அலுவலகம் திரும்பல்
சென்ற வருடம் மார்ச் மாதம், பல அலுவலகங்கள் மூடப்பட்டுப் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கத் தொடங்கினார்கள். இதோ ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. சில அலுவலகங்கள் முழுமையாக மீண்டும் திறந்துவிட்டன. சில அலுவலகங்களில், வாரத்தில் சில நாட்கள் பணியாளர்களை அலுவலகத்திற்கு வரச் சொல்கிறார்கள். பல அலுவலகங்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் முழுமையாக அலுவலகத்திலிருந்து செயல்பட இருக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு. சில அலுவலகங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு முழுமையாகப் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க வைக்கப் போகிறார்களாம். மினியாப்பொலிஸ்-செயிண்ட் பால் டவுனில் இருக்கும் பல நிறுவனங்கள் செப்டம்பரிலிருந்து முழுமையாகத் திறக்கப் போகிறார்கள். இதற்குக் காரணமாக மினியாப்பொலிஸ்-செயிண்ட் பால் டவுண்டவுனில் இருக்கும் நிறுவனங்களை, அதன் ஊழியர்களைச் சார்ந்து இயங்கும் வணிகம் மீண்டெழும்ப வேண்டியதைச் சொல்கிறார்கள். அந்த வணிகம் மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு, நிறுவனங்கள் பணியாளர்களை அலுவலகத்திற்குப் படிப்படியாக வந்து பணிபுரியச் சொல்கிறார்கள். எப்படியோ அலுவலகத்திற்குப் போகிறீர்கள் அல்லது போகப் போகிறீர்கள் என்றால் அவர்களுக்காகச் சில குறிப்புகள்.
முதலில் நீங்கள் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தூக்கி போட்ட அந்த ஐடி கார்டை தேடிக் கண்டுபிடியுங்கள். அதைப் பார்க்கும்போது உங்களுக்குப் பூர்வஜென்ம நினைவு வருகிறது என்றால் நீங்கள் அலுவலகம் சென்று ரொம்ப நாள் ஆகிறது என்று அர்த்தம். முதல் நாள் எழுந்து அதைத் தேடி தாமதமாக அலுவலகம் செல்வதற்கு அல்லது அங்குச் சென்று புதுக் கார்டு கேட்பதற்குப் பதில், முந்தைய நாளே எடுத்துப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக உங்கள் அலுவலகத் துணிமணிகள் நிலவரத்தைக் கவனிக்க வேண்டும். வீட்டில் இருக்கும்போது லுங்கி கட்டிக்கொண்டு டவுசர் போட்டுக்கொண்டு மீட்டிங்கில் கலந்துக்கொண்டு இருந்திருப்பீர்கள். இப்ப பழையபடி ஃபார்மல் பேண்ட் சர்ட் போட வேண்டி இருக்கும். அதையெல்லாம் போட முடிகிறதா என்று ஒரு முறை சோதித்துப் பார்த்து விடுங்கள். பல பேர் இந்தக் காலத்தில் பெருத்துப்போய் இருப்பதால், இதைச் சீக்கிரமாகவே செய்துவிடுங்கள். ஒன்று, அலுவலகத்திற்குப் போக இருக்கும் காலத்திற்குள், இடுப்பு சுற்றளவைக் குறைக்க முயலலாம். அல்லது, புதுத் துணிமணிகளை வாங்கி வைக்கப் பார்க்கலாம்.
அதுபோலவே, உங்கள் காலணிகள். நீங்கள் அலுவலகத்திற்குப் போடும் உங்கள் காலணிகளைப் போட்டுப் பாருங்கள். இடுப்பு அளவுக்குப் பாதம் வளராது என்ற உடல் நியதியால், இதில் சேதாரம் குறைவாகவே இருக்கும். அதனால், இதில் அளவு பிரச்சினைகள் வர வாய்ப்பு குறைவே. காலணிகளை அணிந்து பல நாட்கள் ஆகியிருக்கும் என்பதால், அதற்குள் ஏதேனும் தேள் பூரான் இருக்கிறதா என்று பார்த்து, அதைத் தூசித் தட்டி, துடைத்து, தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் அலுவலகத்திற்குக் காரிலோ அல்லது பஸ்ஸிலோ அல்லது நடந்து சென்றுகொண்டு இருந்திருப்பீர்கள். தற்சமயம் அந்தப் பயண ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள். சிலர் கோவிட் காரணமாக, பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்துக் காரில் சென்று வருகிறார்கள். பேருந்து அட்டவணைகள் பல இடங்களில் மாறி உள்ளன. பேருந்துகளில் முகக் கவசம் அவசியம் என்ற நிலை உள்ளது. தற்சமயம் குறைந்த சொற்ப பயணிகளே பேருந்து பிரயாணம் செய்வதால், குறைந்த அளவிலேயே பேருந்துகள் சென்று வந்து கொண்டிருக்கின்றன. அதனால் உங்கள் பயண நேரத்தைச் சரியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் அங்கே சென்று உங்கள் பேருந்தைத் தேடிக்கொண்டிருக்கும் நிலை வராது.
அலுவலகங்களில் முகக் கவசம் அணிய அவசியம் இல்லை என்று சொன்னாலும், பேருந்துகளில் முகக் கவசம் அணிவது அவசியம். அதனால் முகக் கவசத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கூடவே சானிடைசர் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பேருந்தில் செல்லும்போது முதல் நாள் கொஞ்சம் தயக்கமாகத் தான் இருக்கும். போகப் போகச் சரியாகிவிடும்.
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது, அந்தந்த நேரத்திற்கேற்ப எழுந்து, சாப்பிட்டு, உறங்கி உடல் பழக்கப்பட்டிருக்கும். இப்போது அலுவலகம் சென்று வரும் நேரத்தைக் கணக்கிட்டு, அதற்கேற்ப நமது வழக்கத்தை மாற்ற வேண்டி வரும். எப்போதும் எழும்பும் நேரத்தை விட விரைவாக எழ வேண்டி இருக்கும். மதிய உறக்கப் பழக்கம் ஏற்பட்டிருந்தால், அதைச் சரிசெய்து அந்த நேரத்தைக் கையாள வேண்டி இருக்கும். குழந்தைகளைப் பிற வகுப்புகளுக்குக் கூட்டி சென்று திரும்புவதற்கு, மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். அலுவலத்திற்கு உணவு எடுத்து செல்வது குறித்து, அல்லது அங்கு எங்கே சாப்பிடப் போகிறீர்கள் என்பது குறித்தெல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள். டவுண்டவுனில் பல உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. அதைக் கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, உங்கள் அலுவலகத்தில் எந்த மாடியில், எந்த இடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தீர்கள் என்றெல்லாம் யோசித்து நினைவு கூர்ந்துக்கொள்ளுங்கள். தற்சமயம் அதில் மாற்றம் செய்திருக்கலாம்.
பலருக்கும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது, பல வசதிகளைக் கொடுத்தாலும், அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவதில் பயன்கள் இல்லாமல் இல்லை. அதிகமாக நடப்போம், உடன் பணியாற்றுபவர்களிடம் நேருக்கு நேராகப் பேசுவோம், பணி சார்ந்த உறவு மேம்படும், வேலையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும், வீட்டில் இருந்து அலுவலக வேலை பார்ப்பது குறையும், வீட்டில் இருப்போரிடம் நெருக்கம் கூடும். இப்படிப் பலவற்றைக் குறிப்பிடலாம். இது போன்ற காரணங்களால், சென்ற வருடத்தில் இருந்தே சிலர் அலுவலகம் சென்று வேலை பார்த்து வருகிறார்கள்.
இப்போது நாம் திடீரென எந்தப் புது உலகிற்கும் செல்லவில்லை. நாம் ஏற்கனவே சென்று வந்துக்கொண்டிருந்த அதே அலுவலகத்திற்குத் தான் செல்லப் போகிறோம். என்ன, இந்த ஒன்றரை வருடக் காலக்கட்டத்திற்குள் சில விஷயங்கள் நமக்கு வெளியேயும், நமக்கு உள்ளேயும் மாறியிருக்கும். அதை என்னவென்று கவனித்து, அதற்கேற்ப நம்மைத் தயார் கொண்டால் போதும். நமது அலுவலகத் திரும்பல் வைபவத்தைச் சுமுகமாக நடத்தி விடலாம்.
- சரவணகுமரன்