ஸ்பைடர்மேன்-நோ வே ஹோம்
நான் சிறுவயதில் கார்ட்டூன் நெட்வொர்கில் வரும் ‘ஸ்பைடர்மேன்’ பார்த்து ரசித்ததுண்டு. காமிக்ஸ் புத்தகம் வாங்கி படித்த அனுபவமில்லை. அமெரிக்காவில் 2002வில் முதன்முறையாக ‘ஸ்பைடர்மேன்’ படத்தைத் திரையரங்கில் பார்த்துப் பிரமித்துப்போனேன். என்ன ஒரு கற்பனை? சரி பழைய கதை எதற்கு, இப்பொழுது வந்துள்ள ‘ஸ்பைடர்மேன் – நோ வே ஹோம்’ படத்தைப் பற்றி பார்ப்போம்.
இந்தப் படம் ‘ஸ்பைடர்மேன்’ வரிசையில் வரும் மூன்றாவது படம். இரண்டாவது படம் ‘ஸ்பைடர்மேன் – ஃபார் ஃபிரம் ஹோம்’ படமுடிவில் ஸ்பைடர்மேன் தான் பீட்டர் பார்கர் என்று உலகத்துக்கே ஒரு டிவி சேனல் ஒளிபரப்பியது. அது மட்டுமல்ல, ஸ்பைடர்மேன் தான் ‘மிஸ்டீரியோ’ என்ற ஹீரோவைக் கொன்றான் என்ற பழியையும் ஒளிபரப்பியது. ஆனால் ‘மிஸ்டீரியோ’ நல்லவன் அல்ல என்பது யாருக்கும் தெரியாது. அந்தப் புள்ளியில் தான் இந்தத் திரைப்படம் துவங்குகிறது. தன்னுடைய அடையாளம் உலகிற்குத் தெரிந்தபிறகு ஸ்பைடர்மேன் படும் கஷ்டம், அவனை சுற்றியுள்ள நண்பர்கள், அத்தை எல்லோருக்கும் வரும் கஷ்டம் நன்றாகச் சித்தரித்து உள்ளார்கள்.
இந்தக் கஷ்டத்தை சரி செய்ய பீட்டர் தன் நண்பன் டாக்டர் ஸ்ட்ரேஞ் என்ற மந்திரவாதியை நாடுகிறான். அவன் எப்படி உதவி பண்ண முயற்சித்தான் அதனால் வரும் பின்விளைவுகள் தான் முதல் பாதி. டாக்டர் ஸ்ட்ரேஞ் எல்லோருக்கும் ஸ்பைடர்மேன் தான் பீட்டர் என்ற நினைவு போகவேண்டும் என்று மந்திரம் போடுகிறான். ஆனால் இதில் பீட்டர் வேறு சில வேண்டுகோள்களை இணைக்க பிரச்னை ஆரம்பமாகிறது. இதில் பல-உலகங்கள் (Multiverse) என்ற ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள். அதாவது, நம்மைப் போலவே பல உலகங்களில் மனிதர்கள் உள்ளார்கள் எனவும், டாக்டர் ஸ்ட்ரேஞ் செய்த மந்திரத்தினால் அந்த உலகில் உள்ள வில்லன்கள் இந்த உலகிற்கு வருவதாக காட்டியுள்ளனர். நான் முன்பு சொன்னது போல், மார்வெல் படைப்பாளிகளின் கற்பனைத் திறனை வியக்கத்தக்க விதத்தில் காட்டியுள்ளது.
புது படம் இருக்கட்டும், கொஞ்சம் பழைய புராணத்துக்குப் போவோம். மார்வெல் சில ஆண்டுகளுக்கு முன்பு பணச் சிக்கலில் வீழ்ந்தபொழுது, ‘ஸ்பைடர்மேன்’ படமாக்கும் உரிமையை சோனி கம்பனிக்கு விற்றுவிட்டது. சோனியும் மூன்று ஸ்பைடர்மேன் படங்களை (அமேஜிங் ஸ்பைடர்மேன் வரிசையில் 3 படங்கள்) எடுத்தது. இது நடக்கையில் டிஸ்னி, மார்வெல் கம்பனியை விலைக்கு வாங்கிவிட்டது. சோனி அமேஜிங் ஸ்பைடர்மேன் மூன்றாவது படம் எடுக்க முனைந்தபோது, மார்வெல் CEO கெவின் ஃபைகி, சோனி நிறுவனத்திடம் பேசி, சோனி-மார்வெல் கைகோர்த்து எடுத்த படங்கள் தான் இந்த இந்த மூன்று படங்களும்.
ஆமாம், இதை நான் என் சொல்கிறேன்? காரணம் உள்ளது.இந்த படத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ் என்ற மந்திரவாதி போட்ட மந்திரத்தில், பல-உலகத்தில் உள்ள வில்லன்கள் வந்தார்கள் அல்லவா. அவர்களுடன், சோனி தயாரிப்பில் வந்த ஸ்பைடர்மேன் மற்றும் அமேஜிங் ஸ்பைடர்மேன் படங்களில் நடித்த அந்த ஸ்பைடர்மேன்-கள் இந்த உலகிற்கு வருகின்றனர்.
இவர்கள் மூன்று பேரும் எப்படி வில்லன்களை வீழ்த்துகிறார்கள். டாக்டர் ஸ்ட்ரேஞ் தனது மந்திரத்தில் பாதிப்பை எப்படி சரிசெய்கிறார் என்பது தான் கதை. இதில் அமேஜிங் ஸ்பைடர்மேனில் நடித்த ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் மிக அருமையாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக இருந்த செண்டேயா இதில் ஹீரோயின். கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை நன்கு செய்துள்ளாள். இந்தப் படத்தில் குடும்ப செண்டிமெண்ட் , சண்டை காட்சி, ஏன் பஞ்ச் டயலாக் கூட இருக்கிறது. பாடல் காட்சி மட்டும் இருந்தால் கண்டிப்பாக தமிழ்ப் படம்தான். ஆக மொத்தம் இந்தப் படத்தை கண்டிப்பாக குழந்தைகளுடன் சென்று பார்க்கலாம்.
-பிரபு
Tags: disney, marvel, No way home, sony, Spiderman