\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காணாமல் போன பாடலாசிரியர்கள்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு பாடலாசிரியர்கள் கோலொச்சியிருக்கிறார்கள். தமிழ் திரையிசை பாடல் வடிவத்தை உருவாக்கிய சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கி, பாடல் படைப்பாக்கத்தில் உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், மேத்தா, வைரமுத்து, கங்கை அமரன், பிறைசூடன், பழனிபாரதி, அறிவுமதி, நா.முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி, தாமரை, சினேகன், விவேகா, மதன் கார்க்கி எனப் பலரும் பங்களித்துள்ளனர். ஒவ்வொருவரும் மொழியைத் தங்களது பாணியில் கையாண்டுள்ளனர். தங்களது மொழியில் அன்றைய காலக்கட்டத்து நாயகர்களைப் பாட வைத்துள்ளனர். இதில் சில பாடலாசிரியர்கள் மேல் அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இப்போது பாடலாசிரியர்களே எங்கே போனார்கள் என்றே கேள்விகள் எழும்புகின்றன.

கால மாற்றத்திற்கு ஏற்ப ரசனைகள் மாறும் என்பது உண்மை. ரசிகர்களின் ரசனைக்கேற்ப பாடலாசிரியர்கள் மாறியிருக்கிறார்கள். ”நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ!! நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ!!” என்று எழுதிய அதே வாலி, பின்னாட்களில் “அக்குபஞ்சர் நீடிலா, டர்கி சிக்கன் நூடுலா” என்று பாட்டெழுதியிருக்கிறார். ”வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்” என்று பாடல் எழுதிய வைரமுத்து, ”வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி” என்றும் எழுதியிருக்கிறார். ”கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை, காத்திருந்தால் பெண் கனிவதில்லை” என்று பாட்டெழுதிய நா. முத்துக்குமார், ”சன் ரைஸ பார்த்தில்லை கண்ணின்மணி, எங்களுக்கு ஏர்லி மார்னிங் பத்து மணி” என்றும் எழுதியிருக்கிறார்.

பாடலின் சூழலுக்கேற்ப, பாடல்கள் எழுதப்படுவதில் பிரச்சினையில்லை. பாடல் எழுத தனியே பாடலாசிரியர் என்றொருவர் தேவையில்லை என்ற நிலைக்கு வந்ததே, இப்பொழுது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. திரையுலகில் தங்களது துறையைத் தாண்டி மற்றொரு துறையில் பங்களித்தோர் இருக்கிறார்கள். பிரகாசித்தும் இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் இளையராஜா பாடியிருக்கிறார், பாடல்கள் எழுதியும் இருக்கிறார். திரைக்கு வெளியே வெண்பா இயற்றி, இசைமைத்து இருக்கும் இளையராஜா, திரைக்கென்றால் கிராமத்து இசை கலைஞன், எளிமையான பாட்டாளியின் மொழியில் பாடல்களை எழுதியிருக்கிறார்.

இதயக் கோயில் படத்தில் வரும்,

“இதயம் ஒரு கோவில்

அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன்”

நாயகன் படத்தில் வரும்,

”பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்

மண்ணுக்குப் போகிற உலகத்திலே

பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்

தின்னா பசியது தீர்ந்திடுதா

அடி ஆத்தாடி நான் பாட்டாளி

உன் கூட்டாளி ஹோய்”

போன்ற பாடல் வரிகள், அக்காலத்தில் எழுதிய மற்ற எந்தப் பாடலாசிரியர்களின் படைப்புக்கும் குறைந்ததாகத் தெரியவில்லை.

அது போலவே, நடிகர் கமலஹாசன் படங்களுக்குக் கதை எழுதியிருக்கிறார், இயக்கியிருக்கிறார். அந்தப் படங்களில் பாடல்களும் எழுதியிருக்கிறார். படத்தில் வரும் அந்தக் கதாபாத்திரத்தின் மொழியில் எழுதுவது அவரின் சிறப்பம்சம். அவர் எழுதிய, இயக்கிய ஹே ராம் படத்தில் வரும்,

”நான் என்ற சொல் இனி வேண்டாம்

நீ என்பதே இனி நான் தான்

இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை

இதுபோல் வேறெங்கும் சொர்க்கமில்ல”

 

அது போலவே, அவர் எழுதி இயக்கிய விருமாண்டி படத்தில் வரும்,

“உன் கூட நான் கூடி இருந்திட

எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா

நூறு ஜென்மம் வேணும், அத கேட்குறேன் சாமியே

நூறு ஜென்மம் நமக்குப் போதுமா

வேற வரம் ஏதும் கேட்போமா?

சாகா வரம் கேட்போம் அந்தச் சாமிய அந்தச் சாமிய”

போன்ற வரிகள் ரசிகனிடம் கடத்தும் உணர்வுகள், அந்தப் படத்திற்குத் தேவையானவை.

 

பிறகு, Little superstar சிம்பு, Poetu தனுஷ் ஆகியோர் நடிப்பைத் தாண்டி பாட்டெழுத வந்தனர். சிம்பு அவர் பங்குக்கு ”லூசு பெண்ணே”, ”வேர் இஸ் தி பார்ட்டி”, ”எவண்டி உன்ன பெத்தான்?”, “பீப் சாங்” என்று எழுதி தள்ள, தனுஷும் “வொய் திஸ் கொலவெறி”, ”வாட் எக் கர்வாட்” என்று பாடல்கள் எழுதி தமிழ் பாடல்கள் வரலாற்றை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றனர். இதில் எஸ்டிஆரை ஒப்பிடும் போது தனுஷுன் சில பாடல் வரிகள், திரைப்பாடல்களின் தரத்துடன் இருப்பதாகவே தெரிகிறது. அவர் தான் எழுதுகிறாரா என்ற சந்தேகத்தையும், ஆச்சரியத்தையும் எழுப்புகிறது.

உதாரணத்திற்கு, அவர் முதலில் பாடல் எழுதிய படமான “மயக்கம் என்ன” படத்தில் வரும் “பிறை தேடும் இரவிலே”, அடுத்தப் படமான ”3” படத்தில் வரும் “கண்ணழகா காலழகா”, பிறகு எழுதிய “போ இன்று நீயாக”, ”வெண்பனி மலரே”, “இளமை திரும்புதே” போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். கேட்போரை மதிக்கும்வகையில் எழுதுகிறார் எனலாம்.

இது போனற பாடல்கள் எல்லாம் ஹிட் ஆன பிறகு, பாடலாசிரியர்களே முழுக்க இப்படி எழுத தொடங்கிவிட்டனர். ஊதா கலரு ரிப்பன், ஜித்து ஜில்லாடி, டங்கா மாரி ஊதாரி, பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து போன்ற வரிகளால் தமிழ்ப் பாடல்கள் நிரம்பத் தொடங்கின. ரசிகர்களின் காதுகள் கற்பழிக்கப்பட்டன. ஒரு வரிக்கூடப் புரிந்து விடக் கூடாது என்பது பாடலின் முதல் தகுதியானது. ரசிகர்களின் ரசனைக்கேற்ப பாடல்கள் எழுதப்படுகின்றன என்று வழக்கம்போல் காரணம் கூறப்பட்டது.

தற்சமயம் தமிழ் திரையுலகின் ஹாட் பாடலாசிரியர்கள், நடிகர் சிவகார்த்திக்கேயனும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தான். ஒரு பாடலின் வெற்றி, யூ-ட்யூப் பார்வைகள் மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. பாடல் கேசட்டுகள், சிடிகள் வழக்கொழிந்து போன இக்காலத்தில், யூ-ட்யூப் சானல்கள், ஸ்பாடிஃபை, ஆப்பிள் மியூசிக் போன்ற இசை செயலிகள் தான் சோனி, திங் மியூசிக் போன்ற இசை நிறுவனங்களின் வருமான ஆதாரங்களாகிவிட்டன. இணையத்தில் எவ்வகைப் பாடல்கள் ரசிக்கப்படுகின்றன என்பது நிறுவனங்களுக்கு இதன் மூலம் தெரிய வர, இந்த நிறுவனங்கள் படம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு யார் இசையமைக்க வேண்டும், யார் பாட்டெழுத வேண்டும் என்று பரிந்துரைக்கும் நிலைக்கு வந்து விட்டனர். ஆக, எங்குச் சுற்றினாலும் ரசிகர்களின் ரசனை என்று இடத்தில் வந்து நிறுத்தி விடுகின்றனர்.

”அவ முன்னால நிக்குறேன், அவ கண்ணால சொக்குறேன், நான் தன்னாலே சிக்குறேன், பின்னால சுத்துறேன், உன்னால சாவுறேன்”, ”கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்மறு கும்மறு கும்மறு கும்மாறா”, ”மெழுகு டாலு நீ, அழகு ஸ்கூல்லு நீ, எனக்கு ஏத்தவ நீதான்டி…” போன்ற பாடல் வரிகள் தான், தற்போதைய தமிழ் சமூகத்தின் ரசனை என்றால் வேறு ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad