சவால்
“என்னது…? சைக்கிளோட்ட தெரியாதா?” தோழிகள் என்னைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் உள்ளுக்குள் சிதைந்து போனேன். நான்கு வீட்டுச் சாப்பாட்டையும் ரசித்து ருசித்துச் சாப்பிட்ட இனிய உணர்வு மனத்தைவிட்டு அகலுவதற்குள் ‘சைக்கிளோட்டலாமா?’ என்ற கேள்வியை எழுப்பியவளை மனத்துக்குள் திட்டித் தீர்த்தேன். உண்ட மயக்கத்தைப்பற்றி அறிந்துகொள்ளாதவளை நொந்துகொள்வதா அல்லது அவள் கேட்டவுடன் குதித்துக்கொண்டு கிளம்பியவர்களைக் குறை சொல்வதா என ஒன்றும் புரியவில்லை.
பிள்ளைகள் அனைவரும் சாப்பிட்டவுடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தனர். அரட்டைக் கச்சேரியுடன் அமர்க்களப்பட்ட அந்த நாள் என்னளவில் இப்படி ஆனதே என பிசைந்து வைத்த சப்பாத்தி மாவைப்போல என் மனநிலை இருக்க, அவர்கள் மனமோ ‘ஈஸ்ட்’ சேர்த்து பிசைந்த ‘பீசா’ மாவைப்போல உப்பிக்கொண்டிருந்ததை அவர்கள் முகம் சொல்லாமல் சொல்லியது. ‘என்னவோ சைக்கிளோட்டுவது பெரிய சாகசம்போல ஒவ்வொருத்தியும் என்னைப் பாத்துக் கையாட்டிட்டுப் போறாளுங்களே. இனி இவளுங்க பக்கம் திரும்பவே கூடாது’ என நினைத்து ஃபோனை கையிலெடுத்தேன்.
சைக்கிள் ஓட்டி முடித்த பிறகு அனைவரும் கடலில் குளிக்கப் போக, ‘நீச்சலடிக்கத் தெரியாதா?’ என யாரும் கேட்டுவிடுவார்களோ என்ற பதைப்பு இதயத்தின் ‘லப்டப்பை’ உயர்த்தியது. நல்லவேளையாக அப்படி ஏதும் அசம்பாவிதம் நடக்காவிட்டாலும் ஏற்கனவே மனத்தில் விழுந்த சிறு கீறலால் மகிழ்ச்சியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.
‘நாற்பது வயதுவரை சைக்கிள் ஓட்டத் தெரியாது இருந்திருக்கிறேனே! தோழியர் நடுவில் எவ்வளவு பெரிய அவமானம்? என்னைப்பற்றி எவ்வளவு இளக்காரமாக நினைத்திருப்பார்கள்?’ புலாவுபின் சம்பவம் உள்ளுக்குள்ளே புண்ணாய் உறுத்தியபடியிருக்க, “செந்தூ… நான் சைக்கிளோட்ட கத்துக்கலாம்னு இருக்கேன்டா” என்று உயர்நிலை இரண்டில் படிக்கும் மகன் செந்தூரனிடம் சொன்னேன்.
“அப்படியாம்மா…? உண்மையாவா…?!!”
புலாவுபின் தீவுக்குப் போனபோது, தனது நண்பர்களுடைய அம்மாக்கள் எல்லாம் உல்லாசமாக சைக்கிள் ஓட்ட, நான் மட்டும் தனியே உட்கார்ந்திருந்தது மகனின் மனத்தையும் பாதித்ததோ? அவனது அங்கமாகிவிட்டதுபோன்ற கைத்தொலைபேசியை உடனடியாக ஓரங்கட்டிவிட்டு மேசை இழுப்பறையில் எதையோ தேடினான்.
“என்னடா தேடுறே?”
“சைக்கிள் சாவி இங்கேதானம்மா இருந்தது” என்று அதைக் கண்டுபிடித்தவன், வீட்டுக்கு வெளியே, வெயிலிலும் மழையிலும் பாடாவதியாகக் கிடந்த சைக்கிளைத் துடைத்து, காற்றடித்து உயிர்ப்பித்ததுடன் நில்லாமல் “வாங்க போலாம்” என்றான். மகனின் ஆர்வம் என்னையும் தொற்றிக்கொள்ளத் துடித்தாலும் மனமோ அடக்கி வாசியென்று ஆணையிட்டது. சின்னப்பையனைச் சிரமப்படுத்த வேண்டாமெனும் எண்ணத்தில், “நீ வேணாம், சாயந்திரம் அப்பா வந்த பிறகே கத்துக்கிறேன்” என்றேன்.
செந்துவின் முகமோ கீறல் விழுந்த டயர்போலானாலும் அடுத்த நொடியே “சரி, சும்மா உட்கார்ந்து பாருங்கம்மா, வாங்க…” என்று விடாப்பிடியாக அழைத்தான். அவனது ஆர்வத்தைக் கலைக்கும் மனமில்லாததாலும், என் ஆர்வக்கோளாறாலும் போய் உட்கார்ந்துதான் பார்ப்போமே என்று போனேன். சைக்கிளில் உட்காருவதே எனக்குச் சாதனையாகத் தோன்றியது. அது ஆண்கள் ஓட்டும் வண்டியென்பதால் காலைத் தூக்கி மறுபுறம் போடுவதே சிரமமாகயிருந்தது. ஒருவழியா உட்கார்ந்து பார்த்தால் கால் விரல்கள்தான் தரையைத் தொட்டன. ‘சே, இவ்ளோ குள்ளமாவா இருக்கோம்?’ என்னவோ அப்போதுதான் தெரிந்த மாதிரி மனம் நொந்துகொண்டது.
“அதெல்லாம் பரவாயில்லம்மா!” என்று மகன் ஊக்கமருந்தை உட்செலுத்தினான்.
‘என் பயம் எனக்கல்லவா தெரியும்?’
“நான் சைக்கிளைப் பிடிச்சுக்கிறேன், அப்படியே மெதுவா ஏறி உட்காருங்கம்மா” கற்றுக்கொடுக்கும் ஆர்வத்தின் உச்சத்தில் இருந்தான். அவனது அதீத ஆர்வத்தைக்கண்டு என் வயிற்றில் சிறுகுடலுடன் பெருகுடலும் சேர்ந்துகொண்டு ‘பாலே’ நடனமாடின! நான் பெரும் பிரயாசையுடன் சைக்கிளில் உட்கார்ந்து ஒரு காலை பெடலில் வைத்துவிட்டு மறுகாலை வைக்கப் பார்த்தால் சுடிதாரின் சட்டைதான் கண்களுக்குத் தெரிந்தது.
“ஒரு பெடல் மேலேயிருந்தால் இன்னொண்ணு கீழேதானிருக்கும், பார்க்காமலே கீழே வைங்கம்மா” என்று மிகச் சாதாரணமாகச் சொன்னான்.
‘சைக்கிளோட்ட கத்துக்கும்போது விழுந்தாகூடப் பரவாயில்ல… சைக்கிள்ள உட்காரும்போதே விழுந்தால்…!’ மனம் எச்சரிக்கை மணியடித்தது.
“நீங்க ‘டி ஷர்ட்’ மாதிரி போட்டுக்கோங்க அப்பதான் சுலபமாயிருக்கும்” என்று யோசனை கூறினான். எனது உடை விஷயத்தில் மாற்றம் வேண்டுமென பதினைந்து வருடமா கணவர் மல்லுக்கு நின்று ஓய்ந்துவிட்டார். ‘சைக்கிளோட்ட கத்துக்கணும்னா வேற சட்டைதான் போடணுமோ?’ என்ற யோசனை பிறந்தது. “அப்பா வந்தபிறகே கத்துக்கிறேன்டா” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டேன்.
“அப்பா, அம்மாவுக்கு சைக்கிளோட்டக் கத்துக் கொடுங்க” மாலை கணவர் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக செந்தூரன் ஆரம்பித்துவிட்டான்.
“என்னது சைக்கிளா? அம்மாவுக்கா? வேணாம்…” கணமும் யோசிக்காமல் வந்த நிர்த்தாட்சண்யமான பதில் எனது தன்மானத்தைச் சீண்டிப் பார்த்தது.
“ஏன், ஏன் வேணாம்? நான் கத்துக்கணும்” கண்டனக் குரல் கொடுத்தேன்.
“நீபாட்டுக்கு சைக்கிள் கத்துக்கிறேன்னு கீழே விழுந்து கைய காலை உடைச்சிக்கிட்டா என்ன பண்றது? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்” என்று மிகத் தீவிரமாக மறுத்தார்.
“அப்படில்லாம் ஒண்ணும் ஆகாது சைக்கிளை எடுத்து வெளியே வைங்க, நான் வர்றேன்.”
“இந்தச் சட்டையைப் போட்டுக்கிட்டுப் போங்கம்மா” மகள் தனது சட்டையில் பெரியதாக இருந்ததை எடுத்து தந்தாள். டி ஷர்ட்டும் பேண்ட்டுமாக வந்த என்னைக் கண்டதும் அவசரமாகக் கண்ணாடியைக் கழற்றியவர் கண்களைக் கசக்கிவிட்டு என்னைப் பார்த்தார். அதன்பிறகு வாயைத் திறக்காமல் சைக்கிளை எடுத்தவர் முகம் மட்டும் என்னவோ போர்க்களம் போவதைப்போலக் கடுமையாகவே காட்சியளித்தது. கைகொடுத்துப் பிள்ளைகள் வாழ்த்துச் சொல்ல களத்திற்குக் கிளம்பினேன்.
ஜுரோங்கில், எங்கள் வீட்டுக்கு அருகிலேயே உள்ள திறந்தவெளி பெரும்பாலும் சீனர்களின் உடற்பயிற்சிக்கு உரிய இடமாகவும், அவர்களின் பண்டிகை நேரங்களில் தற்காலிகமாக வழிபாடு செய்யும் தலமாகவும், மலாய்காரர்களின் திருமண வைபவங்கள் அரங்கேறுமிடமாகவும் இருக்கும். எட்டாவது அதிசயமாக அன்று அந்த இடம் காலியாக இருக்க அங்கு சைக்கிளுடன் சென்றார். ‘நான் சைக்கிள் கத்துக்கிறதை, சுற்றியிருக்கிற அத்தனை ‘ப்ளாக்கு’களிலிருந்தும் பார்ப்பார்களா?’
“இங்கே எனக்கு ஒரு மாதிரியாக இருக்குங்க, வீட்டுக் கீழ்த்தளத்திலேயே கத்துக்கிறேனே!”
“அங்கு வசதியாயிருக்காது, தூணில் இடிச்சிக்கிட்டா கஷ்டம்.”
“தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா எனக்கு வெட்கமா இருக்கும், நான் கீழ்த்தளத்திலேயே கத்துக்கிறேனே ப்ளீஸ்….”
உலகமகா அதிசயமாக அதற்குச் சம்மதித்து “நான் சைக்கிளைப் பிடிச்சிக்கிறேன், நீ உட்கார்” என்றார். கஷ்டப்பட்டு உட்கார்ந்தேன். விழுந்துவிடுவோமோ எனும் பயமே மனம் முழுதும் மேலோங்கியிருந்தது.
“ஆடாம அசையாம நேரே முன்னே பார்த்து மிதி.”
சும்மா, இந்தப் பக்கம் அந்தப் பக்கமென்று சைக்கிளை ஆட்டுவித்தேன். கொஞ்ச நேரத்துல என்னைவிட அவருக்குத்தான் வியர்வை வெள்ளமாகப் பெருகுவதைக் கண்ணுற்றேன். என்னிடமிருந்த கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம், அதைக் கண்டுகொள்ள வேண்டாம் என்றது. மேலும், ‘வேர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்யணும்னு சொன்னா என்னைக்காவது அதைக் காது கொடுத்துக் கேட்டாரா?’ கணவர் மீது அளவில்லா கரிசனம் பொங்கியது.
“ஏன் நெளியிறே? தூரமா பார்” இதே வார்த்தைகள் அடிக்கொரு தரம் கேட்டன. அவர் சைக்கிளைப் பிடித்துக்கொண்டு வந்தபோதும் பயத்திலேயே வண்டியைவிட்டுக் கீழே இறங்கினேன். அடுப்பில் வைத்து எண்ணெயைத் தேய்த்தவுடன் விட்டுவிட்ட இரும்பு தோசைக்கல்லைப்போல அவர் முகத்தில் அனல் பறந்தது.
“எக்காரணங்கொண்டும் காலை கீழே வைக்காதே. உன்னை விட்டுட மாட்டேன்” மனிதர் சொல்லிச் சொல்லி ஓய்ந்தார்.
‘உன்னைவிட மாட்டேன்… காதல் வரம் கேட்டேன்… என்ற பாடல் மனத்தில் எழுந்தது. ரசிக்கத் தெரியாதவரிடம் நான் ஏன் சொல்லப் போறேன்?’
அவ்வழியே வந்த மலாய் ஆடவர் ஒருவர், “பாஸ், இப்படிப் பிடிச்சுக்கிட்டே போனால் கத்துக்க முடியாது. அவங்களையே முயற்சி பண்ண விடுங்க. என் மனைவிக்கு நான் இப்படிச் சொல்லிக் கொடுத்து முடியாம கடைசியில் அவங்களாதான் முயற்சி பண்ணிக் கத்துக்கிட்டாங்க” என்றார். அதை ஆமோதிப்பதுபோல உடனிருந்த அவருடைய மனைவியும் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.
சற்றுத் தொய்ந்திருந்த நம்பிக்கைத் துளிர்த்து எனக்குப் புதிய தெம்பு பிறக்க “அவர் சொன்ன மாதிரி நானே முயற்சி பண்றேனே” என்று கூறினேன்.
“நான் பிடிச்சிக்கிட்டு வரும்போதே இவ்ளோ ஆட்டங் காண்ற….. உன்னை நம்பி எப்படித் தனியே விடறது?” என்று கூறவும் எனது வாய்க்குப் பூட்டிட்டேன். என்னுடைய முயற்சி தொடர, கணவரது வசவுகளும் தொடர்ந்த வண்ணமே இருந்தன. ஒரு மணி நேர பயிற்சிக்குப் பிறகு, என்னால் சுமாராக மிதிக்க முடிந்தது, ஆனால் இடுப்பை வளைக்காமல் உட்கார மட்டும் முடியவில்லை. நானொரு பக்கம் போக நினைத்தால், வண்டி தன்னிஷ்டத்துக்கு இன்னொரு பக்கம் போனது.
“ஏன் தூணுக்குத் தூண் போய் முட்டிக்கிறே?”
‘நானா முட்டிக்கணும்னு போறேன்? அது தானா போகுது…! சொன்னால் அதுக்கு வேற வாங்கிக் கட்டிக்கணும், அது தேவையா…?’ தூணருகில் வருகையில் மோதி விடுவோமோ என்கிற பயத்திலேயே முன்னெச்சரிக்கையாக காலை கீழே வைத்துவிடுவேன். அசட்டுச் சிரிப்புடன் அவரைப் பார்க்க, அவர் முகமோ ‘காங்கிரீட்’ தூணைவிட இறுகி இருக்கும். இந்தளவு கடுமையைக் காட்டினால் எப்படிக் கற்றுக்கொள்வது? ‘ஒரே நாள்ல கத்துக்க முடியுமா?’ என்ற எனது கேள்வியை அவர் முன் வைக்க விரும்பினேன். ‘நாக்குதான் உனக்குச் சத்துரு’ என அறிவு சொன்னது.
‘வாழ்க்கையிலேயே சைக்கிள் ஓட்டுவதுதான் சிரமமான காரியமோ….!’ என் பார்வையில் சாலையில் சைக்கிளோட்டிச் செல்பவர்கள் எல்லாம் சாதனை படைக்கவே தேவலோகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவர்களைப்போலத் தோன்றினர். சாதாரணமாக எல்லோரும் ஓட்டிச் செல்ல, எனக்கு இந்தச் சைக்கிள் சதி செய்யுதே. தொடர் தோல்விகள் தோரணத்துடன் என்னை வரவேற்கும் கொடுமையை என்னென்று சொல்வேன்?
“நீ சைக்கிள் ஓட்டியது போதும் வீட்டுக்கு வா… பிள்ளைகளெல்லாம் இரண்டே நாளில் கத்துக்கிட்டாங்க. நீ ரெண்டு மாசமானாலும் கத்துக்கப் போறதில்லை” மிகவும் அலட்சியமாக என்னிடம் வீசப்பட்ட வார்த்தைகள் என் தன்மானத்திற்கு விடப்பட்டச் சவாலாக இருந்தன. அதற்குப் பதில் சொல்லி என்னுடைய இலட்சியத்திற்கு உலை வைக்க நான் விரும்பவில்லை.
வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகள் ஆர்வத்துடன் எதிர்கொண்டனர். அவர்களை ஏமாற்ற மனமின்றி “கஷ்டமாதான் இருக்கு, ஆனாலும் நிச்சயமா கத்துக்குவேன்” நம்பிக்கையுடன் பதிலளித்தேன். “எங்கம்மாவாச்சே!” என்று பிள்ளைகள் என்னைக் கட்டிக்கொண்டனர். என்னவர் முகத்தில் தோன்றிய நக்கலான சிரிப்பை நான் ஏன் கண்டுகொள்ளப் போகிறேன்? பிள்ளைகளின் எதிர்பார்ப்புக்காகவாவது நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டே ஆக வேண்டுமென்று உறுதி பிறந்தது.
“எனக்கு லேடீஸ் சைக்கிள் வாங்குங்க, அதான் வசதியாக இருக்கும்!”
“ஒருநாள் கூத்துக்கு இதெல்லாம் தேவையா?” பகடி தொனிக்க படீரென கேள்வி வெடித்தது.
‘பொறு மகளே… பொறு… இது உனக்குச் சோதனையான காலம். எக்காரணங்கொண்டும் எதிர்வினை ஆற்றாதே!’ மனத்தின் சொல்லுக்கு அடிபணிந்தேன்.
செந்தூரன் “ஆமாம்பா. அம்மா சொல்றதுதான் சரியாயிருக்கும். முதல்ல லேடீஸ் சைக்கிள் வாங்குங்க” என்று எனக்கு பக்கபலமானான்.
‘அடுத்த முறை புலாவுபின் போகையில் நான் சைக்கிளோட்டியே தீரவேண்டுமென்று தீர்மானம் எடுத்திருப்பானோ…?’ அன்றிரவு, கண்ணை மூடினாலே நான் கன்னாபின்னாவென்று சைக்கிள் ஓட்டுவதுதான் காட்சியா விரியுது. ‘சைக்கிளா நாமான்னு ஒரு கை பார்த்துவிடுவது’ என்ற முடிவுக்கு வந்தபிறகு இமைகள் இணைந்தன.
அந்தி சாயும் நேரம்! அத்தானின் வரவிற்காகக் காத்திருந்தேன்! சைக்கிள் வாங்கணுமே! கடைக்கார சீன முதியவர் வண்டியை ஓட்டிப் பார்க்கச் சொன்னார். இப்போதுதான் கற்றுக்கொள்ளப் போகிறேன் என்பதை நான் சற்றே முகம் சிவக்கக் கூற, கட்டைவிரலை உயர்த்தி அவர் வாழ்த்தினார். எரிந்து கொண்டிருந்த ஆர்வத்தை அது தூண்டிவிட்டது. வீட்டுக்கு வந்தவுடன் உற்சாக மிகுதியால் காரிடாரில் நானே ஓட்டுகிறேன் பேர்வழியென்று முயற்சிக்க, வழக்கம்போல வண்டி வேறுபக்கமாகப் போய், அங்கிருந்த தொட்டிச்செடியை முரட்டுத்தனமாய் முத்தமிட்டது. சந்தையில் ஆசையாசையாக வாங்கி வந்த அரிய வகை ரோஜாச்செடி காயங்களுடன். ‘என்னை இப்படி பண்ணிட்டாயே…’ என்பதுபோல அலங்கமலங்க விழித்தது.
“மற்ற செடிகளாவது இருக்கட்டும், நீ வா” இறுகிய முகத்துடன் அவர் கிளம்ப உடைந்த மனத்துடன் பின்தொடர்ந்தேன்.
“திறந்த வெளியிலேதான் நல்லா கத்துக்க முடியும்” என்றார் உறுதியுடன்.
‘மற்றவர்களைப்பற்றி நினைத்தால், முடியாதென்று கிளம்பிவிடுவாரோ’ எனும் பயத்தில், யார் வேண்டுமானாலும் எதாவது நினைத்துக்கொண்டு போகட்டுமென்று சம்மதித்தேன். உண்மைதான், கீழ்த்தளத்தைவிடத் திறந்தவெளியில் பயிற்சி செய்வது மிகவும் சுலபமாகவே இருந்தது. அது பெண்களுக்கான வண்டியாக இருந்ததால் ஏறி உட்காருவதற்கும் சிரமமின்றி இருக்க ஆரம்பம் ரொம்பவும் நன்றாகவே இருந்தது. அவர் சைக்கிளைப் பிடித்துக்கொள்ள நான் மிதிக்க, சைக்கிளை பிடித்துக்கொண்டே ஓடி வந்தார். ‘பரவாயில்லையே நல்லா மிதிக்க வருதே’ன்னு எனக்கு நானே சர்டிபிகேட் கொடுக்கும்போதே, “இப்போ நீயேதான் மிதிக்கிறே, நான் சும்மா பின்னாடிதான் வர்றேன்” என்றார். அவ்வளவுதான், உடனே கீழே இறங்கிவிட்டேன். அவரது முகத்தைப் பார்க்க வேண்டுமே!
“நீங்க பேசறது எனக்குப் பயமாயிருக்கு!” நான் வழிந்த அசடு ஆறாய் ஓடியது.
“வண்டியை நிறுத்தணும்னா காலை கீழே வைக்காதே, பிரேக்கைப் பிடிச்ச பிறகுதான் வைக்கணும்.”
“சரி, சரி” தன்னம்பிக்கை வந்த தைரியத்தில் அவர் பேசுவதைக் கேட்க காதுகள் அடம்பிடித்தன.
நானே ஓட்டுவதாக நினைவு வர, “வண்டியைத் திருப்பு” குரல் சற்று தள்ளிக் கேட்க இறங்கிவிட்டேன். கண்களில் பொறி பறக்க நின்றவரிடம், “நீங்க பேசுவது என் நெஞ்சில் அதிர்வுகளை உண்டாக்குது. நானே ஓட்டுறேன், நீங்க எதுவும் பேசவேண்டாம்” என்று சொல்லிவிட்டு அடுத்தச் சுற்றுக்குச் சென்றேன். வண்டியில் உட்கார மட்டும் அவர் தயவு தேவைப்பட ஓட்டியவள் நிறுத்த வேண்டிய நேரத்தில் பிரேக்கை மறந்து கால்களைத் தரையில் ஊன்றியே நிறுத்தினேன். அதுவே தொடர படு டென்ஷனாகிவிட்டார்!
வீட்டுக்கு வந்தபின் ரொம்ப ஆர்வத்துடன் “அம்மா இப்ப சைக்கிள் ஓட்டப்போறேன் பாருங்க” என்று காரிடாரில் ஓட்டிக் காட்டக் கிளம்பினேன்.
“அம்மா சைக்கிளோட்டக் கிளம்பிட்டாங்க… இப்ப எத்தனைத் தொட்டிச்செடி உடையப்போகுதோ…?” என்று செந்தூரன் கைப்புள்ளை கணக்காய் என்னைப் பார்த்துச் சொன்னான். வசந்தத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த தொடரில் மூழ்கியிருந்தவர் எங்களிருவரது பேச்சைக் கவனிக்கவேயில்லை. அதுவும் நல்லதுக்குதானென்று ஓட்டிக் காட்ட பிள்ளைகளது பாராட்டுடன் நான் வளர்த்தச் செடிகளும் நிம்மதிப் பெருமூச்சைவிட்டன!
அன்றைய இரவு கண்ணை மூடுகையில் காட்சிகள் சற்று முன்னேற்றத்துடன் படமாகின. சைக்கிளை ஓட்ட முடிந்ததே தவிர பிரேக் என்று ஒன்றிருப்பதை மட்டும் மனம் மறந்தே போவதைத் தவிர்க்க முடியாதது கொடுமையாகக் காட்சியளித்தது.
அலாரத்திற்கு வேலையில்லா அற்புதக் காலையான வாரயிறுதி. மேகம் சூரியனைச் சிறை பிடித்ததால் வானம் வெளுக்கமாட்டேனென்று அடம்பிடிக்க, வழக்கமாக அத்தருணத்தை ஆர்வத்துடன் வரவேற்கும் நான் அன்று முகச்சுளிப்புடன் அண்ணாந்து பார்த்தேன். என்னுடைய கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையில் மழை விழுகிறதே!
களைத்துப்போன வானமும் ஒருவழியாக ஓய்வை நாட, என்னவர் பயிற்சியைத் தொடர வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் பூங்காவைத் தேர்ந்தெடுத்தார். காலையிலும் மாலையிலும் நடைபயிற்சி, மெதுவோட்டம் மற்றும் ‘தாய்ச்சி’யெனும் உடற்பயிற்சிகளென்று அரங்கேறும் இடம் அது. எங்கே போனால் என்ன? இங்கே வாங்கும் ஏச்சையும் பேச்சையும் அங்கு வாங்கப் போகிறேன் என்று நினைத்த வண்ணம் அவரைத் தொடர்ந்தேன். நிழல் சிறுக்கும் சமயமென்பதால் அங்கு வேறு யாருமில்லை.
“நீயேதான் ஏறி உட்காரணும், நிறுத்தணும்னா காலைக் கீழே வைக்காம பிரேக் பிடிச்சிதான் நிறுத்தணும், அப்புறம் ஹேண்ட்பாரால்தான் வண்டியை வளைக்கணும், இடுப்பாலல்ல” பயிற்சிக்குச் செல்லும் ராணுவ வீரனுக்குக் கமாண்டோவைப்போலக் கட்டளைகளைப் பட்டியலிட்டார்.
‘சும்மா ஓட்டுவதே எனக்குச் சிம்ம சொப்பனம், இதுல இவரோட கட்டளைகளை வேற நிறைவேத்தணும்னா நடக்கிற காரியமா அது?’
நல்லா ஓட்டிக்கொண்டு போகும்போது ஒரு மைனாவைப் பார்த்தாக்கூட போதும். அது என்னவோ என்னுடைய சைக்கிள்ள விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளுமோ என்ற எண்ணம் தானாக வர உடனே நிறுத்தி விடுவேன். ஏன் நிறுத்தினாய் என்று கேட்பவரிடம் மைனாவைப்பற்றிக் கூறினால் நம்பிவிடப்போகிறாரா என்ன? ஒரு மைனாவிற்கே அந்நிலை என்றால் மனிதர்களின் வரவைப்பற்றிக் கேட்கவும் வேண்டுமா? ஒரு தலை தெரிந்தால் போதும். என் வண்டி அதற்குமேல் ஒரு அடிகூட நகராது. காரணம் கேட்பவரிடம் வரும் நபரைச் சுட்டிக்காட்டினால், “ஒரு கிலோமீட்டருக்கு முன்னால அவர் இருக்கார்” எனும் பதில் வரும். என் இதயம் மீட்டும் சுரம் எனக்கல்லவா தெரியும்?
வழியில் மெதுவோட்டம் ஓடுபவர்களெல்லாம் என் சைக்கிளில் வந்து விழுவதற்காகவே ஓடி வருவதாகத் தோன்றும். “நீயே போய் அவங்களை மோதப் போனாலும் அவங்க தள்ளிப் போய்டுவாங்க” அவரது இரக்கமற்ற வார்த்தைகள் என்னை முழுதும் செயலிழக்க வைக்கும்.
‘இதுநாள்வரை இவரிடம் போட்ட சண்டைக்கெல்லாம் சேர்த்துப் பழி வாங்குகிறாரோ?’ என்று உள்ளம் ஐயம்கொண்டது. போதாக்குறைக்கு அவ்வழியே வருபவர்கள் வேறு ஒவ்வொரு விதமாக ஐடியா கொடுக்க, ‘இவங்களெல்லாம் வீட்டைவிட்டுக் கிளம்பியதே எனக்கு யோசனை சொல்லத்தானோ…?’ என்று மனத்தில் தோன்றும்.
முதல்நாள் கற்றுக்கொண்டதுகூட அன்று கைகொடுக்க மாட்டேனென்று அடம்பிடிக்க “இப்படியே பண்ணிக்கிட்டிருந்தால் ஆறு மாசமானாலும் உன்னால ஓட்டவே முடியாது. இரண்டே நாளில் பிள்ளைகளுக்குக் கத்துக்கொடுத்துட்டேன். வீட்டுக்கு வா போகலாம்…” என்றார்.
அனலில் வறுபட்டு தெறிக்கும் அந்த வார்த்தைகளைக் கேட்டு என்னுள் ஆற்றாமை பொங்கியது. ‘இதே டயலாக்கை எத்தனை முறை சொல்வார்?’ “நீங்க கிளம்புங்க, நானே ஓட்டிக்கிறேன்” என்றேன். இத்தனை வருட வாழ்க்கையில் அவர் சொன்ன வார்த்தைக்கு என் கன்னங்கள் நனைந்தது அதுவே முதல் முறை.
“சரி, சரி வா நான் ஏதும் சொல்லலை.”
‘ஓ… இதுக்கு இவ்ளோ சக்தியிருக்கா? இது தெரியாம இவ்ளோ நாளைக் கடத்திட்டோமே…’ மனம் ஆதங்கப்பட்டது.
“நான் என்ன சைக்கிள் கத்துக்கிட்டு ரேசுக்கா போகப் போறேன்? சும்மா ஏதோ ஆர்வத்துக்காகக் கத்துக்கிறேன். சின்னப்பிள்ளைங்க ரெண்டுநாளில் கத்துக்கிட்டா நான் பத்து நாள்ல கத்துக்கப்போறேன், நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன்!”
‘எப்படியும் அவர் கிளம்பமாட்டார் என்றுதான் தெரியுமே!’
ஒரு வழியாக நானே ஏறி உட்கார்ந்து ஓட்டி, பிரேக்கும் ஓரளவு கட்டுப்பாட்டுக்கு வந்தது. “பரவாயில்லை, நல்லாத்தான் ஓட்டற, ஹேண்ட்பாரால வண்டியத் திருப்பினால் போதும்” இந்த மூன்று நாளில் முதல்முறையாக வந்த பாராட்டு, இடைச்செருகலாகக் குசும்பு வேறு. அன்றைய தினம் இமைகள் இணைய அதற்காகவே காத்திருந்தார்போன்று வண்டி கடகடவென்று சென்றது.
இதில் என்னவொரு கொடுமை என்றால், ஆர்வக்கோளாறில் நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு தனியே ஓட்டச் சென்றுவிடுவேனோ என்கிற பயம்வேற அவருக்கு இருக்கும்போல. வீட்டிலிருக்கும்போது (லிப்டுக்கு போகும்வரை!) எச்சரித்துவிட்டுப் போவதில்லாமல் வேலைக்குப் போன பிறகுகூட, “தனியா கிளம்பிப் போயிடாதே!” என்று தொ(ல்)லை பேசுவார்.
“என்னவோ நான் காரை எடுத்துக்கிட்டு நெடுஞ்சாலையில் பயணப்படுவதுபோல ஏனிந்த பயம்? மிஞ்சிமிஞ்சிப் போனால் கீழே விழுவேன், வண்டிக்கும் எனக்கும் கொஞ்சம் சிராய்ப்பு ஏற்படும் அவ்வளவுதானே?”
“லூசுத்தனமா பண்ணி வைக்காதே” தொலைபேசி சூடாக, சரியென்று அவரைச் சாந்தப்படுத்த வேண்டியிருந்தது. பாவம், என் பின்னாலேயே ஓடி வந்து இளைச்சுதான் போய்ட்டார். அப்புறம் என்ன? அதற்கடுத்து வந்த நாட்களில் அவர் உட்கார்ந்திருக்க, என் பேச்சுக்கு சைக்கிள் கட்டுப்பட்டது. இதில் இலவச இணைப்பா பிள்ளையாருக்குச் சவால் விடுக்கும் வண்ணமிருந்த அவரது தொந்தி மறைந்துபோனது பெரிய ஆச்சரியம். சும்மாவா பின்னே? என் பின்னால ஓட வச்சிட்டேன்ல…!!
செந்தூரன், “வாய்மொழித் தேர்வை எண்ணி பயமாயிருக்கும்மா” என்று ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னான்.
“நம்மோட முதல் எதிரியே பயம்தான். பார், அம்மா விழுந்துடுவேன்னு நினைத்துப் பயந்திருந்தா இப்ப சைக்கிளோட்டக் கத்துக்கிட்டிருக்க முடியுமா…?” என என் தன்முனைப்பு ஆற்றிவிட்டு பெருமையுடன் நிமிர்ந்து பார்த்தபோது மகன் ஆளையே காணோம்.
“செந்தூரன் ஏன் காதை மூடிக்கிட்டு அவ்ளோ வேகமா ஓடுறான்?” கணவர் என்னைப் பார்த்து கேட்டார்.
- மணிமாலா மதியழகன்