175 தமிழ்ப் புத்தகங்கள் வெளியீட்டு விழா – அட்லாண்டாவில் இளம் எழுத்தாளர்கள் சாதனை!
வட அமெரிக்க வரலாற்றிலேயே, எழுத்தாளர் திரு. இராமகிருஷ்ணன் தம் வாழ்த்துரையில் கூறியது போல் தமிழ் கூறும் நல்லுலகின் வரலாற்றிலேயே, முதல் முறையாக அட்லாண்டாவைச் சேர்ந்த கம்மிங் தமிழ்ப் பள்ளியும், Tamilezhudhapadi.org உம் இணைந்து, செப்டம்பர் 12. 2021 அன்று 175 இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.
இந்தப் பயணம், “நான் ஏன் தமிழ் படிக்க வேண்டும்” என்று கேட்ட அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழ்க் குழந்தையிடமிருந்து தொடங்கியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழை நோக்கி அவர்களை வலுக்கட்டாயமாக இழுப்பதைவிட, தமிழை அவர்கள் கையிலேயே கொண்டு போய்ச் சேர்த்தால் என்ன என்று தோன்றியது. கம்மிங் தமிழ்ப் பள்ளிக்கென்று ஒரு சிறார் நூலகம் அமைக்கலாம் என்ற எண்ணம் வலுவாகத் தோன்ற ஆரம்பித்தது.
நூலகம் அமைக்கலாம் என்று தோன்றியவுடன் முதலில் தேட ஆரம்பித்தது சிறுவர் புத்தகங்களைத்தான். தற்காலத்திற்கு ஏற்ப, இன்றைய தலைமுறை அதிகம் அன்றாடம் பார்க்கும் விடயங்களைக் கொண்ட புத்தகங்கள் தமிழில் மிக அரிதாக இருந்தன. அதற்காகத் தமிழ்நாட்டிலுள்ள பல நூலகங்களையும், பல்கலைக்கழகங்களையும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டபோது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திலிருந்து இரு இணையதளங்கள் பற்றிக் கூறினார்கள்.
அவற்றில் ஓர் இணையதளத்தில் புத்தகங்கள் நன்றாக இருந்தன. ஆனால் அதில் தமிழுக்கென்று தனி இடம் இல்லை, அவை ஒரு தொகுப்பாகவும் இல்லை, மற்றும் எழுத்துப் பிழைகளோடு வெளியிடப்பட்டிருந்தன.
எங்கேயும் நினைத்த மாதிரி புத்தகம் கிடைக்கவில்லை. தமிழுக்கென்று ஒரு தளம் அமைக்க முடிவு செய்து ***** .org என்ற நிறுவனத்திடம் அதைச் செய்து தரும்படி கேட்டேன். அவ்வாறு செய்ய இயலாது என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் பார்சி மொழிக்கென்று ஒரு தளம் அந்த நிறுவனம்தான் உருவாக்கிக் கொடுத்திருந்தனர். அவர்கள் செய்து தரவில்லை என்றால் என்ன, நம் தமிழுக்கு நாமே உருவாக்கலாம் என்ற எண்ணம் என்னை உந்தித் தள்ளியது. அப்படி உருவானதுதான் Tamiezhuthapadi.org என்ற இணையதளம். இது தமிழுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. நிகழ்நிலையில் புத்தகத்தை வெளியிடும் செயல்முறையையும், அதற்கான செயலியையும் உருவாக்க ஆறு மாதங்கள் ஆயின.
இந்தச் செயலி மூலம் உருவாகும் ஒவ்வொரு புத்தகமும் பதிப்புரை உரிமத்தின் கீழ் சில விதிவிலக்குகள் கொண்டிருக்கிறது. அதாவது, நான் வெளியிட்ட ஒரு புத்தகத்தை நீங்கள் உங்கள் கற்பனைக்கேற்ற மாதிரி எழுதியும் வெளியிடலாம், வண்ணப் படங்களையும் அவ்வாறு செய்து வெளியிடலாம். Creative Commons, அதாவது ஒருவருடைய படைப்பை copyright என்ற பெயரில் அவர்களே வைத்திராமல் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற கருத்துப்படிவமே அது.
இளம் எழுத்தாளர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர் குழுவுடன் இணைந்து 175 புத்தகங்களயும் சமர்ப்பித்தவுடன், நாங்கள் உடனே இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இதற்கென்று ஒரு தன்னார்வலர்கள் குழு அமைத்து ஒவ்வொரு புத்தகத்தையும் சரி பார்த்துப் பதிவேற்றினோம். அவ்வாறே சிறார்கள் எழுதிய நிகழ்நிலைப் புத்தகங்கள், அச்சேறி வழுவப்பான காகிதங்களில் வண்ணப் புகைப்படங்கள் கொண்ட அழகிய புத்தகங்களாக உருவாயின.
செப்டம்பர் மாதம் 12ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணி அளவில் அனைத்து இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் ஒரே மேடையில் வெளியிட்டோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு அட்லாண்டாவைச் சேர்ந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்துத் தந்ததோடு, குழந்தைகள் எழுதிய புத்தகங்களையும் வெளியிட்டுத் தந்தனர். எழுத்தாளர் திரு. இராமகிருஷ்ணன் ஐயா அவர்கள் காணொளி மூலம் எங்கள் இளம் எழுத்தாளர்களைப் பாராட்டியது அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும். ஜியார்ஜியாவின் உலக மொழிகள் மற்றும் உலகளாவிய வேலை முயற்சிகளுக்கான திட்ட நிபுணர் திரு. பேட்ரிக் வாலஸ் அவர்களும் குழந்தைகளைப் பாராட்டி ஊக்குவித்தார்.
மக்கள்தம் போக்கினில் மாறுதல் வருந்தொறும்
தக்கபற் புதுப்புதுப் பனுவல்கள் எழுந்ததொறும்
செம்மையில் திரியாத் தீந்தமிழ் தனிலவை
அமைதலால் என்றும்வாழ் ஆக்கம் உடைத்தென
அறிவோர் வியப்புடன் ஒருங்கே போற்றிட
அருந்தமிழ் காலத்தை வென்றுதான் விளங்குதே!!
என்ற பாடலுக்கேற்ப, இந்தச் சாதனை வெற்றிகரமாக அரங்கேறியது. இந்த வெற்றி மிக்க மகிழ்ச்சியளித்தாலும் நாங்கள் எங்கள் பயணத்தின் அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டோம்.
குழந்தைகளின், இல்லை, இல்லை, இளம் எழுத்தாளர்களின் படைப்புக்களை, கீழே உள்ள இணையதளத்தின் இணைப்பில் சென்று அவசியம் படியுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில் இந்தச் சாதனையைப் படைத்த, படைக்க உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை இப் பத்திரிக்கையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
தீபா அகிலன்
முதல்வர், கம்மிங் தமிழ்ப்பள்ளி, அட்லாண்டா, ஜியார்ஜியா