\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2022

Filed in கவிதை, வார வெளியீடு by on December 29, 2021 0 Comments

கண் விழித்து நான் எழுந்தேன்….

கனவின் நங்கை கண் முன்னே!

கிள்ளி எனை நான் உணர்ந்து

காண்பது நனவென உறுதி செய்தேன்!

கன்னியவள் அருகே கனிவுடனே வந்து

கவனத்தை நெருடி காதலுடன் பருகி

கள்ளமற்ற சிரிப்பை கரையின்றி வழங்கி

குறும்புப் பார்வையில் குழப்பம் விலக்கினாள்!

 

காலம் காட்டி நாட்களாய்க் கிழிக்கப்பட

கருவிருந்து வெளி வந்தேன் என்றாள்!

காலச் சக்கரம் ஓராண்டு சுழன்றிட

கடமை மாறாது அடுத்ததாய் உதித்தேனென்றாள்!

 

நானே ஆண்டு இரண்டாயிரத்து இருபத்தொன்று,

நாசமிகு கொரோனாவை நாதியற்றுத் துரத்தியே

நானிலம் வாழும் நல்லவர் அனைவர்க்கும்

நன்மையைக் கொணர்ந்திட நானிங்கு வந்தேன்!

 

நவின்ற அவளின் நயனம் கண்டு

நயந்து வியந்து நகைப்புடன் அணைத்தேன்!

நன்மை பகர்ந்திட நாடி வந்திட்ட

நங்கையைப் புகழ்ந்து புத்தாண்டு பாடிட்டேன்!

 

இருவரும் ஒன்றாய் இனிதே வாழ்ந்திட

இணைந்து பேசி இயைந்து தீர்மானித்தோம்!

இனிவரும் தினங்களில் இன்னல்கள் நீங்கி

இருப்பது மகிழ்வொன்றே என்றிட விழைந்தோம்!

 

மாதங்கள் மூன்று மறைந்தே போனது!

மானுடர் துயரும் மறைந்திடாது தொடர்ந்தது!

மாந்தரை மரணம் மாளாது தீண்டியது

மாறாதோ இத்துயர், மறையாதோ இதுவென

 

வருடம் முழுவதும் வலிகள் தொடர்ந்திட,

வந்திடும் உறவுகளை வாராதிடச் செய்திட,

வளர்ந்திடும் துயரங்கள் விலகிடாது துரத்திட,

வருவதும் போவதும் வேதனை ஆனதே!

 

மருத்துவ மனைகளும் மனிதரால் நிரம்பிட

மரண ஓலங்கள் மண்மீது நிறைந்திட

மறந்திட நினைக்கும் மாதங்கள் இவையாகிட

மதங்களும் இறைவனும் மனிதரைக் கைவிட்டதோ?

 

கூர்ந்து பார்க்கையில், குடைந்து ஆய்கையில்

கடினமாய்த் தொடர்ந்திட்ட காலத்திலும் பயனுண்டு!

கவலையை மறந்திட கனவுகள் நனவாக

கனிவான நினைப்பிலே கருத்துகள் ஆய்ந்திடுவோம்!!

 

கனவேக வாழ்க்கையில் குடும்பத்துடன் நேரம்!

கலைகளைப் பயின்றிட கருத்தான ஆர்வம்!

குழந்தைகள் பள்ளியில் குறிப்பான கவனம்!

குடும்பமாய் இணையத்தில் குதூகலமாய்க் கூட்டம்!

 

நித்திய வாழ்வில் நிச்சயம் ஏதுமில்லையென்ற

நினைவை மனதினில் நிறுத்திடும் பக்குவம்!

நினைத்துப் பார்க்கையில் கற்றவை ஆயிரம்!

நியாயமான உணர்வுடன் நல்லதைப் போற்றிடுவோம்!!

 

எதிர்வரும் காலம் இனிமையாய் மலர்ந்திடும்

என்றிருந்த உணர்வுடன் என்றும் மகிழ்ந்திருப்போம்!

எங்கும் வாழ்ந்திடும் எல்லா மாந்தருக்கும்

எழிலான புத்தாண்டு என்றே வாழ்த்திடுவோம் !!!

 

வெ. மதுசூதனன்.

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad