மினசோட்டா ரயில் சுற்றுலா
உள்ளூர் பயணங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், ரயிலில் பயணம் என்பது அமெரிக்காவில் அரிதான விஷயம். கிட்டத்தட்ட அதே அளவு கட்டணத்திலோ, அல்லது சிறிது அதிகம் கொடுத்தாலோ, விமானப்பயணத்தில் விரைவாக எந்த இடத்திற்குச் சென்றுவிடலாம் என்பதால் வெளியூர் பயணங்களுக்குப் பொதுவாக ரயிலில் செல்ல பொதுமக்கள் விருப்பப்பட மாட்டார்கள். ரயிலில் செல்ல வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தாலொழிய, ரயிலில் செல்வது என்பது நமது திட்டத்தில் இடம் பெறாது.
இதனால் அமெரிக்காவில் வளரும் குழந்தைகளுக்கு ரயில் பயணம் என்பது பரிச்சயமாயிருக்காது. அவ்வப்போது இந்தியா வந்து சென்றிருந்தால், கண்டிப்பாக அவர்களது பயணத்தில் ரயில் இடம் பெற்றிருக்கும். இக்குழந்தைகளுக்கு அமெரிக்காவில் சிறிது தூரம் ரயிலில் சென்று வந்தாலே, பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி ஒரு அனுபவத்தை மினசோட்டாவில் உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க நினைத்தால், நீங்கள் அவர்களை ஆசியாலோவிற்கு அழைத்துச் செல்லலாம்.
ஆசியாலோ (Oscealo) என்பது விஸ்கான்சின் மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம். என்னடா இவன் மினசோட்டாவில் ரயில் பயணம் என்று சொல்லிவிட்டு, விஸ்கான்சின் போகச் சொல்கிறானே என்று நினைக்கிறீர்களா? அது அப்படித் தான். இந்த ரயில் நிலையம் இருப்பது விஸ்கான்சின் என்றாலும், இந்த வழித்தடத்தில் ரயிலை இயக்குவது மினசோட்டா ட்ரான்ஸ்போர்ட்டேசன் மியூசியம் (Minnesota Transportation Museum) என்ற அமைப்பாகும். இவர்கள் மினசோட்டாவில் இருக்கும் பழமையான போக்குவரத்து வழித்தடங்கள், ரயில் வண்டி, பேருந்து போன்றவற்றைப் பாதுகாத்து, பேணி, மக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தி வருகிறார்கள்.
ஆசியாலோவில் இருக்கும் பழமையான ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு மணி நேரத்தில் சென்று வரும் தொலைவிற்குச் சுற்றுலா ரயில் சேவையை இந்த அமைப்பினர் வழங்கி வருகிறார்கள். இந்தப் பாதையும் இயற்கையான சூழலில் செயிண்ட் க்ராய் ஆற்றுக்கரையோரம் ரம்மியமாக அமைந்துள்ளதால், இப்பயணம் குடும்பத்துடன் சென்று வருவதற்கு இனிமையாக இருக்கிறது.
பனி காரணமாகக் குளிர்காலத்தில் இந்த ரயில் ஓடுவதில்லை. மற்றபடி, மே மாதம் முதல் வாரத்தில் இருந்து அக்டோபர் கடைசி வாரம் வரை இங்கு ரயில் ஓடுகிறது. இந்தச் சமயத்தில் வரும் அன்னையர் தினம், தந்தையர் தினம், ஹாலோவீன் ஆகிய தினங்களில் சிறப்பம்சங்களுடன் ரயில் ஓட்டப்படுகிறது. இலையுதில் காலத்தில் இந்தப் பகுதி மேலும் அழகுடன் இருக்குமென்பதால், அச்சமயத்தில் இந்த ரயிலில் பயணப்படப் பெரும்பாலோர் விரும்புகின்றனர். பீட்ஸா ரயில் என்றொரு வகையில் பயணத்தின் போது பீட்ஸா வழங்குகிறார்கள்.
சுற்றுலா பயணம் என்று ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டு வெளியே பார்த்துக்கொண்டு வர தேவையில்லை. ரயில் முழுக்க முன்னே, பின்னே என்று நடந்து சென்று கொண்டிருக்கலாம். ஒவ்வொரு ரயில் பெட்டியும் ஒவ்வொரு வகையில் இருக்கிறது. இஞ்சின் உள்ளே சென்று வர முடியாது என்றாலும், அதன் அருகே நின்றுக்கொண்டு பயணிக்கலாம். அவ்வப்போது அது சைரன் ஒலி எழுப்பும்போது, தலைமயிர் கூச்செரிய, ரயில் வண்டியின் பலமும் பிரமாண்டமும் புலப்படுகிறது.
ரயிலில் பணிபுரிபவர்கள் அன்புடன் உபசரிக்கிறார்கள். கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளிக்கிறார்கள். இவர்களில் பலர் முன்னாள் ரயில்வே பணியாளர்கள். பலர் தன்னார்வலர்களாக இங்குப் பணிபுரிகிறார்கள். ரயிலில் சிப்ஸ், குக்கிஸ் வாங்க ஒரு சிறு கடை இருக்கிறது. கார்டு வாங்குவதில்லை. டாலர்கள் மட்டுமே. நாம் கொண்டு செல்லும் உணவுப்பொருட்களை அனுமதிக்கிறார்கள்.
பொதுவாக, கடல், யானை, ரயில் ஆகியவற்றை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்பார்கள். மினசோட்டாவில் கடல் காண முடியாது. வேண்டுமானால், கடல் போல் காட்சியளிக்கும் சில ஏரிகளைக் காண முடியும். அதே போல், யானையும் அமெரிக்காவில் அரிதே. அந்த வரிசையில் பழமையான ரயிலை இயற்கை சூழலில் காண வேண்டும் என்றால் இங்குச் செல்லலாம். கோடைகாலத்தில் வாரயிறுதியில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று திரும்ப, மினசோட்டாவில் இன்னுமொரு சிறந்த இடமாகும் இது.
மேலும் தகவல்களுக்கு,
https://transportationmuseum.org/train-rides/
- சரவணகுமரன்