\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சார்பட்டா பரம்பரை

Filed in திரைப்படம் by on August 9, 2021 0 Comments

தமிழ்நாட்டின் ஒவ்வொரு நிலப்பரப்பையும் வெவ்வேறு சமயத்தில், பல்வேறு இயக்குனர்கள் வந்து வெள்ளித்திரையில் காட்சிப்படுத்தியுள்ளனர். அது போல், தமிழ்நாட்டின் தலைநகரின் ஒரு பகுதியான வடசென்னையின் பல முகங்களை, தனது படங்களில் தொடர்ந்து காட்டி வருபவர் இயக்குனர் பா. இரஞ்சித். அட்டக்கத்தியில் பருவ வயதில் வரும் காதலை நகைச்சுவை கலந்து காட்டியவர், மெட்ராஸ் திரைப்படத்தில் அப்பகுதியில் நிகழும் அரசியலையும், அதன் மூலம் பாதிக்கப்படும் மக்கள் குறித்தும் விறுவிறுப்பாகக் காட்டி, திரையுலகையும், ரசிகர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தார். முக்கியமாக, கல்வியைத் தீர்வாகச் சொல்லியதில் கவனம் ஈர்த்தார்.

இரண்டு படங்களே இயக்கியிருந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக, உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துடன் மூன்றாவது படத்தில் பணியாற்ற வாய்ப்பு பெற்றார். ரஜினியின் பிற கமர்ஷியல் படங்கள் போல் அல்லாமல், இரஞ்சித் இயக்கிய கபாலி ஒருவித கலந்த வரவேற்பைப் பெற்றது. ரஜினியைப் பலரும் காட்டத் துணியாத விதத்தில் காட்டி, அவருடைய இன்னொரு பரிணாமத்தைக் காட்டினார். சென்னையில் இருந்து பறந்து மலேசியா சென்று அங்குள்ள தமிழர்கள் படும் கஷ்டங்களை அப்படத்தில் பதிந்தார். தாணுவின் அதிரடி விளம்பரங்கள் மூலம் படம் நல்ல வசூலையும் பெற்றது. ரஜினி ரசிகர்களிடம் பாராட்டுப் பெறாவிட்டாலும், பொதுவான விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று, வயதான ரஜினியைப் போட்டுப் படுத்தாமல் ஒரு வெற்றிப்படத்தைக் குறைந்த நாட்களில் கொடுக்க முடிந்த இரஞ்சித்திற்கு அடுத்த ரஜினி பட வாய்ப்பும் கிடைத்தது.

ரஜினி படமாக இருந்தாலும், அதில் தனது அரசியலைப் பேசத் தயங்கியதில்லை இரஞ்சித். அதிலும் ரஜினி சார்ந்த அரசியலுக்கு எதிர் அரசியலை, படத்தில் ரஜினியை வைத்தே பேசியதில் கவனத்தை ஈர்த்தார் இரஞ்சித். காலா படத்தில் தாராவிப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளைப் பதிவு செய்ததில் பாராட்டு பெற்ற இரஞ்சித், படத்தில் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சுவாரஸ்யம் குறைவாக இருந்ததால், திட்டு வாங்கினார். படம் வந்திருந்த சமயத்தில் திட்டிய ரசிகர்கள், ரஜினியின் அதிகம் காட்டப்படாத திரைப்பக்கங்களைத் தனது படங்களில் சமரசம் செய்துக்கொள்ளாமல் காட்டிய இரஞ்சித்தை எதிர்காலத்தில் நிச்சயம் பாராட்டுவார்கள்.

இப்படி உச்சநட்சத்திரமாக இருந்தாலும், தான் சார்ந்த அரசியலைத் தனது படங்களில் தொடர்ந்து பேசி வந்த இரஞ்சித் அவர்களின் படங்களின் மேல் ஒரு பொதுவான எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டுவிட்டது. அதே சமயம், ஒரு படம் பார்ப்போரிடம் சுவாரஸ்யம் ஏற்படுத்துவதை விட்டுவிட்டு, கருத்துத் திணிப்பை மட்டும் ஏற்படுத்திக்கொண்டு இருந்தால், அது சலிப்பையே உண்டாக்கும். அந்த அபாயத்தையும் நெருங்கிக்கொண்டிருந்தார் இயக்குனர் இரஞ்சித்.

காலா படத்திற்குப் பிறகு தயாரிப்பில் சிறிது கவனம் செலுத்தியிருந்த இரஞ்சித், ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு இயக்கி வெளிவந்திருக்கும் திரைப்படம் – சார்பட்டா பரம்பரை. முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த இத்திரைப்படத்தில், பிறகு ஆர்யா நடித்ததோடு மட்டுமில்லாமல் இரஞ்சித்துடன் இணைந்து தயாரிக்கவும் செய்தார். திரையரங்குகள் மூடிக்கிடக்கும் இந்தக் காலக்கட்டத்தில் மாற்று வெளியீட்டு தளமான ஓடிடியில் வெளிவந்துள்ளது. அமேசான் ப்ரைமில் ஜுலை 22ஆம் தேதியன்று வெளிவந்ததிலிருந்து, இத்திரைப்படம் ரசிகர்களின் தொடர்ந்த பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

1970களில் அப்போதைய சென்னையில் நடைபெற்று வந்த ஆங்கிலக் குத்துச்சட்டை போட்டிகளின் பின்னணியில், அந்தக் காலக்கட்டத்தின் அரசியலைப் பின்னி பிணைந்து, இப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் அமைத்துள்ளனர், எழுத்தாளர் தமிழ்ப்ரபாவும் இயக்குனர் பா.இரஞ்சித்தும்.

சென்னை துறைமுகத்தில் கூலி தொழிலாளியாகப் பணிபுரியும் கபிலன் (ஆர்யா), அந்தப் பகுதியில் குத்துச்சண்டை போட்டியில் பேரார்வம் கொண்டவன். சார்பட்டா பரம்பரையின் முகமாக இருக்கும் ரங்கன் வாத்தியாரின் (பசுபதி) மேல் மிகுந்த அபிமானம் கொண்டிருக்கிறான். போட்டியைப் பார்க்கச் சென்றாலே, அடித்து விரட்டும் தனது அம்மாவின் பேச்சைத் தாண்ட முடியாமல், குத்துச்சண்டை விளையாடாமல், வெறுமனே பின் தொடர்ந்து மட்டும் வருகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் தனது அபிமான ஆசிரியரின் பேச்சைத் தட்ட முடியாமல், அவருக்காக விளையாட வருகிறான். வெற்றியைப் பறிக்க நெருங்கிடும் சந்தர்ப்பத்தில், அரசியல் விளையாட்டு குறுக்கிட்டு அதைத் தடுத்துவிடுகிறது.

திமுககாரராக வரும் பசுபதி, எமர்ஜென்சி காலத்தில் ஜெயிலுக்குச் செல்ல நேரிட, ஆர்யாவின் விளையாட்டு வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் தள்ளாடத் தொடங்குகிறது. குடிப் பழக்கத்தில் விழுந்து, உடல்நலனைக் கெடுத்து, வாழ்வில் சரிவைச் சந்திக்கும் ஆர்யா, எப்படி அதிலிருந்து மீண்டு வாழ்க்கையிலும், குத்துச்சண்டை போட்டியிலும் வெற்றி பெறுகிறார் என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

எளிதில் யூகிக்கமுடிகிற கதை தான் என்றாலும், கதைக்களம், அரசியல் பின்னணி, குத்துச்சண்டை காட்சிகள் போன்றவை படத்தைச் சுவாரஸ்யமாக்குகின்றன. அதிலும் டான்சிங் ரோஸ், டாடி, பிடி ராயப்பன் என ஆங்காங்கே வரும் சில கதாபாத்திரங்கள் காட்சிகளுக்குச் சுவையைக் கூட்டுகின்றனர்.

இதற்கு முன் இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த பரியேறும் பெருமாளிலும், அதன் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்தப் படமான கர்ணனிலும் திமுகவை வம்புக்கு இழுத்திருந்தனர். இந்தப் படத்தில் திமுகவுக்குச் சாதகமான காட்சிகளை வைத்து, அதிமுகவை ஒரண்டை இழுத்துள்ளனர். யார் என்ன சொல்லித் தடுப்பார்கள் என்று தயங்காமல், அந்தக் காலக்கட்டத்திற்கு ஏற்ப காட்சிகள் அமைத்து, வசனங்களில் தலைவர்களைக் குறிப்பிட்டு பேசுவது இயல்பாக உள்ளது.

இவற்றுடன் நடிகர்களின் சிறப்பான நடிப்பு, காட்சியனுபவம் அருமையாக அமைய உதவியுள்ளது. ஆர்யா கடுமையாக உழைத்துள்ளார். உடலைக் கட்டுகோப்பாக வைத்துக் கொண்டு, சண்டைக்காட்சியில் ஆக்ரோஷமாக அடித்துப் பட்டையைக்கிளப்புகிறார். உணர்ச்சிகரமான காட்சிகளில் தான், ஒரு அளவிற்கு மேல் செல்ல முடியாமல் தடுமாறுகிறார். மற்றபடி, அவரைச் சுற்றியிருக்கும் பசுபதி, அனுபமா, ஜான் விஜய், துஷரா, ஷபீர், கலையரசன் என அனைவரும் திறம்படத் தங்கள் நடிப்பாற்றைக் காட்டியுள்ளனர். சந்தோஷ் நாராயணன் வழக்கம் போல் இவ்வகைப் படங்களுக்குத் தேவைபடும் இசையைக் குறையில்லாமல் தந்துள்ளார். கலை இயக்குனர் ராமலிங்கம், ஒளிப்பதிவாளர் முரளி ஆகியோர் அந்தக் காலக்கட்டத்தைக் கண்முன் கொண்டு வந்ததில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல், எந்தப் படமாக இருந்தாலும், அதில் தனது அரசியலைத் தயக்கமின்றிப் பேசும் இரஞ்சித், கதையின், காட்சியின் தேவை உணர்ந்து அக்கருத்துகளை நுழைத்தால் ஏற்றுக்கொள்ள முடியும். அப்படி இல்லாமல், இரஞ்சித் படமென்றால் அப்படித் தான் இருக்கும் என்று தனது கருத்தியலை ஆங்காங்கே குறியீடுகளாக வைத்தால், அது சலிப்பையே உண்டாக்கும். சர்ரென்று இடைவேளை (அப்படி என்று ஒன்று ஒடிடியில் வரவில்லை!) வரை உச்சத்திற்குச் சென்ற படம், கபிலனின் வாழ்க்கை போல் பிறகு தட்டு தடுமாறி கீழே இறங்கி, பிறகு இறுதியில் மேலெழும்பியது. பொறுமையைச் சோதித்த அக்காட்சிகளைத் தவிர, மொத்தத்தில் இப்ப்டம் கபிலன் போல் தரமான ஆட்டத்தைக் கொண்டது. சார்பட்டா பரம்பரையின் பெருமிதத்தைக் கபிலன் மீட்டதைப் போல, இரஞ்சித்தின் தொடர் வெற்றி பெருமையைச் சார்பட்டா பரம்பரை மீட்டுக்கொடுத்துள்ளது.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad