அண்ணாத்தே திரைப்படம் – ஒரு திறனாய்வு
நவம்பர் 05, 2021 – உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்களின் தீபத்தருநாளாம் தீபாவளி நாளான இன்று தங்கள் உற்றார் உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் இல்லங்களை விட அந்தந்த ஊர்களில் உள்ள திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்கும் ஒரு மகத்தான நாள். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி படம் வெளி வருகிறதென்றால் போதும் – வீடுகள் காலியாகவும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதி கரை புரண்டோடுவதும் அதிசயமல்ல.
அப்படிப்பட்ட ஒரு தீபாவளித் திருநாளில் நானும் என் தர்மபத்தினியும் அமெரிக்காவில் நாங்கள் வசிக்கும் மினசோட்டா மாநிலத்தில் பர்ன்ஸ்வில் (Burnsville) மாநகரத்தில் உள்ள CMX ஒடிஸி திரையரங்கில் இந்த அண்ணாத்தே திரைப்படத்தைக் கண்டோம். அப்படிப் பார்த்து விட்டு வந்தவுடன் இந்த ஊரில் வெளியாகும் மாதாந்திர தமிழ் பத்திரிகை பனிப்பூக்கள் என்னை இப்படத்தின் விமர்சனத்தை எழுதக் கேட்டுக் கொண்டபடியால் இதோ என் கட்டுரை முயற்சி.
கதை: அதீதத் தங்கைப் பாசம் கொண்ட ஒரு அண்ணன் அவள் திருமண வாழ்க்கையை நாசப்படுத்தி அவளைத் துரத்திக் கொடுமைப்படுத்தும் இரு கொடும் வில்லன்களை அவள் பார்வையில் படாமல் பந்தாடிப் பழி வாங்குவதே ஒற்றை வரிக் கதை.
கொஞ்சம் விஜய்யின் திருப்பாச்சி, கொஞ்சம் அஜித்தின் விஸ்வாஸம், கொஞ்சம் தலைவரின் கபாலி – இவை மூன்றையும் ஒரு குடுவையில் குலுக்கி எடுத்தால் கிடைக்கும் கலவையே அண்ணாத்தே. மொத்தத்தில் NOT A USUAL RUN-OF-THE-MILL SUPERSTAR MOVIE.
படத்தின் நெகிழ்ச்சியான நெஞ்சில் நின்ற காட்சி – தலைவர் அறிமுகமாகும் அண்ணாத்தே அண்ணாத்தே பாடலும் (டைட்டில் சாங்) அதற்கு குரல் கொடுத்திருக்கும் அமரர் எஸ் பி பி (One & Only SPB) யும். இதை அமைத்து கொடுத்த இயக்குனருக்கும் இசை அமைப்பாளருக்கும் ஒரு மிகப் பெரிய நன்றி.
பொதுவாக ரஜினி படம் என்றால் ஒரு வேகமும் விறுவிறுப்பான கதையோட்டமும் இருக்கும் – அந்த வகையில் இயக்குனர் சிவா சற்றே தடம் புரண்டு தலைவரின் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்.
படத்தின் நிறைகள்:
- இமானின் இசை
- ஆபாசமில்லாத நகைச்சுவைக் காட்சிகள் – குறிப்பாக சூப்பர் ஸ்டார்–பிரகாஷ்ராஜ்–சூரி காட்சிகள்
- சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல்
படத்தின் குறைகள்:
- தேவையற்ற தவிர்த்திருக்க கூடிய கதாபாத்திரங்கள் – குஷ்பூ, மீனா, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன்
- இரண்டு வில்லன்கள்
- நீளமான கதை மற்றும் படம்
முடிவுறை – A BIT SARCASTIC
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியின் தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ் ரஜினியிடம் ‘அண்ணா நான் தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க’ என்பார். அதற்கு ரஜினி ‘நீ தப்பு பண்ணலேம்மா நான்தான் தப்பு பண்ணிட்டேன்’ என்பார்.
அப்போது தியேட்டரே எழுந்து நின்று ‘ஐயோ நீங்க யாருமே தப்பு பண்ணல நாங்கதான் தப்பு பண்ணிட்டோம்’னு கதறுவாங்க பாருங்க அங்க நிக்கறாரு டைரக்டர்
- சங்கர்