\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பனிப்பூக்கள் Bouquet – ஓமிக்ரான் பொங்கல்

 

தமிழ் வருடங்களுக்கு விஷு, விளம்பி, பிலவ என்று பெயர் வைப்பது போல, இனி ஆங்கில வருடங்களை நினைவில் வைத்துக் கொள்ள, கோவிட்-19, டெல்டா, ஒமிக்ரான் போன்ற பெயர்கள் தேவைப்படும் போல இருக்கிறது. சூறாவளிக்கு விதவிதமாகப் பெயர் வைத்து கூப்பிடுவதைப் போல, வருடாவருடம் தொடர்ந்து வரும் கொரோனா வகைகளுக்கும் விதவிதமான பெயர்களைப் பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கலாம். எப்படி 2005இல் வந்த சூறாவளியை கத்ரீனா என்ற பெயருக்காகவே நினைவில் வைத்திருக்கோம். அது போல, அழகான பெயர்களைச் சூட்டலாம். சூறாவளி போலக் கொரோனாவும் பேரழிவைத் தானே கொடுத்துவிட்டுச் செல்கிறது!!

2019க்கு முன்பு வரை, ஒவ்வொரு வருடம் பிறக்கும்போதும், அந்த வருடம் குறித்த நல்ல நல்ல எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால், கடந்த சில வருடங்களாக நடைபெறுவதைக் காணும்போது, போன வருடம் போல் இல்லாமல் இருந்தால் போதும் என்ற எதிர்பார்ப்பே பலரிடம் தோன்றி வருகிறது. இந்த வருடம் எல்லாம் சரியாகிவிடும் என்று பார்த்தால், பழையபடி புதிய தொற்று, ஓமிக்ரான், இஹு என்று புதுப் புது வகைகள் தோன்றுகின்றன. தொற்று எண்ணிக்கைகள் கூடுகின்றன. இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்படுகின்றன. ம்ம்ம். ஆரம்பித்து ஒரு வாரம் கூட ஆகவில்லை.

2018 இல் ஆரம்பிக்கப்பட்ட RRR திரைப்படமும், 2019இல் ஆரம்பிக்கப்பட்ட வலிமை திரைப்படமும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்தப் பொங்கலுக்கு வெளிவர இருந்தன. ஓமிக்ரான் புண்ணியத்தில் மீண்டும் தள்ளிப்போய் இருக்கிறது. சில மாநிலங்களில் திரையரங்குகள் முழுமையாக மூடப்படுகின்றன. சில மாநிலங்களில் குறைவான எண்ணிக்கையில் பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர். இதனால், திரையரங்குகள் திறந்திருந்தால், சில பல சிறு திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. முழுமையாக மூடப்பட்டால், இந்தப் பொங்கலுக்குச் சின்னத்திரையில் படங்களைக் காண வேண்டியது தான்.

முதல் அலையில், இரண்டாம் அலையில் தப்பித்தவர்கள் பலரும் இந்த மூன்றாம் அலையில் சிக்கிக்கொண்டதாகத் தெரிகிறது. ஓமிக்ரான் விரைவாகத் தொற்றும் பண்புடையதாக இருப்பது ஒரு காரணம். எல்லாம் சரியாகிவிட்டது என்ற நம்பிக்கையில் பலரும் ஊர் சுற்ற, உலகம் சுற்ற கிளம்பியது இன்னொரு காரணம். நல்லவேளை, இதன் பாதிப்புப் பெரியதாக இல்லை. சின்னதொரு காய்ச்சல், சளி, இருமல் என்று சரியாகிவிடுகிறது. இதற்கு காரணம் ஓமிக்ரான் பலம் குறைந்ததா அல்லது போட்டுக்கொண்ட தடுப்பூசியின் பலமா என்று தெரியவில்லை. எது எப்படியோ, தொடர்ந்து மாற்றமடைந்துகொண்டே இருக்கும் தொற்றின் அடுத்த வெர்ஷன் எப்படி இருக்குமோ, ஜாக்கிரதையாக இருப்பது தான் நம்முடைய திட்டமாக இருக்க வேண்டும்.

கிருஸ்துமஸ், புத்தாண்டு தினங்களுக்கு வெளியே சுற்றியவர்கள், பொங்கலுக்கு வீட்டில் இருந்து கொண்டாடினால் நல்லது. மினசோட்டாவில் சொல்லத் தேவையில்லை. வெளியே பனியும், குளிரும் பொங்கல் வைத்து கொண்டிருப்பதால், எப்படியும் வீட்டுக்குள் தான் நாம் பொங்கல் வைக்க வேண்டும். ஜன்னல் வழியே சூரியன் (வந்தால்) பார்த்துக்கொள்ள வேண்டியது தான். தமிழ்நாட்டில் அரசு வழங்கும் பொங்கல் பொருட்கள் அடங்கிய பையில் சூரியன் படம் இருப்பதாக, எதிர்கட்சி ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. தாங்கள் எதிர்த்து அரசியல் செய்யும் கட்சியின் சின்னம் என்பதால் சூரிய வழிபாடே கூடாது என்பார்களோ!!.அப்படிப் பார்க்க தொடங்கினால், பானை, கரும்பு, மாடு, விவசாயி என்று பல சின்னங்களும், அதற்குத் தொடர்புடைய கட்சிகளும் இருக்கிறதே. ஆக, பூதக்கண்ணாடியை ஓரமாக வைத்துவிட்டு, பொங்கலை, தமிழர் திருநாளாகச் சிறப்பாகக் கொண்டாடுவோம்.

பொங்கல் வாழ்த்துகள்!!

  • சரவணகுமரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad