\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

2021இல் மின்னிய பாடல்கள்

2021 ஆம் ஆண்டு வெளியாகி பிரபலமாகிய பாடல்களைக் காணும்போது, பெரும்பாலும் ஆட்டம் போட வைக்கும் பாடல்களே அதிகம் இடம்பிடித்துள்ளன. அதற்கு என்ன காரணம் என்ற ஆய்வைத் தொடங்கினால், 2022 தொடங்கிவிடும் என்பதால், நாம் நேரே அந்தப் பாடல்களைக் காண சென்று விடலாம்.

வாத்தி கம்மிங்

இந்தப் பாடலின் பிரபல்யத்தைச் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், யூ-ட்யூபில் பத்து வருடத்திற்கு முன்பு வெளியான ‘Why this kolaveri’ பாடலின் சாதனையை இந்தாண்டு வெளியான இப்பாடல் தாண்டிவிட்டது எனலாம். இவ்விரண்டு பாடல்களுமே அனிருத் இசையமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களை மட்டுமில்லாமல் பிற மொழியினரையும், நாட்டினரையும் இன்ஸ்டண்டாக ஆட்டம் போட வைத்த பாடல் இது.

கண்டா வர சொல்லுங்க

கர்ணன் படத்திற்கான விசிட்டிங் கார்டாக இப்பாடல் அமைந்தது. இழந்த தங்கள் தலைவனை நினைத்து பாடும் பாடலாகப் பலருக்கு இப்பாடல் அமைந்துவிட்டது. சென்னை கானா, வெஸ்டர்ன் ராப் மட்டுமல்ல நாட்டுப்புறப்பாடல்களிலும் சிறப்பாக இசை படைக்கும் திறனை, இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் வெளிபடுத்தியிருக்கிறார்.

புஜ்ஜி

கர்ணன் படத்தில் நடித்த அதே தனுஷ், அதற்கு இசையமைத்த அதே சந்தோஷ் நாராயணன் என்றாலும், ‘ஜகமே தந்திர’த்தில் வேறு பரிமாணத்தில் தங்களை வெளிப்படுத்தியிருந்தனர். சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து இப்பாடலைப் பாடியிருந்தவர் அனிருத். இசையமைப்பாளர் அனிருத்தை விட பாடகர் அனிருத் ரொம்பவே பிசி. அவர் பாடும் பாடல்களில் ஹிட் ரேட் ரொம்பவே அதிகம்.

வம்புல தும்புல

இப்பட்டியலில் மீண்டும் ஒரு சந்தோஷ் நாராயணன் பாடல். அவருடைய ‘ஹோம் கிரவுண்ட்’ எனும் போது சொல்லவா வேண்டும்? இந்த ஏரியாவில் அவர் கிங் ஆச்சே!! பறை, ட்ரம்ஸ், ட்ரம்ப்பெட் ஆகியவற்றின் இசை கலவை, அம்மண்ணின் மைந்தர்களை மட்டுமல்ல, கேட்போர் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.

 

பேர் வச்சாலும்

1990இல் வெளிவந்த ’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான பாடலை, ரீ-மிக்ஸ் என்ற பெயரில் பெரிதாக மாற்றியமைக்காமல், ஒலியை மட்டும் நவீனமாக மெருகேற்றி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2கே கிட்ஸ்களிடம் யுவன் கொண்டு சென்று ஹிட்டடித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா வாசுதேவன், ஜானகி குரலில் இப்பாடலை கேட்பது நாஸ்டாலஜிக் உணர்வை மட்டுமல்லாமல், காலம் தாண்டி இப்பாடல் தன்னுள் வைத்திருக்கும் எனர்ஜியையும் உணர வைத்தது.

செல்லம்மா

மீண்டும் ஒரு இசையமைப்பாளர் + பாடகர் அனிருத் பாடல். பாடலை எழுதியவர் சிவகார்த்திக்கேயன். இது ஒரு ஹிட் கூட்டணி. மீண்டும் இந்தச் செல்லம்மா பாடல் மூலம் ஹிட்டடித்திருக்கிறார்கள். படம் வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்பே, இப்பாடல் இணையத்தில் வெளியாகி ஹிட்டாகியிருந்தது. படத்தில் தேவையே இல்லாத பாடல் தான் என்றாலும், படம் முடிந்து கடைசியில் இணைத்திருந்தார்கள். ரசிகர்கள் நின்று பார்த்துவிட்டு சென்றது, இப்பாடல் அவர்களிடையே ஏற்படுத்திய எதிர்பார்ப்பைக் காட்டியது.

சாரச் சாரக் காற்றே

இமான், ஸ்ரேயா கோஷல், சித் ஸ்ரீராம் ஆகியோர் எந்தப் பெர்முடேஷன் காம்பினேஷனில் இணைந்தாலும் பாடல் டாப்புக்கு சென்று விடும். மூன்று பேருமே இணைந்தால் சொல்லவா வேண்டும்!! இந்த ஆல்பத்தில் தனித்துத் தெரிந்த பாடல். அதுவும் அந்த ‘திந்தாக்க தகிட’ பிரமாதம். இவ்வருடமும் பல நல்ல பாடல்கள் கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் இமான். அதில் பல பாடல்கள், ஓடாத படங்களில் சென்று ஒளிந்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டம் டம்

ஏற்கனவே இசையமைப்பாளர் தமன் ஒரு கல்யாணப்பாடல் கொடுத்து, கல்யாண வீடுகளில் எல்லாம் அந்தப் பாடல் தான் ஒலிப்பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது ஒரு நிச்சயதார்த்தப் பாடலை இப்படத்தில் கொடுத்து, அதுவும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் இப்பாடல் பின்னணியில் மணமக்கள் ஆடும் பல வீடியோக்களைக் காண வேண்டியிருக்கும்.

மெகரசைலா

இன்னொரு கல்யாணப் பாடல். இது முஸ்லிம் வீட்டு திருமணப்பாடல். அப்துல் காலிக் (எ) யுவன் இசையமைத்த இந்தப் பாடலும் கல்யாணக் கொண்டாட்டப் பாடல். கதையைப் பாடல் வரிகளில் ஒளித்து வைத்திருக்கும் மதன் கார்க்கியின் புத்திசாலித்தனம் அருமை. மாஷா அல்லா என்று தான் முதலில் எழுதியிருந்தாராம். அப்படிப் பாடிக்கொண்டு ஆட முடியாது என்பதால் மெகரசைலா என்றொரு புது வார்த்தையைக் கண்டுபிடித்திருக்கிறார் மதன் கார்க்கி.

ஓ சொல்றியா மாமா

சமீப சில ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் காணாமல் போயிருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத். இப்போது புஷ்பா படம் மூலம் மீண்டும் அவர் பாடலைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை ராஜலஷ்மி பாடிய ‘சாமி சாமி’ பாடல் தான் இப்படத்தின் புல்லிங் ஃபேக்டராக இருக்கும் என்று எண்ணியிருந்தவர்களை, படம் வெளிவருவதற்குச் சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்பாடல் திரும்பி பார்க்க வைத்து ஆங்காங்கே விவாதிக்கவும் வைத்து விட்டது. ஆண்ட்ரியா மயக்கும் குரல், விவேகாவின் விவகாரமான பாடல் வரிகள், தேவி ஸ்ரீ பிரசாத்தின் துள்ளல் இசை என இப்பாடல் எங்கும் ப்ளஸ்.. ப்ளஸ்.. ப்ளஸ்..

இப்பட்டியலில் உள்ள பாடல்கள் படம் வெளியான வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஹிட் கணக்கில் அனிருத், சந்தோஷ், இமான், யுவன் ஆகியோர் முன்னணியில் உள்ளனர். இளையராஜா ஒரு தமிழ்ப்படத்திற்கும், ஒரு தெலுங்கு படத்திற்கும் இந்தாண்டு இசையமைத்திருந்தார். சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் சில ஹிந்தி படங்களிலும், தமிழில் நவரசாவில் (வெப்சீரிஸ்) ஒரு எபிசோடிற்கும் இந்தாண்டு இசையமைத்திருந்தார். ஹிந்தி மிமியில் ‘பரமசுந்தரி’ பாடல் பெரிதாக ஹிட்டானது. தொடர்ந்து இரண்டாவது வருடமாக இந்தாண்டும் வித்யா சாகர், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் இசையமைத்து ஒரு பாடலும் வரவில்லை. இதன் மூலம் தமிழ் திரையிசை உலகில் தற்சமயம் காற்று எந்தப் பக்கமாக வீசுகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

 

  • சரவணகுமரன்

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad