லக்கிம்பூர் கெரி வன்முறை
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் அக்டோபர் 3ஆம் தேதி, நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அகிம்சை, அறவழிப் போராட்டம் போன்றவற்றை உலகுக்கு எடுத்துரைத்த மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தை முன் தினம் கொண்டாடி விட்டு, மறுதினம் இத்தகைய வன்முறை அரங்கேறியது தேசத்துக்குப் பெருத்தத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது. உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பதில் சொல்ல நாடு கடமைப்பட்டுள்ளது.
Infographic vector created by freepik – www.freepik.com
இந்தியாவில், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் விவாதங்கள் ஏதுமின்றி, இரு அவைகளிலும் பெரும்பான்மையினர் ஆதரவோடு பரிந்துரைக்கப்பட்ட மூன்று விவசாயத் திருத்தங்கள(வேளாண் சட்டங்கள் 2020) மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்ட நாள் முதல் (செப்டம்பர் 27, 2020) இவற்றுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் வலுப்பெற்று தொடர்ந்து வருகிறது. அமைதியான முறையில் ஓராண்டுக்கும் மேலாக நடைபெறும் இப்போராட்டத்தின் தொடர்பாக, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க, அவ்வப்போது சாலை, ரயில் மறியல்கள், பேரணிகள், எதிர்ப்புக் கூட்டங்களும் நடந்ததுண்டு. இத்தருணங்களில் ஆங்காங்கே வெடித்த வன்முறை சம்பவங்களால் போராட்டக்காரர்கள், பொது மக்கள், அரசு என அனைத்து தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் வருத்தத்துக்குரியவை. ஆனால் அக்டோபர் 3ஆம் நாள், லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறை, கொடூரத்தின் உச்சம்.
உத்திரப்பிரதேசத்தின் கெரி, மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஜய் மிஸ்ரா தேனி. இவரது சொந்த ஊர், இத்தொகுதியிலிருக்கும் பான்பீர்பூர் கிராமம். அஜய் மிஸ்ரா மத்திய அரசின் உள்துறை இணை அமைச்சர். அக்டோபர் 3ஆம் நாள் கெரி தொகுதியிலிருக்கும் லக்கிம்பூரில் வளர்ச்சித் திட்டங்களை அமைச்சர் தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் உத்திரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியாவும் கலந்துகொள்ளவிருந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம், திக்குனியா கிராமத்தில் இறங்கி, லக்கிம்பூர் செல்வதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்குக் கருப்புக் கொடியுடன் கண்டனத்தைத் தெரிவிக்க முனைந்த விவசாயிகள், திக்குனியாவில் கூடினர். இதனையறிந்து, ஹெலிகாப்டர் பயணத்தைத் தவிர்த்து சாலை மார்க்கமாகவே துணை முதல்வரும், மத்திய இணை அமைச்சரும் செல்வதாகப் பயணத்திட்டம் மாற்றப்பட்டது. இதை எதிர்பாராத விவசாயிகள், திக்குனியா பான்பீர்பூர் சாலையை மறித்து தங்கள் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்தினர். இந்தச் சமயத்தில் கூட்டத்தில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் வாகனங்கள் புகுந்ததில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்தக் கலவரத்தில் அமைச்சரின் ஆதரவாளர்கள் நாலு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் அங்கிருந்த ராமன் காஷ்யப் என்ற செய்தியாளரும் உயிரிழந்துள்ளார். ஆசிஷ் மிஸ்ராவின் வாகனம் மோதியதால் இறந்தார் என்றொரு சாராரும், விவசாயிகள் அதற்கு பின்னர் நடத்திய கலவரத்தில் இறந்தார் என மற்றொரு சாராரும் சொல்லி வருகின்றனர்.
மேற்சொன்ன சம்பவத்தை ஒரு விபத்து என்று கடந்து போய்விட முடியாது. இதற்கு காரணம் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, லக்கிம்பூர் கெரியில் செப்டம்பர் 25ஆம் நாள் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் பொழுது விடுத்த எச்சரிக்கை.
“என்னை எதிர்கொள்ளுங்கள். உங்களை (விவசாயிகளை) அடக்குவதற்கு எனக்கு இரண்டு நிமிடங்கள் கூட பிடிக்காது. நான் மத்திய அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ. மட்டும் கிடையாது. நான் அரசியலுக்கு வருமுன்னர், என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். நான் சவால்களை கண்டு அஞ்சி ஓடியதில்லை. நான் உங்களை விரட்டியடிக்கும் சவாலை ஏற்றுக் கொண்டு என் பலத்தைக் காட்டினால், நீங்கள் பாலியாவை (விவசாயிகள் குழுமியிருந்த இடம்) மட்டுமில்லை, லக்கிம்பூரையே விட்டு ஓட வேண்டியிருக்கும்”
இணை அமைச்சர், அஜய் மிஸ்ராவின் இந்தப் பேச்சு தான் மொத்த நிகழ்வுக்கும் தூண்டுகோலாக அமைந்தது. இவரது பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கவே விவசாயிகள் கறுப்புகொடி காட்ட குழுமினர். அதைத் தொடர்ந்து, அமைச்சரின் மகனின் வாகனங்கள் விவசாயிகள் மீது ஏறி அவர்கள் கொல்லப்பட்டது, சட்டத்தின் பார்வையில், அமைச்சரின் திட்டமிட்ட சதியாகவே பார்க்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கொலையில் அஜய் மிஸ்ரா சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று ஒரு வழக்குத் தொடரப்பட்டது. 2004ஆம் ஆண்டு முதல் நடந்த வழக்கில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவிருந்த தீர்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவர் குற்றவாளியில்லை என்றால் தீர்ப்பு வருவதை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என்பதிலிருந்தே அஜய் மிஸ்ரா ‘நான் அரசியலுக்கு வருமுன்னர், என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும்’ என்று சொன்னதன் உண்மையான அர்த்தம் பாமரனுக்கும் புரியும்.
இந்தத் துர்சம்பவம் நடந்து ஒன்பது நபர்கள் உயிரிழந்ததும், பலர் காயமுற்ற கொடூரங்கள் ஒரு புறமிருக்க, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் அதிக வேதனை தரக்கூடியவை. ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள், மத்திய அமைச்சரவை இயங்கும் நகரமான புது டில்லியில் போராடி வந்தாலும் அதைப் பற்றி கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல், “மற்ற பணிகளை” செய்து வரும் அரசாங்கத்துக்கு நேரமில்லையா அல்லது அக்கறையில்லையா என்பது புதிராகவேயுள்ளது. விவசாயிகள் போராட்டம் குறித்து மற்ற நாட்டு தலைவர்கள், இயக்கங்கள் கருத்து தெரிவித்த போது ‘இது எங்கள் உள்நாட்டு பிரச்சனை, நீங்கள் இதில் தலையிடத் தேவையில்லை’ என்று தேசியப் பற்றாளர்கள் கடுமை காட்டினார்கள். இந்தப் பற்றாளர்கள் தொடங்கி, நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர், உத்திரப்பிரதேச முதல்வர் உட்பட அனைவரும் லக்கிம்பூர் கெரி சம்பவம் குறித்து வாய்திறவாமல் மெளனமாக இருப்பது அதிர்ச்சியாகவுள்ளது. பிரதமருக்கு, தனது அமைச்சர் சம்பந்தப்பட்டிருப்பதால் கண்டனம் தெரிவிக்க முடியாதது தர்மசங்கடம் தான்; இச்சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் லக்னெளவில், (லக்கிம்பூர் கெரியிலிருந்து 80 மைல்கள்) ‘ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்’ (சுதந்திரத்தின் இனிய விழா) இல் கலந்து கொண்டு உத்திரப் பிரதேச அரசின் சாதனைகள் குறித்து பேசும்பொழுது அமங்கலமாக கெரி கொடூர சம்பவத்தைப் பற்றி பேசவேண்டாம் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். ஆனால், ஐந்து நாட்களாகியும் இதைப் பற்றி அவர் தனது டிவிட்டரில் கூட அனுதாபமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை என்பது விவசாயிகளை மொத்தமாக உதாசீனப்படுத்துவது போலுள்ளது.
அஜய் மிஸ்ரா, மோதியது தனது மகனின் வாகனம் தான் ஆனால் அவன் அந்த இடத்திலேயே இல்லை என்றும், அவன் சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததை நிருபித்தால் பதவி விலகத் தயார் என்றும் சவால் விட்டிருக்கிறார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அஜய் மிஸ்ரா வண்டியில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச போலிஸ் அவரைக் கைது செய்யத் தேடி வருவதாகச் சொல்கிறது. ஆனால் அவர் தேசிய தொலைகாட்சிகளில் பேட்டி கொடுத்துவருகிறார். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தைச் சந்திக்க லக்கிம்பூர் செல்ல முற்பட்ட எதிர்கட்சி தலைவர், அண்டை மாநில முதலமைச்சர்கள், இன்னும் பிற கட்சிப் பிரமுகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு 2 நாட்களுக்கும் மேல் சிறையிலடைக்கப்பட்டார்.
ஆளும் கட்சி ஆதரவாளர்களும், ஊடகங்கள் சிலவும், விவசாயிகள் ஆசிஷ் மிஸ்ராவின் வாகனம் மீது கல்லெறிந்ததால், வாகனங்கள் நிலை தடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகச் சொல்லி வந்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து, அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்த விவசாயிகள் மீது, அவர்கள் பின்னாலிருந்து வந்த வாகனங்கள் மோதிய கானொளித் துண்டு வெளியானது. அதில் எதோ ஒரு வாகனம் சைரன் ஒலியுடன் வருவதைப் பார்த்துவிட்டு, சைரன் ஓசை கேட்ட பின்பும் விவசாயிகள் வழி விடாமல் சென்றதால், வாகனங்கள் அவர்கள் மீது ஏறியது என்று மனசாட்சியின்றி சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். இன்னொரு புறம், சம்பவ இடத்தில் செய்தியாளர் ராமன் கஷ்யபை விவசாயிகள் தடியால் அடித்துக் கொன்றதாக ஒரு கதையை உருவாக்கி, ராமனின் குடும்பத்தினரை அவர் உடலில் தடியடி காயங்களைக் கண்டதாகச் சொல்ல வற்புறுத்தியுள்ளனர். எதிர்க்கட்சியினர் இந்த நிகழ்வை அரசியலாக்க முனைகின்றனர் என்ற வாதத்தையும் இவர்கள் முன்வைக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் உத்திரப் பிரதேசத்துக்கு ‘அரசியல் சுற்றுப்பயணம்’ செல்கிறார்கள் என்று கிண்டலடிக்கிறது ஆளும் கட்சியும், அதன் ஆதரவு ஊடகங்களும். ஆளும் கட்சி ஊடகங்கள் இந்தக் கொடூரக் கொலைச் சம்பவத்தைப் பற்றி பேசாமல், நடிகர் ஒருவரின் மகன் போதைபொருள் வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டதைப் பேசி வருகிறார்கள். ‘என் மகன் இன்னும் இரண்டு நாட்களில் ஆஜராவான்’ என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டு உ.பி. போலிஸ் காத்திருப்பதைப் பற்றி எந்த தேசியப் பத்திரிக்கையும், ஊடகமும் எழுதவில்லை, பேசவில்லை. இந்திய ஜனநாயகத்தின் நிலை இதுதான்.
விவசாயச் சங்கப் பிரதிநிதியான ராகேஷ் திகாயத், உத்திரப் பிரதேச அரசுடன் பேசி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 45 லட்ச ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் பெற்றுத் தர ஏற்பாடு செய்துள்ளார். மேலும், அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டுமெனவும், ஆசிஷ் மிஸ்ராவைக் கைது செய்ய வேண்டும் அவர் வைத்த கோரிக்கைகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆசிஷ் மிஸ்ராவை இரண்டொரு நாட்களில் கைது செய்துவிடுவோம் என்று உத்திரப்பிரதேச போலிஸ் சொல்லிவந்தாலும், அரசு அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எந்த அரசும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து, வழக்கைக் கையிலெடுத்துள்ளதுடன் விசாரணையை துரிதப்படுத்தும்படி உத்தரப் பிரதேச அரசை நிர்பந்தித்துள்ளது.
மற்ற போராட்டங்கள் எதோவொரு வன்முறைக்குப் பிறகு முடிவுக்கு வருவது போல, இத்தகைய வன்முறைகள் நடந்த பிறகு விவசாயிகள் போராட்டமும் முடிவுக்கு வந்துவிடும் என்ற ஹேஷ்யத்துக்கு மாறாக விவசாயிகளின் போராட்டம் மேலும் வலுபெற்று வருவதைக் காண முடிகிறது. இந்தக் கொந்தளிப்பு அடங்குவதற்குள் ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தில், விவசாயிகள் பேரணியில் இன்னொரு அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதியதாகச் சொல்லப்படுகிறது.
பொதுவாக அரசாங்கங்கள் விவசாயிகளை அரவணைத்து செல்வது வழக்கம்; அது அவசியமானதும் கூட. கிராமங்கள் முற்றிலும் வளர்ச்சியடையாத நிலையில், சிறு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்வது முக்கியம். நேரடி விவசாயிகள் மட்டுமல்லாமல், வேளாண்துறையை நம்பியிருக்கும் தொழிலாளர்க் குடும்பங்கள் அதிகம். இந்தியாவில் ஏறத்தாழ 50% சதவிகித தொழிலாளர்கள் வேளாண்துறை சம்பந்தப்பட்டுள்ளார்கள். நாட்டின் மொத்த வருமானத்தில் சுமார் 17% வேளாண்மை மற்றும் மீன்வளத் துறை மூலம் பெறப்படுகிறது. உணவு உற்பத்தியில் தன்னிறைவடைய ‘பசுமை புரட்சி’, ‘வெண்மை புரட்சி’ போன்ற பல திட்டங்கள், பல தசாப்தங்கள் தேவைப்பட்டன. அவற்றை எளிதில் மறந்து விடக் கூடாது.
கடந்து வந்த பாதையை மறந்துவிட்டு, இன்றைய அரசியல்வாதிகள் எதேச்சதிகாரத் தொணியில் பேசி வருவது கண்டிக்கப்பட வேண்டும். இந்தாண்டு துவக்கத்தில் ஹரியானாவின் வேளாண்துறை அமைச்சர் ஜெயப்பிரகாஷ் தலால், புதுடில்லியில் போலீசார் தக்குதலில் 200 விவசாயிகள் இறந்தபோது, ‘இவர்கள் வீட்டிலிருந்தால் செத்திருக்கமாட்டார்களா என்ன?’ என்று கேட்டது நினைவிருக்கலாம். அதே மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், லக்கிம்பூர் வன்முறை நடந்த அதே நாளில், “கையில் கம்புகளுடன் 1000 தன்னார்வத் தொண்டர்கள் முன் வாருங்கள்; இந்த விவசாயப் போராளிகளுக்கு நாம் ஒரு பாடம் புகட்டவேண்டும். நான் பார்த்துக் கொள்கிறேன். இரண்டு மூன்று மாதங்கள் நீங்கள் ஜெயிலுக்குச் செல்ல நேர்ந்தால், பெரிய தலைவராகிவிடுவீர்கள். நீங்கள் பிணையில் வெளியே வர ஏற்பாடு செய்கிறேன்” என்று விஷம் கக்கினார். இவ்வித தனிமனித துவேஷங்கள், கோபதாபங்கள் ஜனநாயகத்தின் அவமானங்கள். பொறுப்பேற்ற நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டங்களுக்கு உட்பட சத்தியம் செய்து கொடுத்த இவர்கள் அதை படித்துப் புரிந்துகொள்வது தேச நலனுக்கு பயனளிக்கும்.
தேசப்பிதா காந்திஜி “இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களைப் பொறுத்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் ஆன்மா விவசாயம்” என்று சொன்னதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஒராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் உயிர்ச்சேதங்களுக்கு இடமளிக்காமல், அரசும், விவசாயச் சங்கங்களும், தேசநலன் கருதி, சுய அகந்தையை விடுத்து பேச்சு வார்த்தை மூலம் தீர்வுக் காண துரிதமாக முயலவேண்டும். ஹக்கிம்பூர் கெரி சம்பவம், இதனை நோக்கி இருதரப்பினரையும் செலுத்துமானால், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையும்.
-ஆசிரியர்-