வீரபத்திரர் மடை
அறுபத்தைந்து வயதுக் கட்டைப் பிரமச்சாரி அவர். அழுக்குப் படிந்த வெற்றுத் தேகம், இறுக்கக் கட்டிய சாரம் கழுத்தில் ஒரு அழுக்குப் படிந்த துவாய், ஏறிய நெற்றி, நரைத்துப் போன பரட்டைத் தலை, சற்றுக் குழி விழுந்த கன்னங்கள், விசுக்கு விசுக்கென்று கைகளை வீசியபடி நடக்கும் வேக நடை, இதுவே இவரின் இன்றைய அடையாளங்கள்.
மூன்றாவது தடவையாகவும் அவர் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொன்னதும் தங்கத்தின் கண்களில் இருந்து நீர் முட்டிமோதி வெளியே வந்தது. இந்த அறுபது ஆண்டுகளில் அவள் தன் அண்ணனிடம் இருந்து கேட்டிராத வார்த்தை அது.
அவளுடைய முப்பத்தைந்தாவது வயதில் கணவன் இறந்து போக, அவளின் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அவளின் நிழலாக நின்று காத்த அண்ணனா இப்படிச் சொன்னான்? அவளால் நம்ப முடியவில்லை.
நுங்குக் குரும்பைகளை வெட்டி ஆட்டுக்கு வைத்தபடி இருந்தவர் தங்கத்தைப் பார்த்து, “தங்கச்சி வாற வெள்ளிக்கிழமை நான் போயிடுவேன்” என்றதும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“என்னண்ணை… என்ன சொல்லுறாய்? எங்கே போகப் போறாய்?”
“வீரபத்திரர் கோயில் மடை வருது அதுதான்”
“அதுக்கென்னண்ணை வெள்ளிக்கிழமை மடைக்குப் போனால் சனிக்கிழமை வந்திடுவாய் தானே… இதென்ன புதுசாய் இண்டைக்கு?”
“….”
“அண்ணை டேய், நான் கேட்டது உன்ர காதில விழுதோ இல்லையோ?”
“……”
தங்கத்தின் கேள்வி அவருக்கு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும். அரிந்து கொண்டிருந்த குரும்பட்டிகளைத் தூக்கிக் கடகத்தில் போட்டு விட்டு எழுந்தார்.
“மூதேவி வாலாயம் பிடித்தவர்கள் குளிக்க மாட்டினமாம். இப்பிடித்தான் ஊத்தை உடம்புடன் திரிவினமாம்”
அவருக்கு மூதேவி வாலாயம் பிடித்து விட்டதாக ஊரில் உள்ள எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.
அதற்கேற்றால் போல அவரும் யாரைக் கண்டாலும் அதிகம் பேசுவதில்லை. தன்பாட்டில் தனக்குள்ளேயே ஏதேதோ சொல்லிக் கொண்டிருப்பார்.
ஆடுகளுடன் மட்டுமே அதிக நேரம் கதைக்கும் அவர் அதற்கு அடுத்த படியாகத் தன் தங்கையுடன்தான் அதிகம் கதைப்பார்.
இந்த இரண்டு நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குரும்பட்டிகளை வெட்டித் தள்ளியிருப்பார். மூன்று பெரிய கடகங்களில் வெட்டிய நுங்குக் குரும்பைகளை நிறைத்து வீட்டுக்குப் பின் பக்கமாக உள்ள பத்தியில் சேமித்து வைத்தவர், அருகில் நின்ற மாவிலங்கை மரத்தில் இருந்து மூன்று நான்கு கட்டு குழைகளையும் வெட்டி வைத்திருந்தார்.
“தங்கச்சி, நான் வெள்ளிக்கிழமை போயிடுவேன், ஆடுகளுக்கு ஒரு கிழமைக்குத் தேவையான சாப்பாடு வைச்சிருக்கிறேன்”
மூன்றாவது தடவையாகவும் அவர் சொன்னபோது அவளுக்கு நெஞ்செல்லாம் படபடக்கத் தொடங்கியது. கண்ணீர் முட்டி மோதி வெளியே வந்தது.
“என்னண்ணை சொல்லுறாய்? நானும் திருப்பித் திருப்பிக் கேக்கிறேன், எங்கேதான் போகப் போறாய்?”
என்றாள் சற்றுக் கடுமையான குரலில். அவருக்குத் தங்கையை எதிர்த்துப் பேசிப் பழக்கமில்லை. பதில் சொல்ல முடியாத கூடுதலான நேரங்களில் அந்த இடத்தை விட்டு விலகி விடுவார். இன்று அப்படி இல்லாமல்,
“நான் எங்கே போறேன் எண்டிறது இருக்கட்டும், அடுத்த மாரிக்கு முதல் உந்த ஆடுகளை வித்துப்போடு தனிய இருந்து கஸ்ரப்படுவாய் சொல்லிப்போட்டேன்”
வழமைக்கு மாறாகக் கடுமையான தொனியில் பதில் சொன்ன அண்ணனை ஏற இறங்கப் பார்த்தாள். இதுக்கு மேலே அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராது என்பது அவளுக்குத் தெரியும். கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டிருந்தது.
தங்கத்தின் பதிலுக்காகக் காத்திருக்காமல் நுங்குக் குரும்பைகளுக்கு மேலே இருந்த துவாயை உதறித் தோளில் போட்டுக் கொண்டு பனங்கூடலை நோக்கி வேகமாக நடந்தார்.
புதன்கிழமை இரவு, வீரபத்திரர் கோயில் மடைக்கு இன்னும் இரண்டு இரவுகள் மட்டுமே மீதம் இருந்தன. நாட்கள் நெருங்க நெருங்கத் தங்கத்துக்கு நித்திரை வர மறுத்தது.
பிள்ளைகளும் கலியாணமாகித் தாங்களும் தங்கள் குடும்பமும் என்றாகிவிட, அண்ணன் தயவில் இதுவரை காலமும் வாழ்ந்தவளுக்கு அவர் சொன்ன அந்த வரிகள் திரும்பத் திரும்ப வந்து தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருந்தது.
கிழித்துப் போட்ட பச்சை ஒடியல், கதிர்ப் பாயில் காய்ந்துகொண்டிருந்தது. ஈர்க்கில் குற்றிய அவித்த ஒடியல் வேலிக் கதிகால்களில் கொழுவி இருந்தது. தலையில் இருந்த புல்லுக் கட்டைத் தூக்கி வேலியோரமாகப் போட்டு விட்டு உழவாரத்தை ஆட்டுக் கொட்டிலில் செருகியவர் ஒடியலைக் கொத்த வந்த காக்கைகளை விரட்டியபடி ஆடுகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
நோண்டிய மீனை அடுப்படியில் வைத்து விட்டு வந்த தங்கம் ஒருகணம் கை கழுவுவதை நிறுத்திவிட்டு ஆடுகளுடன் கதைத்துக் கொண்டிருக்கும் அண்ணனை உற்றுப் பார்த்தாள்.
கட்டம் போட்ட புதுச் சாரம், பச்சைக் கோடு போட்ட வெள்ளைத் துவாய், காற்றில் பறக்கும் தலை முடி, ஏறிய நெற்றியில் நிரம்பியிருந்த திருநீற்றுப் பூச்சு, பளபளப்பான கேசம் என ஆளே மாற்றியிருந்தார்.
வருடத்தில் ஒருதடவைதான் இப்படி ஒரு பொலிவை அவரிடம் பார்க்க முடியும்.
“டேய் அண்ணை… நாளைக்கு மடைக்கு நீயென்ன இண்டைக்கே வெளிக்கிட்டுட்டாய் போல… இது தெரியாம நான் வேற மீன் வாங்கிட்டேன்… சாப்பிடுவியோ? இல்லையோ?”
கழுவிய கைகளைச் சேலைத் தலைப்பில் துடைத்தபடியே கேட்டாள் தங்கம்.
“இண்டைக்கு மச்சம் சாப்பிட்டால் நாளைக்கு கோயிலுக்கு வரவேண்டாம் எண்டு சாமி சொன்னதே? நீ என்னண்டாலும் கெதியாய் தா எனக்குச் சிறு குடலைப் பெருங்குடல் தின்னுது”
சொல்லியபடியே பிலாவிலைக் கம்பியை எடுத்துக் கொட்டியிருந்த பிலாவிலைகளைக் கம்பியில் குத்தி எடுத்து ஆட்டுகளுக்குப் போட்டார்.
ஓலைப் பாயில் உருண்டபடி இருந்தாள் தங்கம். நேரம் சாமத்தைத் தாண்டியும் நித்திரை வர மறுத்தது. அடிக்கடி திண்ணையில் படுத்திருக்கும் அண்ணனை எட்டிப் பார்த்தவள், நேரம் அதிகாலையை நெருங்கியபோது சற்றுக் கண்ணயர்ந்து தூங்கி விட்டாள்.
அதிகாலை வேளையில் வளமையாகக் கேட்கும் குருவிகளின் சங்கீத ஒலிகூட அவளின் காதுகளில் இன்று விழவில்லை, அப்படி ஒரு தூக்கம்.
நாய்களின் குரைப்பொலி கேட்டு நித்திரையில் இருந்து திடுக்கிட்டு எழுந்தவள், கண்களைக் கசக்கியபடி திண்ணையை எட்டிப் பார்த்தாள். அங்கு அண்ணன் இல்லை. வெளியே சூரிய வெளிச்சம் எங்கும் பரவியிருந்தது.
“அண்ணை… அண்ணை டேய்…”
“இதிலதானே நிக்கிறேன். ஏன் பேய்க் கத்துக் கத்துறாய்?”
கறந்து வைத்திருந்த ஆட்டுப் பால்ச் சொம்பை அவளின் கையில் திணித்துவிட்டுத் திண்ணையில் போய் அமர்ந்தார்.
“இண்டைக்கு வீரபத்திரர் கோயில் வேள்வியெல்லோ? எப்ப போறாயண்ணை?”
“நீ எழும்பினதும் சொல்லீட்டு போகலாம் எண்டுதான் இவ்வளவு நேரமும் பாத்துக் கொண்டு நிக்கிறேன்”
“…..”
“தேத்தண்ணி ஆத்திற வரைக்கும் நிக்க எனக்கு நேரமில்லை. இஞ்சை உந்தப் பாலைத் தா நான் போகப்போறேன்” சொல்லியபடியே அவளின் கையில் இருந்த சொம்பை வாங்கி ஆட்டுப் பாலை இரண்டு மூன்று மிடறுகள் மடக்கு மடக்கென்று குடித்தவர், “இந்தா…” என்றபடி, மீதிப் பாலுடன் சொம்பை நீட்டினார்.
“தேத்தண்ணி ஊத்துறதுக்குள்ள உனக்கு என்னதான் அவசரமோ? கொஞ்சம் இரண்ணை தேத்தண்ணி கொண்டு வாறேன், குடிச்சிட்டுப் போ…” சொல்லியபடியே அடுப்படி நோக்கி விரைந்தாள்.
கங்கு மட்டையை உள்ளே தள்ளி தணலில் வேகத்தைக் கூட்டி ஒரு பத்து நிமிடங்களுக்குள் தேத்தண்ணியும் கையுமாகப் படலையைத் தள்ளிக் கொண்டு அடுப்படியிலிருந்து வெளியே வந்த தங்கம் மறுபடியும் திண்ணையில் படுத்திருந்த அண்ணனை உற்றுப் பார்த்தாள்.
“என்னண்ணை திருப்பியும் படுத்திட்டாய்? ஏதும் உடம்புக்கு ஏலாதே?”
“….”
அவரிடமிருந்து எந்தப் பதிலுமில்லை…
“அண்ணை…அண்ணை…”
அவருடைய வாயில் இருந்து வழிந்த ஆட்டுப் பால் திண்ணையின் ஒரு பகுதியை நனைத்திருந்தது.
“அண்ணை… அண்ணை டேய்…”
“……”
“அண்ணை… ஏழும்படா என்னைத் தனிய விட்டிட்டுப் போயிடாதை…”
தங்கத்துக்குத் தொண்டை அடைத்துப் பெரிய விக்கலும் சின்ன விக்கலுமாகச் சொற்கள் சிக்கின. மூச்சுப் பேச்சின்றிக் கிடந்த அண்ணனைத் தட்டி எழுப்பினாள். அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
இனம் புரியாத பீதி தொற்றிக் கொள்ள மிகச் சிரமத்துடன் கனத்துப்போன இமைகளைத் திறக்க முயன்றாள் தங்கம்.
என்னதான் முயன்றும் அவளால் முடியவில்லை. அவளுக்குக் கண்ணெல்லாம் சுற்றிக் கொண்டு வந்தது. அதுக்கு மேலே எதுவும் செய்ய முடியாதவளாய் “ஓ” என்று பெருங் குரலில் கத்தியபடி, பொத்தென்று திண்ணையில் குந்தி விட்டாள்.
கொட்டிலில் கட்டியிருந்த ஆடுகள் பெருத்த குரலில் கத்தின. நாய்கள் இரண்டும் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தபடி குரைத்தன. மின்னாமல் முழங்காமல் ஆங்காங்கே ஓரிரு மழைத் துளிகள் விழுந்து சிதறின.
-யாவும் கற்பனையல்ல-
-தியா-