\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அமெரிக்காவில் பெண்கள் நிகழ்த்தும் தொடர் புத்தகக் கண்காட்சி

“புத்தகங்களோடு புதிய விடியல்”
(வி. கிரேஸ் பிரதிபா, அட்லாண்டா, அமெரிக்கா)

வாரத்தின் இறுதிநாளான சனிக்கிழமை, சூலை 24, 2021 ஒரு புதிய தொடக்கமாகத் தான் அமையப்போவதை அறிந்து இனிமையாகப் புலர்ந்தது. முதல் நாள் மழையின் ஈரமும் விடிகாலைக் கதிரின் இளஞ்சூடும் இதம் தந்தாலும் இன்னும் மிகுதியானதொரு இனிமை காற்றில் கலந்திருந்தது. இடம் – அமெரிக்கா, ஜியார்ஜியா மாகாணம், அட்லாண்டா மாநகரப் புறநகர்ப் பகுதியான கம்மிங் நகரில் அமைந்திருக்கும் பௌலர் பார்க்.

“பாதங்களை நகர்த்தாமல் உலகெங்கும் பயணப்பட வைப்பவை”, என்று அமெரிக்கப் பெண் எழுத்தாளர் ஜூம்பா லஹிரி சொல்லும் நூல்கள், மேசைகளில் அழகாக அமர்ந்துகொண்டு என்னை வாங்கி வாசியுங்கள் என்பது போல அழைத்துக்கொண்டிருந்தன. இந்தியா, இலங்கை, சுவீடன், கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, என்று பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள்! ஆம், அமெரிக்காவில் முதன்முறையாகத் தமிழ் நூல் கண்காட்சி, அட்லாண்டாவில்! வல்லினச் சிறகுகள் மின்னிதழ்; உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா; ஒருதுளிக்கவிதை, புதுச்சேரி; இவர்களுடன் இணைந்து அட்லாண்டா தமிழ் நூலகம் நடத்திய இந்த நூல் கண்காட்சி சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.

முனைவர் திருமிகு. அமிர்தகணேசன் அவர்களின் முன்னெடுப்பில், அவருடைய வழிநடத்துதலில், திருமிகு. ராஜி ராமச்சந்திரன் அவர்களின் திட்டமிடலில், அருமையாகக் கண்காட்சிப் பணிகள் ஒவ்வொன்றும் செயல்படுத்தப்பட்டன. எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் கண்காட்சிக்கு நூல்களை அனுப்புவதற்குச் சுற்றோலை முதலில் தயாரிக்கப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இந்தியாவில் இருந்து நூல்கள் அனைத்தையும் பொறுப்பாகப் பெற்று அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்ததில் உலகப் பெண் கவிஞர் பேரவையின் கவிஞர் மஞ்சு முக்கியப் பங்காற்றினார். அட்லாண்டா தமிழ் நூலக நிறுவனர் திருமிகு. பொன்னி சின்னமுத்து, வல்லினச் சிறகுகள் மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவையின் ராஜி ராமச்சந்திரன் மற்றும் கிரேஸ் பிரதிபா, தமிழ் நூலகத் தன்னார்வலர்கள் விஜயப்ரியா, ஐஸ்வர்யா, நதியா, வளர், கிருபா, பாரதி, கார்த்திகா மற்றும் மாணவர்கள் நிலா, வெண்பா, நிக்கில், நிதிலன், திபேஷ் என்று அனைவரும் இணைந்து ஒரு குழு முயற்சியாகக் கண்காட்சிக்கு வந்த நூல்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு, வகைமைப்படுத்தப்பட்டு, விலையிடப்பட்டு, அழகாகப் பிரித்து அடுக்கப்பட்டுக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தன. சிறுகதை, புதினம், கட்டுரை, கவிதை, சிறுவர் இலக்கியம், சிறுவர்க்கான காட்சி அட்டைகள், வரலாற்று நூல்கள், என்று பல வகையான நூல்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுடைய நூல்கள் ஒரு மேசை முழுவதும் இடம்பெற்றிருந்தன.

கண்காட்சி நடைபெற்ற அன்று காலையில் சிறப்பு விருந்தினர்கள் திருவாளர்கள் முனைவர் உதயகுமார், குமரேஷ், பெரியண்ணன் சந்திரசேகரன், இராம்மோகன், செல்வகுமார் மற்றும் கண்ணப்பன் ரிப்பன் வெட்டிக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க, திருமிகு. அமிர்தகணேசன் சிறப்புரையாற்றினார். தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சியில் நூல் கண்காட்சியின் காட்சிகள், நூல்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கண்காட்சிக்கு வருகை புரிந்தவர்களுடைய கருத்துகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியை வல்லினச் சிறகுகள் இணை ஆசிரியர் கவிஞர் கிரேஸ் பிரதிபா நேர்த்தியாகக் கொண்டு சென்றார். நூல் கண்காட்சியைக் குறித்த தகவல்களை அனைவருக்கும் பகிர்வதற்காக ஒரு கலந்துரையாடலும் தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒரு வாரம் முன்பாகவே நடத்தப்பட்டது. கண்காட்சிக் குழுவினருடன் திருமிகு. ஜெயா மாறன் அதனைச் சிறப்பாக நடத்தியிருந்தார்.

அட்லாண்டாவில் என்று தொடங்கிய திட்டமிடல், அமெரிக்காவின் பல நகரங்களில் தொடர் கண்காட்சியாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில், அட்லாண்டாவிற்கு அடுத்ததாக, இக்கண்காட்சி வட கரோலினா தமிழ்ச்சங்கம், தமிழ் கலாச்சார சங்கம், கேரி வாசகர் வட்டம், கேரி தமிழ்ப்பள்ளி ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன், கேரி, வட கரோலினாவில் சூலை 31, 2021 அன்று தாமஸ் ப்ருக்ஸ் பூங்காவில் சிறப்பான முறையில் நடைபெற்றது. திருமிகு. நவீன் பாஸ்கரனின் வரவேற்புரை மற்றும் திருமிகு. பொன்னியின் சிறப்புரையுடன் கண்காட்சி தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற திருவாளர்கள் மணிவண்ணன், மோகன் வைரக்கண்ணு, பாலா, ஜெயந்தி ராஜகோபாலன், சரயு முரளிதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தன்னார்வர்கள் இல்லாமல் இந்நிகழ்ச்சியில்லை – பிரவின், ப்ரித்வி, கிருபா, ஜீவா, ஜெயகண்ணன், ரமேஷ், சேத்தன், தீபிகா, செந்தில், லாவண்யா ஆகியோர் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கக் கரம்கொடுத்தனர்.

இரு இடங்களிலும், தமிழ்ப் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று பலரும் கண்காட்சிக்கு வந்து நூல்களை வாங்கி மகிழ்ந்தனர். வாசகர்களின் விருப்ப நூல்களும் ஒரு பதிவேட்டில் பதியச் சொல்லிப் பெறப்பட்டன. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பரிசாக நூல்கள் வழங்கப்பட்டன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடத்தப்பட்டதால் வெளியிடத்தில் நடத்தப்பட்ட கண்காட்சியில் முகக்கவசம், மற்றும் கிருமிநாசினி வைக்கப்பட்டிருந்தன. அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர். நூல் விற்பனையின் ஒரு பகுதி கொரோனா நிதிக்காக அளிக்கப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் தமிழ் நூல்களுக்கான கண்காட்சியை இவ்வளவு நேர்த்தியாக எப்படி நடத்துகிறீர்கள் என்று வந்த அனைவரும் பேருவைகையுடன் பாராட்டியதும் நூல்களைக் கண்டு மகிழ்ந்து வாங்கியதும் கண்காட்சிக்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் பெரும் பரிசாக அமைந்தது.

கேரியைத் தொடர்ந்து, ஆகஸ்டு 14ஆம் நாள், வட கரோலினா சார்லட்டில் நூல் கண்காட்சி நடக்க இருக்கிறது. அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. திருமிகு.ரம்யா ரவீந்திரன் அவர்கள் இதனை ஒருங்கிணைத்து வருகிறார். வல்லினச் சிறகுகள் நடத்திய மரு.அம்பிகாதேவி நினைவு போட்டியில் வெற்றிபெற்ற கவிதைத் தொகுப்புகளும் வெற்றிபரிசாக, அச்சு நூல்களாக இக்கண்காட்சியில் வெளியிடப்பட இருக்கின்றன என்று தெரிகிறது. அமெரிக்க மண்ணில் தொடங்கப்பட்டிருக்கும் தமிழ் நூல் கண்காட்சி மேலும் மேலும் விரிந்து நிலைத்து, தமிழ் வாசகர்களுக்கு உற்சாகம் தரும் என்று நம்பி விழைகிறோம்.

“மிகுதியாக வாசிக்க வாசிக்க மிகுதியாக அறிந்து கொள்வீர்கள். மிகுதியாகக் கற்கக் கற்க மிகுதியான இடங்களுக்குச் செல்வீர்கள்.” – Dr. சியூஸ், குழந்தைகள் மனங்களைக் கொள்ளைகொண்ட அமெரிக்க எழுத்தாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad