சர்தார் உத்தம்
சென்ற ஆண்டு 2021 அக்டோபரில் அமேசான் ப்ரைமில் வெளியான சர்தார் உத்தம் பற்றிய தாமதமான பதிவு இது. இந்தத் திரைப்படத்தை ஒரு சிட்டிங்கில் பார்த்து முடிப்பது என்பது சிரமமாகிப் போனது. ஆனால், ஒரு சிட்டிங்கில் பார்த்து முடிப்பது உசிதம். சில பேரின் வாழ்க்கை வரலாறு, கற்பனைக்கெட்டாதபடி இருக்கும். உத்தம் சிங்கின் வாழ்க்கையும் அப்படிபட்டது தான்.
நாம் அனைவரும் ஜாலியான்வாலா பாக் படுகொலை பற்றி அறிந்திருப்போம். பகத் சிங் குறித்து அறிந்திருப்போம். உத்தம் சிங் என்ற பெயர் தென்னிந்திய வரலாற்றுப்பக்கங்களில் தட்டுப்பட்டது சொற்பமே. உத்தம் சிங் யார் என்று தேடி பார்த்தால், ஒரு மசாலா படத்தின் ஹீரோ தோற்றம் கிடைக்கிறது. அவர் செய்த செயலைப் பார்த்தாலும், அதில் ஒரு மசாலா படத்தின் கதை கிடைக்கிறது. பஞ்சாப்பில் 1919 இல் நடந்த ஜாலியான்வாலா பாக் படுகொலையைக் காணும் உத்தம் சிங், அங்கிருந்து லண்டன் சென்று, அந்தப் படுகொலைக்குக் காரணமாக இருந்த ஆங்கிலேய ஆளுனரான மைக்கேல் டையரை சுட்டு கொன்று பழி வாங்கியிருக்கிறார்.
அட்டகாசமான கதையா இருக்கே! என்று விறுவிறுப்பான ஆக்ஷன் படத்தை எதிர்பார்த்து, இப்படத்தைப் பார்த்தீர்கள் என்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். அந்தக் காலகட்டத்தின் பொறுமையான போராட்டக் குணம், தேசப் பக்தி, நெஞ்சோடு சுமக்கும் வலி ஆகியவற்றைக் கடத்தியிருக்கிறதா என்று கேட்டால், பல மடங்காகக் கடத்தியிருக்கிறார் இயக்குனர் சூஜித் சர்கார் என்று தாராளமாகச் சொல்லலாம்.
அந்தக் காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் முன்னும் பின்னுமாகக் காட்சிகளில் வருகிறது. உத்தம் சிங் பஞ்சாப் சிறையில் இருந்து வெளியில் வருவதில் படம் தொடங்குகிறது. பாஸ்போர்ட் தயார் செய்துகொண்டு ரஷ்யா சென்று, அங்கிருந்து கப்பலில் லண்டன் செல்கிறார். அங்கிருக்கும் இந்தியர்களைச் சந்தித்து, தன்னைத் தயார் செய்துகொண்டு, ஒரு கூட்டத்தில் பேசும் மைக்கேல் ஓ’டையரை சுட்டு கொல்கிறார். தப்பிச் செல்லாமல் சரணடையும் உத்தம் சிங்கிற்கு, தூக்குத் தண்டனை கிடைக்கிறது. சிறையில் தனது கதையைச் சொல்லும் உத்தம் சிங், ஜாலியன்வாலா பாக் நிகழ்வையும், அந்த இரவையும் விவரிக்கிறார். அது காட்சிகளாக விரியும் போது, பார்க்கும் நமக்குப் பகீரென்றுகிறது. எந்த நிலையில் பார்த்தாலும் வலிக்கும் காட்சிகள் அவை. படம் முடியும் போது, மனம் பாரமாவது நிச்சயம்.
வரலாற்றுப்படங்களை எடுக்கும் போது இருக்கும் சிரமங்களை நாம் அறிவோம். அந்த நிலப்பரப்பிற்கு ஏற்ப, அக்காலக்கட்டப் பொருட்களை உருவாக்கி காட்சிப்படுத்துவதில் இருப்பது ஒரு வகையான சிரமம் என்றால், இதில் காட்சிக்குக் காட்சி, இடம் மாறுகிறது, நாடு மாறுகிறது, மக்கள் மாறுகிறார்கள். எதிலும் குறை தெரியாமல் பிரமாதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அக்காலத்திய லண்டன் தெருக்களைக் காட்டியிருப்பதில் இந்தப் படக்குழு ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள். தேசிய விருது பெற்ற நடிகர் விக்கி கவுசல், உத்தம் சிங்காக அருமையாக ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருக்கிறார்.
2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய படவேலைகளை, அந்தாண்டின் இறுதிக்குள் முடித்துவிட்டாலும், படம் வெளியாவதில் காலதாமதம் ஆகியிருக்கிறது. கொரோனா காரணமாகத் தடைப்பட்ட இதன் திரையரங்கு வெளியீடு, முடிவில் ஓடிடி வெளியீடு என்று மாறி, சென்ற ஆண்டு இறுதியில் அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ளது. படத்தின் நீளம், வேகம் ஆகியவை நமது பொறுமையைச் சோதித்தாலும், முன்பே கூறியது போல், அத்தகைய பொறுமை இப்படத்திற்குத் தேவைப்படுகிறது. இருபதாண்டு பொறுமையுடன் தனது சபதத்தை நிறைவேற்றிய உத்தம் சிங்கை மீண்டும் நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. ஆளுனர் Dwyer, அதிகாரி Dyer (ஆளுநர் மைக்கேல் ஓ டையரின் – Michael O’ Dwyer – உத்தரவின் பேரில் ஜாலியன்வாலா பாக் படுகொலையை அரங்கேற்றியவர் ஜெனரல் ரெஜினால்ட் ஹாரி டையர் – Reginald Harry Dyer) போன்ற பெயர்களும், முன்பின் மாறி மாறி நகரும் காட்சிகளும் சிறிது நேரம் குழப்பிவிட்டன. கடைசி நாற்பது நிமிடங்களில், நம்மை ஜாலியன்வாலா பாக் மைதானத்தில், செத்து மடியும் அந்தக் கூட்டத்தினுள் நிற்க வைத்து பதற வைத்துவிடுகிறார்கள்.
சென்ற ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான இந்தியப் படங்களின் பட்டியலில் இப்படம் முன்னணியில் இருந்திருக்கிறது. சுடும் உண்மையின் மூலம் இங்கிலாந்து மிகவும் தாக்கப்பட்டிருப்பதாக நினைத்து, இப்படத்தைத் தள்ளி வைத்துவிட்டு, தமிழ்ப்படமான ‘கூழாங்கல்’லை அனுப்பிவைத்தார்கள். தற்சமயம், அப்படமும் போட்டியில் இருந்து வெளியே வந்துவிட்டது. வெல்கிறதோ, இல்லையோ, இப்படத்தை அனுப்பி வைத்திருக்க வேண்டும், உலகம் இப்படத்தைப் பார்த்திருக்க வேண்டும், எளியவர்கள் மீதான மூடத்தனமான, முரட்டுத்தனமான அதிகாரம் உருவாக்கும் வலியை உணர வைத்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.
வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாகக் காணுங்கள்.
- சரவணகுமரன்