\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நூறுரூபாய் தாள்

Filed in கதை, வார வெளியீடு by on October 13, 2021 0 Comments

இன்னைக்கு சண்டே. இருந்த ஆயிரம் ரூபாயும் காலியாகிடுச்சு. கையில ஒரு பைசா கூட இல்லை. திடீர்ன்னு சொந்தக்காரனுங்க எவனாவது வந்துட்டாங்கன்னா, அவ்வளவு தான் என்னோட நிலைமை. உடனே என்னோட பொண்டாட்டி போய் கறி எடுத்துட்டு வாங்கன்னு சொல்லிப்புடுவா… காசு இல்லன்னு சொன்னேன்; என்னை தூக்கிப் போட்டு மிதிச்சுடுவா… அப்புறம் இந்த பொழப்பு பொழைக்கிறதுக்குச் சாகலாம் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம்  திட்டுவா

அடேய்சொந்தக்காரனுங்களாதயவு செய்து எவனும் வீட்டுப்பக்கம் வந்துறாதீங்கடாயாரும் வரதுக்கு வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கிறேன். கடவுளே… இந்த ஒரு பொழுதை எப்படியாவது ஓட்டிட்டா போதும். நாளைக்குக் கடை திறந்திடுவேன். எப்படியும் சமாளிச்சிக்கலாம்.  

சும்மா நடந்து கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாமா… வேண்டாம். கையில காசு இல்லாம எங்கேயும் போகக்கூடாது. கம்முன்னு டிவியைப் பாத்துக்கிட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியது தான்.” என்று உள்ளுக்குள் குமுறிக் கொண்டு, பாக்கெட்டிலிருந்த சிகரெட் பெட்டியை எடுத்தான். 

“ம்ம்ம். இதுவும் காலி்யா… ஒன்னு தான் இருக்குதா…” என்று அந்தப் பெட்டியில் இருந்த ஒரே ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். கடைசி சிகரெட் என்பதால் மிகவும் ரசித்தபடியே புகைத்தான். காற்றில் புகை மெதுவாக கலந்து கொண்டிருந்தது.  அப்போது  அவனுடைய மகள் அகல்யா, வேகமாக ஓடி வந்தாள்.  

அப்பாஎனக்கு ஐஸ்கிரீம் வேணும்.” என்று  மடியில்  எகிறி  உட்கார்ந்தாள் .

நாளைக்கு வாங்கிடலாம் கண்ணா…” என்றான்.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு இப்பவே வேணும்.” என்று அடம்பிடித்தாள்.

அதான். சொல்றேனில்ல. நாளைக்கு வாங்கிக்கலாமென்று.” என்று அதட்டினான்.

இல்லப்பாநித்யாவுக்கு அவங்க அப்பா ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்திருக்கிறாரு. எனக்கும்  வேணும்.” என்றாள் அகல்யா.

உடனே ஊதிக் கொண்டிருந்த சிகரெட்டைப் போட்டு மிதித்துவிட்டு, அகல்யாவைக் கூட்டிக்கிட்டு வெளியே வந்தான். 

அப்போது அந்த பக்கத்து வீட்டு பாப்பா  ஒய்யாரமாக  ஐஸ்கிரீமை  நக்கிக் கொண்டிருந்தது. அய்யனாருக்குக் கோபம் தலைக்கேறியது

எமன் எந்த ரூபத்துல வருது பாரு.” என்று அந்தக் குழந்தையைப் பார்த்து பல்லைக் கடித்தான். அது பயந்தபடியே தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தது.

திரும்ப வீட்டிற்குள் வந்த அய்யனார், வீட்டிலுள்ள எல்லா  பொம்மைகளையும் எடுத்துப் போட்டான். எதையும் அகல்யா தொடவில்லை. ஐஸ்கிரீம் தான் வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தாள்

ஒரு கட்டத்தில் அய்யனார், “என் கண்ணு இல்ல. என் தங்கமில்லைஎன்று கொஞ்சினான். ஒன்றும் வேலைக்காகவில்லை.  

சரி. என்னுடைய குட்டிமா தானே. இங்க பாருடாடாடி. என்னைக்காவது நீ கேட்டு இல்லன்னு சொல்லியிருக்கிறேனா…” 

அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு இப்பவே ஐஸ்கிரீம் வேணும்இல்லன்னா நான் எதையம் சாப்பிட மாட்டேன்.” என்று ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

உடனே விசனத்தில் நெடிய பெருமூச்சு விட்டான். பிறகு அகல்யாவின் அருகில் அமர்ந்து,

குட்டிமாஉன்கிட்டே சொல்றதுக்கு என்னடாஎன்கிட்டே ஒரு ரூபா கூட இல்ல. நாளைக்கு கடை திறந்திடுவோம். உனக்கு ஒரு ஐஸ்கிரீம் இல்ல. பத்து வாங்கித் தருகிறேன்.என்ற போது அவனுடைய கண்கள் கொஞ்சம் கலங்கின.

என்னப்பாஇதுக்கு போய் அழுவுற. நான் நூறு ரூபாய் வச்சிருக்கிறேன்.” என்றாள்  அகல்யா.

என்ன உளர்ற. நானே ஒரு ரூபா கூட இல்லன்னு நொந்து போய் உக்கார்ந்திருக்கிறேன். நீ நூறு ரூபாய் வச்சிருக்கிறியாபொய் சொல்லாதடா…”

இல்லப்பாநிஜமாகத்தான் சொல்கிறேன். நீ கொடுத்த நூறு ருபாயை நான் பத்திரமா வச்சிருக்கிறேன்.”

நான் கொடுத்தேனா…”

“ஆமாப்பா… நான் எடுத்துக்கிட்டு வர்றேன். ஆனால் அந்த காசுல நீ எனக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கித் தரணும். புரியுதா அப்பா…” என்று தந்தைக்கே உத்தரவிட்டாள்.

கண்டிப்பாக வாங்கித்தர்றேன். நீ போய் எடுத்துட்டு வா.” 

நீ இங்கேயே இரு. எதற்கும் கண்ணை மூடிக்கோ… உன்னையெல்லாம் நம்ம முடியாது,”  என்று அகல்யாவே ஒரு துண்டை எடுத்து அய்யனார் கண்ணைக் கட்டினாள். அவிழ்க்கக் கூடிய கட்டு தான் என்றாலும் போட்டிருப்பது பாச முடிச்சு. அதனால் அவனால் அவிழ்க்க முடியவில்லை. 

ஒரு சில நிமிடங்கள் கழித்து அந்த நூறு ரூபாய் தாளை எடுத்துக்கொண்டு  வந்தாள். கண்கட்டை அவிழ்த்துவிட்டாள்.

அந்த நூறுரூபாய்த் தாளைக் கண்டதும் அய்யனார் பெருமகிழ்ச்சி அடைந்தான். இந்த உலகத்தில மனுசனுக்குப் பணத்தை விட சந்தோசம் தருவது எதுஒரு மனுசன் பணத்தை வச்சிக்கிட்டு கூட வருத்தப்படலாம். ஆனால் பணமில்லாமல் இந்த உலகத்தில் யாராலும் சந்தோசமாக இருக்க முடியாது

கடைக்குப் போய், ஒரு தம் அடிச்சிட்டு, அப்படியே ஒரு டீயை குடிச்சிட்டு, அகல்யாவுக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக்கி்ட்டு வரலாம். மீதி காசை அவளிடமே கொடுத்திடலாம்.என்று மனசுக்குள் நினைச்சிக்கிட்டே, அந்த  தாளை  வாங்கிப் பார்த்தான்

அதைப் பார்த்ததும் அவனுடைய தலையில் இடி இறங்கியது. பல நாட்களாக கிடப்பில் இருந்ததால் அந்த நூறுரூபாய் தாள் மிகவும் சேதாரமடைந்திருந்தது. மடிக்கும் இடத்தில் இருபுறமும் கொஞ்சம் அதிகமாகவே கிழிந்திருந்தது. அதுமட்டுமல்லாது நன்றாக கசங்கியும் இருந்தது. ரூபாய் கட்டுகளில் இருந்தால் மட்டும் தப்பிக்கக்கூடிய தாள் என்ற நிலையில் தான் இருந்தது. கூட்டணி தேவை. தனித்து நின்றால் கண்டிப்பாக வெற்றி பெற வாய்ப்பேயில்லை. நல்ல தாளாக இருந்திருந்தால் அய்யனார், அகல்யாவிடம்  தந்திருக்கவே மாட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.    

சரி ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்,” என்று அகல்யாவிடம் செல்லோ டேப் எடுத்து வருமாறு கூறினான்.  அவள் காணவில்லை என்று கூறிவிட்டாள். போன வாரம் தானே நான் வாங்கிக்கொடுத்தேன். எப்படி காணாமல் போகும். நன்றாகத் தேடிப்பார் என்றான்

பிறகும் உள்ளே சென்று ஆராய்ந்தாள் அகல்யா. வெற்றிகரமாக செல்லோ டேப்புடன் திரும்பினாள். பிறகு தந்தையும் மகளும் அந்த கிழிந்த நூறு ரூபாய் நோட்டுக்கு  பஞ்சர் ஒட்டினார்கள்.

கிழிந்த இடமும் தெரியக்கூடாது. டேப் ஒட்டியிருப்பதும் தெரியக்கூடாது.  அதே சமயத்தில் கடைக்காரன் பார்த்தால் கண்டுபிடிக்காத  அளவுக்கு  இருக்க வேண்டும் என்று  மிகவும் கவனமாக தாளுக்கு வேலைப்பாடுகளை செய்தனர். தாள் கசங்கியிருப்பது தெரியாமலிருக்க ஒரு புத்தகத்தின் நடுவில் வைத்து சிறிது நேரம் அழுத்தம் கொடுத்தார்கள். பின்னர் தாளை வழக்கமாக மடிக்கும் இடத்தில் மடிக்காமல் சற்று தள்ளி மடிப்பே விழாத இடத்தில் இருபுறமும் ஒரு குறிப்பிட்ட அளவு மடித்து, தனது சட்டைப்பைக்குள்  பட்டும் படாமலும் லேசாக வைத்தான் அய்யனார்.  தெம்பாக கடைக்குப் புறப்பட்டான்.  

ஒருவேளை நோட்டு செல்லாது. வேற நோட்டு கொடுங்கன்னு கடைக்காரன் கேட்டா என்ன செய்கிறது. ஐஸ்கிரீம் வேண்டாம் என்று சொல்லிடலாமாஅப்படிச் சொன்னால் அவன் என்ன நினைப்பான். கிழிஞ்ச நோட்டைக்  கொடுத்துட்டு இவன் பண்ற வேலையைப் பாருன்னு சொல்லமாட்டான். இதெல்லாம் ஒரு பிழைப்பாடா…” என்று உச் கொட்டிக்கிட்டே ஐஸ்கிரீம்  கடைக்குச்  சென்றான்

கோடைகாலம்  என்பதால் கடையில் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாகவே இருந்தது. சிறிது நேரம் அமைதி காத்தான். ஒவ்வொருவராக இடத்தைக் காலி செய்தனர்.  

“அண்ணா…. ஒரு கோன் ஐஸ்கிரீம் கொடுங்க. வெண்ணிலா பிளேவரில்.” என்றான். ஆனால் கடைக்காரர் அவனை கண்டு கொள்ளவில்லை. 

அதற்குள் தாளை சட்டைப்பையிலிருந்து எடுத்து, நீண்டவாக்கில் சுருட்டி கையில் வைத்துக் கொண்டான்.  

“என்ன தம்பி… கேட்டீங்க.” என்றார் அந்தக் கடையிலிருந்த பெரியவர்.

இப்போது வாயில் வார்த்தைகள் வரவில்லை. வாயைத் திறந்தால் காற்று தான் வருகிறது. உடனே சுதாரித்துக் கொண்டு,

“அண்ணா… ஒரு கோன்ஐஸ்கிரீம். வெண்ணிலா பிளேவரில்.” என்று பதட்டத்துடன் கூறினான்.

உடனே அவர் அந்த பிரீசர் பாக்ஸை திறந்து அய்யனார் கேட்ட ஐஸ்கிரீமை எடுத்துக் கொடுத்தார்.

தாளை நீட்டினான். அவர் அதை வாங்கிப் பெட்டியில் போடப் போனார். அய்யனாருக்கு உள்ளுக்குள் படபடவென்று அடித்தது. கடையை விட்டு நகர முற்பட்டான். அப்போது கடைக்காரர், தாளை ஒரு நோட்டமிட்டார். தாளை முன்னும் பின்னும் திருப்பினார். தாளின் இருபுறமும் கிழிந்திருப்பதும், அதை டேப் போட்டு ஒட்டி இருப்பதும் அவருக்கு தெரிந்து விட்டது. 

அவர், “தம்பி… நோட்டு கிழிஞ்சிருக்கு, வேற நோட்டு இருந்தா கொடுங்க.” என்றார்.

அய்யனாருக்கு வியர்த்து வி்ட்டது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உடனே பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டான். சட்டைப்பையில் கையை விட்டான். ஒன்றுமில்லை என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

“அண்ணா… இந்த நோட்டு தான் இருக்கிறது. நான் போய் வேற நோட்டு கொண்டு வரட்டுமா…” என்றான்.

அந்தக் கடைக்காரர், ஒரு பார்வை பார்த்தார். 

“பரவாயில்லை தம்பி. நாளைக்குக் கூட வந்து கொடுங்க. உங்களைப் போய் நம்பாமல் என்ன.” என்று சொல்லுவார் என்று தான் எதிர்பார்த்தான். ஆனால் அவரோ கறாராக வேறொரு நோட்டை கொடுத்திட்டு ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்க.” என்று சொல்லி விட்டார்.

உடனே அய்யனார், எதுவும் பேசாமல் கையில் வாங்கிய அந்த ஐஸ்கிரீமை திருப்பி கொடுத்துட்டு, தாளைத் திரும்ப வாங்கி சட்டைப்பையில் போட்டுக் கொண்டான்.

கடையை விட்டு வெளியே வந்ததும், அய்யனாருக்கு கோபம் தலைக்கேறியது. தன்னைத் தானே திட்டிக்கொண்டு வந்தான்.

அப்படியே தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று நோட்டமிட்டான். சாலையில் மின்னல் வேகத்தில் பல வித கார்கள் சென்று கொண்டிருந்ததன. அதைப் பார்த்ததும்,

“இவனுங்க எல்லாம் பணத்தை எங்க வச்சிருக்கானுங்க. நம்மாள மட்டும் எதையும் சாதிக்க முடியல. இருக்கிற விலைவாசிக்கு பெட்ரோல் போடுறதே கஸ்டமாயிருக்கு. நம்மகிட்டே மட்டும் தான்  பணமில்லையோ. 

பெத்தபிள்ளைங்க கேட்கிறதைக் கூட உன்னால வாங்கித்தர முடியல. உனக்கெல்லாம் எதுக்கு குடும்பம். இருக்கிற நூத்தி நாற்பது கோடியில நீ வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறாய்.  வேண்டாம்.

“உனக்கு கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.” ன்னு கண்ணதாசன் சொல்லி வச்சிருக்கிறாரு.

யாராக இருந்தாலும் சரி. பணமிருந்தால் தான் மதிப்பு. அப்பாவாகவே இருந்தாலும் கேட்டதை வாங்கித் தரணும். அட்லீஸ்ட் குறைந்தபட்ச ஆசையையாவது நிறைவேற்றணும். 

நீயும் எப்படியும் மாசம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிப்பாய். ஆனால் நீ போடுற ஆட்டம் இருக்கே. அது சொல்லி மாளாது. ஒத்த ரூபாயைக் கூட சேர்த்து வக்கிறதுல்ல. பணமிருக்கும் போது பறக்குற. இல்லாத போது வெறுக்கிற. அப்புறம் யாரைச் சொல்லி என்ன பிரயோசனம். அதெல்லாம் இருக்கட்டும். இப்போ வீட்டிற்கு எப்படி போகிறது. போனால் அகல்யா,  ஐஸ்கிரீம் எங்கே என்று கேட்பாளே. என்ன பண்ணலாம்.” என்று யோசித்தபடியே வீட்டிற்குப் போகாமல் மேலும் தனது நடை பயணத்தை தொடர்ந்தான். 

அப்போது, திடீரென இவனை பைக்கில் இடைமறித்து நிறுத்தினான். 

“டேய்… அய்யனார்… என்ன நடந்து போய்க்கிட்டு இருக்கிற.”

தனது நெருங்கிய நண்பனான செந்திலைக் கண்டதும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

“ஒண்ணுமில்லடா… சும்மா வாக்கிங் போகலாம்னு தான்.” 

“பகல் பண்ணிரெண்டு மணிக்கு வாக்கிங்கா…”

“இன்னைக்கு சண்டே. கடை லீவு. அதான்.” 

மேலும் தான் கவலையாக இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவனிடம்  

“வா… ஒரு டீ சாப்பிட்டு போகலாமே.” என்றான் அய்யனார்.

“இல்லை மச்சி. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. அசிஸ்டண்ட் மேனேஜர் பதவியிலிருந்து மேனேஜர் போஸ்டிங் கிடைச்சிருச்சா… ஒரே பிசி தான்.”

“சோ… அப்பா… இருக்கிற கொடுமையில இவன் தொல்லை தாங்க முடியலயே. என்ன பண்றது. இதெல்லாம் சகிச்சிக்க வேண்டியதா இருக்குது. பணமிருந்தா போதும். எதுவும் பேசலாம். என்ன வேணும்னாலும் சொல்லலாம். இந்த உலகமே கேட்கும். பணம் இல்லாதவன் பசியைப் பத்திக்கூட பேசக்கூடாது. 

இவ்வளவு பேசுறானே, பேசாம இவன்கிட்டே ஒரு             நூறுரூபாய் கேட்கலாமா… வேண்டாம். உடனே ஊர்ல இருக்கிறவன்கிட்டேயெல்லாம் சொல்லி நம்ம மானத்தை வாங்கிடுவான். எதற்கு வம்பு.” என்று யோசிச்சுட்டு,

“டேய்… செந்தில், இப்போ எவ்வளவுடா சம்பளம் உனக்கு,”

“மச்சி… நைன்ட்டி தவுசன்ஸ்டா… அடுத்த மாசம், ஒன் லேக் வந்திடும்னு நினைக்கிறேன்.”

“கடவுளே… நான் சீக்கிரம் செத்திடணும்.” என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு அவனிடமிருந்து விடைபெற்றான் அய்யனார்.

“இவன் உண்மையிலே சம்பாதிக்கிறானா… இல்லை கதை விடுறானா…. காலேஜ் படிக்கும் போதே… நான் கண்டிப்பாக கலெக்டர் ஆகிடுவேன்னு கதை விட்டவன். அப்புறம் ஏன் சொல்லமாட்டான். கதை விட்டாலும் அவன் குடும்பத்தை அவனால மேனேஜ் பண்ண முடியுது. உன்னால முடியுமா… கம்முன்னு இரு.” என்று யோசித்தபடியே நடந்து சென்றான்.

அப்போது, அந்த கடும் வெய்யிலிலும் ஒரு பாட்டி, பிளாட்பாரத்தில் எலுமிச்சை பழங்களை விற்றுக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் இவனுக்கு பாவமாக இருந்தது. தினமும் அந்த பாட்டியைப் பார்த்திருக்கிறான். ஆனால் இன்று மட்டும் என்ன இவ்வளவு கரிசணம். எல்லாம் அந்த பணத்தை தள்ளி விடுவதற்குத் தான். 

அந்த பாட்டியைப் பார்த்ததும், இருபது ரூபாய்க்கு இந்த பாட்டியிடம் எலுமிச்சைப் பழம் வாங்கிடலாம் என்று முடிவெடுத்து, அருகில் சென்று

“பாட்டி… எலுமிச்சை பழம் எவ்வளவு.”

“ஒரு பழம் நாலுரூபா. மூணு பழம் பத்துரூபாய்.”

“சரி… எனக்கு இருபது ரூபாய்க்கு ஆறு பழம் கொடுங்க.” என்று அந்த நூறுரூபாய் தாளை நீட்டினான். அதை பாட்டி வாங்கி, சற்றும் நோட்டை பார்க்காமல் பைக்குள் வைத்தது. 

அதற்குள் அய்யனார், ஆறு பழத்தை எடுத்துவிட்டான். உடனே பாட்டி,

“இன்னொரு பழம் எடுத்துக்கோப்பா…” என்றது.

பிறகு, மீதி பணம், எண்பது ரூபாய்க்கு, எட்டு பத்து ரூபாய் நோட்டுக்களை கொடுத்தது. அதில் மூன்று நோட்டுகள் லேசாக கிழிந்தும் கந்தலாகவும் இருந்தது. 

“எப்படியோ  நூறுரூபாய் நோட்டை செல்ல வைத்து விட்டோம்,” என்ற திருப்தியில் அந்த இடத்தைக் காலி செய்தான். 

ஆனால் அவன் மனம் உறுத்தியது. போயும் போயும் அந்த பாட்டியை ஏமாற்றிவிட்டோமே என்று வருந்தினான். இனிமேல் அந்த பாட்டியிடம் தான் எலுமிச்சைப் பழம் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தான். பிறகு நேராக அந்த ஐஸ்கிரீம் கடைக்குச் சென்று, அகல்யா கேட்ட வெண்ணிலா பிளேவரிலுள்ள கோன்ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டு விரைந்தான் வீட்டிற்கு. 

அகல்யா, அந்த ஐஸ்கிரீமை வாங்கி சந்தோசத்துடன் சாப்பிட்டாள். 

அய்யனாரின் மனம் இப்போது லேசாக அமைதியடைந்தது. இனிமேல் சிகரெட் பிடிக்கக்கூடாது. டீ குடிக்கக்கூடாது அப்புறம் சரக்கும் அடிக்கக்கூடாது. எப்படியும் ஒரு நாளைக்கு ஐநூறு ஆறுநூறு ரூபாய் சம்பாதிக்கிறோம். தினமும் நூறுரூபாயாவது சேமிக்க வேண்டும். 

நாமும் கடுமையாக உழைக்கிறோம். காரு பங்காளன்னு வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆகிறோம். யாருகிட்டே வேலையைக் காட்டுகிறானுங்க. அய்யனாரப் பத்தி இன்னும் எவனுக்கும் தெரியல. இந்த அய்யனாரோட ஆட்டத்தை இனிமேல் தானே பாக்கப்போறாணுங்க. தினமும் நூறுரூபாய் சேர்த்தால் வருசத்திற்கு எப்படியும் நாற்பதாயிரம் சேர்த்திடலாம். அதை அப்படியே நாலு இலட்சமாக மாத்துறோம். ஒருவேளை திடீர்ன்னு நமக்கு வேலையில்லன்னா… 

சேசே… நம்ம வேலைக்கு என்ன ஆபத்து வரப்போகிறது. இந்த மாவட்டத்திலேயே பெரிய பள்ளிக்கூடம். அந்த பள்ளிக்கூடத்துக்கு எதிரே ஜெராக்ஸ் கடை வச்சிருக்கோம்.  நமக்கு போய் வேலையில்லாமல் போகுமா… ஒருவேளை பள்ளிக்கூடத்தை இழுத்து மூடினால் தான் அது நடக்கும்…” என்று காலண்டரைப் பார்த்தான். 

“22-03-2020” என்று அந்த காலண்டரில் தேதி காட்டியது. அப்போது அதிலிருந்த கடவுள் அய்யனாரைப் பார்த்து சிரித்தார்.

  • ச. மணிகண்டன்

 

  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad