அருவியில் கண்ணாமூச்சி
ஆசியோலா என்ற சிற்றூரின் வெளிப்புறத்தில் ரயில் பயணத்தை முடித்துவிட்டு, ஊருக்குள் நுழைந்தால், ஒரு அமெரிக்கப் பூர்வக்குடி வீரனின் சிலையைக் காண முடியும். கம்பீரமாக நிற்கும் அந்த வீரனின் பக்கத்தில் கேஸ்கட் அருவி (Cascade falls) என்றொரு பலகையும் அதன் பக்கத்தில் கீழ் நோக்கி செல்லும் படிக்கட்டுகளுக்கான வழியும் இருக்கும். கீழே இறங்குவதற்கு முன்பு, அந்த வீரனைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆசியோலா என்றழைக்கப்பட்ட அந்த வீரனின் இயற்பெயர் பில்லி பாவல் (Billy Powell). 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த ஆசியோலா அவர்கள், 1835 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளுக்கு நீடித்த ப்ளோரிடா போரில் பூர்வக்குடி மக்களின் தலைவராக இருந்து அமெரிக்கப் படைகளுக்கு எதிராக போராடியவர். அவர் 34 ஆண்டுகளே வாழ்ந்தாலும், அவருடைய புகழ் காலம் கடந்து வாழும் வகையில் அவரது வாழ்வு அமைந்தது. அவருடைய பெயரில் அமெரிக்காவெங்கும் ஊர்கள், காடுகள், ஏரிகள் எனப் பலவும் அமைந்துள்ளன.
சரி, நாம் இப்போது படிக்கட்டில் கீழே இறங்கி அந்த கேஸ்கட் அருவி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இரண்டு படிக்கட்டுகள் இறங்கினாலே, மரங்களினூடே அருவியின் சிறு தோற்றம் தெரிகிறது. அமெரிக்காவில் தான் பிரமாண்டமான நயாகரா அருவி இருந்தாலும், மற்ற பல இடங்களில் அருவி என்ற பெயரில் இருப்பதெல்லாம் சிறியதாக நீர் வடியும் பாறைகளே. அதனால் அருவி என்று செல்லும் இடங்களின் மேல் பெரிதாக எதிர்பார்ப்பு இருப்பதில்லை.
ஆனால், இங்கே 156 படிகளில் கீழே இறங்கி சென்றால், இந்த அருவி நம்மை ஏமாற்றுவதில்லை. பெரியது என்றும் சொல்ல முடியாமல், சிறியது என்றும் சொல்ல முடியாமல், நடுவாந்திரமானதாக இருக்கிறது. முக்கியமாக, அழகாக இருக்கிறது.
சாகச மனம் கொண்டவர்கள் சிறிது மேலே ஏறி, தண்ணீருக்குள் சென்று வரலாம். அதாவது, உடல் மேல் தண்ணீர் படாமல். புரியாவிட்டால், காரை எடுத்துக்கொண்டு சென்று பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்!! கீழேயும், இது போல் நடந்து அருவி தண்ணீர் விழும் பகுதிக்கு பின்புறமாக செல்ல முடியும். அதாவது, அருவி நீருக்குள் ஒளிந்து விளையாடலாம். கண்ணாடி திரை போல் காட்சியளிக்கும் அருவி நீர்வீழ்ச்சி வழியாக அந்தப் பக்கம் இருப்பவர்களைக் காண்பது பேரனுபவமாக இருக்கும். தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால், அதில் கால்களை நனைத்தபடி நடப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதில் இருந்து விழும் தண்ணீர் ஓடையாக செல்லும் வழியை ஒட்டியே ஒரு நடைபாதை உள்ளது. ஒரு மைல் தொலைவு இருக்கும் இந்த பாதையில் மரங்களின் முழு நிழலில் நடந்து சென்று வந்தால், நனைந்த கால்கள் காயும். ஒட்டிய மணல் உதிரும்.
ஆசியோலாவின் ரயில் பயணம், கோடையில் சாப்பிடும் ஐஸ்க்ரீம் போல் இருந்தால், பக்கத்திலிருக்கும் இந்த அருவி, ஐஸ்க்ரீம் மேல் ஊற்றும் சாக்லேட் போல் தித்திக்கிறது. இப்ப எதற்கு இந்த உவமை என்கிறீர்களா? படிக்கட்டில் ஏறி மேலே வந்த களைப்பைக் காணாமல் போக செய்ய, அங்கு ஒரு ஐஸ்க்ரீம் கடை உள்ளது. அதையும் கண்டு கொள்ளுங்கள் என்று சொல்ல தான்.
மேலும் தகவல்களுக்கு,
https://en.wikipedia.org/wiki/Osceola
https://en.wikipedia.org/wiki/Cascade_Falls_(Osceola)
- சரவணகுமரன்