2021இல் தடம் பதித்த திரைப்படங்கள்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டு எனலாம். கோவிட் காரணமாகச் சென்ற வருடம் பெரும்பாலான நாட்கள் திரையரங்குகள் அடைபட்டு கிடக்க, புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும் கலாச்சாரம் தொடங்கியது. இந்தாண்டு திரையரங்குகள் முதலில் 50% பிறகு 100% என்று திறக்கத் தொடங்கினாலும், ஓடிடியில் படம் வெளியிடுவது தொடர்ந்தது. திரைப்படங்களுக்கான இன்னொரு வெளியீட்டுத் தளமாக ஓடிடி உருவானது. அது மட்டுமில்லாமல், திரையரங்கில் வெளியான பெரிய படங்களே, இரண்டு மூன்று வாரங்களில் ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று ரசிகர்களில் ஒரு பிரிவு உருவாகினர்.
இந்தாண்டு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த பத்துப் படங்களை, அது வெளிவந்த வரிசையில் இங்குக் காணலாம். உங்களுக்குப் பிடித்து இப்பட்டியலில் இடம்பிடிக்காத படங்கள் இருந்தால், தவறாமல் பின்னூட்டத்தில் பதிவு செய்யவும். ஏன் பிடித்தது என்பதை மறக்காமல் குறிப்பிடவும்.
மாஸ்டர்
இப்படம் வெளியான சமயத்தில் 50% இருக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மேலும் மேலும் இருக்கைகள் போடப்பட்டு, இத்திரைப்படம் ஓடியது. கொரோனா பயம் ஒருபக்கம் இருந்தாலும், அவ்வளவு மக்கள் திரையரங்கிற்கு ஓடி வந்தனர். நல்லவேளையாக, இதனால் கொரோனா அதிகரித்தது என்று எந்தப் புள்ளிவிபரமும் வெளியாகவில்லை. விஜய், விஜய் சேதுபதி என்று இரு நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இப்படத்தில் காட்சிகளை ரசிக்கும்படி அமைத்திருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சில காட்சிகளில் விஜய் ரசிகர்களிடமும் சேர்த்துக் கைதட்டல்கள் வாங்கினார் விஜய் சேதுபதி. பயந்து போயிருந்த திரையுலகினருக்கு நம்பிக்கை அளித்தது மாஸ்டர் எனலாம். தற்சமயம் அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.
கமலி ஃப்ரம் நடுக்காவேரி
பிப்ரவரியில் வெளியான இத்திரைப்படம் நன்றாக ஓடி, வசூலை வாரி குவித்தது என்று சொல்ல முடியாது என்றாலும் பார்த்தோரைக் கவர்ந்த படம் என்று உறுதியாகக் கூற முடியும். பள்ளி/கல்லூரி மாணவியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருந்தார். மாணவப்பருவத்தில் உண்டாகும் ஒரு காதல், நடுக்காவேரியில் இருக்கும் கமலியை எப்படி ஐஐடி வரை பயணிக்க வைக்கிறது என்றும், அங்கு அவள் கல்வியைத் தாண்டி கண்டடைவது என்ன என்றும் மெல்லிய நீரோடை போன்ற திரைக்கதையில் காட்டியிருந்தார் இயக்குனர் ராஜசேகர் துரைசாமி. இப்படத்தை யூ-ட்யூபில் இலவசமாகக் காணலாம்.
மண்டேலா
யோகிபாபு தனது அசட்டுத்தனமான காமெடியை விட்டு, கதையின் நாயகனாக நடித்த படம் இது. தேர்தல் அரசியல், சாதிய பிரிவினை, அரசு இயந்திரத்திலிருக்கும் கோளாறு ஆகியவற்றை நகைச்சுவையாக, பொட்டிலடித்தாற் போல் காட்டியிருந்த இப்படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வின் இயக்கியிருந்தார். படு சீரியஸான விஷயங்களை மெல்லிய நகைச்சுவைவுடனே காட்டியிருந்த இப்படம், திரையரங்கில் வெளியாகவில்லை. நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியாகியிருந்தது.
கர்ணன்
90களில் பரபரப்பாகப் பேசப்பட்ட கொடியன்குளம் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் தனது பாணியில் கூறியிருந்த கதை, இந்தக் கர்ணன். ’பரியேறும் பெருமாள்’ போல இதிலும் சாதியப்பிரச்சினையை, பல குறியீடுகளால் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர். கொஞ்சம் ஓவராகவே குறியீடுகள், புராண ஒப்பீடு என்று போயிருந்தார். தனுஷ் வழக்கம் போல் தனது சிறப்பான நடிப்பைக்கொடுத்திருந்தார். திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், பிறகு அமேசான் ப்ரைமில் வெளியானது.
சார்பட்டா பரம்பரை
கொரோனா இரண்டாம் அலையில் திரும்பத் திரையரங்குகள் மூடப்பட, இரஞ்சித் இயக்கிய இத்திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. 70களின் சென்னை குத்துச்சண்டை வரலாற்றுக்குள் வாத்தியார்-மாணவன், அம்மா-பையன், கணவன் – மனைவி எனப் பல உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களைக் கதையாக அமைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கதையின் பின்னணியில் காட்டப்பட்டிருந்த சமரசமற்ற உண்மை அரசியல் நிகழ்வுகள், படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருந்தது.
கசட தபற
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கியிருந்த இத்திரைப்படத்தில் ஆறு கதைகள் சொல்லப்பட்டிருந்தன. கியாஸ் தியரி, வேண்டேஜ் பாயிண்ட் என்று ஒவ்வொரு கதைகளுக்கு இடையே ஒரு தொடர்பை, அதே சமயம் வித்தியாசமான முறையில் காட்டியிருந்ததில் இயக்குனரின் புத்திசாலித்தனம், காண்போரை ’அட’ போட வைத்தது. பெரிய நடிகர் பட்டாளம், நிறைய டெக்னிஷியன்கள் என்று பலரின் உழைப்பில் வெளியான இத்திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியானது. யூ-ட்யூபில் கட்டண முறையில் காணக்கிடைக்கிறது.
கோடியில் ஒருவன்
அறிமுக இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இத்திரைப்படம் வெளியான சமயத்தில் திரையரங்குகள் 50% ரசிகர் வருகைக்கு அனுமதிப்பட்டிருந்தது. அரசியலில் ஏமாற்றப்பட்டு, ஒடுக்கப்பட்ட தனது அம்மாவின் கனவை நனவாக்க சென்னை வரும் நாயகன் சந்திக்கும் சவால்கள் என்னென்ன, அவற்றை மீறி அவனால் தனது இலக்கை அடைய முடிந்ததா என்ற கதையைத் தற்போதைய சமூக அவலங்களின் பின்னணியில் சுவாரஸ்யமாகக் காட்டியிருந்த படம். அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிற்து.
வினோதயச் சித்தம்
மேடை நாடகமாகப் பல ஆண்டுகளாகப் போடப்பட்டு வந்த இக்கதையைத் திரைப்படமாகக் கொண்டு வந்துள்ளார் சமுத்திரக்கனி. தன்னால் தான் தன் குடும்பம் மற்றும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது, தான் இல்லாவிட்டால் என்னாகுமோ என்று நினைப்பில் இருக்கும் ஒருவன் இறந்தால் அவனுடைய எண்ணம் என்னவாக இருக்கும் என்று கருவில் தொடங்கும் இந்தக் கதையில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். காலனாக நடித்துள்ள சமுத்திரக்கனி இந்தப் படத்தின் மூலம் சுவையான பாடம் எடுத்திருக்கிறார். படம் ஜீ5 ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
ஜெய் பீம்
தீபாவளி வெளியீடாக அமேசான் ப்ரைமில் சூர்யா நடித்த இத்திரைப்படம் வெளியானது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, உண்மையான மனிதர்களின் நிஜக் கதையை, மனதைப் பதற வைக்கும் விதத்தில் எடுத்திருந்தார் இயக்குனர் ஞானவேல். முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் மூலம் இயக்குனருக்கு தெரிய வந்த இந்தச் சம்பவம், இப்படத்தின் மூலம் இருளர் சமூக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை உலகம் முழுக்க அறியவைத்திருக்கிறது. காலண்டர் சர்ச்சை என்று சில விமர்சனங்கள் எழுந்தாலும், IMDB ரேட்டிங்கில் முன்னணிக்கு சென்ற இப்படம், அம்மக்கள் மீது அரசின் பார்வையை கொண்டு செல்ல உதவியிருக்கிறது.
மாநாடு
கொரோனா லாக்டவுனினால் நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்த இப்படம், ஒருவழியாகப் பலவித போராட்டங்களுக்குப் பிறகு திரைக்கு வந்து, மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்றது. டைம்லூப் என்ற புதுவித கதையை மக்களை ரொம்பவும் குழப்பாமல் சுவையாகப் பார்க்கும்படி எடுத்திருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நாயகன் சிம்புக்கு ஒரு வெற்றிப்படமாக இது அமைந்தது. யார் ஹீரோ? என்று சந்தேகம் எழுப்பும்படியாக நடித்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. முன்னதாக திரையரங்கில் 100% பார்வையாளர் என்று அனுமதித்திருந்த அரசு, இப்படத்தின் வெளியீட்டு சமயத்தில், தடுப்பூசி சான்று இருந்தால் மட்டும் அனுமதி என்று உத்தரவிட்டு இருந்தது. தற்சமயம் சோனி லைவ்வில் இப்படம் காணக்கிடைக்கிறது. (சோனி லைவ் அமெரிக்காவில் வருவதில்லை)
இந்த வரிசையின் மூலம் தமிழ் சினிமா 2021 ஆம் ஆண்டுக் கொரோனாவைக் கடந்து வந்த பாதையும், ஓடிடி தளத்தின் வளர்ச்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பத்து என்ற எண்ணிக்கைக்குள் சுருக்கிக் கொண்டதால் சில படங்களும், ஆண்டின் இறுதியில் வெளிவந்த சில படங்களும் இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. நீங்கள் ரசித்த படங்கள் ஏதேனும் இப்பட்டியலில் இடம்பிடிக்கவில்லை என்றால் பின்னூட்டப்பகுதியில் குறிப்பிடுங்கள்.
- சரவணகுமரன்
Tags: 2021, Tamil Movies, Top 10