற்றச்சாட்டு. அவ்வப்போது பொது மக்களின் குமுறல்கள் வெளிவந்தாலும் அவை தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன அல்லது முடக்கப்படுகின்றன. சமூக அமைதியின்மை, வருமான சமத்துவமின்மை, நில அபகரிப்புகள், மதரீதியிலான அழுத்தங்கள், சுற்றுச் சூழல் குறித்த எந்தத் தகவலும் சமூக ஊடகங்களில் அனுமதிக்கப்படுவதில்லை; ஆனால் அவை தொடர்ந்து நடுத்தர, அடித்தட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, மத குழுக்கள், ஊடக நிறுவனங்கள், சுற்றுச்சூழல் இலாப நோக்கற்றவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களை வெகுவாகக் கட்டுப்படுத்தி வருகிறது. 

எது எப்படியிருந்தாலும், ஷியின் தலைமையின் கீழ் சீனா பல பகுதிகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஏற்கனவே நாடு முழுதிலும் வலிமையான உள்கட்டமைப்பு உண்டாக்கப்பட்டிருந்ததால் உலகமயமாக்கலின் முழுப் பயனை சீனா பெற்றது. உலகப் பொருளாதார வல்லுனர்கள், முதல் முறையாக சீனாவில் கம்யூனிசக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், மக்கள் நலனை குறிக்கோளாக வைத்து திட்டங்களை தீட்டுவதிலிருந்தும், ஷி ஒருவேளை ஜனநாயக அல்லது லிபரலைசேஷன் எனும் தாராளமயமாக்கல் கொள்கையை நோக்கி நகர்கிறாரோ என்று எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் அவர்களின் இன்றைய கருத்து வேறு மாதிரியாகவுள்ளன. சீனாவின் ஒற்றைத் தலைமை, ஒற்றை ஆட்சி அமைப்பு வலுவாகக் கட்டப்பட்டுள்ளது என்றும், மேலும் 20 அல்லது 30 ஆண்டுகள் கம்யூனிச ஆட்சித் தொடரும் என்று சொல்கிறார்கள்.  சீனாவின் இந்தக் கோட்பாடு மற்ற நாடுகளுக்குப் பொருந்தாது என்பது கண்கூடு. அதனால் பிற நாடுகள் இந்தப் போக்கைக் கடைபிடிக்க நினைப்பது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகிவிடும். 

தனது நூற்றாண்டு தின பேச்சில் ” இனி எந்த நாடும் சீனாவை கொடுமைப்படுத்தவோ, ஒடுக்கவோ, அடிபணியவோ செய்யாது. அதற்கு முயலும்  துணிச்சல் உள்ளவர்களின் தலைகள் இன்றும் எஃகு போலிருக்கும் சீனப் பெருஞ்சுவர்களில் நசுக்கப்பட்டு, இரத்தக்களரியாகக் கண்டுபிடிக்கப்படுவார்கள்” 

என்று சொல்லியதை, அகம்பாவம், அச்சம் கலந்த வாக்குமூலம் என்று கருதுகிறார்கள். ஆனால் அவர் தனிப்பட்ட அச்சத்தை, இயலாமையை மறைக்க முயலவில்லை, மாறாக உலக நாடுகள் இத்தனை ஆண்டுகளாகச் சீனாவை ஏளனம் செய்ததை மாற்றி விட்டோம் என எச்சரிக்கிறார் என்கிறார்கள் சிலர்.

நெப்போலியன் போனோபார்ட் அந்நாட்களில் “சீனாவை உறங்க விடுங்கள். அவளை (சீனாவை) எழுப்பி விட்டால், அவள் உலகத்தையே உலுக்கி விடுவாள்” என்றார். ஷி ஜின்பிங்கின் உக்கிரத்தைப் பார்த்தால் சீனா விழித்து விட்டது என்றே தோன்றுகிறது. 

  • ரவிக்குமார்.

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad