பண்ணையில் ஒருநாள்
”மாடு கண்ணு மேய்க்க, மேயிறதப் பாக்க
மந்தைவெளி இங்கு இல்லையே”
என ‘சொர்க்கமே என்றாலும்’ பாடலைப் பாடியபடி அங்கலாய்த்துக்கொள்பவர்கள் சொல்லும் ஒரு விஷயம் – நம்மூரைப் போல ஆடு, மாடு போன்றவற்றை இங்கே அமெரிக்காவில் காண முடிகிறதா, தடவிக்கொடுக்க முடிகிறதா என்று தான். ஏன் முடியாது என்று சொல்லத்தான் இந்தப் பதிவு.
அமெரிக்காவிலும் நகர்புறங்களைத் தாண்டு வெளியே சென்றோமானால், பெரும்பாலும் விவசாய நிலங்களைத் தான் காண முடியும். ஆடு, மாடு, குதிரை மேய்வதைப் பார்க்க முடியும். மினசோட்டா, விஸ்கான்சின் மாகாணங்களில் வசிப்பவர்கள், அதன் எல்லைப்பகுதியில் இருக்கும் ‘Fawn-Doe-Rosa’ என்ற பண்ணைக்குச் சென்றால், விலங்குகளைக் காண்பதோடு மட்டுமில்லாமல், தொட்டு, தடவி, உணவூட்டவும் முடியும்.
1963 ஆம் ஆண்டு டிக் மற்றும் ஜான் ஹன்சன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்தப் பண்ணை, இன்றும் அவர்களது குடும்பத்தாரால் பராமரிக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பம்பிலேண்ட் என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட, பின்னர் டிஸ்னி நிறுவனத்தினர் சண்டைக்கு வர, ஃபான்-டோ-ரோசா என்று பெயர் மாற்றப்பட்டது. இப்படிப் பெயர் மாற்றத்திற்காக, அச்சமயம் ஒரு போட்டி நடத்தியிருக்கிறார்கள். தற்போது இருக்கும் இந்தப் பெயரை முன்மொழிந்த ஜிம் என்பவருக்கு அப்போது ஒரு ஆட்டுக்குட்டியைப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள்.
நுழைவுக்கட்டணமாக ஒன்பதே முக்கால் டாலர்கள் வாங்குகிறார்கள். கூடவே, விலங்குகளுக்குக் கொடுக்க என உணவுக்கு இரண்டரை டாலர்கள் வாங்குகிறார்கள். உணவாக நறுக்கப்பட்ட கேரட், மக்காச்சோளம், பிற தானியங்கள் ஆகியவற்றை ஒரு சிறுவாளியில் போட்டுத் தருகிறார்கள். 17 ஏக்கரில் அமைந்த இந்த இடத்தில் ஆடு, மாடு, மான், குதிரை, கழுதை, முயல், கோழி, வாத்து எனப் பல விலங்குகளும், பறவைகளும் கூண்டில் அடைக்கப்படாமல், வெளிப்புறத்தில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. குழந்தைகள் அதன் அருகில் சென்று உணவூட்டவும், போனி எனப்படும் குட்டி குதிரை மீது அமர்ந்து சவாரி செல்லவும் ஆர்வமாக இருக்கிறார்கள். இவை தவிர, கூண்டில் அடைக்கப்பட்ட காட்டு விலங்குகளும் இங்கே உள்ளன.
விலங்குகள் குறித்த நடைமுறை அறிவும், சுற்றுச்சூழல் மேல் அக்கறையும் மேம்பட, குழந்தைகளை இம்மாதிரியான இடங்களுக்கு அழைத்துச் செல்வது அவசியமாகிறது. சில குழந்தைகளுக்கு, விலங்குகள் மேல் இருக்கும் பயத்தையும் இம்மாதிரியான இடங்கள் விலக்கும். செயிண்ட் க்ராய் ஆற்றின் (St. Croix) கரையோரம் இருக்கும் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு மத்தியில் தான் இந்த இடமும் இருப்பதால், இதற்கெனத் தனியே செல்ல வேண்டியதில்லை. இங்கே பக்கத்தில் போகோ லோகோ என்றொரு மெக்சிகன் உணவகம் உள்ளது. கையோடு வாயாக அதையும் ஒருமுறை முயற்சித்து விடுங்கள்.
மேலும் தகவல்களுக்கு,
https://minnevangelist.com/this-wisconsin-wildlife-park-lets-you-hand-feed-deer/
- சரவணகுமரன்