காற்றில் உலவும் கீதங்கள்
ரொம்பக் காலத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு ‘காற்றில் உலவும் கீதங்கள்’ பகுதியுடன் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. 2020 மார்ச் மாதம் இதன் சென்ற பகுதி வெளிவந்தது. கொரோனா அறிமுகமாகி எல்லோருக்கும் பீதியைக் கிளப்பி, மொத்த ஊரையும் மூடத் தொடங்கிய சமயம் அது. அதன் பிறகு, திரையரங்குகள் மூடப்பட்டதால், படங்கள், பாடல்கள் வெளியாகாமல் மூடங்கிப்போனது.
- ‘பாக்கு வெத்தல’
திரையரங்குகள் மூடத் தொடங்கிய அந்த இறுதி வாரத்தில் ‘தாராள பிரபு’ வெளியாகி இருந்தது. வெளிவந்த வேகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால், மக்களை அப்படம் வெகுவாகச் சென்று சேரவில்லை. ஆனால், அப்படத்தில் இடம்பிடித்த டைட்டில் பாடல் யூ-ட்யூப் புண்ணியத்தில் இளைஞர்களிடையே நன்றாகச் சென்று சேர்ந்தது. விக்னேஷ் சிவன் எழுதிய வரிகளுக்கு அனிருத் இசையமைத்துப் பாடியிருந்தார். 100 மில்லியனுக்கு மேல் பார்வைகளை அள்ளிய செம குத்து பாடல் அது.
- ‘காட்டுப் பயலே’
பிறகு, நிலைமை சுமுகமாகி, திரையரங்குகளை மெதுவாகக் கடந்த ஆண்டின் இறுதி பகுதியில் திறந்தாலும், நிறையத் திரைப்படங்கள் ஓடிடியில் வெளிவந்தன. முக்கியமாக, நவம்பர் மாதத்தில் வெளிவந்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’வைக் குறிப்பிடலாம். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக இப்படத்தில் அமைந்திருந்தன. சினேகன் எழுதி தீ பாடிய ‘காட்டுப் பயலே’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட அந்தப் பாடலுக்குத் தீயின் குரல் அம்சமாக அமைந்திருந்தது.
- ‘தங்கமே தங்கமே’
சிறு சிறு படங்களாக நிறையப் படங்கள் அச்சமயம் திரையரங்கில் வெளிவந்தாலும், எதுவும் மக்களைக் கவர்ந்து திரையரங்கிற்குப் பெரிய அளவில் மக்களை இழுத்து வரவில்லை. இச்சமயத்தில் ஓடிடியில் வெப் சீரிஸ் வெளிவரத் தொடங்கி, மக்கள் அவற்றையும் வீட்டில் இருந்தே பார்க்க தொடங்கி இருந்தனர். வெப் சீரிஸ்களில் பாடல்கள் ஆங்காங்கே இருந்தாலும், திரைப்படப் பாடல்கள் போல் அவற்றிற்குப் பெரிய கவனம் இருக்கவில்லை. நெட்ஃப்ளிக்ஸில் வெளிவந்த பாவக் கதைகள் வெப் சீரிஸில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்த ‘தங்கமே தங்கமே’ ஓரளவிற்கு நல்ல கவனம் பெற்றது.
- ‘வாத்தி கம்மிங்’
பிறகு, 2021 பொங்கலுக்கு விஜய் நடித்த ‘மாஸ்டர்’ வெளிவந்த போது, மக்கள் பெருமளவில் தியேட்டருக்குச் சென்று அப்படத்தைப் பார்த்தனர். கிட்டதட்ட ஒரு ஆண்டிற்குப் பிறகு, மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வர, திரையுலகிற்கு ஒரு புத்துணர்ச்சியை அப்படம் அளித்தது. விஜய், விஜய் சேதுபதி இருவரையும் சரியாகப் பயன்படுத்தி லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த அப்படத்திற்கு அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிதும் உதவியது. முக்கியமாக, விஜய்யின் ரசிகர்களைத் திரையரங்கில் ஆட்டம் போட வைக்க, இப்பாடல் உதவியது.
- ‘செல்லக் குட்டி ராசாத்தி’
மாஸ்டர் உடன் வெளியான இன்னொரு படம் – ஈஸ்வரன். சிம்பு நடித்த இப்படம் தோல்வியடைந்தாலும், சிம்புவிற்கு முதல் நூறு மில்லியன் பார்வைகளைக் கொடுத்த பாடல் இப்படத்தில் தான் அமைந்தது. தமன் இசையில் வெகு நாட்களுக்குப் பிறகு தமிழில் வந்த படம் இது.
- ‘எந்தன் அன்பியே’
பிறகு, கொஞ்ச நாட்களிலேயே கொரோனா இரண்டாம் அலை வந்துவிட, மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டன. ஓடிடியில் வெளிவந்த சில படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதில் ‘டெட்டி’ படத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளிவந்த இப்படத்திற்குக் குழந்தைகளிடையே வரவேற்பு இருந்தது. இமான் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட்டடித்திருந்தன. நிஜ ஜோடிகளான ஆர்யாவும், சாயிஷாவும் இதில் நடித்திருந்தனர்.
- ‘கண்டா வரச் சொல்லுங்க’
திரும்பத் தியேட்டர்கள் திறந்த சமயத்தில், தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் வெளிவந்தது. படம் வெளிவரும் முன்பே வெளியான ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கான மேக்கிங் வீடியோ சிறப்பாக இருந்ததும் அதற்கு ஒரு காரணம். இந்தப் பாடலின் பின்னணியில் அவரவர் அவரவருக்குப் பிடித்த தலைவர்களை வைத்து வீடியோ செய்து வெளியிட்டனர். சந்தோஷ் நாராயணன் இசையில் கிடாக்குழி மாரியம்மாள் அவர்கள் இப்பாடலைப் பாடியிருந்தார்.
- ‘ரகிட ரகிட’
கர்ணன் வெளிவந்து இரண்டு மாதத்தில் தனுஷின் அடுத்தப் படமான ‘ஜகமே தந்திரம்’ நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இதிலும் இசை சந்தோஷ் நாராயணன் தான் என்றாலும், இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. படத்தில் சொல்லி கொள்ளும்படியாகச் சில பாடல்கள் அமைந்தன. அதிலும் தனுஷ் பாடிய ‘ரகிட ரகிட’ ரொம்ப நாளாகவே ரசிகர்களிடையே முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது.
- ‘வம்புல தும்புல’
இவ்வருடம் ஓடிடியில் வெளிவந்து பெருமளவில் பாராட்டப்பட்ட படம் என்றால், ரஞ்சித்தின் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ தான். பழைய சென்னை நகரத்தின் பின்னணியில் குத்துச் சண்டை போட்டிகளின் கதைக் களத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருந்தார். அவருக்கேற்ற கதைக் களத்தில் இசையில் பின்னியிருந்தார். ‘வம்புல தும்புல’ என்ற பாடலின் படமாக்கம் கதைக் களத்தைக் காட்டும் விதத்தில் அமைந்திருந்தது. பாடலின் இறுதியில் நாயகி ஆடும் ஆட்டத்தைப் பார்க்கவில்லை என்றால் பார்த்துவிடுங்கள்.
- ‘இதுவும் கடந்து போகும்’
நயன்தாராவின் தயாரிப்பில் அவருடைய நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளிவந்த த்ரில்லர் படம், நெற்றிக்கண். நயன்தாரா இப்படத்தில் பார்வை இழந்த காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். கிரிஷ் என்ற இசையமைப்பாளர் இசையில், சித் ஸ்ரீராம் பாடிய ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் நல்லதொரு ஆறுதல் பாடல். பாடலை எழுதியவர், கார்த்திக் நேத்தா.
- ‘பேர் வச்சாலும்’
சந்தானம் நடித்து டைம் மெஷின் கதையம்சத்தில் வெளிவந்த ‘டிக்கிலோனா’ படத்தில் காமெடி தவிர, ரசிகர்களை ஈர்த்த இன்னொரு விஷயம், ‘பேர் வச்சாலும்’ பாடல். 1990 ஆம் ஆண்டு வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற இப்பாடல், 31 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய வாரிசு யுவன் சங்கர் ராஜா இசையில் மெருகேற்றப்பட்டு இப்படத்தில் இடம் பெற்றது. அதே குரல்கள், அதே தாளம் என்று வைத்துக்கொண்டு ஒலியில் மட்டும் மெருகேற்றப்பட்ட இப்பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இப்பாடலின் நடனமும் நன்றாக அமைக்கப்பட்டு இருந்தது.
- ‘இன்னா மயிலு’
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அக்டோபர் மாதம் வெளிவந்த ‘லிப்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயன் பாடிய ‘இன்னா மயிலு’ பாடல், படம் வெளிவரும் முன்பே பிரபலமாகி இருந்தது. பிரிட்டோ மைக்கேல் இசையமைத்திருந்த இப்படத்தில் பிக் பாஸ் பிரபலமான கவின் நடித்திருந்தார். ஐடி கம்பேனி பின்னணியில் லிப்ட்டை வைத்து எடுக்கப்பட்டிருந்த த்ரில்லர் படம் இது. ஆனால், இப்பாடல் செம ஜாலியானது.
- ‘செல்லம்மா’
சிவகார்த்திக்கேயன் தயாரிப்பில், நடிப்பில் உருவாக்கப்பட்ட ‘டாக்டர்’ படத்தில் வரும் ‘செல்லம்மா’ மேக்கிங் பாடல், சென்ற வருட மத்தியிலேயே வெளியாகி ஹிட்டடித்திருந்தது. அனிருத்தும், ஜோனிதா காந்தியும் பாடி, ஆடி இப்பாடலை வெளியிட்டு இருந்தனர். யூ-ட்யூப் மூலம் பிரபலமான இப்பாடலால், படத்திலும் இப்பாடலுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. டார்க் காமெடி என்ற ரகத்தில் இருந்த இப்படத்தின் இறுதியில் இப்பாடல் தனியாக இணைக்கப்பட்டு வந்தது. அதிலும் நடனம், செட் என்று அழகாகப் படமாக்கியிருந்தனர்.
பொதுவாக, ஒரு காலாண்டில் வெளியான படங்களில் இருந்து ரசனையான ஐந்து பாடல்களை இத்தொடரின் ஒரு பகுதியில் பார்ப்போம். நீண்ட இடைவெளிக்கு பிறகான பகுதி என்பதால் ரொம்பவும் நீண்ண்ண்டு விட்டது. என்ன இருந்தாலும் நல்ல பாடல்களைக் கேட்பதற்குக் கசக்கவா போகிறது? தொடர்ந்து கேட்டு ரசிப்போம்.
- சரவணகுமரன்