\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

(பேச்சு) சுதந்திர இந்தியா

இந்தியா எந்த ஆண்டு சுதந்திரம் பெற்றது என்ற கேள்விக்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் என்று சொல்வீர்களானால் உங்கள் வரலாற்றைத் திருத்திக் கொள்வது நலம். 2014ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் நாள், அதாவது திரு. நரேந்திர மோதி பிரதமராகப் பதவியேற்ற தினத்தன்று தான், இந்தியா சுதந்திரம் பெற்றது. 

தாதாபாய் நெளரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ராமசாமி முதலியார், ரோமேஷ் சந்தர் பட் , மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அனி பெசண்ட், லாலா லஜ்பத் ராய், சர்தார் வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, பகத் சிங், தாந்தியா தோபே, பால கங்காதர் திலக், பிபின் சந்திர பால், செண்பகராமன் பிள்ளை,  ராணி லக்‌ஷ்மி பாய் போன்ற ஆயிரக்கணக்கான தியாகிகள் ஏந்திய பாத்திரத்தில் ஆங்கிலேய அரசு போட்ட பிச்சையைத் தான் சுதந்திரம் எனத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டோம் நாம். இந்த வரலாற்றுப் பிழையைச் சுட்டிக் காட்டி, நாட்டு மக்களுக்கும், உலகுக்கும் உண்மையை உணர்த்தியுள்ளவர், பத்மஶ்ரீ கங்கனா ரனாவத் அவர்கள். ஏற்கனவே இவர் 2021 மேற்கு வங்கத் தேர்தலில் மமதா பானர்ஜி அவர்கள் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் சமயத்தில் ‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2000ஆம் ஆண்டு கால கட்டத்தில் எடுத்ததைப் போன்ற ‘விஸ்வரூபம்’ எடுக்கவேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தவர். இதற்கு முன்பு, ‘ரோகிங்கியா முஸ்லிம் மற்றும் பங்களாதேஷிகளின் துணையுடன் மேற்கு வங்கத்தை மற்றொரு காஷ்மீராக மாற்றுகிறார் ரத்த வெறிகொண்ட மமதா பானர்ஜி’, ‘விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடுவோர் அனைவரும் தீவிரவாதிகள்’ போன்ற பல உண்மைகளை நாட்டுக்கு எடுத்துச் சொன்னவர் இந்த கங்கனா என்பதை நினைவில் கொள்வது அவசியம். பாலிவுட் திரைத் துறைக்குப் போதை மருந்துகள் பெற்றுத் தருவதில் சிவசேனா மற்றும் மஹாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளது என்று இவர் புலனாய்வு செய்து வெளிக் கொணர்ந்த தகவல்கள் அடிப்படையில் இவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக நாட்டின் மூன்றாம் நிலை பாதுகாப்பான ‘Y Plus’ பாதுகாப்பு அளிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அது போலவே தற்போது, ‘1947 காந்திஜி பெற்ற பிச்சையின் மூலமாக இந்தியாவில் ‘இந்திய காங்கிரஸ்’ போர்வையில் ஆங்கிலேயர்கள் தான் தொடர்ந்து ஆண்டு வந்தார்கள்’ என்ற உண்மையைச் சொன்னதற்காகவும் இவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். அதனால் இவருக்கு Z பிரிவு பாதுகாப்பளித்திட வேண்டும். அண்மையில் நாட்டின் நான்காவது உயரிய விருதான ‘பத்மஶ்ரீ’ பெற்றிருப்பதால் ‘Z Plus’ பாதுகாப்பளித்தாலும் தவறில்லை. மக்களை நேரடியாக  அணுகி இதுபோன்ற உண்மைகளைப் பகிர்வதைத் தடுக்கும் வகையில், ‘டிவிட்டர்’ அவரது கணக்கை முடக்கிவிட்டது; தனது சமீபத்திய கண்டுபிடிப்புக்குப் பிறகு ‘இன்ஸ்டாகிராமும்’ தன் கணக்கை நிரந்தரமாக முடக்கிவிடக்கூடும் என அஞ்சுகிறார் கங்கனா. இதனையும் அரசு கவனத்தில் கொண்டு, ஆவன செய்யவேண்டும்.

பத்மஶ்ரீ கங்கனா ரனாவத்தின் இந்தக் கருத்துக்கு, ஆங்காங்கு முகஞ் சுளிக்கின்றனர் சிலர். அவருக்குத் தரப்பட்ட பத்மஶ்ரீ பட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்துகின்றனர். இவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டுங்கள் என்று ‘அஹிம்சை’ பேசினால் சுதந்திரம் கிடைக்காது. ‘பிச்சை’ தான் கிடைக்கும். அப்படி அஞ்சி, நடுங்கி, பதவிக்காக அலைந்து, ஆங்கிலேயர்கள் போட்ட பிச்சையை வாங்கிக் கொண்டவர்கள் தான் நம் தலைவர்கள். இவர்கள் தேசத்துக்காக போர்ப்படை திரட்டிய சுபாஷ் சந்திர போஸைக் காட்டிக் கொடுக்கவும் துணிந்தார்கள். இவர்களில் உங்களின் நாயகர்கள் யாரென்று நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்’ என்று வீரத் திலகமிட்டுள்ளார் ‘தலைவி’ கங்கனா. விரைவில் இவருக்கு ஏதேனுமொரு முக்கிய மாநிலத்தின் ஆளுநர் பதவி கிடைக்க வாழ்த்துவோம்.

இது ஒருபுறமிருக்க ‘நான் இரண்டு இந்தியாக்களிலிருந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் பகடி கவிதை வாசித்த மேடைச் சிரிப்புரையாளர் (stand-up comedian) வீர் தாஸ் மீது ‘தேசத்துரோக’ நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது. 

வாஷிங்டன் டி.சி.யிலுள்ள ‘கென்னடி செண்டரில்’ பேசிய வீர் தாஸ் ‘நான் இரண்டுவகையான இந்தியாவிலிருந்து வருகிறேன். முகக் கவசமணிந்து கைகோர்த்து செல்லும் பிள்ளைகள் கொண்ட இந்தியா, அதே நேரம் முகக் கவசம் ஏதுமின்றி ஆரத் தழுவும் தலைவர்கள் கொண்ட இந்தியா ஆகிய இரண்டிலிருந்து வருகிறேன்; காற்று மாசு குறியீடு 9000 புள்ளிகளிருக்கும் இந்தியாவிலிருந்து வருகிறேன் அதே நேரம் வெட்டவெளியில் மல்லாந்து படுத்து விட்டத்தையும் விண்மீனையும் பார்க்கும் இந்தியாவிலிருந்து வருகிறேன். பகலில் பெண்களைத் தெய்வமாக வணங்கும் இந்தியாவிலிருந்து வருகிறேன் – அவர்களை இரவு நேரங்களில் கூட்டு வன்புணர்வு செய்யும் இந்தியாவிலிருந்து வருகிறேன்; பாலுறவைப் பற்றிப் பேசத் தயங்கும் இந்தியா அதே நேரம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கட்தொகை கொண்ட இந்தியாவிலிருந்து வருகிறேன்; ஒரு புறம், செத்துப் போன ஊடகவியல் துறையில், குளிரூட்டப்பட்ட அறைகளில் சூட் அணிந்து உட்கார்ந்து உணர்வைத் தூண்டிவிடும் செய்கைகளில் ஈடுபடும் கனவான்கள் கொண்ட இந்தியா, மறுபுறம் கையில் சிறிய கணினியுடன் நடுத்தெருவில் நின்று உண்மை பேசும் பெண்கள் கொண்ட இந்தியா; நீல நிறத்தில் தோய்ந்து பச்சை நிறத்தை எதிர்த்து (கிரிக்கெட்) விளையாடும் இந்தியாவிலிருந்து வருகிறேன் – ஆனால் ஒவ்வொரு முறையும் நீலம் பச்சையிடம் தோர்க்கும் போதும் அது காவியாக மாறும் இந்தியாவிலிருந்து வருகிறேன்; மூத்த தலைவர்கள் தங்கள் தந்தையைப் போற்றிப் பேசும் இந்தியாவிலிருந்தும், இளைய தலைவர்கள் தங்கள் அன்னையைப் போற்றிப் பின்பற்றும் இந்தியாவிலிருந்தும் வருகிறேன். உலகத்திலேயே அதிகளவில் 30 வயதுக்கும் கீழானோர் கொண்ட இந்திய நாட்டிலிருந்து வருகிறேன். அவர்கள் அனைவரும் 75 வயதான தலைவர்களையும், அவர்களது 150 வருட சித்தாந்தங்களையும் பின்பற்றும் இந்தியாவிலிருந்தும் வருகிறேன்; எந்தவொரு தகவல் கிடைத்தாலும் பிரதமருக்காக அக்கறை (care for the PM) காட்டும் இந்தியாவிலிருந்து வருகிறேன். அதே நேரம் ‘பிரதமரின் அக்கறை’ (PM cares) குறித்த எந்தத் தகவலும் கிடைக்காத இந்தியாவிலிருந்தும் வருகிறேன்; ஆங்கிலேயரை விரட்டி அடித்த பின்னரும் அரசாங்கத்தை ‘ஆளும் அரசு’ (Ruling party) என்றழைக்கும் இந்தியாவிலிருந்து வருகிறேன்; எங்களில் பெரும்பான்மையோர் ‘வெஜிடேரியன்’கள் எனப் பெருமைப்படும் இந்தியாவிலிருந்து வருகிறேன். அதே நேரம் அவற்றை விளைவிக்கும் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொல்லுபவர்களைக் கொண்ட இந்தியாவிலிருந்தும் வருகிறேன்; எங்கும் நேரத்துக்குச் செல்லாதப் பண்பு கொண்ட இந்தியாவிலிருந்தும், ‘கோவின்’ தளத்தில் (கோவிட் தடுப்பூசிக்குப் பதிவு செய்யும் இணையதளம்) வாய்ப்புக்காக நேரத்துக்கு முன்பே முட்டி மோதும் இந்தியாவிலிருந்தும் வருகிறேன்; வேலைக்காரர்களும், டிரைவர்களும் நிரம்பிய இந்தியாவிலிருந்து வருகிறேன். அதே நேரம் அவரவர்களின் வேலையைச் செய்து கொள்ளும் அமெரிக்காவுக்கு வரப் போட்டி போடும் இந்தியர்கள் நிரம்பிய நாட்டிலிருந்தும் வருகிறேன்;

டிவிட்டரில் பாலிவுட் நடிகர்களால் பிளவுபட்டு கிடக்கும் இந்தியாவிலிருந்து வருகிறேன் அதே நேரம் தியேட்டரில், இருளில் அதே பாலிவுட் நடிகர்களை அமைதியாய்ப் பார்த்து ரசிக்கும் கூட்டம் கொண்ட இந்தியாவிலிருந்தும் வருகிறேன்; இந்து, கிறித்துவம், இஸ்லாம், பெளத்தம், யூதமென ஏராளமான மதத்தினர் கொண்ட இந்தியாவிலிருந்து வருகிறேன், ஆனால் நாங்கள் அண்ணாந்து பார்ப்பது ஒரு விஷயத்தைத் தான் – பெட்ரோல் விலை; அனாவசியமாகக் கூச்சல் போடும் இந்தியாவிலிருந்து வருகிறேன், அவசியமான சமயங்களில் அமைதியாயிருக்கும் இந்தியாவிலிருந்தும் வருகிறேன்; நான் அழுக்கு நிரம்பிய, ஆபாச ஹாஸ்யங்களைச் சொல்வதாய்க் குற்றஞ்சொல்லும் இந்தியாவிலிருந்து வருகிறேன். அவர்களின் மன அழுக்கைச் சட்டைகளில் துடைத்துக் கொள்ளும் இந்தியாவிலிருந்தும் வருகிறேன்; நான் சொல்பவற்றைக் கேட்டு இதில் நகைச்சுவை எங்கே இருக்கிறது என்று கேட்கும் இந்தியாவிலிருந்து வருகிறேன் அதே நேரம் இவன் பேசுவது அத்தனையும் கேலிக்கூத்துதான் என்று வாதிடும் இந்தியாவிலிருந்தும் வருகிறேன்; குடிசை வீட்டுத் தாழ்வாரங்களில் அமர்ந்து இணையத்தில் தைரியமாக கருத்துத் தெரிவிக்கும் மக்கள் கொண்ட இந்தியாவிலிருந்தும், அடுக்கு மாடிக் கட்டடங்களில் அமர்ந்து கருத்துத் தெரிவிக்க அஞ்சும் மக்கள் கொண்ட இந்தியாவிலிருந்தும் வருகிறேன். இங்கு பேசி முடித்தபின் இந்தியாவுக்கு திரும்பிச் செல்லப் போகிறேன். எந்த இந்தியாவுக்குப் போவது? இரண்டுக்கும் தான்; எந்த இந்தியாவை நினைத்துப் பெருமைப்படுவது? அவற்றில் ஒன்றைத் தான். இரண்டில் எந்த இந்தியா என்னைப் பற்றி பெருமைப்படும்?  இரண்டுமல்ல. நான் போகும் முன்பு உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எந்த இந்தியாவில் நீங்கள் வாழ விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கக் கூச்சலிடுங்கள். நன்றி!”

சுமார் ஏழு நிமிடங்களுக்கும் குறைவாகப் பேசிய வீர் தாஸின் பிரதானக் கருத்துகள் இவை. ஆங்கிலத்தில், மிக நேர்த்தியாகவும், ஆழமாகவும் கருத்துகளைச் சொல்லும் விதத்தில் அவர் பேசியது அனைவரையும் கவர்ந்ததாகக் கட்டுக் கதைகள் சொல்லப்படுகின்றன.

மேடைச் சிரிப்புரை என்ற போர்வையில் இவரது இந்தப் பேச்சுக்கள் ஒரு நாட்டை, அதன் நடவடிக்கைகளை, அதன் தலைவர்களை எவ்வளவு கொச்சைப்படுத்தியுள்ளது பார்த்தீர்களா? அமெரிக்காவில் இந்தக் கவிதை நகைச்சுவை இந்தியாவின் மீதான பார்வையை எப்படி மாற்றியுள்ளது கவனித்தீர்களா? இவர் தெரிவிக்காவிட்டால் அவர் சொன்ன விஷயங்கள் யாருக்கும் எந்த வகையிலும் தெரிந்திருக்க வழியில்லை. இதற்கு இந்தியாவில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பயந்து போய் ‘நான் கேலிக்காக மட்டுமே பேசினேன். இந்தியாவைச் சிறுமைப்படுத்தும் நோக்கம் இதில் துளியுமில்லை’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாலும், பத்மஶ்ரீ கங்கனா ரனாவத், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தேசப் பற்றாளர்கள் எனப் பலரும் மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிகாரம் படைத்த அரசியல் தலைவர்கள் வீர் தாஸை உடனடியாக தேசத் துரோக அடிப்படையில் கைது செய்ய வற்புறுத்துகின்றனர். 

தமிழில் ‘புகழ்ச்சி வஞ்ச அணி’ (இகழ்வது போல் புகழ்தல்), ‘வஞ்சப் புகழ்ச்சி அணி’  (புகழ்வது போல் இகழ்தல்), நையாண்டி, பரிகாசம், விகடம், கேலி, கிண்டல், சிலேடை எனப் பலவகையில் கருத்தை நாசூக்காகச் சொல்லும் வழிமுறைகள் உள்ளன. சிலரது பேச்சைக் கேட்கும் பொழுது ஹாஸ்யமாக இருந்தாலும் அதில் பொதிந்துள்ள கருத்துகள் மிக உயர்ந்தவையாக இருக்கும். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். ராதா, பத்திரிக்கையாளர், நடிகர் எனப் பல்திறன் கொண்ட சோ ஆகியோர் இவ்வகையான ‘நையாண்டி’களில் வல்லவர்கள். ஆங்கிலத்தில் இதனை ஸர்காசம் (Sarcasm) என்பார்கள். இவற்றிலும் பல வகைகள் உள்ளன. Self-deprecating – தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டு செய்யும் நையாண்டிகள் (நடிகர் வடிவேலு), Deadpan – கடுமையான பாவனையுடன் சொல்வது (நடிகர் தங்கவேலு), Brooding – எதிர்மறையான கருத்துகளை ஆதங்கத்துடன், வேடிக்கையாகச் சொல்வது (நடிகர் செந்தில்), Juvenile – குழந்தைத்தனமான, எரிச்சலூட்டும் விதத்தில் பேசுவது (பல நடிகர்கள்) ஆகியவை குறிப்பிடும் வகையான நையாண்டிகள். 

இவற்றில் கங்கனா ரனாவத்தின் பேச்சுகளையும், வீர் தாஸின் பேச்சுக்களையும் எந்த வகையில் சேர்ப்பது என்பதை உங்கள் பொறுப்பாக விட்டுவிடுகிறேன். ஆனால் பத்மஶ்ரீ கங்கனாவின் ‘தலைவி’ படத்தை இதுவரை பார்க்கவில்லையெனில் உடனடியாகப் பார்த்துவிடுங்கள். விரைவில் தொடங்கும்  ‘தலைவி-2’ படத்துக்காகக் காத்திருங்கள்.

– ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad