அலட்சியம் கூடாது
அமெரிக்காவின் பல மாநிலங்கள், மே மற்றும் ஜூன் மாதங்களில், முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயத் தேவையைத் தளர்த்தின. அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு வாரியம் (சி.டி.சி. – CDC), முழுமையாகத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள், பெரும்பாலான பொது இடங்களில், சமூக இடைவெளி, இதர பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க முடியுமானால், முகக் கவசம் அணியவேண்டிய அவசியமில்லை என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் இன்று இந்த நிலை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தாலும், கோவிட் பரவும் வாய்ப்புகள் உள்ள பொதுயிடங்களில், மீண்டும் முகக்கவசம் அணிய ஆரம்பிக்கவேண்டுமென சி.டி.சி. இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகளில் இன்னும் சில வாரங்களில் நேரடி வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில், முன்பிருந்தது போல சுய பாதுகாப்புத்க தேவை என்று எச்சரித்திருப்பது, பெருத்த அச்சத்தை எழுப்புகிறது.
கடந்த பல மாதங்களில், அமெரிக்கா தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் நல்ல முன்னேற்றம் கண்டது. 343 மில்லியன் தடுப்பூசிகள் – ஏறத்தாழ 189 மில்லியன் அமெரிக்கர்கள் (56%) முழுமையான தடுப்புமருந்தைப் பெற்றிருந்தார்கள். இது அதிபர் ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டபோது வாக்குறுதி தந்த, ‘ஜூலை 4ஆம் தேதிக்குள் 70% அமெரிக்கர்களுக்குத் தடுப்பூசி’ எனும் இலக்கை விடக் குறைவுதான் எனினும், தொற்று எண்ணிக்கை மற்றும் தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கைகள் வெகுவாகக் குறைந்தன; பொது முடக்கத் தளர்வுகளால் வியாபாரங்கள், உணவகங்கள், திரையரங்குகள் திறக்கப்பட்டு, தொற்றுக்கு முந்தைய இயல்பு வாழ்க்கை தலை தூக்கியது. இருண்ட வானில் சிறு விடிவெள்ளி போல் தோன்றிய இந்நிலை சடசடவெனச் சரிந்து வருகிறது.
சமீபத்திய புள்ளி விவரங்கள் தினசரி தொற்று எண்ணிக்கை 63,000க்கும் அதிகமாக, அதாவது 2020 ஆம் கோடைக் காலத்தில் இருந்ததைப் போல அதிகரித்துள்ளதாகப் பேரிடியை இறக்கியுள்ளது. இது இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்த சராசரியை விட 145% அதிகம். லூசியானா, ரோட் ஐலண்ட் மாநிலங்களில் தினசரி தொற்று எண்ணிக்கை 300 சதவிகிதமாகவும், அலபமா, கனெக்டிகட், ஜார்ஜியா, ஹவாய், சவுத் கரோலினா, சவுத் டகோடா, மிசிசிப்பி போன்ற மாநிலங்களில் 200 சதவிகிதமாகவும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இவற்றில் பல மாநிலங்கள், குறைந்தளவில் தடுப்பூசி பெற்றவை என்று சி.டி.சி. சுட்டிக் காட்டியிருப்பதையும் கவனிக்கவேண்டியுள்ளது.
அமெரிக்காவில் தேவைக்கும் அதிகமாக மருந்துகள் இருந்தாலும், மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்குவது ஏனென்று யோசிக்க வைக்கிறது. மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் காட்டிய வேகம், ஆர்வம் இன்று இல்லை. புதுப் புது மாற்றங்கள் பெறும் கொரோனா கிருமி, இன்று ‘டெல்டா’ என்ற பெயரில் புது வீரியத்துடன் மக்களை, குறிப்பாகத் தடுப்பூசி போடாதவர்களைக் கடுமையாகத் தாக்கி வருகிறது.
சுதந்திரம், தனி மனித உரிமை என்ற பெயரில் தடுப்பூசிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள் ஒருபுறமிருந்தாலும், தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்து அச்சப்படும் மக்களுக்குச் சரியான விழிப்புணர்வு தர அரசு அமைப்புகள் தவறிவிட்டன என்பதும் உண்மை. தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வமிருந்தாலும், சரியான வாய்ப்புகள் இல்லாமல் தவிப்பவர்களும் இதில் அடக்கம். இவர்கள் அலுவல், தொழில் காரணமாக நேரமின்மை, தடுப்பூசி மையத்துக்குப் பயண வசதியின்மை போன்ற காரணங்களைச் சொல்கிறார்கள். பெரும்பாலோனார்க்கு இந்த ஊசிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன என்ற புரிதல் இல்லாததும் ஒரு காரணம். இப்படிப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்கள் அருகாமையில் இருக்கக்கூடிய பணியிடங்கள், உள்ளூர் மளிகை, சமூகக் கூடங்கள், தேவாலயங்கள் போன்ற இடங்களில் தோதுப்பட்ட நேரத்தில் தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடு செய்வது உதவக்கூடும். தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருபவர்களுக்கு $100 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என ஃபெடரல் அரசு இன்று அறிவித்திருக்கிறது. தேவைப்பட்டால் சம்பளத்துடன் கூடிய விடுப்புத் தருவதும் இவர்களை ஊக்குவிக்கும்.
கொரோனா பரவிய சமயத்தில் சில இயக்கங்கள் இது சாதாரண சளி காய்ச்சல் போன்றது, கோடைக் காலத்தில் காணாமல் போய்விடும், உடல் வலிமை மிக்கவரை கொரோனா தாக்காது என்றெல்லாம் சொல்லி வந்ததை உண்மையென நம்பும் கூட்டம் இன்றும் உள்ளது. ‘வாக்சின்’ என்ற சொல்லைக் கேட்டாலே முகம் சிவந்து, எதிர்ப்புக்குரல் எழுப்புகிறார்கள் இவர்கள். இவர்களில் சிலர் முன்களப் பணியாளர்களாக, குறிப்பாக மருத்துவர்களாகவும், செவிலியர்களாகவும் இருப்பது அதிர்ச்சிதரக் கூடிய செய்தியாகும். ஏற்கனவே நோய் தாக்கியதால் உடலில் எதிர்ப்புச் சக்தி வளர்ந்து விட்டது என்று சப்பைக்கட்டு கட்டுபவர்களும் உள்ளனர். தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் குறித்து அச்சப்படுபவர்கள், குறிப்பாக ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ மருந்தினால் ரத்தக் கட்டு ஏற்படுகிறது, ஃபைசரினால் ‘மைக்ரெய்ன்’ தலைவலி உருவாகிறது என்று நம்புபவர்கள் கணிசமானோர் உள்ளனர். ‘ஜன்சன் அண்ட் ஜான்சன்’ தடுப்பூசி போட்டுக்கொண்ட கிட்டத்தட்ட 9 மில்லியன் நபர்களில் 28 பேருக்கு ரத்தக் கட்டு ஏற்பட்டது உண்மை. இந்த 28 பேருக்குச் சிரமங்கள் உண்டானது என்பதை மறுக்க முடியாவிட்டாலும், மருத்துவ உலகில் இதுபோன்ற மிக மிகக் குறைந்தளவில் பக்கவிளைவுகள் ஏற்படுவது புதிதல்ல. தடுப்பூசி போட்ட அடுத்த சில நாட்கள் ஏற்படும் அசதி மற்றும் உபாதைகளால் வேலையை இழப்போம் என்ற பயத்தினால், அதனைத் தவிர்ப்பவர்களும் ஏராளம்.
இவர்களையெல்லாம் கூட சமாதானப்படுத்தி மருந்தைக் கொடுத்துவிடலாம், ஆனால் கொரோனா என்பதே திட்டமிடப்பட்ட சதி. உண்மையில் அப்படி ஒரு நோயை மனிதர்களே திட்டமிட்டு உருவாக்கினார்கள் என வாதிடுபவர்கள் தான் நிஜ அச்சுறுத்தல்கள். ‘சீனா வர்த்தக நோக்கத்துடன் மற்ற நாடுகள் மீது ஏவிவிட்ட ‘பயோ வார்’ தான் கொரோனா; இதற்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் துணை புரிகின்றன’ எனத் தங்கள் கற்பனையைத் தட்டிவிட்டுக் கதை புனைபவர்கள் இவர்கள். இவை எல்லாவற்றுக்கும் தீர்வளிக்கும் வகையில் அரசு அழுத்தமான, அவசரக்கால நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
புதிதாகத் தோன்றியுள்ள ‘டெல்டா’ திரிபுகள் அடிப்படைத் தடுப்பூசியை அவசியமாக்கி வருகிறது. ‘டெல்டா’ திரிபு, மிக வேகமாகவும், அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தும் விதமாகவும் ஆற்றல் மிக்கவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த டெல்டா திரிபு முந்தைய ஆல்ஃபா, பீட்டா, காமா திரிபுகளைக் காட்டிலும் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அம்மை நோயைப் போல எளிதாகப் பரவுகிறது எனவும் சி.டி.சி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது. தடுப்பூசி போட்டவர்கள் நேரடியாகப் பாதிக்கப்படவில்லையென்றாலும், நோய்த் தொற்றைப் பரப்பும் ‘கடத்தி’களாக செயல்படும் வாய்ப்புள்ளதால், முகக்கவசம் அணிவது மற்றும் இதரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என வலியுறுத்துகிறது உலகச் சுகாதார நிறுவனம் .
ஏற்கனவே தடுப்பூசி போட்ட அமெரிக்கர்களில் வாரத்திற்கு 35,000 நபர்களில் நோய்த்தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக மற்றொரு மதிப்பீடு சொல்கிறது. “போரின் இலக்குகள் மாறிவிட்டது” எனும் சி.டி.சி., சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட முகக் கவசத் தளர்வுகளைத் திரும்பப்பெற வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ‘பூஸ்டர் ஷாட்’ எனும் ஊக்கத் தடுப்பூசித் தேவையும் பரிசீலிக்கப்படுகிறது. அதாவது ‘ஃப்ளு’ தடுப்பூசி போடுவது போன்று சில மாதங்களுக்கு ஒருமுறை ‘கோவிட்’ தடுப்பூசி போடவேண்டிய சூழ்நிலையும் வரலாம்.
உலகெங்கிலுமிருந்து பெறப்படும் புள்ளிவிவரச் சான்றுகள் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மருத்துவ உலகம் எப்படி ஸ்தம்பித்துப் போனதோ, அதை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும் எச்சரிக்கை மணியை அடித்துள்ளன. இன்று அமெரிக்கா, மெக்ஸிகோ, இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, ஜப்பான், சௌத் ஆஃப்ரிக்கா உட்பட பல நாடுகளில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது.
கோடை விடுமுறைக் காலங்களில் தொற்று ஓரளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் புதுப் புது மாற்றங்கள் அடைந்துவரும் தொற்று, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதைச் சவாலாக்கி வருகிறது. பல நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் வரும் செப்டம்பர் மாதம் நேரடியாக இயங்க முற்படுவதற்கு ஏற்ப, 5-12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்குத் தடுப்பூசி செப்டம்பர் இறுதிக்குள் வெளிவரும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. 2-5 வயது மற்றும் 6 மாதம் முதல் 2 வயது வரையிலான மருந்துகள் ஹாலோவீனுக்கு முன்னர் கிடைக்கும்.
தடுப்பூசி போட்டவர்களும் கூடுதல் பாதுகாப்பைக் கடைபிடிக்கத் தயங்கக்கூடாது. ஆல்ஃபா கிருமி வகையை விட டெல்டா கிருமிகள் இருமடங்கு வீரியத்துடன் பரவும் ஆற்றல் மிக்கவை. மேலும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மூலமும் இந்தத் தொற்று பரவும் வாய்ப்புள்ளது. தெரிந்தவர்கள் எவரேனும் தடுப்பூசி குறித்த அச்சம், சந்தேகம் கொண்டிருந்தால், அவர்களை மருத்துவ ஆலோசனைக்குப் பரிந்துரை செய்ய வேண்டிய கடமையும் நமக்குண்டு. தடுப்பூசி போட்டவர்களுக்கும் இந்தத் தொற்று சிறு உபாதைகளைத் தருமென்றாலும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் இறப்பு சதவிகிதம் 0.001% மட்டுமே என்கிறது சி.டி.சி. ஆகையால் அச்சம் தவிர்த்து, கொள்கை மற்றும் அரசியல் பேதங்களைப் புறந்தள்ளிவிட்டு அனைவரும் தடுப்பு மருந்து பெறுவது ஒவ்வொரு தனி மனிதர் மற்றும் சமுதாயத்தின் தேவை.
அண்மையில் அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேசியது இது – “மருத்துவமனைகளைப் பாருங்கள். இதுவரை தடுப்பூசியை மறுத்து வந்தவர்கள் மரணம் நெருங்குவதை உணர்ந்து, ‘டாக்டர், எனக்குத் தடுப்பூசி போடுங்கள்’ என்று கேட்பதைப் பாருங்கள். துரதிருஷ்டவசமாக மருத்துவர்கள் இவர்களிடம் ‘மன்னிக்கவும். இது மிகவும் காலதாமதமான கோரிக்கை’ என்று மட்டுமே சொல்லமுடிகிறது”. முற்றிலும் உண்மை. அலட்சியம், அசட்டுத்தனம் எதுவில்லாமல், வைராக்கியத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உசிதம்.
- ஆசிரியர்.