Squid game
திரைப்படங்களுக்கு இணையான எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் ஓடிடி வெப்சீரிஸ்கள் பெறத் தொடங்கி இப்போது பல நாட்களாகி விட்டது. சமீபத்தில் அப்படிப் பலமான வரவேற்பைப் பெற்ற வெப்சீரிஸ், செப்டம்பர் 17 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளிவந்த ”ஸ்க்யூட் கேம்” (Squid game) ஆகும். இது ஒரு கொரியன் சீரிஸ். முழுக்க முழுக்கக் கொரியர்கள் தயாரிப்பில், படமாக்கத்தில், நடிப்பில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுக்க வெளியிடப்பட்டுள்ளது. அதனால் யார் நடித்திருக்கிறார், இயக்கியிருக்கிறார் என ஜில் ஜங் ஜக் என்றெல்லாம் சொல்லி, உங்கள் வாய்க்கு சுளுக்கு ஏற்படுத்தப் போவதில்லை. நேரே உள்ளே சென்று விடலாம்.
பல்வேறு வகையான பின்னணி கொண்ட 456 பேர்கள் ஒரு ரகசிய இடத்திற்குக் கூட்டிச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை – பெரும் பொருளாதாரத் தேவை. அவர்களுடைய பணத்தேவைக்கு, அந்த ரகசிய இடத்தில் தீர்வு கிடைக்குமெனச் சொல்லி அழைத்துச் செல்லப்படுகிறார்கள். நல்லது நடந்தால் சரி என்று செல்லும் அவர்களுக்கு ஒரு போட்டி வைக்கிறார்கள். அந்தப் போட்டியின் பெயர் – ரெட் லைட், க்ரீன் லைட் (Red light, Green light). ஒரு பெரிய மைதானத்தின் ஒரு பக்கத்தில் இருந்து போட்டியாளர்கள் எதிர் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். எதிர் பக்கத்தில் ஒரு பிரமாண்ட பொம்மை இருக்கிறது. பச்சை என்று சொன்னதும் போட்டியாளர்கள் எதிர் திசைக்கு நகரத் தொடங்கலாம். சிகப்பு என்றவுடன் அசையாமல் நின்று விட வேண்டும். மீறி அசைந்தால் அவுட்.
அவுட் என்றால் போட்டியில் இருந்து அந்த ஆளை விலக்கி வைத்துவிடுவார்கள் என்று எண்ணாதீர்கள். ஆளை அவுட் ஆக்கிவிடுவார்கள். ஆம், அந்தப் பொம்மையின் கண்ணில் இருக்கும் சென்சார் அசைபவர்களைச் சரியாகக் குறித்துக்கொடுக்க, சுற்றி இருக்கும் தானியங்கி துப்பாக்கிகள் அவர்களைப் போட்டு தள்ளிவிடும். அதிர்ச்சியாக இருக்கிறதா? இது முதல் போட்டி தான். இது போல் மொத்தம் ஆறு போட்டிகள். அதில் வெற்றி பெற போவது ஒருவர். அவருக்கே மொத்தப் பரிசு தொகையும்.
இது என்ன நம்ப முடியாத கதை என்ற எண்ண முடியாதப்படி இதில் திரைக்கதை அமைத்துள்ளனர். முதல் போட்டியில் அடைந்த அதிர்ச்சியைக் கண்டு, போட்டியை விட்டு மீதி இருப்பவர்கள் விலகிச் செல்கிறார்கள். ஒத்துக்கொள்ளும்படியான காரணத்தைக் காட்டி அவர்கள் அனைவரும் போட்டிக்குத் திரும்புகிறார்கள். போட்டியின் முடிவு மரணம் என்பதால், ஒவ்வொரு போட்டி காட்சியிலும் விறுவிறுப்பிற்கும் சுவாரசியத்திற்கும் பஞ்சமில்லை. இந்தப் போட்டிகளை யார் நடத்துகிறார்கள், எதற்கு நடத்துகிறார்கள் என்று காட்டும் போது பெரிய அதிர்ச்சி ஏற்படவில்லை. உலகம் சென்று கொண்டிருக்கும் திசையைக் கண்டால், எதுவும் நடக்கும். இப்படியும் நடக்கலாம்.
இதைப் பார்க்கும் போது பிக் பாஸ் போட்டி தான் நினைவுக்கு வந்தது. பிக் பாஸ் போட்டியில் தோற்பவர்களை அந்த வீட்டில் இருந்து வெளியே அனுப்புவார்கள். ஸ்க்யூட் கேமில் தோற்பவர்களை உலகில் இருந்தே அனுப்பிவிடுவார்கள். இந்தப் போட்டிகளுக்கு யார் ஆடியன்ஸ் என்று ஒப்பிட்டுப் பார்த்தோமானால், சில ஒற்றுமைகளை நம்மால் கவனிக்க முடியும். இந்தக் கதையை ரொம்பவும் விளக்கி சொல்லி, இன்னும் காணாதவர்களுக்குச் சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை.
இதில் நடித்திருக்கும் அனைவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். அனுபம் திரிபாதி என்று ஒரு இந்தியரும் நடித்திருக்கிறார். அவருக்கு அலி அப்துல் என்ற பாகிஸ்தானியர் வேடம். அஹ்ஹா!! முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அந்தத் தாத்தா நம் நினைவில் இருந்து மறையப் போவதில்லை. டப்பிங், சப் டைட்டில் மூலம் பார்த்தோம் என்றாலும், வசனங்கள் அருமையோ அருமை. குறிப்பாக, மார்பில்ஸ் என்ற போட்டியின் போதான வசனத்தையும், இறுதியில் மருத்துவமனையில் நடக்கும் உரையாடலையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இதில் காட்டப்படும் விளையாட்டுகள் அனைத்தும் பல காலமாக கொரியாவில் விளையாடப்படும் சிறுவர் விளையாட்டுகள் ஆகும். இது போன்ற விளையாட்டுகளை நாமும் நம்முடைய பால்யக் காலத்தில் விளையாடி இருப்போம். அதே போல், இதில் வரும் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பொருளாதாரச் சோதனைகளும் நாம் நம்மூர் செய்தித்தாள்களில் காண்பது தான். அதனால், இந்தக் கதையோடு நம்மால் நன்றாகவே ஒன்றிவிட முடிகிறது.
இந்தச் சீரிஸின் உச்சம் என்பது ரத்தம் சிந்தும் வன்முறை அல்ல. மாறாக, நம் வாழ்க்கை குறித்துச் சிந்திக்கத் தூண்டும் ஒரு தத்துவ உரையாடலே. இந்தச் சீரிஸ் பேசும் கடன் சார்ந்த பிரச்சினைகள் உலகளாவிய அளவில் பெரும்பான்மையான மக்கள் சந்திப்பதாகும். அதனால், இந்தச் சீரிஸ் உலகளாவிய அளவில் பேசுபொருளாகி இருப்பதும், வரவேற்பு பெற்று இருப்பதும் ஆச்சரியம் இல்லை.
தற்சமயம் நெட்ப்ளிக்ஸில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட சீரிஸ் இது தான். வெளிவந்து 28 நாட்களில் 142 மில்லியன் பார்வையாளர்களால் காணப்பட்ட முதல் சீரிஸ் ஆக இது வந்துள்ளது. 21 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்ட இந்தச் சீரிஸ், இதுவரை 900 மில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இத்தொடருக்குக் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, பிற ஓடிடி நிறுவனங்களும் ஹாலிவுட்டைத் தாண்டி உலகமெங்கும் தங்கள் தளத்திற்கான பலமான கண்டெண்டைத் தேடிச் சென்றுள்ளனர். ஆக, ஸ்க்யூட் கேம் கொரியப் படைப்பாளிகளுக்கு மட்டுமில்லாமல் உலகெங்கும் உள்ள படைப்பாளிகளுக்கான கதவை நன்றாகத் திறந்துள்ளது. பார்வையாளர்களுக்கு இருந்த இடத்தில் இருந்து பலதரப்பட்ட கலாச்சாரப் பின்னணி கொண்ட கதைகளைக் காணும் வாய்ப்பு.
அடுத்தச் சீசனுக்கான லீடுடன் இந்தச் சீசனை முடித்துள்ளார்கள். பார்க்கலாம், அதில் என்ன டெரரைக் கொடுக்கப் போகிறார்கள் என்று.
- சரவணகுமரன்