\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

புஷ்பா – தி ரைஸ்

 

சேல சேல சேல கட்டுனா…

குறு குறு குறுன்னு பாப்பாங்க !!!

குட்ட குட்ட கௌன போட்டா… 

குறுக்கா மறுக்கா பாப்பாங்க !!!

 

சேல ப்ளௌஸோ, சின்ன கௌனோ…

ட்ரெஸ்ல ஒண்ணும் இல்லங்க !!!

ஆச வந்தா, சுத்திச் சுத்தி…

அலையா அலையும் ஆம்பள புத்தி !!!

 ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா …

ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா ??

     தமிழ் .

 

சீர சீர சீர உட்ற…

கண் கண் பிட்கொண்டு நோட்த்தார !!!

புட்டா புட்ட கௌனு தொட்ர

ஹிந்தே ஹிந்தே பீள்த்தார !!!

 

சீரே அல்லா கௌனு அல்லா…

உட்டா பட்டேல் ஏனய்த்தி !!

நீவ் நோடோத்ரளக எல்லா ஆய்த்தி 

நிம்ம புத்தி இல்லா ஷுத்தி !!!

 

ம் அந்த்தியா மாவா… ம்ஹூம் அந்தியா மாவா… 

ம் அந்த்தியா மாவா… ம்ஹூம் அந்தியா மாவா !!!!

     கன்னடம்

 

கோகா கோகா கோகா கடித்தே… 

கொர கொர மண்ட்டு சூஸ்த்தாரு !!! 

பொட்டி பொட்டி கௌனே வெஸ்த்தே…

பட்டி பட்டி சூஸ்த்தாரு !!!

 

கோகா காது, கௌனு காது

கட்டு லோனா ஏமுந்தி…

மீ கள்ளல்லோனே அந்தா உந்தி…

மீமக புத்தி, வங்க்கர புத்தி !!!

 

ம்ம் அண்ட்டாவா மாவா ம்ஹூம் அண்ட்டாவா மாவா .. 

ம்ம் அண்ட்டாவா மாவா ம்ஹூம் அண்ட்டாவா மாவா ??

    தெலுங்கு

 

சாடி சாடி பெஹன்கே சாடி…

ஆயே தோ உஸ்க்கே கோரே !!!

சோட்டி சோட்டி ஸ்கர்ட் பி ஜோ

பெஹன் கே ஆயே தோ கோரே !!!

 

சோட் சாடி, சோட் ஸ்கர்ட்…

இன் கப்டோன் ஸே க்யா ஹோத்தா !!!

நஸ்ரே கந்தி, சோச் கந்தி…

மர்த் ஹே பின் பெஹந்தி லோட்டா !!!

 

ம்ம் போலேகா யா… ம்ஹூம் போலேகா சாலா …

ம்ம் போலேகா யா… ம்ஹூம் போலேகா சாலா ??

    ஹிந்தி

 

இவையனைத்தும் சொல்வது ஒன்றே. நான்கு மொழிகளில் ஆண்களின் பலவீனத்தை, பெண்களின் பின்னால் கவர்ச்சிக்காக அலைவதைப் பாடலில் காட்டுகின்றனர். பாடகியின் (தமிழில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்) குரலைக் கேட்டால் எந்த விஸ்வாமித்ரனும் கவிழ்ந்து விடுவான், அத்தனை கவர்ச்சி. முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று; நான்கு மொழிகளிலும் இந்தப் பாடலும், இந்தப் படத்திலிருந்து இன்னும் இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட். பொதுவாக, டப்பிங் செய்யப்படும் படங்களில் ஒரிஜினல் மொழி தவிர்த்து, மற்ற மொழிகளில் பாடல்களை முழுவதுமாக வெற்றியடையச் செய்வது அவ்வளவு எளிதான செயலன்று. இசைக்குப் பொருந்தி வரவேண்டும், வாயசைப்புக்குச் சரியாக இருக்க வேண்டும், பொருள் ஒன்றாக அமைய வேண்டும், கலாச்சாரப் பதிவுகள் பொருத்தமாக இருக்க வேண்டும்; இவையனைத்தும் பொருந்தி வரும் பட்சத்தில், அந்தந்த மொழிகளில் பாடல்கள் வெற்றி பெருகின்றன. அந்த விதத்தில், சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில், தேவிஶ்ரீ பிரசாத்தின் இசையில், மூன்று பாடல்கள் பெருமளவு வெற்றி பெற்றுள்ளன. இந்தப் படத்தின் முதல் ஹீரோ தேவிஶ்ரீ பிரசாத் என்று சொல்லுமளவுக்கு பாடல்களும், பின்னணி இசையும் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்றின் முத்தான வரிகளைத்தான் பல்வேறு மொழிகளில் மேலே பார்த்தீர்கள். 

தெலுங்கு சூப்பர் ஸ்ட்டார் (ஐகான் ஸ்டார்) அல்லு அர்ஜுன் நடித்து, சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் “புஷ்பா – தி ரைஸ்”. தெலுங்கைத் தொடர்ந்து தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் வரவேற்றைப் பெற்றுள்ளது. வெளிவந்த முதல் ஐம்பது நாட்களில் 365 கோடி ரூபாயை வசூலித்து, பாக்ஸ் ஆஃபிஸ் சாதனை படைத்துள்ளதாகப் புள்ளி விபரம்.

செஞ்சந்தனம் எனப்படும் செம்மரக் கடத்தல்காரர்கள் குறித்த கதை. கடத்தல் தொழிலில் கூலி வேலையாளாகப் பயணத்தைத் தொடங்கும் கதாநாயகன், சிண்டிக்கேட்டின் தலைவனாகும் அளவுக்கு விரைவாக வளர்வது எப்படி என்பதே கதை. உடல் பலமும், துணிச்சலும், தன்னம்பிக்கையும், சில யுக்திகளும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு விரைவில் வளர்கிறான் நாயகன். 

இந்தியச் சினிமாக்களுக்கு ஒன்றும் புதிதான கதையல்ல. எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி, ரஜினி காலத்தில் வளர்ந்து, அஜித் காலத்தில் செழித்து, நேற்றைய மழையில் முளைத்த காளான் கதாநாயகன் வரை தொடரும் இந்தக் கதையை நகர்த்திக் கொண்டு செல்லும் விதம், படமாக்கம், சில நூதன சிந்தனைகள், சற்றும் தயக்கமறக் காட்டப்படும் ரத்தம் என இவற்றைக் கொண்டே ரசிகர்களை அயர்ச்சியடையாமல் கொண்டு சென்றுள்ளார் டைரக்டர் சுகுமார் பண்ட்ரெட்டி. இவர் திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்னர் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவராம். கண்டிப்பாக, இவரின் முந்தைய படங்களைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியுள்ளார். கதாநாயகனின் ஃப்ளாஷ் பாக், அதையொட்டிய சச்சரவுகள், சிந்தனைகள் – இவற்றைச் சற்றுக் குறைத்திருக்கலாம். இக்காட்சியமைப்புகள் கண்டிப்பாக போரடிக்கச் செய்துவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். மற்றபடி கமர்ஷியலாக ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ள படம்.

ஒளிப்பதிவு மிகவும் அருமை. மிரோஸ்லா ப்ரோஸெக் (Miroslow Brozek) எனும் போலந்து நாட்டைச் சேர்ந்தவர் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் இதற்கு முன்னர், ஒரு சில தெலுங்குப் படங்களிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆளரவம் அதிகமில்லாத, ஆந்திர மாநில சேஷாசலம் காடுகளையும், அடர்ந்து வளர்ந்து உயர்ந்து, பச்சைப் பசேலென நிற்கும் அழகான மரங்களையும், பாலைத் தோற்கடிக்கும் வெண்மையுடன் வெள்ளமாய் ஓடி விழும் அருவிகளையும், மைல் நீளத்தில் கட்டப்பட்ட செயற்கை வடிவத்தை ஊடுருவி இயற்கையாய்ப் பாயும் ஆற்றின் பொலிவு, அளவாய் வெட்டி அழகாய் அடுக்கப்பட்ட செஞ்சந்தன மரங்கள் என எங்கு பார்த்தாலும், அழகு, அழகு, கொள்ளையழகு கேமரா!!

நடிகர் அல்லு அர்ஜுன் அசத்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். அறிமுகக் காட்சியில் பார்க்கையில் அவர்தான் இப்படத்தின் கதாநாயகன் என்று சத்தியம் செய்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்; அந்த அளவுக்குச் சாதாரணத் தோற்றம். ஒரு எகத்தாளமான பார்வை, இடது தோள்பட்டையை ஒருபுறம் உயர்த்தி, கிட்டத்தட்ட ஏதோ ஊனமுற்றவர் போலக் காட்டிக் கொண்டு செல்லும் நடை, கிராமியத் தமிழிலில் ஒரு அசத்தல் (குரல் கொடுத்தவர் யார்?) எனப் படம் முழுவதும் முழுமையாக ஆக்ரமித்துள்ளார் அல்லி அர்ஜுனா. கன்னட நடிகை ரஷ்மிகா மந்தண்ணா அவருக்கு ஈடு கொடுக்குமளவுக்கு தோற்றம், ஆண்பிள்ளைத் தனமான அசைவுகள் என ரசிக்கும்படியே செய்துள்ளர். ஒரு சில இடங்களில், விருமாண்டி அபிராமியை நினைவு படுத்துகிறார். 

ஐம்பது படங்களுக்கு மேல் நடித்து, பல படங்களைத் தயாரித்து, இயக்கி, தேசிய விருது, கேரள மாநில விருது, மற்றும் பல விருதுகளை வென்ற, மலையாளத் திரையுலகில் பிரபலமான ஃபஹத் ஃபாஸில் புஷ்பராஜின் (புஷ்பாவின்) கொட்டத்தை அடக்க வரும் காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகிறார். இவரின் பங்களிப்பு, புஷ்பா பாகம் இரண்டில் வெளிப்படும் என்று நம்புவோம். பாகம் ஒன்றில் சொல்லிக் கொள்ளுமளவுக்கு ஒன்றுமில்லை.

கிட்டத்தட்ட சிரிப்பு போலீஸ் போல படத்தின் முதல் பாதியில் வரும் போலிஸ் ஆஃபிஸர் ஷத்ரு பரோட்டா சூரியை நினைவு படுத்துகிறார். இவர் வரும் முதல் காட்சியிலிருந்தே, இவரால் பெரிய அளவு எதுவும் சாதிக்க இயலாது என்பது தெளிவாகி விடுகிறது. 

பல வில்லன்கள்; எவருக்கும் மற்றவரின் உயிரின்மீது மரியாதையில்லை. கண்ணிமைக்கும் நொடியில் மற்றவரின் கழுத்தறுப்பது — நிஜமாகவே நாக்கிற்கு அடியிலிருந்து ஒரு பிளேட் எடுத்து மற்றவரின் கழுத்தை நொடிக்குள் அறுப்பது– இவர்களின் பொழுதுபோக்கு. இந்த வில்லன் கூட்டத்தின் இடையில், கழுத்தறுத்து இறந்து கிடக்கும் ஒருவனின் பக்கத்தில் “இதே பொழப்பாப் போச்சு, தரையெல்லாம் ரத்தம் பண்ணாதீங்கடான்னா கேக்குறானுங்களா” என்று அலட்சியம் பேசுவதும், “எப்பயுமே மேலேய பாத்துக்கிட்டு இருக்கக் கூடாது மாமா, சில நேரம் கீளயும் பாக்கணும்” என்று சொல்லி வெற்றிலை எச்சியைக் காரின் பக்கவாட்டில் வழிய வீட்டு, காரைக் கிளப்பச் சொல்ல, கார் நின்று கொண்டிருந்த இடத்தில் மண்ணில் உயிரோடு புதைக்கப்பட்ட ஒருவன் மெதுவாக அசைவது தெரிவதும், ஈவு இரக்கமில்லாத வில்லத்தனம் காட்டும் வில்லனின் மனைவியாக வரும் அனுசுயா பாரத்வாஜ், பழைய கவர்ச்சி நடிகை அனுரதாவை நினைவு படுத்துகிறார். இவரும் ஒரு சந்தர்ப்பத்தில், படுக்கையின்மீது தாவி, நாக்கின் அடியிலிருந்து பிளேடை எடுத்து ஒருவரின் கழுத்தை அறுக்கிறார் (அவர் யாரென்று சொன்னால், படம் பார்க்காதவர்களின் சுவாரஸ்யம் குன்றிவிடும் என்பதால் தவிர்க்கிறோம்!). கதாநாயகனின் தோழனாக நகைச்சுவை செய்யும் மனிதர் நன்றாகவே செய்துள்ளார். (பாக்யராஜின் மண்ணாங்கட்டியை நினைவுபடுத்துகிறார்). இன்னும் பல நடிக, நடிகையர். பெரும்பாலானவர்கள் அவர்களவு பங்கை நன்றாகவே செய்துள்ளனர், பாராட்டுகள் இயக்குநரைத்தான் சேர வேண்டும்.

படத்தின் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாவை வெகுவாகப் பாராட்டலாம். “ம்ம் சொல்றியா மாமா….” பாடல் நம்மைப் போன்ற ஜடங்களைக்கூட அசைய வைத்து விட்டது. பிரபல கதாநாயகி சமந்த்தா அக்கினேனி (மன்னிக்கவும், சமந்த்தா ரூத் பிரபு) இந்தப் பாடலுக்கு மட்டும் ஆடுகிறார். நட்புக்காக என்று நம்புவோம்.

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கு தேவிஶ்ரீ பிரசாத்தின் இசை. குறிப்பாக மூன்று பாடல்கள் அனைவரையும் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசையும் அருமை. கதாநாயகன் நூற்று ஐம்பது கோடி மதிப்புள்ள ஐம்பது டன் செஞ்சந்தனங்களை லாவகமாகப் பதுக்குமிடத்தில் வரும் பின்னணி இசை குறிப்பிடத்தக்கது.

நான் பாக்குறன் பாக்குறன்…

பாக்காம நீ எங்க போற !!

நீ பாக்குற பாக்குற… 

எல்லாம் பாக்குற என்ன தவிர !!

காணாத தெய்வத்தை

கண் மூடாம பாக்குறியே ….

கண் முன்னே நான் இருந்தும்

கடந்து போகிறியே !!

பார்வ… கற்பூர தீபமா

ஸ்ரீவள்ளி பேச்சே… கல்யாணி ராகமா !!!

பார்வ… கற்பூர தீபமா

ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா !!!

 

என்றொரு பாடல். அடுத்த பாடல்;

என் சாமி…

சாமி…

வாய்யா சாமி…

சாமி…

மன்மத சாமி மந்திர சாமி…

போக்கிரி சாமி…

 

உன் கட்ட குரல கேக்கயில…

என் கட்ட துள்ளுது சாமி…

நீ சட்ட பட்டன அவுத்து விட்டா…

சரக்கு போத சாமி…

ரெண்டு குண்டு கண்ணையும் சுழட்டும்போது…

தண்டுவடத்துல நண்டு மேயுது…

சாமி… என் சாமி…

 இது போன்ற வைர வரிகளை வடித்த விவேகாவைப் பாராட்டாமல் இந்த விமர்சனத்தை நிறைவு செய்வது சரியாக இருக்காது. கண்ணதாசன் தத்துவப் பாடல்களைச் சிலாகித்துப் பேசும் நமது மூளையைச் சற்றுக் கழட்டி வைத்துவிட்டு, தேவிஶ்ரீ பிரசாத் போட்ட பின்னணிச் சத்தத்துடன் இந்த வரிகளைக் கேட்டால் ரசிக்கும்படி இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் நான்கு மொழிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் சத்தங்கள் இவையே. இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து ஒலிக்கும் என்பது சர்வ நிச்சயம். 

மொத்தத்தில் புஷ்பா ரசிக்க முடிந்த வெகுஜனத் திரைப்படம்.

-வெ. மதுசூதனன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad