\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இதெல்லாம் சாதாரணமப்பா!

மகேஷ் தனது பல்சர் பைக்கை கல்யாண மண்டபத்தில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். அவன் ஒரு பைக் பைத்தியம். மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன்னரே, கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சத்திற்கு  முன்பதிவு செய்து,  9 விகித  வட்டிக்கு வாங்கிய புதிய மாடல் பல்சர் பைக் அது. தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலைப் பார்க்கிறான்.  

 

““என்ன தம்பி, புது மாடல் போல! பல்சர் பைக் ஹெட் லைட்டே  அழகுப்பா!    கருப்பு கலர்ல ராஜா தேசிங்கு  குதிரை மாதிரி இருக்குது” எனக் கேட்டான்  மண்டபத்து வாட்ச்மேன் தங்கராஜ்.

 

“தேங்க்ஸ் அண்ணே! போனமாசம்தான் டெலிவரி  எடுத்தேன்.  அம்மாக்கள் இந்த மாதிரி பைக்கை பார்த்தாலே, கையில பருப்பு  சோறை வச்சுகிட்டு குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட  வந்துடுவாங்க.  இதென்ன பைக்கா இல்ல டைனிங் டேபிளா? கொஞ்சம் பாத்துக்கங்க“ என்று சொல்லியவாறே வாட்ச்மேன் கையில் இருபது ரூபாயைத்  திணித்தான். 

“நீ கவலைப்படாதே தம்பி. நான் பாத்துக்கிறேன். நீ உள்ள போ”  என்றான் தங்கராஜ்.

முன்பெல்லாம் கல்யாண வீட்டில ஒரு குட்டிப்  பையனும், பாவாடை தாவணி போட்டுகிட்டு சில பெண்களும்  கல்கண்டு தட்டும், சந்தனமும் வச்சிக்கிட்டு சிரிச்ச முகத்தோட வரவேற்பாங்க.  ஆனா இப்ப எல்லாம்  ஒரு ரோபாட்டுக்கு புடவையை  கட்டி விட்டு,  அதனோட கையில கல்கண்டு  மற்றும் சந்தன  தட்டு வெச்சிட்டு வரவேற்பதை  பார்த்தாலே இயந்திரத்தனமான  இருக்கு என்று நினைத்தப்படியே, மகேஷ் மண்டபத்திற்குள் நுழைந்தான்.   அவன் பின்பக்கத்தில் இருந்து ஒரு குரல்.

“டேய் மச்சி வாடா! உன் பல்சர் டார்ச்சர் இங்கே கேட்குது” என்று வயிற்றெரிச்சலோடு  அருண் கூப்பிட்டான்.

“ஆமாண்டா, உன் பைக்கில விட்ட  புகை,  இவன் காது வழியா வருது பாரு “   என்று மதுமிதா சொன்னாள்.

 

 மகேஷ் சிரித்தவாரே “எங்கடா  கௌதம்?”.

 

 உடனே மதுமிதா ”அவனுக்கு எப்பவுமே டைரக்சன் ப்ராப்லம்.  அதுல வேற, இந்த மண்டபம் அட்ரஸ்ல பழைய எண், புதிய எண்  காம்பினேஷன்!!  இந்த ஏரியாவுல எங்கேயாவது சுத்திகிட்டு இருப்பான். இரு, கால் பண்றேன். “ என்று சொல்லியவாறே போனை அன்லாக் செய்யும் பொழுது,  அருண் “கால் பண்ணாத!  உள்ள வந்துட்டான் பாரு” என்று சொன்னான்.

 

“ என்னடா மச்சி!  ரொம்ப  சுத்தின போல!!”  எனக் கிண்டலாக கேட்டான்  மகேஷ்.

 

“ ஆமாண்டா, ஒரே  கண்பியூசன். கடைசியில ஒரு டீக்கடை பையனுக்கு  லிப்ட் கொடுத்து, அவன்தான்  கொண்டு வந்து விட்டான். இருபது ரூபாய் தண்டம்!”  என வருத்தத்துடன் சொன்னான் கெளதம்.

 

“ஆமா மச்சி!  நீ  இது முடிய கொடுத்த இருபது ரூபாய் எல்லாம் சேர்த்து வெச்சா ஒரு பல்சர் பைக்கே  வாங்கலாம் போல இருக்கு”  என்று  மகேஷ் சொல்லியவுடன் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர்  “ஹை பைவ்”   கொடுத்து கொண்டனர்.

 

திடீரென்று பின்பக்கத்திலிருந்து ஒரே இரைச்சல். ரிசப்ஷனுக்கு ஆர்கெஸ்ட்ரா செட் பண்ணி இருந்தார்கள்.      கீபோர்டும், தபேலாவும்  ஒழுங்காக  செட்டாகவில்லை. “கொய்ங்” என்று ஒரே சத்தம். அந்த குரூப்பில் மெயின் சிங்கர் கீழே உட்கார்ந்திருந்த சவுண்ட் இன்ஜினியரை சில  கரெக்ஷென் பண்ண சொன்னான்.   சிறிது நேரத்தில் எல்லாம் செட்டாக, முதலில்  ஒரு பார்மாலிட்டிக்காக கடவுள் பாட்டில் ஆரம்பித்தனர்.  அந்தப் பாட்டு முடிந்த உடனே,  ஒரு குத்துப் பாட்டு பெயரைச் சொன்னதும் ஒரே கைதட்டு!   மகேஷ் மற்றும் அவனது நண்பர்களும், பெரிதாக இதை  கண்டு கொள்ளாமல் மற்ற விஷயங்களை  பேச ஆரம்பித்தனர்.

 

மகேஷ், அருண்,  கௌதம்  மற்றும்  மதுமிதா  ஒரே ப்ராஜெக்டில் வேலைப்  பார்க்கிறார்கள்.  அவர்களுடைய ப்ராஜெக்ட் லீடர்  ரேணுவின் ரிசப்ஷன்தான்  இது. வழக்கம்போல, மேரேஜ்    முடிந்தவுடன் அமெரிக்கப் பயணம்.  கௌதம்  அருணை பார்த்து

 

“மச்சி!   நம்ம தமிழ் படத்துல வர டிப்பிக்கல் அமெரிக்க ரிட்டன் மாப்பிள்ளை போல இல்லாம,  கொஞ்சம் வித்தியாசமா  இருக்கான்டா! “

 

“ ரேணு கில்லாடி  மச்சி.    அவ டீம்ல  புதுசா ஆள எடுக்கணும்னா,   மூணு தடவையாவது இன்டெர்வியூ பண்ணுவா.  இவனை எத்தனை தடவை  இன்டெர்வியூ பண்ணாலோ!” 

 

உடனே மகேஷ் “ டேய், ரொம்ப சத்தமா பேசாதீங்கடா! கல்யாண வீடு.  போய் கிப்டை கொடுத்துட்டு, ஒரு போட்டோ எடுத்து வரலாம், வாங்கடா”. 

 

கிப்டை கொடுத்து விட்டு மேடையை விட்டு  கீழே இறங்கினர்.

 

மதுமிதா அவர்களைப்  பார்த்து  “வாங்கடா, சாப்பிட போகலாம். இப்பதான் கும்பல் கம்மியா இருக்கும்”. மகேஷ் அவளைப்  பார்த்து “ ஏய் இருப்பா, இப்பதான் இளையராஜா  பாட்டு பாட ஆரம்பிச்சிருக்காங்க. கேட்டுட்டு சாப்பிட போகலாம். என்ன அவசரம்! “ 

 

“ டேய்  லஞ்ச் கூட ஒழுங்கா சாப்பிடல.  வாடா போகலாம்” என்று அவள் சொல்லும் போதே,  

“என் இனிய பொன் நிலாவே

பொன்நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம் த ர ர தா த தா

தொடருதே தினம் தினம் த ர ர தா த தா”

 

 அந்தக்  கிட்டார் இசை,  அவளை தரதரவென இழுத்து சேரில் உட்கார வைத்தது.  

 

“ சரி கரெக்டா நாலு பாட்டு தான் ஓகேவா?”  என்றாள். எல்லோரும் பாடலை ரசிக்க ஆரம்பித்தனர்.  அடுத்த பாடல் ஆரம்பிக்கும் நேரத்தில், பின்பக்கத்திலிருந்து ஒரு இனியக் குரல்.

 

“இ அம்  சௌமியா.   உங்க ப்ராஜெக்ட் லீடர் ரேணுவோட யங்கர் சிஸ்டர். அவள்  நீங்க எல்லாம் அவளோட டீம்மேட்ஸ்ன்னு  சொன்னாள்.  சாப்பிட  போகலாம், வர்றீங்களா? “ எனக் கேட்டாள்.

 

உடனே  மகேஷ் “ குட் டைமிங்!  வி ஆர் அபௌட் டு ஸ்டார்ட். பை தி வே,  ஐ அம்  மகேஷ்”  என்று சொல்லிவிட்டு தனது நண்பர்களையும்  அறிமுகப்படுத்தி வைத்தான். மதுமிதா அவனை முறைத்ததை,  அவன் கண்டுகொள்ளவே இல்லை.  அவள் முன்னே செல்ல மகேஷ் அவளைப் பின்தொடர்ந்தான். வேறு வழியில்லாமல் மற்ற நண்பர்களும் அவனைப் பின் தொடர்ந்தனர். அவர்கள் போகும் வழியில் யாரோ ஒரு பெரியவர் சௌமியாவை கூப்பிட்டார். “ சாரி, ஐ வில் பீ ரைட் பேக்”  என்று சொல்லி நகர்ந்தவுடன்  மகேஷ் தன் நண்பர்களைப் பார்த்து “  ஏண்டா, இந்த மாதிரி ஒரு சிஸ்டர்  இருக்கிறதை, ரேணு  நம்ம கிட்ட சொல்லவே இல்ல”  எனக் கேட்டான்.

 

அவன் தலையில் எப்ப கொட்டலாம்  என்று  வெயிட் பண்ணிக்கொண்டு இந்த மதுமிதா “ உன் ஜொள்ளு  புத்தியைத்தான் இப்ப பார்த்தேனே. உன்ன பத்தி அவளுக்குத் தெரியாதா?   அதான்   அவள் சொல்லவே இல்லை“

சிறிது நேரத்தில் சௌமியா திரும்பி வந்தாள்.

 

மகேஷ் அவளிடம் “ உங்க தாத்தா போல இருக்கு?“

 

“ யா! எப்படி  கண்டுபிடிச்சீங்க”

 

“அவர் ஜாடை உங்களிடம் நல்லா தெரியுது!   அவருக்கு மியூசிக்ல நல்ல இண்டரஸ்ட் போல.  கைவிரலில் நல்லா  தாளம் போடுறாரு?”

 

“இல்லீங்க!  அவருக்கு  கொஞ்சம்  நெர்வோஸ் சிஸ்டம் பிராப்ளம் இருக்கு.  அதனால அப்படி பண்றாரு”  என்று சொல்லிவிட்டு அவள் நடக்கத் தொடங்கினாள்.

 

 உடனே கௌதம் “ மதுமிதா உங்க வீட்டுக்கு  பல்பு வாங்குனனும்  சொன்னேலே, கரெக்டா?  மகேஷ்கிட்ட  வாங்கிட்டு போயிரு. நிறைய ஸ்டாக் வச்சிருக்கான் “ என்று சற்று மெல்லியக் குரலில் சொன்னான்.  மதுமிதா அவனுக்கு ஒரு “ஹை பைவ்”   கொடுத்தாள்.

 

மகேஷ் அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.   மந்திரிச்சு விட்ட கோழி போல அவளைப் பின்தொடர்ந்தான். டின்னெர் ஹாலுக்கு வந்தனர்.ஹாலில்  பல விதமான உணவு வகைகள். சைனீஸ்,  மெக்சிகன், இத்தாலியன்   , வட மற்றும் தென் இந்திய  உணவு வகைகளை,  பஃபே முறையில் செட் பண்ணி இருந்தார்கள். 

 

 மகேஷ் சௌமியாவிடம்  ஏதோ பேச  நினைக்கும் பொழுது, யாரோ ஒரு குட்டிப்  பையன், அவள் காதில் ஏதோ சொல்லி ஆப்பு வைத்துவிட்டான் . 

 

சௌமியா அவர்களைப் பார்த்து “ உங்க டிபார்ட்மெண்ட் ஹெட்   பாலா சார் வந்திருக்காரு போல.   ரேணு சொல்லி விட்டாருக்கா. சாரி,  ஐ ஹொவ் டு கோ. என்ஜாய் யுவர் டின்னர். டோன் பி சைய்” சொல்லிவிட்டு அவள் நகரத் தொடங்கினாள்.

 

உடனே கௌதம்  தன் பங்கிற்கு “ அதெல்லாம் கவலைப்படாதீங்க. இது நம்ம வீட்டு பங்க்ஷன் மாதிரி “  என்றான்.

 

அவள் சென்றதும் மதுமிதா அவர்களைப் பார்த்து “ டேய் ரொம்ப அசிங்க படுத்துறீங்கடா!  என்னால முடியல. ” என்று சற்று  கோபமாக சொன்னாள். 

 

அருண் மகேஷிடம் “டேய் மச்சி, இனிமே உனக்கு காது கேட்குமுன்னு  நினைக்கிறேன்.  வாடா பசிக்குது. ஒரு கட்டு கட்டலாம்!  இந்த ரேணு எத்தனை நாள் லேட்நைட் ஷிப்ட்ல உட்கார வச்சு, நம்ம டின்னருக்கு ஆப்பு வச்சிருக்கா.  இப்பவாது  காம்பன்சேட் பண்ணலாம் வாங்கடா!”  

 

நண்பர்களும் அதை ஆமோதித்தவாரே ஒரு கட்டு கட்ட ஆரம்பித்தார்கள்.   அதற்குப்பின் மகேஷ் சௌமியாவை பார்க்க சந்தர்ப்பம் எதுவும் கிடைக்கவில்லை. எல்லோரும் ரிசப்ஷன் முடிந்து வீட்டுக்கு கிளம்பி விட்டனர்.

 

****

இரண்டு மாதங்கள் சென்றன. அன்று காலை கிட்டத்தட்ட பதினோரு மணி.  நண்பர்களுடன்  டீ,  “தம்” கம்பெனி,  அரட்டை  என்று   மார்னிங் ஃபார்மாலிட்டீஸ்  எல்லாவற்றையும் முடித்து விட்டு,   கொஞ்சமாவது ஒர்க் பண்ணலாம் என்று மகேஷ் நினைக்கும்  பொழுது, அவனது செல்போனிற்கு  ஒரு இன்கமிங் கால் வந்தது. மார்க்கெட்டிங் காலாக  இருக்குமோ என்று  அவன் எடுக்கவில்லை.  சிறிது நேரத்தில் அதே நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. வேறு வழியில்லாமல் எடுத்தான்.   போனின் மறு பக்கத்தில்,  ஒரு பெண்ணின் குரல்.

 

“ ஹலோ நான் சௌமியா பேசுறேன்,  ஹவ் ஆர் யூ”

 

 அவனுக்கு புரிந்தது, இருந்தாலும் உடனே காட்டிக் கொள்ளாமல்

 

“ சாரி. ஹூ  ஐஸ் காலிங்?  “  என்று  கொஞ்சம்  சீன்  விட்டான். 

 

“நான் தான் உங்க  எக்ஸ் ப்ராஜெக்ட் லீடர்  ரேணுவோட சிஸ்டர்.  மறந்துட்டீங்களா?”

 

“ ஓ சாரி,  அனெஸ்பேக்டட்  கால். ஐ அம் பைன். ஹவ் ஆர் யூ “  என்று சொல்லிவிட்டு  தன்  பக்கத்தில் இந்த ஸ்டிக்கி நோட்டில் “ சௌமியா காலிங்”  என்று எழுதிவிட்டு  மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.  அதை பார்த்த  அருண்,  கௌதமிடம் “  டேய் இவன் மச்சக்காரன்டா,  நம்ம   இப்ப பார்த்த பொண்ணுங்க கூட கால் பண்ண மாட்டேங்குதுங்க!  ரெண்டு மாசத்துக்கு  முன்னாடி பார்த்த  ஒரு  பொண்ணு கால் பண்ணுது பாரு .  என்ன கொடுமை  கௌதம் இது!”  என்று வழக்கம் போல  புலம்பினான்.

 

 சிறிது நேரத்தில்  திரும்பி வந்த   மகேஷிடம்   கௌதம் “ என்ன மச்சி!  ரொம்ப ஹாப்பியா  இருக்க என்ன விஷயம்?”   எனக் கேட்டான்.

 

“ கேன் யூ பிலீவ் திஸ்?  இந்த    சண்டே  பதினொறு மணிக்கு, நம்ம  ப்ரூ ரூம் காபி ஹௌஸ்ல  மீட் பண்ண போறோம்!  என்ன விஷயமுன்னு சொல்லலை.  ஏதோ முக்கியமான விஷயம், போன்ல சொல்ல முடியாதுன்னு சொன்னாள்“  என்று சொல்லிவிட்டு வலது கையை மடக்கி சற்று பின்பக்கமாக இழுத்து “வெற்றி சைகையை” காண்பித்தான்.

 

“டூயூட்,   இது  ஆபீஸ்,  பீச் மாதிரி நினைச்சு குதிக்கிற, அடங்கப்பா”  என்று  கௌதம் தன் பங்கிற்கு புலம்பினான்.

 

**

அன்று ஞாயிற்றுக்கிழமை.  கிச்சனிலிருந்து  சௌமியாவின் அம்மா  வாசுகி பெருத்த குரலில்  கத்தினாள். 

 

“ மனோகர்,   மணி ஒன்பது ஆக போகுது.  இன்னும் தூங்கிட்டு இருக்கா.  பத்து மணிக்கெல்லாம் கிளம்பி   போகணும்னு  சொன்னா,   அவள முதல்ல எழுப்பி விடுங்க”.  மனோகர்  சௌமியாவின் தந்தை.

 

 “அவளை எட்டு மணியிலிருந்து எழுப்ப ட்ரை பண்ணுறேன்.   இன்னும் பத்து நிமிஷம்  கொடுப்பா, கொடுப்பான்னு  சொல்லியே ஒரு மணி நேரம் ஓட்டிட்டா! “ 

 

“சோம்பேறி கழுதை, சுத்தமா டைம் சென்ஸ் இவள்கிட்ட கிடையாது.”

 

 அவளை எப்படியோ  எழுப்பி, பாத்ரூமிற்குள் அனுப்பி விட்டார்.  அதை அவர் ஒரு பெரிய சாதனையாக நினைத்து,  வாசுகியிடம் இன்னொரு காப்பியும் வாங்கி  குடித்தும் விட்டார்.

 

சௌமியா குளித்து அலங்காரம் செய்து வெளியே வரும் பொழுது, மணி ஒன்பதே முக்கால். சௌம்யாவை பற்றி சொல்லியே ஆகவேண்டும்! கடைசி வருட கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பை இன்னும் மூன்று வாரத்தில் தொடங்குகிறாள்.  மாநிறம், சற்று பருமனனா உடல்வாகு.  கிட்டத்தட்ட  5 அடி 5 அங்குலம் இருப்பாள்.  அவளது பிளஸ் பாயிண்டே,  அவளது வட்ட முகமும் , அகண்ட விழிகளும்  மற்றும்  சுருள் முடியும்தான்.   பூ வேலைப்பாடுகள் நிறைந்த வெள்ளை கலர் சட்டையும் , கேப்பரிஸ் டைப் நீல ஜீன்ஸ் பேண்டும் போட்டிருந்தாள்.  உதட்டிற்கு  “கஃபெ மோச்சா”    கலர்  ஸ்டைலில்  லிப்ஸ்டிக், ஒரு கையில் பிங்க் கலர் ஐவாட்ச் மற்றொரு கையில் அதை  மேட்ச் பண்ணும் வகையில் பிங்க்  கலரில் ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட்.  

 

அவளைப்   பார்த்தவுடன், வாசுகி  “ இன்னிக்கும் தலைக்கு எண்ணெய்  போடாம, அந்த ஸ்பிரேயை  அப்ளை பண்ணி இருக்கே போல ” எனக் கோபமாக கேட்டாள்.

 

“அம்மா ரிலாக்ஸ்! எங்க காலேஜ்ல இந்த மாதிரி கர்லி ஹேர் இல்லையேன்னு , ஒவ்வொருத்தியும்  காசு கொடுத்து ஹேர்ஐ  கார்ல்  பண்ணிக்கிறாங்க.  உனக்கு அந்த செலவில்லையேன்னு  சந்தோஷப்படாம,  என் தலையிலே கை வைக்கிறியா”

 

“ உன்கிட்ட ஆர்குயூ பண்ணி,   என் டைம்ஐ வேஸ்ட் பண்ண விரும்பல.  டிபன் சாப்பிட்டு, நீ கிளம்பு” என்று சற்று சலிப்புடன் சொன்னாள் வாசுகி.

 

 சௌமியா வேகவேகமாக சாப்பிட்டு விட்டு,  வெள்ளை மற்றும் கருப்பு ஸ்ட்ரைப்ஸ் போட்ட சிங்கிள் ஸ்ட்ராப் போட்ட செப்பலை  போட்டுக் கொண்டு கிளம்ப ரெடியானாள். அந்த செருப்பில்  எமரால்டு பச்சை கலர் நெயில் பாலிஷ் தீட்டிய அவளது விரல்கள் கொஞ்சம்  எட்டிப் பார்த்தது!

 

“ அப்பா வண்டி கீயை மறந்துட்டேன், ப்ளீஸ்”

 

“ எனக்கு தெரியும், நீ மறப்பேன்னு! ”  என்று சொல்லியபடியே அவளிடம் கொடுத்தார்.

 

“இவராலதான்,  இவ பாதி கெட்டுப் போறா”  என்று உள்ளிருந்தப்படியே  அம்மா குரல் கொடுத்தாள்.  அதை அவள் கண்டுக் கொள்ளாமல், “ஹோண்டா ஆக்டிவா”  ஸ்கூட்டரில்  கிளம்பினாள் .

 

ப்ரூ ரூம் காபி ஹௌஸில் ஒரே   இளசுகளின் கும்பல். வீட்டில் காபி கொடுத்தால், முகத்தை சுளிக்கும் “மில்லினியல்” தலைமுறையினர், கிட்டத்தட்ட முன்னூறு ரூபாய் வரைக்  கொடுத்து,  காபி குடிக்க தயங்குவது இல்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் ரிசர்வேஷன் செய்ய முடியும் என்பதால்,  மகேஷ் காலை பத்து  மணிக்கே  ஆஜர் ஆகிவிட்டான்.  

 

பதினொன்று மணியாக  இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது.  காபி ஷாப்புக்கு வெளியே மகேஷ் ஐபோனில் பார்த்த மெசேஜ்யே திரும்பவும் பார்த்து கொண்டு, அடிக்கடி அவள் வந்து விட்டாளா என்று பார்த்தான்.  அவனைப்  பார்த்தவுடன் பிடிக்கக்கூடிய லுக் .  நம்ம ஊரு தமிழ் பொண்ணுங்க கிட்ட,  பாஸ் ஆகக் கூடிய இரண்டு விஷயம்  அவன் கிட்டே இருக்கு. நல்ல உயரம்  மற்றும் கருப்பு நிறம். மார்வெல் அவென்ஜர்ஸ் எண்ட்கேம் “வாட்டெவர் இட் டேக்ஸ் ” என்று எழுதிய  கிரே கலர்  ஷர்ட் மற்றும் “லீ” ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்டும்  போட்டிருந்தான் . மிலிட்டரி ஸ்டைல் ஹேர் கட்,  அதற்கு மேட்சா அர்மணி ஏவியேட்டர் சன்கிளாஸ். ஒரு மார்க்கமாய்தான் இருந்தான்!

 

அதற்கு மேலும் நேரத்தை  எப்படி போக்குவது எனத்  தெரியாமல்,  அருணை கூப்பிட்டான். 

 

“ என்ன மச்சி தூங்குறியா”

 

“ டேய் சண்டே அன்னிக்கு பனிரெண்டு  மணிக்கு முன்னால  எழுந்திருக்க மாட்டேன்னு உனக்கு தெரியும். கால் பண்ணிட்டு தூங்குறீயான்னு கேட்கற?”

 

“இல்லடா மச்சி,  சௌமியாவுக்காக  வெயிட் பண்றேன். ஒரே டென்ஷனா இருக்கு.  திடீர்னு அவ எதுக்கு எனக்கு கால் பண்ணனும்.  ரேணு என்னப்பத்தி எதாவது  நல்லா சொல்லி, இவ இம்ப்ரெஸ் ஆயிட்டாளோ?   ஒன்னும் புரியல மச்சி!  இது மட்டும் கிளிக் ஆயிடுச்சின்னா,  இன்னிக்கு ரிலீஸ் ஆகிற புது ஹிந்தி படத்துக்கு ரெண்டு டிக்கெட் வாங்கி வச்சிருக்கேன்,”  என்று சொல்லி அருணை வெறுப்பேற்றினான்.

 

“டேய் இதெல்லாம் எப்படா புக் பண்ணே!. அடங்கு மச்சி! முதல்ல எதற்கு வந்திருக்கான்னு தெரிஞ்சுக்க. ”  என்று அவன் சொல்லும்போழுதே  “ அவ  வந்துட்டா, அப்புறம் பேசுறேன்” என்று சொல்லிவிட்டு கட் பண்ணினான்.

 

சௌமியா தன்னோட ஆக்டிவா பைக்கை  ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அவனைப்  பார்த்து ஒரு ஹலோ சொன்னாள்.   அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

 

“ ரொம்ப நேரமா வெயிட்  பண்றீங்களா?  சாரி”

 

“நோ,   டுவெண்ட்டி  மினிட்ஸ் இருக்கும் அவ்வளவுதான்” என்று சொல்லி சமாளித்தான். 

 

“உள்ளே  இடம் கிடைக்குமா?  இவ்ளோ பைக் வெளியே இருக்கு”

 

“ஐ டிட் ரெசெர்வ்.  வாங்க,  உள்ளே போகலாம்”

 

கார்ன் நுகுகெட்ஸும், மொகாசினோ காபியும் ஆர்டர் செய்துவிட்டு, அவர்களது ரேசெர்வேட் இருக்கையில் அமர்ந்தனர். காபி ஷாப்  மாடர்ன் லுக்கும் இல்லாமல், மெடியவேல் என்றழைக்கப்படும் இடைக்கால லுக்கும் இல்லாமல், இரண்டுக்கும்  நடுவே இருந்தது. ஜோடி ஜோடியாக உட்கார வசதியாக நிறைய காபி டேபிள்களும், சேர்களும் இருந்தன.  ஒவ்வொரு  காபி டேபிள்லிலும் ஒரு ஒற்றை ரோஜாவுடன்  சிறிய பிளவர் வாஸ்,   ஒரு பக்கம் மஞ்சள் கலரில் குஷன் வைத்த ஒரு சேர், மற்றொரு பக்கம்  ப்ளூ கலர் குஷன் வைத்த ஒரு சேர். நிறைய ஜோடிகள் ஆங்காங்கே உட்கார்ந்துகொண்டு, “உலக”  விஷயங்களை ஒன்றுவிடாமல் பேசிக் கொண்டிருந்தனர்!!! 

 

“ஹவ் இஸ் ரேணு.  ஃபேஸ்புக்ல அவங்க  போட்டோ எல்லாம் பாக்குறேன்.  யூ.ஸ்ல   செட்டில் ஆயிட்டாங்க போல இருக்கு”

 

“ஆமா, ஆல் செட்டில்ஃட்.    ரேணு சொன்னா, நீங்க  ப்ராஜெக்ட் லீடரா   புரமோட் ஆயிட்டீங்கன்னு கங்கிராஜுலேசன்!!”

 

“என்னைப் பற்றி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கா.  நான் நினைச்ச விஷயமா?” என்று நினைத்து சந்தோசப்படும்பொழுது , அவர்கள் ஆர்டர் செய்த 

துரித உணவு பொருட்கள் வந்தன.

 

“ தேங்க்யூ.    எல்லாம் ரேணுவோட  ட்ரெய்னிங்!  திடீர்னு கூப்பிட்டிங்களே, என்ன விஷயம் எவரிதிங் ஓகே?”

 

“சாரிங்க, சண்டே அதுவுமா, உங்கள பாதர் பண்ணிட்டேன்”

 

“ நோ இஸ்யூஸ்.   ஃப்ரீதான்.  சொல்லுங்க” என்று சற்று ஆர்வமாக கேட்டான்.

 

“ நான் லாஸ்ட் இயர்  போக  போறேன்.  நான் படிக்கிற காலேஜ், அவ்ளோ பெரிய காலேஜ் இல்ல.  கேம்பஸ்  இன்டர்வியூ எல்லாம் கிடையாது. காலேஜ் சைடுல, பெரிய ஹெல்ப் எதுவும் இல்லை .   ரேணுகிட்ட பேசறப்ப, நீங்க கேம்பஸ் இன்டர்வியூ பேனல்ல இருக்கிங்கன்னு சொன்னாள்.  எங்க காலேஜ்  ப்ரோபைல் இந்த பைல்ல  இருக்கு. எங்க காலேஜ்  பத்தி டிபார்ட்மெண்ட் ஹெட் பாலாசார் கிட்ட பேசுறீங்களா, ப்ளீஸ்.  பத்து  கேர்ள்ஸ் ஒரு டீம் போர்ம் பண்ணி, தெரிஞ்ச  காண்டாக்ட்ஸ் மூலமா கேம்பஸ் இன்டெர்வியூ செட் பண்ண  ட்ரை பண்றோம். யுவர் ஹெல்ப் வில் பீ  க்ரேட்டலி ஆஃப்ரீசியேட்டட்!”  என்று சொல்லிவிட்டு  காலேஜ் பைலை காபி டேபிள் மீது வைத்தாள்.  

 

அவள் பைலை வைக்கும்போது, “டப்” என்று சிறிய சத்தம். ஆனால், அது அவனைப்  “பளார்” என்று அறைந்தது போலிருந்தது! அவன் மனது அவனது முட்டாள்தனத்தை நினைத்து வெட்கப்பட்டாலும், அவனது வயது அதைப்  பெரிதாக  கண்டு கொள்ளவில்லை. 

 

“நான் கட்டாயம் பாலா சார் கிட்ட பேசுறேன். நல்ல முயற்சி, இ வில் ட்ரை டூ  ஹெல்ப். உங்களோட போனுக்கு நான் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புறேன், வாட்ஸாப்பில இருக்கீங்களா? ”  அவளோடு  அடிக்கடி பேச ஒரு வாய்ப்புக்காக அதைக் கேட்டான். 

 

“ஓ சாரி,  நீங்க நல்ல மாதிரி,  சில பேர் மிஸ்யூஸ் பண்ணி,  வாட்ஸ்அப்ல தேவையில்லாமல் மெசேஜ் அனுப்புறாங்க.   அதனால எங்க குரூப்புக்காக இரண்டு சாதாரண போன் வச்சுருக்கோம். நீங்க டெக்ஸ்ட் மெசேஜ் இல்ல கால் பண்ணா, நாங்க யாராவது ஒருத்தர் எடுப்போம்.”  என்று அவள்  சொல்லிக்கொண்டே காபி கப்பை  “டக்”கென்று கீழே வைத்தாள்.  அது அவனது மற்றொரு கன்னத்தில் “பளார்” என்று அறைந்தது போலிருந்தது!

 

“தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப். அக்கா இன்னும்  ரெண்டு கான்டெக்ட் கொடுத்து இருக்காங்க. வேற கம்பெனி, அவங்கள போய் நான் பாக்கணும். என்னோட ஷேர் ஆப் பில்”  என்று சொல்லியவாரே பணத்தை வைத்து விட்டு கிளம்பினாள்.

 

 அவனுக்கு  ஒன்றும் புரியவில்லை.   இது  பல்புலேயும் பல்பு “மெகா” பல்ப்!!! . அந்த சமயத்தில், அருணிடமிருந்து ஒரு இன்கமிங் கால்.

 

“ டேய், சௌமியா எங்க?”

 

“ இப்ப தான் கிளம்பினாள், என்ன விஷயம்? ”

 

“ டேய் மச்சி, வழக்கம் போல பல்பு வாங்கிட்டே போல இருக்கு”

 

பசங்க வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா!!! உனக்கு எப்படிடா தெரியும்”  என்று சமாளித்தவாரே  கேட்டான்.

 

“நீ கால் பண்ணதுக்கு அப்பறம்,  மதுமிதா கால் பண்ணாள் . அவதான் ஒரு வாரமா ஆபீஸ்க்கு வரவே இல்லையே.  சௌமியா உன்ன பாக்க வருவதைப் பற்றி சொன்னேன்.   அவளுக்கு அது ஏற்கனவே தெரியும் போல.  எதோ கேம்பஸ் இண்டெர்வியூ ஹெல்ப்பாமே .  நீ ஏதாவது  சொல்லி சொதப்ப  போறியோன்னு  கால் செய்தேன். “

 

“நான் ஒன்னும் சொல்லல  மச்சி, ஆல் இஸ்  குட் ஹியர் ” என்று மிகுந்த வருத்தத்துடன் சொன்னான்.

 

“சரி, நீ அப்படியே வந்து, என்ன  பிக்கப் பண்ணிக்க. இரண்டு டிக்கெட் வேஸ்டாதானே போகுது. ஹிந்தி படத்துக்கு போயிட்டு வந்திடலாம்” என்று நக்கலாக வெந்தப்  புண்ணில் கடப்பாரையை  பாய்ச்சினான்.

 

— மருங்கர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad