\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 3

Filed in கதை by on August 9, 2021 1 Comment

ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 2

 

குருசாமி,  ராஜீவ் மற்றும் ராஜேந்திரன் போலீஸ் ஜீப்பில், சுந்தரின் பழைய அலுவலகத்தை நோக்கி பயணித்தனர்.  ராஜீவ் குருசாமியிடம் நடந்த விஷயங்கள் ஒன்று விடாமல் விவரித்தார். 

“சார்,  மாணிக்கம் நாம போற இடத்தைச் சொன்னவுடனே குஷியாகிட்டான் சார்!”  என்று சற்று நக்கலாகச் சொன்னார் ராஜேந்திரன்.

“என்னையா, எப்பவும்   வீட்டுக்கு போற  நேரத்தில,  வெளியே போக சொன்னா, சின்னப் பசங்க மாதிரி  மூஞ்சிய தூக்கி வச்சுப்ப. என்ன விஷயம், ஏதாவது…. ” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் ராஜீவ். 

“நம்ம சீருடையைப் பார்த்தாலே  பொண்ணுங்க பயந்து ஓடுதுங்க. அதெல்லாம் இல்ல சார், போன தடவை அங்க போனப்ப, பிரியாணி எல்லாம்  கொடுத்துக் கலக்கிட்டாங்க”

“ஏதோ ஒரு தடவை கொடுத்து இருப்பாங்க”

“இல்ல சார், அதுக்கு முந்தின தடவை, ராஜேந்திரன் சாரோட போறப்ப யாரோ பையனுக்கு பர்த்டே பார்ட்டி போல, பீட்சா, கேக், ஐஸ்கிரீம்  கொடுத்தாங்க  “

“சரி, அப்ப உனக்கு அங்க வேலை இருக்கான்னு கேட்கறேன் “

“அட போங்க சார், ஒரு பிரியாணிக்காக , பொழப்புக்கு ஆப்பு வச்சுடாதீங்க!”

சிறிது நேரத்தில் சுந்தர் வேலை பார்த்த இடத்தை வந்தடைந்தனர்.

“முக்கியமான ஒரு விஷயம், அந்த மீட்டிங் பத்தி யார்கிட்டேயும் பேசாதீங்க.    இந்தக்  கொலைக்கும், அந்த மீட்டிங்கும்  சம்பந்தம் இருக்கான்னு  தெரியலை. ஒருவேளை சம்பந்தம் இருந்தா, உஷார் ஆயிடுவாங்க.  ரகுவுக்குத் தெரிஞ்ச ஒரு பையன்,  ஹார்ட்வெர் டிபார்ட்மெண்டுல ஒர்க் பன்றான். அவன்கிட்ட அந்த மீட்டிங் பத்தி ஏதாவது விஷயம் எடுக்க முடியுமான்னு கேட்கத்தான் போறோம் . நீங்களும், குருசாமியும் அந்த பையனைப் போய் பாருங்க. நான் ஹெச்.ஆர். கிட்ட பேசறேன்” என்றார் ராஜீவ்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு அந்த இடத்தை விட்டு அவர்கள் கிளம்பினர். போகும் வழியில்

“ராஜேந்திரன்,  ஏதாவது ஒரு விஷயம்  கிடைச்சுதா?”

“சார்,  அந்தப்   பையனுக்கு எல்லா விஷயங்களையும்  பார்க்க அதிகாரம் இருக்கிறது. அந்த மீட்டிங்கை  அவனால எடுத்து பார்க்க முடிஞ்சுது. அதுக்கு   கம்பெனி பிரசிடெண்டையும்  சேர்ந்து  அஞ்சு பேர் வந்திருக்காங்க.   ” என்று சொல்லிக்கொண்டே அவர்களைப் பற்றி  விவரித்தார்.

“இதை வச்சு நம்ம யாரையும் விசாரிக்க முடியாது.  எல்லாருமே பெரிய தலைங்க. யோசிக்கணும் , ஏதாவது ஒரு வழி புலப்படும்”  என்று சொல்லிவிட்டு, மாணிக்கத்தை ஒரு டீ கடைப்  பக்கம் ஓரங்கட்டச்  சொன்னார். 

ராஜேந்திரன் மாணிக்கத்தைப்  பார்த்து “என்னையா, இன்னிக்கு என்ன கொடுத்தாங்க?” என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார்.

“அந்த ஆபீஸ்ல கடுப்பேத்துறாங்க சார். எப்ப போனாலும் ஏதோ ஒரு விருந்து . இன்னிக்கு சைனீஸ் ப்ரைட் ரைஸ்,  நூடுல்ஸ்  என அமர்க்களப்படுத்தி இருந்தாங்க.  “

“எதுக்கு?” என்று டீயை உறிஞ்சுக் கொண்டே கேட்டார் ராஜேந்திரன்.

 

“100 கோடி ரூபாய் மதிப்பு உள்ள ப்ராஜக்ட் கிடைச்சிருக்கு . அதனால  சுந்தர் குமார் என்று யாரோ ஒருத்தருக்கு  டபுள் புரமோஷன் வேற கிடைச்சிருக்கு. அதற்கு  ட்ரீட்”

” சார்” என்று உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார் ராஜேந்திரன்!!!

“சொல்லுங்க ராஜேந்திரன், உங்க மனசுல ஏதோ ஓடுது “

“சார், அன்னைக்கு நீங்க சரியா  சொன்னீங்க .  அந்த கான்ஸ்டபிள்  ரொம்ப நல்ல மாதிரி. நமக்குத் தானா வந்து மாட்டும் என்று சொன்னிங்க. இந்த 100 கோடி ப்ராஜக்ட்,   சுந்தர் குமார் பிரமோஷன், மீட்டிங் எல்லாத்துக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கு “

“யூ ஹிட் தீ நைல் ஆன் தீ ஹெட்! நல்ல யோசிக்கிறீங்க ராஜேந்திரன். எனக்கும் அப்படித்தான் மனசுல படுது”

“என்ன சார், எங்க போனாலும் சாப்பாடு ‘ராமன்’  என கிண்டல் பண்றீங்களே, இப்ப பாருங்க,  இந்த கேஸுக்கு முக்கியமான துப்பு கொடுத்ததே நான்தான்”

ராஜீவ் சிரித்துக்கொண்டே “ராஜேந்திரன் இதை சொல்லிகிட்டே இன்னும் இரண்டு மாசத்துக்கு சாப்பிடு கிட்டே இருப்பான் பாருங்க.  நீங்க ரகுவை  இங்க கூப்பிடுங்க”

கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில் ரகு அங்கு வந்து சேர்ந்தான். நடந்ததை  ஒன்றுவிடாமல் அவனிடம் விவரித்தனர்.

“சார், எனக்கு நீங்க என்னமோ  நெருங்கி வந்துட்டீங்கன்னு நினைக்கிறன்.  இந்த ப்ராஜக்ட்ஃ எங்களுக்கு எப்படி கிடைச்சது என்று யாருக்குமே புரியலை.  நாங்க போட்டி போட்ட   கம்பெனி ரொம்ப ஃபேமஸ்.   இந்த அஞ்சு வருஷத்துல அவங்களோட போட்டி போட்டு ஒரே தோல்விதான். “

“அந்த மீட்டிங்குல இருந்தவங்க  எப்படி”

“சார், அவங்க திறமைசாலி தான்.  எங்க பிரசிடெண்ட்  ஒரு பிசினஸ் மேன்,  அவருக்குப் பணம் சேர்க்கணும், டாப் கம்பெனியா வரணும். அதுதான் அவருக்குக் குறிக்கோள் “

“ரகு,  உங்கள் கிட்ட ப்ராஜக்ட்ஃ இழந்த கம்பெனியில, உனக்கு ஏதாவது காண்டாக்ட் இருக்கா ?”

“அங்க ஒரு சமயத்துல வேலைக்கு முயற்சி செய்தேன். ப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான். அவன் போன் நம்பர் தரேன்”

ரகு சென்றவுடன் ராஜேந்திரன் “சார், நானும் அந்த கம்பெனி பற்றி விசாரிக்கிறேன்.”

கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து ராஜேந்திரன் ராஜீவை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

“சார்,  நாம  ரொம்ப நெருங்கி வந்துட்டோம் .  எதிர்பார்த்தது சரிதான்.   நாலு பேரு அந்த  ப்ராஜக்ட்ஃ புரோபோசல்ல  வேலை பார்த்து இருக்காங்க  மறைமுகமா நாலு பேர் பத்தியும் விசாரிச்சோம். ஒருத்தரோட நடவடிக்கை சந்தேகமா இருக்கு.  பெயர் சங்கர் . சேமிப்பு கணக்குல இருக்கற பணத்துக்கும் அவர் வாங்கின பொருளுக்கும் சம்பந்தம் இல்ல. கிட்டத்தட்ட ஒரு கோடி பணம்  கொடுத்து பொண்ணுக்கு கார் வாங்கி  இருக்காரு.  கிட்டத்தட்ட நாலு கோடில பண்ணை வீடு பினாமி பேர்ல வாங்கி இருக்காரு. அவர் லைப் ஸ்டைல் மாறல. ஆனா அவங்க பசங்க , சில சொந்த காரங்க லைப் ஸ்டைல் மாறி இருக்கு.  எல்லாமே ரொக்கப் பணம்! .

“வெல்டன் ராஜேந்திரன்.  நீங்க சர்ச் வாரண்ட் தயார் பண்ணுங்க “

கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு பல விஷயங்களைக் கண்டு பிடித்தனர்.  கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை அவர் வீட்டில் பிடித்தனர்.  அவரைத் துருவித் துருவி விசாரித்ததில் அவர் எல்லா உண்மைகளையும்  ஒப்புக் கொண்டார்.  சங்கரும், சுந்தர் குமாரும் ஒரே கல்லாரியில்தான் படித்துள்ளனர்.  சில வருடங்களாகப் பதவி உயர்வு கிடைக்காமல், வெறுப்பில் இருந்த   சங்கரைச்  சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்  சுந்தர் குமார். அவர்கள்  கொடுத்த கொட்டேஷன் (தொகையை) விட  20% கம்மியாகக்  கொடுத்து, அந்த ப்ராஜக்ட்ஃடை பிடித்தனர்.  அதற்குப்  பலனாக சங்கருக்கு 10 கோடி ரூபாய் கமிஷன்!”

“ராஜேந்திரன், இந்த விஷயம் வெளியே போறதுக்கு முன்னாடி அந்த அஞ்சு பேரையும் அட்டாக் பண்ணனும். இதுதான் நம்ப திட்டம். நம்ம அஞ்சு குழுவா பிரிந்து போவோம்.   நான் பிரசிடெண்ட் வீட்டுக்கு போறேன்.  நீங்க அந்த சுந்தர் குமார் வீட்டுக்கு போங்க.  நம்பகமான 3 இன்ஸ்பெக்டர்களை  மத்த மூணு பேரு வீட்டுக்கும்  அனுப்புங்க”

நான்கு மணி நேரத்தில், கிட்டத்தட்ட முப்பது பேர் கொண்ட ஆண் மற்றும் சில பெண் போலீஸ்  குழு அங்கு கூடியது. அதில் ஒரு பெண் ஆய்வாளர் மதுமதி. மிகவும் திறமைசாலி.   ராஜீவ் அவரது புலனாய்வு திறனைக் கண்டு பல சமயங்களில் வியந்துள்ளார்.

ராஜீவ் தனது திட்டத்தை அவர்களிடம் விசாரித்தார். ஐந்து குழுக்களாக பிரித்தார்.  ” மதுமிதா , நான் உங்களை மீட்டிங் செட் பண்ண தலைமை நிதி அதிகாரி வீட்டுக்கு அனுப்புறேன்.  நாம  டபுள் கேம் விளையாடணும்.  முதல்ல  திருட்டுத்தனமா அவங்க  ப்ராஜக்ட் ஜெயிச்சதையும், சங்கர் நம்ம காவலில் இருக்கறதையும்  சொல்லி, அவரைத் திக்குமுக்காட வைங்க  .  அதே சமயத்துல, இந்த இரண்டாவது விஷயத்தைச் சொல்லுங்க. தவறான ஒரு ஆளை  நீங்க மீட்டிங்க்கு  கூப்பிட்டது தெரியாம, உங்க விஷயம்  எல்லாம் சொல்லிடீங்க. அதனால உங்க ப்ரெசிடெண்ட் அந்தப் பையனைக்  கொலை செய்ய சொன்னதை ஒத்துக்கிட்டாருன்னு சொல்லுங்க. அந்தப் பயத்துல தானா விஷயத்தைக் கக்குவாங்க பாருங்க ” என்று சொல்லி முடித்தார்.

மற்றக் குழு தலைவர்களைப் பார்த்து அதே விஷயத்தைச் சற்று மாற்றி சொல்லுமாறு சொன்னார்.

கிட்டத்தட்ட ஆறு  மணிநேரத்தில், அவர்கள் ஐந்து பேரையும்  கைது செய்து சிறையில் அடைத்தனர் .  

அதிகாலை 3 மணி..  

“வெல்டன் மதுமிதா , குட் ஒர்க் ” என்று சொல்லிக்கொண்டே டீ கோப்பையை மதுமிதாவிடம் கொடுத்தார் ராஜீவ்.

“நன்றி,  எல்லாம் உங்க பயிற்சிதான்.  நீங்க சொன்ன மாதிரிதான் பேசினேன். பயந்துட்டாரு .  அன்னிக்குதான் அந்த ப்ரோபோசல் கொடுக்க கடைசிநாள்.  10 கோடி ரூபாயும்  கொடுத்தால்தான் அந்த  நம்பர் சொல்லுவேன்னு சொல்லிட்டாரு சங்கர். அதனால அவசர அவசரமா இந்த மீட்டிங் போட்டு பேசி இருக்காங்க.  கொரோனா நேரம் காரணமாக,  கான்ஃபெரன்ஸ் கால்தான் பேசி இருக்காங்க.  அவசரத்துல சுந்தர் குமார் மணிமாறனைக்   கூப்பிடுவதற்குப் பதிலாக,  சுந்தர் மணிமாறனைக்  கூப்பிட்டு இருக்காரு.  எல்லா விஷயமும் பேச ஆரம்பிச்சுடாங்க.  அந்தப் பையன் தன்னை ஏன் கூப்பிட்டாங்கன்னு கேட்டப்ப தான் , அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு. உடனே மீட்டிங்கை முடிச்சுட்டாங்க” என்று சொல்லிக்கொண்டே குடித்து முடித்த  டீ கோப்பையைக் கீழே வைத்தாள் மதுமிதா. மேலும் தொடர்ந்தாள் . 

“இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா கம்பெனியை மூடற  நிலைமை வந்துடுமுன்னு, அந்தப் பையனை முடிச்சுடுங்கன்னு தலைமை நிதி அதிகாரிகிட்ட சொல்லிட்டாரு ப்ரெசிடெண்ட். அவர் சில அடியாளுங்களைக்    கூட்டிகிட்டு  11 மணிக்கு மேல போய் சுவர் ஏறி குதிச்சு, காலிங் பெல் அடிச்சு இருக்காங்க. தெரிஞ்சவங்கதானே  என்று கதவைத் திறந்து இருக்கான்  அந்தப் பையன், இதைப்  பத்தி வெளியில சொல்ல மாட்டேன் என்று கெஞ்சி இருக்கான் .  அதெல்லாம் கேட்காம, அவனை அங்கேயே கொலை பண்ணி இருக்காங்க. வீட்டுல  திருட்டு நடந்த மாதிரி  செட்டப் செய்து, அவனோட  லேப்டாப், போன்  எடுத்துட்டு கிளம்பிட்டாங்க. அந்த பொருள் எல்லாம் அவர் வீட்டுலதான் இருந்தது ” என்று சொல்லிக்கொண்டே ஒரு மடிக்கணினி பையை அவர் முன்னால்  வைத்தாள். 

“சிறந்த முயற்சி. பாராட்டுக்கள். ராஜேந்திரன், நாளைக்கு  மணிமாறனை வந்து பார்க்கச்  சொல்லுங்க.  அவரோட பையனைத்  திருப்பி தர முடியாது. ஆனால்  ஒரு பெரிய கிரிமினல் கம்பெனியை  வெளிச்சம் போட்டு காட்டிடோம். ஒரு போலீசா, அவர் கட்டாயம் இதை நினைத்து  பெருமைப்படுவார் என்று நான் நம்புகிறேன். ஆனால் ஒரு அப்பாவாக….. “ 

(முற்றும்)

 

— மருங்கர்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. A. Ramaaprabhu says:

    Romba interestinga irundadu. PerryMason stylle irundadu. Best of Luck. KEEP WRITING

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad