\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது…

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட சொல், ‘பெகாசஸ்’. 2012 ஆம் ஆண்டு  சென்னையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கான அலங்கார வளைவு  உருவாக்கப்பட்ட சமயத்தில் எதிர்க்கட்சியினர் அந்த வளைவு இரட்டை இலைபோல உள்ளது என்று ஆட்சேபிக்க, அப்போதைய அதிமுக அரசு, அது பறக்கும் குதிரையான ‘பெகாசஸின்’ இறக்கைகள் என்று ‘விளக்கம்’ தந்தபோது கேட்ட சொல். அதற்கு பின் அந்தச் சொல்லைக் கேட்க / உச்சரிக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. ஆனால் இப்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகமெங்கும் உச்சரிக்கப்படும் சொல்லாகிவிட்டது ‘பெகாசஸ்’.

டிரோஜன் vs பெகாசஸ்

இணையத் தொழில்நுட்பம் உருவான காலந்தொட்டே, ஸ்பைவேர் எனப்படும் உளவு மென்பொருள்கள் உருவாகத் தொடங்கிவிட்டன. 1980களில் உருவாக்கப்பட்ட ‘டிரோஜன் ஹார்ஸ்’ எனப்படும் வைரஸ்கள் இவற்றின் முன்னோடி எனலாம். இந்த உளவுமென்பொருட்கள் மின்னஞ்சல் இணைப்புகள் மூலம், சுட்டிகள் மூலம் கணினியில் தரவிறக்கம் செய்துகொண்டு, திரைமறைவில் பல்கிப் பெருகி, கணினியைப் பயனில்லாமல் செய்து விடும். பின்னர் வந்த பதிப்புகள் கணினியிலிருக்கும் வங்கிக் கணக்கு எண், தனிப்பட்டத் தகவல்களைச் சேகரித்து கண்ணுக்குத் தெரியாத தங்கள் முதலாளிகளுக்கு அனுப்பி வைத்தன. இந்த வைரஸ்களின் அல்லது ஸ்பைவேரின் முதன்மை நோக்கம், வர்த்தகம். பழையகாலத்து சார்லி சாப்ளினின் ‘தி கிட்’ படத்தில், சாப்ளின் ஒரு சிறுவனுக்கு சில்லறை காசுகளும், கற்களும் கொடுத்து தெருவிலிருக்கும் வீடுகளின் கண்ணாடியை உடைக்கச் செய்வார். சில நிமிடங்களில் இவரே உடைந்த ஜன்னல் கண்ணாடிகளை ரிப்பேர் செய்பவராக சென்று புது கண்ணாடிகளை விற்று கனஜோராக வியாபாரம் செய்வார். அதே நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் டிரோஜன்கள். டிரோஜன்களை அனுப்பியவர்களே, பாதிக்கப்பட்ட கணினிகளைச் சரிசெய்யும் மென்பொருளையும் விற்க முயல்வார்கள். இந்த டிரோஜன் குதிரை வைரஸ்கள் ஒரு வகையில் அப்பாவிகள் எனலாம். வலுக்கட்டாயமாக, பயனர் எதேனும் தேவையற்ற மின்னஞ்சல்கள், இணைப்புகளை அழுத்தினால் மட்டுமே கணினியில் இறங்கும். கணினியின் கேமரா, ஸ்பீக்கர், மைக்ரோஃபோன் இத்யாதி பாகங்கள் பற்றிய அறிவு டிரோஜனுக்கு இருந்ததில்லை. 

இணைய தொழில்நுட்பம் வளர, வளர ஓடிவந்து கணினியில் இறங்கும் ‘டிரோஜன்’ குதிரைக்கு இறக்கைகள் முளைத்து விட்டன. கணினி அல்லது கைப்பேசியின் இலக்க எண்ணைக் கொடுத்துவிட்டாலே, காற்றில் பறந்து வந்து, சந்தடியில்லாமல் தானாகவே நிரவிக்கொள்ளும் புத்திசாலி தான் ‘பெகாசஸ்’. நீங்கள் எந்த இணைப்பானையும், சுட்டிகளையும் இயக்காமலே நிறுவிக் கொள்ளும் இதனை ‘ஜீரோ கிளிக் பெனிட்ரேட்டர்’ என்கிறார்கள். இந்தச் சமர்த்து குதிரை, கணினி அல்லது கைப்பேசியின் அனைத்து உதிரிகளையும் கட்டுப்படுத்தி அடக்கியாளும் திறன் கொண்டது. கேமெரா, மைக்ரோஃபோன் போன்றவை ‘தானாவே உருளுதாம், உடையுதாம்’ என்று வடிவேலு சொல்வது போல தானாகவே இயங்கி உரையாடல்கள், குறுஞ்செய்திகள், படங்கள், கோப்புகள் என அத்தனையையும் பதிவு செய்து தங்களது ‘ஓனருக்கு’ அனுப்பி வைக்கும் விசுவாசத் திறன் கொண்டவை. அது மட்டுமின்றி 80களில் கதாநாயகனை மாட்டி விடும் நோக்கத்துடன் ‘கார் டிக்கியில்’ கஞ்சாவை வைத்து விட்டு, போலீசை அனுப்பி ‘நீங்க உத்தமர்னா உங்க காருக்குள்ள இது எப்படி வந்தது’ என்று எகத்தாளமாகக் கேட்கும் வில்லத்தனங்களையும் செவ்வனே செய்யக்கூடியது ‘பெகாசஸ்’. அதாவது உங்கள் கைப்பேசியில் நீங்கள் கேள்விப்பட்டிராத தகவல்களையோ, கோப்புகளையோ கூட ‘இன்ஜெக்ட்’ செய்து திணித்துவிடும் சூட்சுமம் கொண்டவை. இதன் இன்னொரு சிறப்பம்சம் ‘இருக்கற இடம் தெரியாம இருந்துட்டு போயிரணும் பா’ என்ற கொள்கை. குறிப்பிட்ட காலம் வரை கடுமையாக உழைத்து குடும்பம் சுற்றம் என அனைவருக்கும் தேவையானதைச் செய்துவிட்டு மரிக்கும் நடுத்தரக் குடும்பத்தலைவன் போலத் தானாகவே 60 நாட்களில் மறைந்துவிடும். சில வீடுகளில் ‘ ஞாபகமார்த்துக்காக’ சுவரில் மாட்டி வைக்கப்படும் குடும்பத் தலைவர் படத்தைப் போல சின்னதாக அடையாளமிருக்கும். தலைமுறை வளர, வளர அந்தப் படம் மறைவது போல ‘பெகாசஸின்’ காலடித் தடங்களும் மறைந்துபோகும். சூழலியலில் ‘ஜீரோ ஃபுட்பிரிண்ட்ஸ்’ என்று சொல்வார்களே அந்தத் சித்தாந்தத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டது ‘பெகாசஸ்’.

பெகாசஸ் தொடக்ககாலம்

2010இல் இஸ்ரேலிய புலனாய்வு பிரிவில் (மொசாட்) பணியாற்றிய மூவர் (Niv Carmi, Shalev Hulio, Omri Lavie) தங்களது முதலெழுத்துகளைக் கொண்டு உருவாக்கிய நிறுவனம் தான் என்.எஸ்.ஓ. 2011 இல் இவர்கள் தயாரித்த ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளை வாங்கிய மெக்சிகோ அரசாங்கம், போதைப் பொருள் கடத்தல் பேர்வழியான ‘எல் சாப்போ’வை உளவு பார்த்து கைது செய்தது. அப்போதைய மெக்ஸிகோ அதிபர், இவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்து விருந்து வைத்தது, உலகப் பார்வையை ‘பெகாசஸ்’ மீது திருப்பியது. 2014 இல், ‘சர்க்கில்ஸ்’ எனும் மற்றுமொரு வேவு பார்க்கும் நிறுவனத்தை வாங்கி, தன்னுடன் இணைத்துக் கொண்டது என்.எஸ்.ஓ. ‘சர்க்கில்ஸ்’ தொலைபேசியின் எண்ணைக் கொண்டு, அதன் இருப்பிடத்தைத் துல்லியமாகத் தெரிவிக்கும் திறன் கொண்ட மென்பொருள். ஏறக்குறைய இதே சமயத்தில்,  ‘ஃபிரான்சிஸ்கோ பார்ட்னர்ஸ்’ என்ற அமெரிக்க நிறுவனம், $130 மில்லியனுக்கு ‘பெகாசஸ்’ உரிமையைச் சொந்தமாக்கிக் கொண்டனர்.  சோதனை முயற்சியாக, இயற்கை மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவரின் ‘ஆப்பிள்’ ஃபோனில் இதை நிறுவ முயன்ற போது கையும் களவுமாகச் சிக்கினார்கள் ‘பெகாசிஸை’ அனுப்பி வைத்தவர்கள். ‘ஆப்பிள்’ நிறுவனம் ‘யாருகிட்ட’ என்று கேட்டவாறு காலரைத் தூக்கிவிட்ட சில மாதங்களிலேயே ‘நாங்கல்லாம் அப்பவே அப்படி சித்தப்பு’ என்று சிலிர்த்துக்கொண்டே ‘ஆப்பிள் ஃபோனில்’ நுழைந்து காட்டியது ‘பெகாசஸ்’. தொடர்ந்து மெக்ஸிகோ, பனாமா போன்ற பல நாட்டு அரசாங்கங்களுக்கு வேவு பார்க்கும் தொழிலைச் செய்து வந்தது ‘பெகாசஸ்’. அரசாங்க நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள், கேள்வி கேட்பவர்கள் குறி வைக்கப்பட்டனர். ‘அசோசியேடட் பிரஸ்’, ‘ராய்டர்ஸ்’ உட்பட பல செய்தியாளர்கள் வேவு பார்க்கப்பட்டனர். 

இப்படியாக வேவு பார்க்கப்பட்டவர் தான் ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தியாளர் ஜமால் கஷோகி. கஷோகியின் குடும்பம் சவுதி அரேபிய மன்னர் குடும்பத்துடன் மிக நெருக்கமான நட்புறவு கொண்டது. இதன் மூலம் அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளையும் நுட்பமாக அறியும் வாய்ப்பு கிடைத்தது கஷோகிக்கு. மன்னர் குடும்பத்தின் முறைகேடான ஊழல்களை கண்ட ஜமால் கஷோகி, சௌதியை விட்டு வெளியேறி துருக்கியில் தஞ்சம் புகுந்தார். கஷோகியின் நடவடிக்கைகளை வேவு பார்த்து வந்த சௌதி இளவரசர், துருக்கியிலிருக்கும் சௌதி அரேபியத் தூதரகத்தில் வைத்து அவரைப் போட்டுத் தள்ளினார். ‘வாஷிங்டன் போஸ்ட்’ மற்றும் ‘அல்-ஜசீரா’ செய்தி நிறுவனங்கள் இதைப் பற்றிப் புலனாய்வு செய்து ஆய்வறிக்கைகளை வெளியிட்ட பிறகும், சௌதி அரசு அதனைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது. சௌதி இளவரசர், வரம்பு மீறி, அமேசான் நிறுவனரான ‘ஜெஃப் பீசோஸ்’சின் ‘ஐ-ஃபோனை’ ஹேக் செய்த போதும் உலகளவில் ‘பெகாசஸ்’ குறித்த சில சலசலப்புகள் தோன்றி மறைந்தன. 2019 ‘ஃபேஸ் புக்’ நிறுவனம் தனது ‘வாட்ஸ் அப்’ செயலி பயனர்கள் சிலரை ‘பெகாசஸ்’ கண்காணிக்கிறதென வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கும் ‘என்.எஸ்.ஓ’ நிறுவனத்துக்கு எந்த பாதிப்புமின்றி ‘முடித்து வைக்கப்பட்டது’. 

 

‘பெகாசஸ்’ வளர்ச்சி

2013ஆம் ஆண்டில் எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உளவுத்துறை அமைப்புகள் பிற நாடுகளில் இயங்கும் பயங்கரவாத இயக்கங்களுடன் சேர்த்து அந்நாட்டு அரசியல் நடவடிக்கைகளையும்  வேவு பார்த்து வருவதாக வெளியிட்ட தகவல்கள் வளர்ந்த / வளரும் நாடுகளை அச்சுறுத்தியது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அரசாங்கங்கள் பலவும், தங்கள் கண்காணிப்பு மற்றும் உளவுத்துறைகளை வலுப்படுத்திக் கொள்ள ‘பெகாசிஸை’ அணுகின. அதே நேரத்தில் ‘பெகாசஸ்’ மற்றும் ‘சர்க்கில்ஸ்’ இணைந்து, உலகின் பல அடுக்கு ‘செக்யூரிட்டி’ மாடல்களைத் துளைத்துக் கொண்டு உட்புகும் வித்தைகளைச் செய்தது. தங்களது கண்டுபிடிப்பு அசுரபலத்துடன் வளர்வதைக் கண்ட என்.எஸ்.ஓ நிறுவனம், 1 பில்லியன் டாலருக்கு ‘பெகாசஸை’ மீண்டும் வாங்கிக் கொண்டது. உலகின் பல நாடுகள் என்.எஸ்.ஓ. வின் வாடிக்கையாளர்களாகி விட்டிருந்தார்கள்.

‘எல்லாம் தங்களிடம் பெற்ற யானைப் பால் மன்னா’ என்று ‘இம்சை அரசனையே’ இம்சைபடுத்துமளவுக்குத் திறமையான ஒற்றர்கள் பல நூற்றாண்டுகளாக, பல அரசாங்ககளிலும் இருந்து வந்துள்ளனர்.  ‘ஜேம்ஸ்பாண்ட்’ படங்களைப் பார்த்து ‘இன்ஸ்பையர்’ ஆகி ‘வாட்டர்கேட்’ வளாகத்தில் ஒட்டுக்கேட்கும் கருவிகளைப் பதித்து ஜனநாயகக் கட்சியினரின் வியூகங்களை அறிய முற்பட்ட அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன், தவறுக்குப் பொறுப்பேற்று பதவி விலகிய வரலாற்று நிகழ்வுகளையும் நாமறிவோம். 2008-2009 ஆண்டு காலகட்டத்தில் வெளிவந்து, பின்னர் வலுவிழந்து மீண்டும்  கூஜாவுக்குள் அடைபட்டுப் போன ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழல் பூதம் உருவானது கூட நீரா ராடியா எனும் அரசியல் தரகரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதில் தான். சுருக்கமாக, பயங்கரவாதம் மற்றும் குற்றவியல் சம்பவங்களைத் தடுக்க, அரசாங்கம், சந்தேகப்படும் நபர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முனைவது வழக்கம்தான். சி.ஐ,ஏ, எஃப்.பி.ஐ, ரா, ஐ.பி., ஐ.டி. துறை போன்ற அரசாங்க உளவுத் துறைகள் தேசத்துக்கும் சமூகத்துக்கும் தீங்கு செய்யக்கூடியவர்களைக் (பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களை, போதைப் பொருள் கடத்தல் பேர்வழிகளை, பாலியல் தொல்லை தரக்கூடியவர்களை) கண்காணிப்பது இயல்பு தான். இதற்கும் தகுந்த அரசு அமைப்புகளின் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.  அந்த அடிப்படையில் தங்கள் தேசப்பாதுகாப்பைப் பலப்படுத்த நினைக்கும் அரசுகள் எதிர்கொள்ளும் உளவு மற்றும் சட்டச் சவால்களை, இன்றைய தொழில்நுட்பத்தின் துணையுடன்  தீர்வளிக்க உதவுவதே எங்களது குறிக்கோள்  என்று தங்களது ‘உன்னத’ நோக்கத்தைச் சொல்கிறது என்.எஸ்.ஓ. ஆனால் இந்த `பெகாசஸ்’ என்ற ஸ்பைவேர் மூலம் உலகின் முக்கியப் பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களின் செல்போன்களை அவர்கள் சார்ந்த நாட்டின் அரசாங்கமே உளவு பார்த்தது என்பதுதான் சமீபத்தில் உலக அரசியலை உலுக்கிக்கொண்டிருக்கும் செய்தி. 

2020 ஆம் ஆண்டு, என்.எஸ்.ஓ. குழுமத்தின் வாடிக்கையாளர்களான சுமார் 50 நாடுகளின் பெயர்களும், அந்நாடுகள் குறி வைத்த சுமார் 50,000 தொலைபேசி எண்களின்  பட்டியலும் ஃபிரான்சின் ‘அம்னஸ்டி இண்டெர்நேஷனல்’ மற்றும் ‘ஃபார்பிடன் ஸ்டோரிஸ்’ எனப்படும் லாப நோக்கற்ற நிறுவனங்களுக்குக் கிடைத்தது. இந்தத் தகவல்களைக் கசிய விட்டது யார், அவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பதைப் பற்றி அறியாத இந்நிறுவனங்கள், தங்களது உறுப்பினர்களான பத்திரிக்கையாளர்களைக் கொண்டு ஒரு கூட்டமைப்பு ஆய்வுக் குழுவை உருவாக்கினார்கள். ‘தி கார்டியன்’, ‘லெ மாண்டே’, ‘ரேடியோ ஃபிரான்ஸ்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’, ‘ஃப்ரண்ட்லைன்’, ‘தி வயர்’. ‘தராஜ்’, ‘டை செய்ட்’ உட்பட 17 பன்னாட்டு செய்தி நிறுவனங்களின் 80 செய்தியாளர்கள், இந்தப் பட்டியலில் இருந்த எண்கள் யாருடையது என்று கண்டறிந்து தொடர்பு கொண்டு அவர்களது தொலைபேசிகள் உளவுக்குள்ளாக்கப்பட்டதா என்று ஆய்ந்து வந்தனர். இது வரை இவர்கள் வெளியிட்டுள்ள நாடுகளின் பட்டியல் – அஜர்பெய்ஜான், பஹ்ரைன், ஹங்கேரி, மெக்ஸிகோ, கஸகஸ்தான், மொராக்கொ, ருவாண்டா, சௌதி அரேபியா, யு.ஏ.இ, இத்தாலி, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. 

2016 முதல் உருவாக்கப்பட்ட இந்த வாடிக்கையாளர் பட்டியலில் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள், மூன்று அதிபர்கள், 10 பிரதமர்கள், அரசர் உட்பட இன்னபிற அரச குடும்ப உறுப்பினர்கள், எண்ணற்ற பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் என எந்த லாஜிக்கும் இல்லாமல் பலதரப்பட்டோரின் எண்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்துள்ளன என்கிறது இவர்களின் ஆய்வறிக்கை. இவர்களில் சிலர் தாமாக முன்வந்து தங்களது கைப்பேசியைத் தடயவியல் சோதனைக்குத் தந்தபோது, சுமார் ஐம்பது சதவிகிதத்தினரின் கைப்பேசிகளில் ‘பெகாசஸ்’ நிறுவப்பட்டிருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இந்த தடயவியல் சோதனையை நடத்தியது கனடா நாட்டைச் சார்ந்த ‘சிட்டிசன்ஸ்’ என்ற தடயவியல் நிறுவனம்.  இவற்றில் பெரும்பாலானவை ‘ஆப்பிள்’ கைப்பேசிகள். ‘ஆண்டிராய்டு’ கைப்பேசிகளில் ‘பெகாசஸின்’ தடயங்கள் சுத்தமாகத் துடைக்கப்பட்டுவிட்டிருந்தன. இருப்பினும் வேறுவித சோதனைகள் மூலம் இவை ஹேக் செய்யப்பட்ட கருவிகளா என்று நிருபிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ‘அம்னஸ்டி இண்டர்நேஷனல்’.

என்.எஸ்.ஓ. அமைப்பு, தாங்கள் இறையாண்மை நாடுகளின் அரசாங்கங்களுக்கு மட்டுமே ‘பெகாசஸ்’ மென்பொருளை விற்பதாகவும், தனி நபர்களுக்கோ அல்லது அந்த நாட்டின் இராணுவம் உட்பட இன்னபிற துறைகளுக்கோ மென்பொருளைத் தருவதில்லை என்கிறது. இந்த மென்பொருளை வாங்கும் அரசுகள், தங்களது தேவையைப் பொறுத்து வேவுபார்க்கப்பட வேண்டிய தொலைபேசி எண்களை சேர்த்துக் கொள்ளலாம். அதனால் எங்களுக்கும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் எண்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கழண்டு கொள்ள முனைகிறது என்.எஸ்.ஓ. இருந்தாலும் ‘தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் விடுவானா?’ என்பது போல இப்படிப்பட்ட தில்லாலங்கடி மென்பொருளை உருவாக்கிய என்.எஸ்.ஓ., அது கைப்பற்றும் தகவல் களஞ்சியத்தைத் தங்களுக்காகவும் ஒரு காப்பி எடுத்துக்கொள்ளக் கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது இந்த 50 நாடுகளின் அரசாங்கங்கள் திரட்டியிருக்கும் தகவல், என்.எஸ்.ஓ வசமும் இருக்கக்கூடும். இது உலக நாடுகளின் அடிப்படைப் பாதுகாப்பிற்கே கேடு விளைவிக்கக் கூடியது. 

இந்தியாவில் பெகாசஸ்

இதுவரையில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி இந்தியாவில் 40 செய்தி மற்றும் ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், இரண்டு மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், அரசியல் நோக்கர்கள், கட்சித் தலைவர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், விஞ்ஞானிகள்,  சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரது எண்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய அரசு சட்டத்துக்கு எதிராக எந்த மென்பொருளையும் பயன்படுத்தவில்லை என்று மத்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் புதிய அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் அவையில் அறிக்கை வாசித்துவிட்டு வீடு செல்லும் முன்பு வெளியான அடுத்த பட்டியலில் அவரது தொலைபேசி எண் கண்காணிக்கப்பட்டுள்ளது என்று செய்தி வருகிறது. இந்திய அரசின் நிதித்துறை அமைச்சகமோ, உள்துறை அமைச்சகமோ, தலைமையோ  ‘பெகாசஸ்’ மென்பொருளை வாங்கியதை மறுக்கவோ, ஆமோதிக்கவோயில்லை. இதற்கு முரணாக, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல முன்னாள் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான திரு. ரவிசங்கர் பிரசாத் ‘45 நாடுகளுக்கு மேல் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும் இந்தியாவை மட்டுமே ஏன் குறி வைக்கிறீர்கள்’ என்று கேட்டுவிட்டு ‘நாமளே உளறிட்டமோ?’  என நாக்கைக் கடித்துக் கொண்டார். பின்னர் அதைச் சமாளிக்கும் வகையில் ‘நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடரை நடக்க விடாமல் செய்ய எதிர்க்கட்சிகள் முயல்கின்றன’ என்ற ‘உண்மை’யை அழுத்தமாக உலகுக்குத் தெரியப்படுத்தினார்.  2019இல் தேர்தல் சமயத்தில் ‘வாட்ஸ் அப்’ தகவல்கள் பெகாசஸ் செயலிகொண்டு கண்காணிக்கப்படுகின்றன என்று ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் சர்ச்சை கிளப்பியபோதும் அரசாங்கம் அவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்ததை ‘நினைவுகூர்ந்து, தெளிவூட்டினார்’ திரு. ரவிசங்கர் பிரசாத். 

‘அம்னஸ்டி இண்டர்நேஷனலின்’ ஆய்வில் பங்குபெற்றிருந்த  ‘தி வையர்’ ஊடகம், ‘பெகாசஸ்’ கண்காணிப்பு, அதாவது வேவு பட்டியலில் இருந்த இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார்களா என்பது தெரியவில்லை என்றாலும் தாமாக முன்வந்து தொலைபேசியைக் கொடுத்த சிலரது கைப்பேசிகளில் பெகாசஸ் இருந்ததிற்கான அடையாளங்கள் தென்பட்டன. 

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை ஆய்ந்து வந்த சுஷாந்த் சிங் (இந்தியன் எக்ஸ்பிரஸ்), விவசாயிகள் போராட்டம் குறித்து எழுதிய சித்தார்த் வரதராஜன் (தி வையர்), உள்துறை அமைச்சகம் குறித்து எழுதி வந்த விஜயதா சிங் (தி ஹிண்டு), அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் சொத்துக் குவிப்பு பற்றி எழுதி வந்த ரோகிணி சிங் (தி வையர்), பா.ஜ.க வின் ஐ.டி செல் குறித்து எழுதி வந்த ஸ்வாதி சதுர்வேதி, தேர்தல் கமிஷன் குறித்து எழுதி வந்த ரித்திகா சோப்ரா (இந்தியன் எக்ஸ்பிரஸ்), இந்தியப் பாதுகாப்புப் பணிகள் குறித்து எழுதிய சந்தீப் உன்னிதன் (இந்தியா டுடே), 2ஜி ஊழல் குறித்து எழுதிய கோபிகிருஷ்ணன் (தி பயனியர்) உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட பத்திரிக்கை / ஊடகவியலாளர்கள் இருந்தனர்.  ‘நம்பகத் தன்மையுள்ள, தரமான செய்திகளைத் தருகிறார்களா என்று பரிசீலிக்கவே’ இந்த கண்காணிப்பு பட்டியல் தயாராகியிருக்குமோ?

எதிர்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, அவரது இரண்டு உதவியாளர்களது பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. தேர்தல் வியூகங்களை அமைத்துத் தரும் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா, மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் பெயர்கள் இப்பட்டியலில் இருந்தது தேர்தல் பாதுகாப்புக் கருதி மத்திய அரசு இதனைச் செய்திருக்கக் கூடும் என எண்ணவைக்கிறது. கர்நாடாகாவின் முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோரின் உதவியாளர்கள் கண்காணிப்புப் பட்டியலில் இருந்தது அன்றைய முதல்வர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார்களா எனும் ‘நல்லெண்ண அடிப்படை’யில் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து, அயோத்தியா ராம ஜென்ம பூமி பாப்ரி மஸ்ஜித் வழக்கு, 2004 குஜராத் கலவரம் தொடர்பான ஷெராபுதின் வழக்கு போன்றவற்றில் ‘நேர்மையான’ தீர்ப்பு வழங்கிய  ரஞ்சன் கோகோய் மீது சுப்ரீம் கோர்ட் பணியாளரான பெண்ணொருவர் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக வழக்குத் தொடுத்தது நினைவிருக்கிறதா? அந்தப் பெண்ணின் கைப்பேசி, அவரது உறவினர்களின் கைப்பேசிகளும் ‘பெகாசஸ்’ பட்டியலில் இருந்திருக்கிறது. 

சி.பி.ஐ இயக்குனராக அரசாங்கத்தால் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட அலோக் வர்மா, அவரை வம்படியாக சர்ச்சைகளில் இழுத்து விட்ட மற்றொரு சிறப்பு அதிகாரி ராகேஷ் அஸ்தானா, ஆகியோரின் பெயர்களும், அவர்களது உறவினர் பெயர்களும் கண்காணிப்புப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. இதில், ராகேஷ் அஸ்தானா 2021 ஜூலை 30ஆம் நாள் ஓய்வு பெறவேண்டிய சமயத்தில் டெல்லி போலிஸ் துறையினரின் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலுள்ள சி.பி.ஐ, ஐ.பி, ரா போன்ற அனைத்து உளவுத் துறைகளும், எந்த ஒரு குறிப்பட்ட நபரைக் கண்காணிக்க டெல்லி போலிஸ் கமிஷனர், உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரின் அனுமதியைப் பெறவேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ‘கோடு போட்டால் ரோடு போடும் திறமை’யுள்ளவர்களுக்கு இந்த மூன்று புள்ளிகளை இணைக்கத் தெரியாதா என்ன?

பீமா கோரேகான் (எல்கர் பரிஷத்) போரின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வன்முறையைத் தூண்டி விடும் வகையில் பேசியதாகக் கைது செய்யப்பட்ட ரோனா வில்சன், கெளதம் நவலாகா, ஆனந்த் டெல்டும்டே, சுதா பரத்வாஜ், அருண் ஃபெரைரா என மொத்தம் 35 சமூகப் போராளிகளின் பெயர்களும் இப்பட்டியலில் அடக்கம். இதில் ரோனா வில்சனின் கைப்பேசியில் பெகாசஸ் நிறுவப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்குத் துளியும் சம்பந்தமில்லாத கோப்புகளை அவரது கணினி, கைப்பேசிகளில் கண்டெடுத்ததாக ஒரு வழக்கு நடைபெற்று வருவதற்கும், பெகாசஸுக்கும் தொடர்பிருக்குமோ என்று கேள்வியெழுப்பி வருகிறார்கள் ஊடகத்தினர்.

கோவாக்சின் ஆய்வறிக்கை வருவதற்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட ஆட்சேபணை தெரிவித்த வைராலஜிஸ்ட் ககந்தீப் கேங், மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் இந்தியப் பொறுப்பாளர் ஹரி மேனன் போன்றவர்களும் வேவுப்  பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவை தவிர, தொழிலதிபர்களான அனில் அம்பானி, அவரது உதவியாளர்கள், டசால்ட் இந்தியாவின் தலைவர் வெங்கட் ராவ், போயிங் இந்தியாவின் தலைவர் பிரதியுஷ் குமார் போன்றவர்களும் 2018இல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

மீண்டும் இந்தப் பட்டியலில் பெயர்கள் இருந்ததினாலேயே இவர்கள் அனைவரும் கண்காணிக்க்ப்பட்டுள்ளனர் என்று சொல்ல முடியாது. தேவைப்படும் பொழுது கண்காணிக்கலாம் என்ற கோணத்திலும் இந்த எண்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். சிலரது கைப்பேசிகள் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. ரஃபேல், எல்கர் பரிஷத், ரஞ்சன் கோகோய் பாலியல் குற்றச்சாட்டு, சிபிஐ  சர்ச்சை போன்ற சர்ச்சைகள் எழுந்தவுடன் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் கண்காணிப்பு பட்டியலில் இடம்பெறுவது விந்தையாகவுள்ளது.  அதிலும் குறிப்பாக இந்தியப் பிரதமரின் 2017ஆம் ஆண்டு இஸ்ரேலியப் பயணத்துக்குப் பின்பு ‘பெகாசஸ்’ கணக்கு உருவாகியிருப்பது லேசாக நெருடுகிறது. கண்காணிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் ஆளும் கட்சியினருக்குத் தலைவலியாக இருப்பவர்கள் என்பதை எவராலும் புரிந்துகொள்ளமுடியும். 

தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் வெளியிடும் பட்ஜெட்டில் 2016 ஆம் ஆண்டில் 33.17 கோடியாகயிருந்த பாதுகாப்புச் செலவு, 2017 ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செலவு 33.58 கோடி என்றும், அதே தலைப்பின் கீழ் ‘மற்றவை’ 300 கோடி என்றும் மொத்தமாக 333.58 கோடிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.  ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளின் உரிம விலை, கைப்பேசிகளின் மாடலைப் பொறுத்து நிறுவும் விலை, சேவை வரி எனப் பலவகைச் சேவைகளையும் பேக்கேஜாக வாங்கினால் 300 நபர்களுக்கு சுமார் 50 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 300 கோடி. இதற்கும் பட்ஜெட்டில் ‘மற்றவை’ என 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததும், தற்செயலாக நடந்திருக்கச் சாத்தியமில்லை என்கின்றனர் எதிர்க்கட்சியினர். 

மற்ற நாடுகளில் பெகாசஸ்

என்.எஸ். ஓ. நிறுவனம் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் சில எங்கள் வாடிக்கையாளர் இல்லை என்று சொல்லியுள்ளதே தவிர, எந்தெந்த நாடுகளுக்கு  ‘பெகாசஸ்’ விற்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் இவை ஒரு நாட்டின் தலைமை அரசுக்கு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சட்ட அமலாக்கப் பணிகளில் பயன்படுத்த மட்டுமே விற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. அதுவும் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் இஸ்ரேலிய அரசின் அங்கிகாரம் கிடைத்த பின்பே எந்தவொரு நாட்டுக்கும் ‘பெகாசஸை’ விற்பதாகவும், தங்கள் வாடிக்கையாளர்கள் (மென்பொருளை வாங்கும் நாடுகள்) அதனை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் சொல்கிறது என்.எஸ்.ஓ. ஆனால் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் இஸ்ரேலின் நேர்மைத்தன்மை நம்பகமானதாக இருந்ததில்லை.

சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளுக்கு  ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளை விற்கக்கூடாது என இஸ்ரேல் தடைவிதித்துள்ளது ஏனென்பதற்கான காரணம் புரியவில்லை.  தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் ஃபிரான்ஸ், இந்தியா தவிர மற்ற அனைத்து நாடுகளும் தாங்கள் ‘பெகாசஸை’ வாங்கவில்லை என்று மறுத்திருக்கிறார்கள். ஃபிரான்ஸ், இது குறித்து ஒரு விசாரணையை ஏற்பாடு செய்துள்ளது. ஃபிரெஞ்சு அதிபர் இமானுவல் மேக்ரோனின் தொலைபேசி எண்ணும் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ரஃபேல் குறித்து நடைபெறும் விசாரணையில் பெகாசஸின் ஒட்டுக் கேட்புத் தகவல் தேவைப்படலாம் என்றவொரு கருத்தும் இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. மேலும் ஒரு காலத்தில் ஃபிரான்ஸின் ‘காலனி’யாக இருந்த மொரக்கோ, ஃபிரான்ஸ் அதிபரை உளவு பார்க்க இதைச் செய்திருக்கக் கூடுமோ என்பதற்காகவும், ஃபிரான்ஸ் இந்த விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. ஹங்கேரியில், கடந்த வாரத்தில் அரசு பதில் சொல்லியாக வேண்டுமென்ற போராட்டங்கள் வெடித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் சபை, ஐரோப்பிய யூனியனின் பல நாடுகள் ‘இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் புறம்பானது. இந்த இணைய ஆயுதம் எதேச்சிகாரத்துக்கு வழிகோலும்’ என எச்சரித்துள்ளது. 

இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், என்எஸ்ஓ குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதை மறுத்துள்ளார், ஆனால் இந்தியா அதைப் பயன்படுத்தவில்லை என்பதை மறுக்கவில்லை. இந்திய உள்துறை அமைச்சர் ‘இந்த செய்தி வெளிவந்த காலவரிசையைப் பார்த்தாலே புரியவில்லையா?’ (‘ஆப் கிரொனாலஜி சமஜ்ஜியே’) என்று தனது வழக்கமான ஒற்றை வரியைப் பகிர்ந்துள்ளார். அதாவது குளிர் காலக் கூட்டத் தொடரை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் செய்யும் குழப்பம் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ‘இந்தியாவில் நாடாளுமன்றக் கூட்டம் கூடுவதற்காக உலக நாட்டுப் பத்திரிக்கைகள் காத்திருக்கவில்லை, இது உலகநாடுகள் பலவற்றையும் ஆட்டியிருக்கும் தகவல்’ என லெ மான்டே பத்திரிக்கையாளர் ஒருவர் எழுதியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனம் பெகாசஸ் குறித்து சர்ச்சை எழுப்பிய போது, அப்போதைய இந்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, வாட்ஸ் அப் ஒட்டுக் கேட்பு குறித்தோ, பெகாசஸ் மென்பொருள் குறித்தோ நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆளும் கட்சி ஆதரவாளர்கள் சிலர், ‘ஒரு வேளை இந்த மென்பொருளை அண்டை நாடுகள் (வேறு யார், ‘நட்பு நாடான’  பாகிஸ்தான்) இந்தியர்களின் கைப்பேசிகளில் நிறுவியிருக்கக் கூடுமல்லவா’ என வாதிடுகிறார்கள். ஒரு நாட்டில் உள்ளவர்களை உளவு பார்க்க, அந்நாட்டு மக்களின் கைப்பேசிகளில், வேறொரு நாடு உளவு மென்பொருளை நிறுவி, கண்காணிக்க முடியுமென்றால், அந்த நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியதாக்கி விடுகிறது. ஒருவேளை அந்தச் சாத்தியம் இருந்திருந்தால், இந்நேரம் இந்திய அரசு பதறியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் நாட்டின் பாதுகாப்புக்காக இந்த மென்பொருளை நாங்கள் தான் வாங்கினோம் என்று இந்திய அரசு சொல்லுமானால், பத்திரிக்கையாளர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், ஆலோசகர்கள் போன்றவர்கள் ஏன் இந்தக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்கள் என்ற விளக்கத்தையும் தர கடமைப்பட்டுள்ளது. 

ஏற்கனவே சொன்னது போல், அரசாங்கங்கள் நாட்டின் பாதுகாப்புக் கருதி சில தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கும் வழக்கம் காலங்காலமாக உள்ளது தான். ‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்கும் விஷயமல்ல. வேவு பார்த்தல். பொதுவாழ்வு விஷயங்களைக் கடந்து தனிமனித உரிமையில், அந்தரங்கங்களில் இது தலையிடக்கூடும். ‘பெகாசஸால்’ பாதிக்கப்பட்ட கைப்பேசிகள் ஒருவரின் வீட்டுக் கதவுகள், சுவர்கள் அனைத்தையும் உடைத்துப் போட்டுவிட்டு நாள் முழுதும் அவர், அவரது குடும்பம், சுற்றம் என்ன செய்கிறார்கள் என்று ஆயிரம் பேர் பார்ப்பதற்கு வழி செய்துவிடுகிறது. படுக்கையறை, குளியலறை எங்கெல்லாம் அவரது கைப்பேசி பயணிக்கிறதோ அங்கெல்லாம் பிறரது கண்களும் காதுகளும் தொடர்கின்றன. இதில் சாமான்ய மனிதருக்கு எந்தச் சம்பந்தமுமில்லை என்று அசட்டையாக இருந்துவிட கூடாது. சாமான்ய மனிதர்களின் வரிப்பணத்தில் தான் இவை செயல்படுகின்றன. சமூகத்துகாகக் குரல் கொடுப்பவர்கள் ஒடுக்கப்படுவது சமூகத்தின் ஒவ்வொருவரின் குரல்வளையும் நசுக்கப்படுவதற்குச் சமம். 

ஃபிரான்ஸ் பிரதமர், அதிபர், தென் ஆப்ரிக்க அதிபர், சௌதி அரேபிய இளவரசர் எனப் பல நாடுகளின் உயர் தலைமைகள், இராணுவ அதிகாரிகள், நீதியரசர்கள் என பலதரப்பட்டோரின் எண்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. எந்த நாடாக இருந்தாலும், அரசாங்கம் இத்தகைய உளவுமென்பொருளைத் தன் நாட்டுத் தலைவர்களை, அதிகாரிகளை, பொதுமக்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தியிருக்குமானால், அதற்கான விளக்கத்தைத் தன் நாட்டு மக்களுக்குத் தரவேண்டிய கட்டாயத் தேவையிருக்கிறது. ஒரு நாடு, இத்தகைய இணைய ஆயுதங்களைத் தன் நாட்டு மக்கள் மீதும், மற்ற நாடுகளின் மீதும் ஏவ முயலுமானால், கூடிய விரைவில் மற்றுமொரு உலகப்போர் மூளும் அபாயமுள்ளது. 

  • ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad