\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஃப்ளாஷ் பேக்

Filed in கதை, வார வெளியீடு by on February 15, 2022 0 Comments

ல்லூரிக்குச் செல்வதற்குத் தயாரானான் கணேஷ். வெள்ளை நிறத் துணியில், உடலைச் சுற்றி கோடு போட்டது போல் ஊதா நிறத்தில் குதிரைப் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த சட்டை. குதிரைகள் பலவும் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அவையும் பல வரிசைகளாக மேலிருந்து கீழாக வருமாறு தைக்கப்பட்டிருந்தது. ஒரு வரிசை மார்பைச் சுற்றிவர, மத்தியில் அமைந்திருந்தது சட்டைக்கான பட்டன். மேலிருந்து இரண்டு பட்டன்களைக் கழட்டி விட்டு, அப்பொழுதுதான் அரும்பத் தொடங்கியிருந்த பதின்பருவ ரோமங்களைக் காட்டிக் கொண்டிருந்தான் அவன். அதற்கு மேட்ச்சிங்க்காக ப்ரௌன் நிற, பெல்பாட்டம் பாண்ட். அவனது முதன் முதலான முழு பேண்ட் அதுதான். அரைக்கால் சட்டையிலிருந்து, முழுக்கால் சட்டைக்கு பிரமோட் ஆனது குறித்து, அவ்வளவு மகிழ்ச்சி. அவனது நண்பர்களில் பெரும்பாலானோர் அந்த பிரமோஷனை ஒரு வருடத்திற்கு முன்னரே அடைந்து விட்டனர். அவன் அந்த நிலையைத் தாமதமாக அடைவதற்கு, வீட்டின் நிதி நிலையே காரணம் …

தலையில் எண்ணெய் தேய்க்க மாட்டேனென்று அம்மாவுடன் சண்டை போடத் தொடங்கியது, பதின்பருவத் தொடக்கத்தில். அதுவரை நன்றாக எண்ணெய் தேய்த்து, படிய வாரிச் செல்லும் டிஸிப்ளின். அது தொலைந்து, எண்ணெய் பார்க்காத தலையை, புசுபுசுவென்று வாரி, நெற்றியின் மேல் விழும் நீளத்தை ஒரு சுழிபோல் சுற்றி வைத்துக் கொள்வது அவனது ஃபேஷன். வீட்டிற்கு அருகில் இருக்கும், மரச்சேர் வைத்த சலூனிலிருந்து பிரமோட் ஆகி, அரைக்கிலோ மீட்டர் நடந்து சென்று, பளபளவென எல்லாப் பக்கங்களிலும் கண்ணாடி தொங்கி, ரிவால்வ் ஆகும் சேர் வைத்த மாடர்ன் சலூனில் முடி வெட்டிக் கொள்வதில் அவ்வளவு ஒரு பெருமை. அந்த சலூனுக்குச் செல்வதற்கு மேலுமொரு முக்கிய காரணம்; அந்தச் சுவற்றில் தொங்கும் கவர்ச்சிப் படங்கள். குறிப்பாக, இளவட்டங்களைக் கட்டியிழுக்கும் உடலமைப்பும், போதை ததும்பும் கண்களும், மதுவூரும் இதழ்களும் கொண்ட சில்க் ஸ்மிதாவின் படத்தைத் திருட்டுத் தனமாகப் பார்ப்பதற்கும் தான் .. 

ல்லூரிக்குச் செல்வதற்கு 1A பஸ்ஸில் செல்ல வேண்டும். அனைத்து கல்லூரி மாணவ மாணவியரும் செல்லும் பஸ் அதுதான். கல்லூரி நேரத்தில், தொண்ணூறு சதவிகித பஸ் பயணிகள் கல்லூரி மாணவ மாணவியரே. 

கணேஷ் ஏறும் நிறுத்தத்திற்கு முந்தைய நிறுத்தத்தில் அதே பேருந்தில் ஏறி அமர்வாள் அந்த தேவதை. அவளது நிறுத்தத்திலிருந்து பேருந்து புறப்படுவதால், கூட்டமதிகமிருக்காது, எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம். அவள் குறிப்பாக, கடைசி வரிசையில், பேருந்தின் கதவிற்கு அடுத்ததாக இருக்கும் இருக்கையில் அமர்வாள். அதற்குக் காரணம் கணேஷ் பொதுவாக ஃபுட் போர்டில் நின்றுதான் பயணம் செய்வான். பேருந்தின் பின் கதவில், ஃபுட் போர்டில் நின்று கொண்டிருந்த அவனைப் பார்த்து, பேசிக் கொண்டு வருவதற்கு அந்த இருக்கையே மிகவும் வசதியான ஒன்று. பேருந்தில் தொடங்கி, கல்லூரி இருக்கைகளில் தொடர்ந்து, லஞ்ச் ரூமில் வளர்ந்து, எங்கு சென்றாலும் அருகருகே அமைவது என்பதில் இருவரும் மிகவும் குறிப்பாக இருப்பார்கள். அந்த அளவுக்கு இருவரும் நெருக்கம். அனைத்து நண்பர்களுக்கும் இது அத்துபடி. அவ்வளவு ஏன், கல்லூரியில் பெரும்பாலானோர்க்கு அவர்கள் இருவரும் நெருக்கமானவர்கள் என்பது தெரியும். சில ஆசிரியர்களுக்கும் சேர்த்துத்தான்.

பிரம்மன் பல தினங்கள் எடுத்துக் கொண்டு, மிகவும் சிரத்தையாய் வடித்தெடுத்த மனித உருவம். தலைமுதல் கால் வரை எங்கெங்கும் நிரம்பி வழியும் அழகு. நீண்ட கரிய கூந்தல்; எலுமிச்சை நிறச் சருமம்; கூரிய விழிகளினுள் குளு குளுவென பக்கவாட்டில் அசைந்தாடும் நீலநிறக் கண்மணிகள், அளவெடுத்து அமைத்தது போன்ற அழகான கூரிய நாசி, கண்ணாடி முன்னின்று தூரிகையால் அழகாக வரைந்தது போன்ற கொவ்வை இதழ்கள், இவையிரண்டுக்கும் மத்தியில் மெதுவாய் அரும்பும் சிறு ரோமங்கள் .. சங்குக் கழுத்து, யாரும் பார்த்து அறிந்திடா முன்னழகு, பின்னழகு என அனைவரையும் கிறங்க அடிக்கும் பெண்மை. இவையனைத்திற்கும் மேலாக அவளின் பெயர் ….. பாரதி … ஆம், அவனின் ஆதர்சக் கவிஞனின் பெயரே அவளின் பெயர். இவையே அவனை அவள்மேல் ஈர்ப்புறச் செய்தது. 

அவர்கள் முதன்முதலாகச் சந்தித்தது ஒரு போட்டி மேடையில். ஒரு வருடத்திற்கு முன்னர் இருவரும் பனிரெண்டாம் வகுப்புப் படிக்கையில் இண்டர்-ஸ்கூல் காம்பெடிஷன் ஒன்று நடந்தது. பல போட்டிகள். அவற்றில் ஒன்று “இலக்கியம் ஒப்புவித்தல்”. பல சுற்றுக்கள், ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு இலக்கியம் தரப்படும்; திருக்குறளில் தொடங்கி, பல இலக்கியங்கள். அவற்றின் இறுதிப் போட்டியில் இவர்கள் இருவரும். திருவாசகம் முழுமையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும். 

“நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!!

இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!!

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான்தாள் வாழ்க!!

……..

……..

……..”

மடை திறந்த வெள்ளமாய்ப் பாடி முடித்து அமர்ந்தான் கணேஷ். தனக்குத்தான் முதற்பரிசு என்றெண்ணி, பெருமிதமாய் முதல் வரிசையில் அமர்ந்திருக்க, மேடையேறினாள் பாரதி. திரைப்படங்களிலெல்லாம் வருவது போல், மெலிதான தென்றல் வீச, நறுமணம் மனதில் கமழ, வயலின் இசை அவனது தலைக்குள் மட்டும் ஒலிக்க, வெண்ணிறச் சுரிதார் அணிந்த அந்த தேவதையைப் பார்த்ததும் உலகமே அவன் காலடியிலிருந்து நழுவிப் போனது போன்ற உணர்வு. அதே திருவாசகத்தை, அதே போல் வெள்ளமெனச் சொல்லினாலும், ஒரு நளினமாய், ஏற்ற இறக்கங்கள் பொருளை விளக்குவது போன்ற நடையுடன் இன்னும் மெருகேற்றி வாசித்தாள் அவள். அவளுக்கே முதல் பரிசு. அவனுக்கு இரண்டாம் பரிசு. பரிசு வாங்கி மேடையிலிருந்து இறங்கும்போது, அவள்மீது அவனுக்குச் சற்றும் பொறாமையில்லை. மாறாக, அவளிடம் பேச வேண்டுமென்ற உந்துதல். ஆர்வம். ஆசை. ஈர்ப்பு. ஆனால், இவையனைத்தையும் மறக்கடிக்கும் வண்ணம் வெட்கம், பயம். இவற்றையெல்லாம் போட்டு தனது நினைவுகளில் உருட்டிக் கொண்டிருக்கையில், “ரொம்ப நன்னா ரிசைட் பண்ணினேள்.. நான் ஜட்ஜா இருந்திருந்தா உங்களுக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கொடுத்திருப்பேன் …” குரல் கேட்டுக் கண் திறந்து பார்த்த கணேஷால் தன் கண்களையும், காதுகளையும் நம்ப முடியவில்லை. வரிசையான வெண்ணிறப் பற்கள் பளிச்செனத் தெரிய, “கங்க்ராட்ஸ்” என்றபடி கைகுலுக்கக் கை நீட்டியபடி நின்றிருந்தாள் பாரதி.

“தாங்க்ஸ்”… சம்ப்ரதாயமாய்ச் சொல்லிவிட்டு, கைகுலுக்குவதைத் தவிர்த்து விட்டு, மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் அவன். பெண்மைக்கு இவ்வளவு அருகாமையில் இருந்து பழக்கமில்லை; கைகுலுக்குவதைத் தவிர்த்தானென்றாலும் மனதெல்லாம் ஸ்பரிசத்திற்கான சந்தர்ப்பத்தைக் கைவிட்டுவிட்டதை எண்ணி, வெளியில் சொல்லாமல் வருந்திக் கொண்டுதான் இருந்தான். தோற்றவனிடம் இவ்வளவு அந்நியோன்யமாய், நீதான் ஜெயித்திருக்க வேண்டுமெனச் சொல்லும் வெற்றி பெற்றவளை இதற்கு முன் பார்த்ததில்லை அவன். அவனது தயக்கத்தைக் கண்டதும், “நான் மெட்ராஸ், அப்பா செண்ட்ரல் கவர்ன்மெண்ட்… இந்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி இந்த வருஷந்தான் வந்தோம்… அம்மா தமிழ் ப்ரஃபஸர்…. “ விட்டால் ஜாதகத்தைக் கையில் கொடுத்திருப்பாள். அந்த அளவுக்கு வேகம், வெளிப்படை. பொதுவாக எப்பொழுதுமே அதிகமாகப் பேசும் அவன், அவளது பேச்சிற்கு முன்னால் முழு மௌனம் காத்தான். “உங்களுக்கு தமிழ் இண்ட்ரெஸ்ட் உண்டா?” மெதுவாய் ஆரம்பித்தவளை விழுங்குவதுபோல் பார்த்தான் கணேஷ். மணிக் கணக்காய்ப் பேச வேண்டுமென்று தோன்றினாலும், எதுவும் பேசாமல், “அப்புறம் பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

டேய், அந்தப் புள்ளைக்கு ஒம்மேல ஒரு இதுடா… கண்டிப்பாடா.. நான் சொன்னா சரியா இருக்கும்டா..” கிராமத்து நண்பன் வைரவன் புதுமையான இந்தச் சந்திப்பிற்கு ஒரு உறவு கற்பித்துக் கொண்டிருந்தான். “டேய்… பேசாம இருடா… அவ மெட்ராஸ் பொண்ணுடா… பயலுககிட்ட பேசுறதெல்லாம் ஒண்ணும் பெருசில்ல….” என்ற சிவா, அதோடு நில்லாமல், “பாத்தியில்ல…. ப்ளஸர் கார்ல போனத … பணக்கார வீட்டுப் பொண்ணுடி…. நமக்கு வேணாம்யா இந்தப் பொல்லாப்பு….. கொண்டே புடுவாய்ங்க…” என்று பயம் காட்டினான். எதற்கும் பதில் கூறாமல், சைக்கிளில் ஏறி வீடு நோக்கிப் போன கணேஷால், அவனையும் அறியாமல் அவள் அவன் மனதில் குடிபெயர்ந்ததை அன்று உணர முடியவில்லை.

தற்குப் பிறகு இன்னொரு பேச்சுப் போட்டி மேடையில் அவர்களிருவரும் சந்தித்தனர். இந்தமுறை பாரதி குறித்த பேச்சுப் போட்டி. அதாவது மகாகவி பாரதி குறித்த பேச்சுப் போட்டி. மகாகவியைக் குறித்து, தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் மூச்சு விடாமல் பேசமுடியும் அவனால். ஆனால், இந்த பாரதியைப் பார்த்ததும், கிட்டத்தட்ட அந்த பாரதியாகவே மனதில் வரிக்கத் தொடங்கிவிட்டான். பேச்சுப் போட்டி இரண்டாம் பட்சமாகி விட்டது. இரண்டுமுறை ஒரே பின்புலத்தில், திட்டமெதுவும் இடாமல் சந்தித்துக் கொள்வது தற்செயலாக இருக்க முடியாது என்று கணேஷ் நம்பத் தொடங்கினான். இந்த முறை, அவள் தொடங்கும் முன்பே, அவளருகில் சென்று அவன் தொடங்கி விட்டான். கடந்த முறை தமிழார்வம் உண்டா என்று கேட்ட அவளுக்கு, தனக்கு தமிழார்வமென்ன, தமிழாழம் அதிகமெனக் காட்டிக் கொள்ள முற்பட்டான்.

பல இலக்கியங்கள், பல கவிதைகள் – பெரும்பாலானாவை மகாகவியினுடையது. சரியான ஏற்ற இறக்கங்களுடன் அவளிடம் ஒப்புவிக்கத் தொடங்கினான். அதற்கான விளக்கங்களையும் அழகு தோரணையில் சொல்ல, தமிழார்வம் மிகுதியாய் உள்ள அவள் அவனிடம் கரையத் தொடங்கினாள்.

‘பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன

பேச்சதனை நான் கொள்ளேன் – பெண்டிர் தம்மை

எண்ணமதில் விலங்கெனவே கணவர் எண்ணி

ஏதெனிலும் செய்திடலாம் என்றான் பாட்டன்,

வண்ணமுயர் வேதநெறி மாறிப் பின்னாள்

வழங்குவது இந்நெறி என்றான்; வழுவே சொன்னான்!

பல பாரதி கவிதைகளுக்கு மத்தியில், “பாஞ்சாலி சபதத்தில் விகர்ணன் கூறுவதாக, பெண்களிடம் செலுத்த வேண்டிய மரியாதை, பாசம் அவர்களுக்கு உரிய உரிமை ஆகியவற்றைப் பட்டியலிட்ட பாரதியின் கவிதையைக் கணேஷ் மனப்பாடமாய்ச் சொல்ல, அன்றே அவனிடம் தன்னையை முழுமையாய் இழந்தாள் பாரதி. அதற்குப் பின்னர் வேறேதும் தேவைப்படவில்லை அவளுக்கு. அன்று தொடங்கிய காதல், இருவரும் கிட்டத்தட்ட கணவன் மனைவியாய் காந்தர்வ வாழ்க்கை வாழத் தொடங்கினர். தினமும் ஒருவரைப் பார்க்காமல் இன்னொருவரால் வாழ இயலாது. 

தொலைபேசிகளும், அலைபேசிகளும் படர்ந்திராத காலமது. காலையில் கல்லூரியில், மாலையில் டைப் ரைட்டிங்க் இன்ஸ்ட்டிட்யூட்டில், முன்னிரவில் கோயில்களில், வார இறுதியில் சந்தையில் என எங்கெங்கெல்லாம் பொது இடங்களில் சந்திக்க முடியுமோ அங்கெங்கெலாம் அலையத் தொடங்கினர் இருவரும். கல்லூரி தவிர மற்ற இடங்களில் பெரிதாகப் பேசிக் கொள்ள இயலாது. ஆனால் பார்வையொன்றே போதுமென இருவரும் பழகி வந்தனர். பல மனிதர்களுக்கு மத்தியில் அவளின் கூரிய பார்வைத் தன்னை வட்டமிடுவதை அவன் உணர்வான். சகலருக்கு மத்தியிலும் அவனின் காதல் பார்வை அவளைத் துளைப்பதை அவள் மட்டும் உணர்வாள். பவித்திரமான காதலின் மத்தியில் பதின்பருவ ஆசைகளும் உண்டு. அவனின் அந்த ஆசைகளுக்கு அவள் என்றுமே இடம் கொடுத்ததில்லை. சரியாகப் போட்டிருக்கும் உடைகளையும், அடிக்கடி சரி செய்து கொண்டு, சரியாகப் போகட்டும் உறவு எனச் சரியான முடிவெடுப்பவள் அவள். திரைப்பட வக்கிரங்கள் வீடு புகுந்து இளைஞர்களை முழுவதுமாய்க் கெடுத்திராக் காலமது என்பதால் இருவரின் மனங்களிலும் கட்டுப்பாடு போதுமான அளவு விளைந்திருந்தது. 

தனிமையாய்ச் சந்திப்பதற்கு அவ்வளவு அதிகமாக சந்தர்ப்பம் கிடைக்காத காலம். கிடைத்த சந்தர்ப்பத்தை இருவரும் பொதுவாக, தமிழ் குறித்துப் பேசுவதற்கே பயன்படுத்தினர். பொதுவான தமிழாய்த் தொடங்கி, அகத்திணை குறித்த கவிதைகளே அவர்களின் பேச்சுக்களை முழுமையாய் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டிருந்த காலம். கணேஷ் கவிதை எழுதுவான். மகாகவி பாரதியின் தாக்கத்தால் பொதுவாக புரட்சிக் கருத்துக்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த அவன், இந்த பாரதியின் தாக்கம் தொடங்கிய பின்னர் காதல் கவிதைகள் மட்டுமே எழுதுவதாக மாறியிருந்தது. கண்டிப்பான அப்பாவின் கண்களில் அந்தக் காதல் கவிதைகள் படக்கூடாதென்பதற்காக அவன் படும் பிரயத்தனங்கள் கொஞ்ச நஞ்சமன்று. அவற்றை விளக்கும் பொழுது அவள் சிரிக்கும் சிரிப்பு அவனைச் சொர்க்க லோகத்திற்கு இட்டுச் செல்லுமென்றால் மிகையாகாது. கல்லூரி வேப்ப மரத்தடியில் அமர்ந்து, முழங்கையை மடியில் வைத்து, வாட்ச் அணிந்த வலக்கர மணிக்கட்டில் தாடையை இருக்கச் செய்து, இரண்டு கண்களாலும் அவனை விழுங்கி, தலையை மேலுயர்த்தி அட்டகாசமாய்ச் சிரிப்பாள். அப்பொழுது, அந்தச் சங்குக் கழுத்தில் மேலிருந்து கீழ் செல்லும் அந்த உருண்டை அவனை உலகையே மறக்கச் செய்யும். அற்புதமான நேரங்கள்.

ஒருமுறை அந்த அந்நியோன்யத்தின் இடையில், தன்னை இழந்து அவசரமாய் அருகே சென்று அவளது கன்னத்தில், தனது குளிர்ந்த இதழ்களால் ஒரு முத்தம் வைத்தான். எதிர்பார்க்காத இதனை உணர்ந்தறிய அவளுக்கு இரண்டு நிமிடம் பிடித்தது. முழுவதும் புரிந்ததும் வந்த கோபத்தில், வாட்ச் அணிந்த வலக்கரத்தால் கணேஷின் இடக்கன்னத்தில் பளிச்சென அரையொன்றிட்டு, அவசரமாய் எழுந்து, “நம்ம கடைசியாப் பாக்குறது இதுதான்…” எனப் படபடவென அக்கினியை உதிர்த்துவிட்டு, அந்த இடம் விட்டு அகர்ந்தாள் அவள்.

கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது அவளுடன் பேசி. பேருந்தில் அவள் அமரும் இடம் மாற்றி விட்டிருந்தாள். பேருந்தின் மத்தியில், ஜன்னல் வழியாகத் தெரியாத சீட்டில் அமர்ந்து, அவனுக்கு முகம் கொடுக்காமல் பார்த்துக் கொண்டாள். பேருந்து விட்டு இறங்கி, வகுப்பிற்குப் போகையில் மற்ற நண்பிகளுக்கு மத்தியிலேயே நடந்து சென்றாள். வகுப்பினுள் அவனை ஏரெடுத்தும் பார்க்கவில்லை. மதிய உணவைத் தனது இருக்கையிலேயே சாப்பிட்டாள், லஞ்ச் ரூம் சென்று அவனருகில் அமருவதைத் தவிர்ப்பதற்காகவே. டைப் ரைட்டிங்க் இன்ஸ்ட்டிட்யூட், கோயில், சந்தை என எங்கெல்லாம் பார்த்துக் கொண்டார்களோ, அங்கெல்லாம் அவனைத் தவிர்த்தாள். அவனும், எல்லா இடங்களிலும் அவள் பின்னே வந்து, பார்வையாலேயே கெஞ்சிக் கொண்டிருந்தான். அந்த வாரத்தில் அவனெழுதிய கவிதையெல்லாவற்றிலும் சோகம் படர்ந்திருந்தது. எப்பொழுதும், பர்மெனண்ட்டாய் ஒரு வயலின் இசை அவன் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. 

ன்னா… பாத்தேளா, ஆத்த க்ளீன் பண்றச்ச பழைய ட்ரங்க் பொட்டில இருந்து என்ன கெடச்சுருக்குன்னு….. “ கையில் ஒரு கசங்கி, பழுப்பு நிறமான பழைய பேப்பர் ஒன்றை எடுத்துக் கொண்டே ஸ்ட்டோர் ரூமிலிருந்து வெளிவந்தாள் பாரதி. ஹாலில் அமர்ந்து, டி.வி ஓடிக் கொண்டிருக்க, ஃபோனில் ஏதோ மெஸேஜ் பார்த்துக் கொண்டு, லாப்டாப்பையும் திறந்து வைத்துக் கொண்டு, பக்கத்தில் விரித்து வைக்கப் பட்டிருந்த ‘ஹிண்டு’ நியூஸ்பேப்பர் ஃபேன் காற்றில் பறக்காமல் பார்த்துக் கொண்டே தலையை நிமிர்த்திப் பார்த்தான் ஐம்பதைக் கடந்த கணேஷ். “என்ன, மல்ட்டை டாஸ்க்கிங்க்ற பேர்ல எதுலயும் ஃபோகஸ் இல்ல… இந்தாங்கோ, இதப் பாருங்கோ…” ஐம்பதைக் கடந்திருந்தாலும், அந்தச் செல்லக் கொஞ்சலில் இன்னும் கிறக்கம் இருக்கத்தான் செய்தது பாரதியிடம். “என்னடி, என்னடி அது…..” .. கேட்டுக் கொண்டே, ரீடிங்க் க்ளாஸை மூக்கின்மேல் தூக்கி வைத்துக் கொண்டு, அந்தக் காகிதத்தில் எழுதி எழுத்துக்கள் கிட்டத்தட்ட மறையும் நிலையிலிருந்த, இருபத்தைந்து வருடத்திற்கும் மேற்பட்ட தன் கவிதையைப் படிக்கத் தொடங்கினான்.

“நிலவே நீயும் விலகாதே…

நினைவே என்றும் விலகாதே….

 

இமையும் கண்களை விலகாதே …

இதயமே என்னை விலகாதே …

 

நெஞ்சின் வலியது விலகாதே …

நினைத்தே அழுகிறேன் விலகாதே ….

 

ஆசையால் தவறினேன் விலகாதே …

ஆண் மனம்விட்டு விலகாதே ….

…..

…….

…..

 

படிக்க, படிக்க, போய்க் கொண்டேயிருந்தது. அவளும் அருகே வந்து நின்று கொண்டு, இடுப்பில் கை வைத்துக் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களால் விழுங்கிக் கொண்டே, “ம்ம்ம்…. எவ்வளவு கவிதை எழுதினேள், அந்த ஒரு வாரம்; நான் அரை விட்டேனே அந்தா வாரத்துல… எங்கிட்ட ஏன் காட்டலை”.. நமுட்டுச் சிரிப்புடன் காதலாய்க் கேட்டுக் கொண்டே அருகினில் அமர்ந்தாள். “போடி… காலம் போன காலத்தில காதல் பேசிண்டு… அப்போ ஏதோ சின்ன வயசு… பேத்தலா ஏதேதோ கவிதைனு நெனச்சுண்டு…. அப்பவே அதெல்லாம் கிழிச்சுப் போட்டுட்டேனே… இதெப்படி இன்னும்”… அவளின் முகம் பார்ப்பதைத் தவிர்க்க முயன்றான். அவளும் அவனை விடாமல் எப்பொழுதும் போல் கண்களால் விழுங்கிக் கொண்டே, “ஐயாவுக்கு எப்பவுமே ரொமான்ஸ்தான்…. இப்பவும் நேக்குக் கோபம் வந்து பேசாம இருந்தா ஐயா எழுதற கவிதைகள் எல்லாம் நேக்குத் தெரியும்… உங்க கூகிள் அக்கௌண்ட் பாஸ்வார்ட் நேக்குத் தெரியும்னு மறந்து போச்சா?” என்றவளிடம்… “ஓ…. நோ…” என்று நெளிந்தான்.

சரியாக அந்த நேரத்தில் ரூமிலிருந்து வெளிவந்த பதின் பருவ மகள், “வாவ், அப்பா.. தோ ஐ காண்ட் அண்டர்ஸ்ட்டேண்ட் யுவர் போயட்ரீஸ் ஃபுல்லி, ஐ கேன் கம்ப்ளீட்லி ஹியர் அண்ட் ஃபீல் த க்யூட்னஸ்……. “ என்றவள் தொடர்ந்து, “பை த வே…. தெர் இஸ் ஸ்ட்டில் ஒன் மோர் டே டு கோ ஃபார் வேலண்டைன்ஸ் டே” என்று சூசகமாகச் சொல்லி, சிரித்து விட்டு நகர்ந்தாள்.

தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் பாரதி, கணவனின் மீது தாவி, அவனை அணைத்து “இந்தக் கன்னத்துலதான் அரைஞ்சேனா, இருபத்தைஞ்சு வருஷத்துக்கு முன்ன….” என்று கேட்டுக் கொண்டே கன்னத்தில் களை சேர்த்தாள்.

    வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad