\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தமிழ்நாட்டில் சிறார்கள் மீதான பாலியல் வன்முறை

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. நாடு முழுவதும் ஏறத்தாழ 40,000 குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. இவற்றில் 142 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இந்தாண்டு இதுவரையில் 2,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது இந்த அறிக்கை.

சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில், உயர் பள்ளி மாணவிகள் 2 பேரின் தற்கொலைக்குப் பிறகு பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொடர்பான விவாதங்கள் மீண்டும் தலை தூக்கின. இப்படிப்பட்ட சம்பவங்கள் வெளியே தெரியும்போது மட்டும் அதைப்பற்றி உணர்ச்சிகரமாகப் பேசிவிட்டு, பிறகு அவற்றை மறந்துவிடுவது நமக்கு வழக்கமாகி வருகிறது. பாலியல் வன்கொடுமைகள் பற்றி வெளியே தெரிவதை விட பலமடங்கு சம்பவங்கள் வெளியில் தெரியாமலே அமுங்கி விடுகின்றன. உலகளவில், கொரோனா தொடர்பான பொதுமுடக்கக் காலங்களில் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. கைப்பேசி, இணையவழி மூலம் பாலியல் காணொளிகள், தகவல்கள் ஆகியவை மிக எளிதில் சென்றடைந்து காம வக்கிரங்களைத் தூண்டிவிடுகின்றன. இந்த வக்கிரமங்களின் வெளிப்பாடாகக் குழந்தைகளைக் குறிவைக்கின்றனர் சில மிருகங்கள். 

2018 ஆம் ஆண்டு சென்னை அயனாவரம் பகுதி, அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வயது செவித்திறன் குறைபாடுள்ள சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 66வயது வாட்ச்மேன் உட்பட, எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள் என 17 பேர், சுமார் ஏழு மாதங்கள் தொடர் பலாத்காரம் செய்து வந்த கொடுமையைக் கண்டோம்.

அதே ஆண்டு போரூரில், தன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த 6 வயது குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு போதிய ஆதாரமில்லாத காரணத்தால் வெளியே வந்த பின் பெற்ற தாயையே கொன்ற தஷ்வந்த் என்ற கொடுரனைக் கண்டோம்.

பொள்ளாச்சியில் ‘என்னை விட்டுடுங்க அண்ணா..’ என்று கதறிய பெண்ணை வன்புணர்வு செய்து, ஒளிப்படமாக எடுத்து பகிர்ந்த திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், மணிவண்ணன் உள்ளிட்ட பன்னிரெண்டு நாய்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதானார்கள். இந்தக் கும்பல் பள்ளி, கல்லூரி மாணவிகள், குடும்பத் தலைவிகள், அலுவலகம் செல்லும் பெண்கள் என்ற பேதமில்லாமல் எண்ணற்ற பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படமெடுத்து சமூக வலை தளங்களில் பரப்பிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. 

சமூக ஊடக நட்பு என்ற போர்வையில் பெண்களுக்கு வலை விரித்து, பாலியல் பலாத்காரம் செய்து, ஒளிப்படம் எடுத்து மேலும் மேலும் சீரழித்து வந்த நாகர் கோயிலைச் சேர்ந்த காசி எனும் காமப் பித்தனும் தமிழ்நாட்டுக்கு அவமானத்தைத் தேடித் தந்தவன். மருத்துவர், கல்லூரி, பள்ளி மாணவிகளென நூற்றுக்கணக்கான பெண்கள் தன் உடல் மீது மோகம் கொண்டிருந்தனர் என்று கைது செய்யப்பட்டபோது வெற்றிச் சின்னம் காண்பித்துப் பெருமைப்பட்டவன் இவன். 

நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவங்களின் கொந்தளிப்பு அடங்கும் முன்னர், ராசிபுரம் பகுதியில் 12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் கடத்தப்பட்டு 6 மாதங்களாக வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக 75 வயதுடைய நபர் உட்பட ஏழு பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

பொதுவாகக் கல்வியறிவற்ற, பண்பாடற்ற, மனநலம் பாதிக்கப்பட்ட மிருகங்கள் மட்டுமே பெண்களுக்கும், சிறார்களுக்கும் பாலியல் வன்முறைத் தொந்தரவளிக்கும் பாதகத்தைச் செய்வார்கள் என்று நினைத்திருந்தால், அண்மைக்காலச் சம்பவங்கள் அதனைப் பொய்ப்பித்து வருகின்றன. 

2020ஆம் ஆண்டு வியாசர்பாடியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியை 2 மாதங்கள் தொடர்ந்து சீரழித்து வந்தார் தொலைக்காட்சிச் செய்தியாளர் வினோபா. அதிலிருந்து தப்பிக்க, அந்தச் சிறுமியை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் சிறுமியின் தாய். அந்த உறவினரும் சிறுமியை, நண்பர்களுடன் சேர்ந்து 2 மாதங்கள் சீரழித்துள்ளார். தேசியக் கட்சி ஒன்றின் உறுப்பினரான அவரது நண்பரும் இதற்கு உடந்தை. அவரது கட்சி அலுவலகத்தில் வைத்தே அந்தப் பெண் பலமுறை பலவந்தப்படுத்தபட்டுள்ளாள். பின்னர் 12 பேர் அடங்கிய இந்தக் கும்பல், அந்தப் பெண்ணை, வாரத்துக்கு ஒண்ணரை லட்சம் விலை பேசி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். 

 

பிள்ளைகளுக்குக் கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பிக்கும் பெரும் பொறுப்பிலிருக்கும் ஆசிரியர்கள் சிலர் இத்தகைய வன்முறையில் ஈடுபடுவதும் சமீப காலங்களில் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில், 2019ஆம் ஆண்டு தரவுகளின்படி பள்ளிகளில் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொடர்பான, பதியப்பட்ட குற்றங்களின் சராசரி எண்ணிக்கை 25.

பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியைச் சேர்ந்த ராஜகோபாலன், கெவின் ராஜ்; சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியின் நிறுவனர் ஆன்மிகத் தலைவர் சிவசங்கர் பாபா; செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளியின் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் உட்பட சில ஆசிரியர்கள்; செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியைச் சார்ந்த சுமார் 900 மாணவ மாணவியர் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கொடுத்த பாலியல் புகார்; திண்டுக்கல் பகுதியிலுள்ள சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் மீது அங்கு படித்த பல மாணவிகள் கொடுத்த பாலியல் வன்முறை புகார் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ளது கோவை சின்மயா வித்யாலயா பள்ளி, மற்றும் கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகளின் தற்கொலை. இரு வெவ்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவிகளான இவர்கள் ஆசிரியர்களால் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் தங்களுக்குத் தீராத மன உளைச்சலாலும், இந்தக் கொடூரங்களை வெளியில் சொல்ல முடியாத மனக் குமுறலாலும் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டனர். இருவருமே இது குறித்து கடிதம் எழுதியிருந்தாலும், ஒரு மாணவி, “பாலியல் தொல்லையால் சாகிற கடைசிப் பொண்ணு நானாகத்தான் இருக்கணும். எனக்குத் தொந்தரவு கொடுத்தவர்கள் யார் என்று சொல்வதற்கு பயமாக இருக்கிறது” என்று எழுதியலிருந்து அவர் எவ்விதமான அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது விளங்கும். இறக்கப் போகும் தருவாயிலும், உண்மையைச் சொன்னால் தன் குடும்பத்துக்கு என்ன பாதிப்புகள் உண்டாகுமோ என்று நினைத்திருக்கலாம் அவர். ஒரு சில நிமிட உடல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள அப்பாவிக் குழந்தைகளைப் பலியாக்கும் கொடியவர்கள், அதன் பின் அப்பிள்ளைகள் அடையும் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இந்தச் சம்பவங்கள் பள்ளி நிர்வாகத்துக்கு மட்டுமல்லாமல் அங்கிருக்கும் அத்தனை பணியாளருக்கும் அவமானத்தைத் தேடித் தருகின்றன. கரூர் பள்ளி மாணவி, பாலியல் துன்புறுத்தல் சம்பவத்துக்குக் காரணமானவரின் பெயரைச் சொல்லாததால், அனைத்து ஆசிரியர்களும் ‘இவராக இருக்குமோ’ என்ற சந்தேகப் பார்வைக்கும், கிண்டலுக்கும்  உள்ளாயினர். இதனால் மனம் நொந்த ஒரு கணித ஆசிரியரும் தற்கொலை செய்து கொண்டார் என்பது மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  

குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட பெரும்பாலான ஆய்வுகளில் இருந்து கிடைக்கும் வியப்பூட்டும் செய்தி என்னவென்றால், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது முதலில் குழந்தைகள் அதைப் பெற்றோர்களிடம் சொல்லத் தயங்குகின்றனர் அல்லது மீறி சொன்னாலும் அதைப் பெரும்பாலான நேரங்களில் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது ‘களங்கச்’ சுமை வந்துவிடுமே என்று மூடி மறைக்க முயல்கின்றனர். காமக் கொடூரர்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் இந்த அச்சத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

மற்ற குற்றச் சம்பவங்களைப் போலல்லாமல், போக்சோ சட்டப் பிரிவின் கீழ், குற்றச் சம்பவம்  எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருந்தாலும், வழக்குப் பதியப்படலாம். அதாவது 18 வயதுக்குள் பாலியல் பாதிப்புக்கு உள்ளான ஒருவர் எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம். மேலும் பாதிக்கபட்டவர்களின் எதிர்கால நலன் கருதி வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்படும். அதிக பட்சமாக மரண தண்டனை வழங்கக்கூடிய போக்சோ வழக்குகளை மூன்று மாதத்துக்குள் முடிக்கவேண்டும் என்கிறது சட்டம். ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் போதிய ஒத்துழைப்பின்றி விசாரணைகள் தாமதிக்கப்படுகின்றன. 

மனசாட்சியற்ற, சிறார்கள் மீதான பெருங்குற்றங்கள் வெகு சில நாட்கள் செய்தியாகவும், கண்டனங்களாகவும் கடந்து சென்று விடுகின்றன. பாலியல் வன்முறை செய்யப்பட்டு, ஒரு பெண் உயிரிழந்தால் மட்டும்தான் அந்தச் செய்தி பெரிதாகப் பேசப்படுகிறது.  பாலியல் வன்முறைகளின்  எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்ல, இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். தண்டனைக்குட்படாமல் தப்பித்துவிடலாம் என நினைக்கும் குற்றவாளிகளின் ஆதிக்க மனப்பான்மை; மற்றொன்று, கண் முன் நோயாகப் பரவிக்கொண்டிருக்கும் பாலியல் வக்கிரமங்களை உணராமல், செவியில் விழுந்த வெறும் செய்தியாக நினைத்து அமைதியாகக் கடக்கும் சமூகம். இந்த அமைதியைத் தவிர்த்து, இந்தச் சமூகம் எப்போது கொதித்தெழும் என்பதைப் பொறுத்தே இந்தப் பட்டியல் இன்னும் நீளுமா அல்லது குறையுமா என்பது தெரியும்.

  • ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad