\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

புதிய வேளாண் சட்டத் திருத்தங்கள் 2020

வேளாண் துறை தொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு, செப்டம்பர் 20 மற்றும் 22ஆம் தேதிகளில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குடியரசு தலைவர் இந்த மசோதாக்களுக்கு 2020 ஆம் ஆண்டு, செப்டம்பர் 27ஆம் தேதி ஒப்புதல் அளித்த பின்னர் அவை சட்ட வடிவத்தைப் பெற்றன. அந்த சட்டங்களின் பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

  1. விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020
    இதன் படி விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கும் பொருட்களுக்குப் பெருநிறுவனங்களுடன் முன்னேறே விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். 

     

    சந்தை கொள்முதல் ஏற்றத் தாழ்வுகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்பது அரசின் நோக்கமாக இருந்தாலும், சொந்த நிலத்தில் தாங்கள் ஒப்பந்தக் (காண்டிராக்ட்) கூலிகளாக மாற்றப்படுவதாக விவசாயிகள் கருதுகிறார்கள். இயற்கையின் கொடையை எதிர்பார்த்து மட்டுமே இயங்கும் பலருக்கு இது பாதகமாகக் கூடும்; ஏற்கனவே கரும்புச் சாகுபடி இந்த முறையில் கொள்முதல் செய்யப்படுவதாகவும், அந்த கொள்முதல் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக உரியத் தொகையை செலுத்தாமல் இருப்பதால் தொடரப்பட்ட வழக்குகள் ஆயிரக்கணக்கில் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டும் விவசாயிகள், இந்தச் சிக்கல்களின் நீட்சியாக புதிய திருத்தம் அமையுமென்று அஞ்சுகிறார்கள். அரசாங்கத்தின் மண்டிகள் அகற்றப்படும் பட்சத்தில் பெரு நிறுவனங்கள் விவசாயிகள் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்பதும் அவர்களது கவலையாகவுள்ளன.

  2. வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020

    விவசாயிகள் எல்லை வரம்பின்றி நாட்டின் எந்த மூலையிலிருக்கும் வியாபாரிக்கும் தங்கள் விளைப்பொருட்களை விற்றுக் கொள்ளலாம்.  

    இந்தத் திருத்தம் மூலம் தரகர்களின் இடையூறுகள், உள்ளூர் சந்தை நிலவரப் பாதிப்புகள் அகற்றப்படும் என்று அரசாங்கம் கூறினாலும், தற்போது அரசுகள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையைக் களைவதால் தனியார் பெரு நிறுவனங்கள் அடிமட்ட விலைக்கே கொள்முதல் செய்ய முற்படுவர்; தற்போது பொது விநியோக ரேஷன் கடைகளில் தரப்படும் பொருட்களை மாநில அரசுகள் விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலை (MSP) விதிப்படி வாங்குவது நிறுத்தப்படும் என்பது விவசாயிகளின் அச்சம். அதுமட்டுமன்றி சிறிய விவசாயிகள் தங்கள் உற்பத்தியை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பது சாத்தியமற்றது என்பதும் இவர்களது வாதம். விவசாயிகளின் இந்த இயலாமைகளை தனியார் பெருநிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர் என்கிறார்கள் விவசாயச் சங்கங்கள். 

     

  3. அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020
    வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள் உள்ளிட்டவை  அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்தே நீக்கப்படும். இந்தப் பொருள்களை இருப்பு வைத்துக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என்கிறது புதிய சட்டம்.

    பொதுமக்களின் உணவுத் தேவைக்கு அத்தியாவசியமான பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது, அவற்றைப் பதுக்கிவைப்பதற்கோ அல்லது ஏற்றுமதி செய்யவோ கூடாது என்பதே ‘அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்’. இந்தச் சட்டத்திலிருந்து மேற்சொன்ன பொருட்களுக்கு விலக்கு அளிப்பதால், தனியார் பெருநிறுவனங்கள் அவற்றை கொள்முதல் செய்து பதப்படுத்தி, பதுக்கி வைத்துக்கொள்ள இயலும். செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்த பெருநிறுவனங்கள் முயலும். இதனால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை மறுக்கப்படுவதோடு, பொது மக்களும் கடுமையான விலையேற்றத்தை எதிர்கொள்வார்கள். பெரு நிறுவனங்கள் இதுவரை மறைமுகமாக, பயந்து பயந்து செய்துவந்த பதுக்கல் மற்றும் ஏற்றுமதி மோசடிகளை, வெளிப்படையாகச் செய்வதற்கு இந்தப் புதிய சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது என்பது விவசாயச் சங்கங்களின் குற்றச்சாட்டு.

    ஏபிஎம்சி (Agricultural Produce Marketing Committee) என்பது மாநில அளவில் விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்காக உருவாக்கப்பட்ட குழுக்கள். உள்ளூர் விவசாயிகள் இவற்றில் சேர்வதன் மூலம், தங்களது விளைப்பொருட்களை, கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு ஏல முறையில்  வர்த்தகம் செய்யலாம். விவசாயிகளுக்கு நியாயமானதொரு விலையை இந்தக் கமிட்டிகள் உருவாக்கித் தருகின்றன. அதே போல விவசாயிகளுக்குத் தேவையான கடனுதவிகள், வேளாண்மை குறித்த தகவல் பரிமாற்றக் கூட்டங்கள், அரசின் திட்டங்களை விளக்கும் கருத்தரங்கங்கள், குடும்ப நல முகாம்கள் போன்றவற்றையும் ஏபிஎம்சி உருவாக்கித் தருகின்றன.

    புதிய வேளாண்மை சட்டங்கள், அரசாங்கத்துக்கும், விவசாயிகளுக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தித் தரும் ஏபிஎம் கமிட்டிகளை செயலிழக்கச் செய்து தனியார் பெருநிறுவனங்களுக்கு சந்தையைத் திறந்து விட்டு, விவசாயிகளை ஒப்பந்தக் கோட்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும்; சந்தையில் போட்டி என்பதே இருக்காது என்கிறார்கள் வேளாண்மை குறித்து ஆய்வு செய்துவரும் நிபுனர்கள். 

    ஏற்கனவே பீஹாரில் ஏபிஎம்சி முறை ஒழிக்கப்பட்டு, விவசாயப் பொருட்களை குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து அரசு கொள்முதல் செய்யும் முறை நிறுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் சோளத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,200 ஆக இருந்த விலை, தனியார் வசம் போனதால் 2020 ஆம் ஆண்டில், ரூ. 1,300 ஆகச் சரிந்தது. ஆனால் நுகர்வோருக்கு இந்த விலை குறைப்பு கொண்டு சேர்க்கப்படவில்லை. இந்த விலைமாற்றம், தனியார் நிறுவனங்களுக்கு லாபமாகப் போய்ச் சேர்ந்தது தான் நிதர்சனம்.

    இவை தவிர விவசாயிகளுக்கும், கொள்முதல் நிறுவனங்களுக்கும் ஏற்படும் சிக்கல்களை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும், அரசு இதில் தலையிடாது எனும் திருத்தம் அரசாங்கம் விவசாயிகளை மொத்தமாகக் கைவிட்டுவிட்டது என்பதன் அறிகுறி என்பதால் விவசாயிகள் இந்தத் திருத்தங்களை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். 

    ‘இந்தச் சட்டங்களை அகற்றுவது இயலாத காரியம்; இவற்றில் எதாவது திருத்தங்கள் தேவையென்றால் பேசலாம்’ என்று அரசாங்கமும், ‘இந்தச் சட்டங்களை அகற்றுவது மட்டுமே ஒரே தீர்வு; இதைத் தவிர பேச ஒன்றுமில்லை என்று விவசாயச் சங்கங்களும்’ முடிவெடுத்த நிலையில் சுமூகப் பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடக்கத்திலேயே தோல்வியடைந்தன. 

    சம்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் ஆல் இந்தியா கிசான் சங்கர்ஷ் அமைப்புகளின் கீழிருக்கும் பல விவசாயச் சங்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒருங்கிணைந்து இந்தச் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பிருந்தே, அதாவது ஆகஸ்ட் 2020 முதல், எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்கள்.  நாட்டின் தலைநகரில் தொடங்கப்பட்ட போராட்டத்தை பிரதமர், உள்துறை, விவசாயத் துறை அமைச்சகம் ஆகியவை அலட்சியப்படுத்தி வந்ததால், அமைதி வழியில் போராடி வந்த விவசாயச் சங்கங்கள், இவர்களின் கவனத்தை ஈர்க்க அவ்வப்போது சாலை மறியல், ரயில் மறியல், முற்றுகை போராட்டங்கள் என பல உத்திகளைக் கடை பிடித்தனர். குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற அரசு விழாக்களில் சில அசம்பாவிதங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்தச் சட்டங்களை அடுத்த பதினெட்டு மாதத்துக்குச் செயல்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறோம் என்ற அரசின் இடைக்காலத் தீர்வை விவசாயச் சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. 

    எத்தனை வருடங்கள் ஆனாலும், இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை, போராட்டக் களத்தை விட்டு அகல்வதில்லை என்ற உறுதியுடன் இந்த விவசாயிகள் குடும்பங்களுடன், தங்களுக்கு தேவையான உணவு, உறைவிடங்களை அமைத்துக் கொண்டு போராடி வருகிறார்கள். இவர்களுடன் இணைந்து, ஆதரவு தெரிவிக்க நாட்டின் இதரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் திரண்டு வருவதைத் தடுக்க சாலைகளைத் துண்டிப்பது, தண்ணீர் தட்டுப்பாட்டை உருவாக்குவது என பல முயற்சிகளை மேற்கொண்டு இந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்த முனைந்தது. 

    அங்குள்ளவர்கள் உண்மையில் விவசாயிகள் அல்ல; அவர்கள் அனைவரும் இடைத்தரகர்கள்; எதிர்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் இயங்குகின்றனர் ; நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த அந்நிய, உள்நாட்டு தீவிரவாத சக்திகள் விவசாயிகள் என்ற போர்வையில் குழுமியுள்ளனர் என்று பல கருத்துகளை ஊடகங்களில் அமைச்சர்கள் தெரிவித்து வந்தார்கள். 2021 ஆம் ஆண்டு குடியரசுத் தினத்தன்று பல லட்சம் விவசாயிகள் ஒன்று திரண்டு பேரணிகளை நடத்தினர். இந்தச் சங்கங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றினர் என்று பொது ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் பலர் உயிரை இழக்க நேரிட்டது. நாடெங்கும் கோவிட் பெருந்தொற்று அச்சம் பற்றிக்கொண்ட போது கூட, விவசாயிகள் கலைந்து போகவில்லை. ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் கோவிட்டை நோக்கிச் சென்றபோதும், விவசாயிகள் திடமான மன உறுதியுடன் அங்கேயே தங்கி போராடிவந்தார்கள்; தொடர்ந்து போராடியும் வருகிறார்கள்.

    நாட்டில் இதற்கு முன்னர் அரசியல், மதம் சார்பாகப் பல போராட்டங்கள் நடந்துள்ளன; கட்சி சார்பின்றி பொதுமக்கள் முன்னெடுத்த ஜல்லிக்கட்டு போராட்டம் அண்மைக் காலங்களில் மிகப் பிரசித்தி பெற்றது. ஆனால் மனித குலத்துக்கு உணவளிக்கும் விவசாயிகளின் போராட்டம் குறித்த விழிப்புணர்வு அனைத்து சாரார்க்கும் போய்ச் சேரவில்லை என்பதை அரசு சாதகமாகப் பயன்படுத்தி வருவது வருத்தத்தையளிக்கிறது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களான சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாக மன்றம், ஊடகம் அனைத்தும் இவ்விஷயத்தில் அலட்சியப் போக்கைக் காட்டிவருவதும், விவசாயிகளின் கோரிக்கைகளைப் புறக்கணிப்பதும் பெரும் ஆபத்தில் முடியலாம்.

  • ரவிக்குமார் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad