திரைப்பட பார்வை – மகான்
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான விக்ரம் நடித்த ‘மகான்’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் பிப்ரவரி 10ஆம் தேதியன்று வெளியானது. கடந்த சில வருடங்களாகவே விக்ரமின் படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாமலிருந்த நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிக்க வந்து, அவருடைய முதல் படம் வெளியாகி 32 வருடங்கள் ஆகின்றன.
ஸ்ரீதர், பி.சி.ஸ்ரீராம், விக்ரமன், பார்த்திபன் என்று பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும், முதல் பத்து வருடங்கள் பெரிய வெற்றி எதுவும் இல்லாமல் சிரமமாகவே சென்றது. பின்னர், 1999 இன் இறுதியில் வெளியான ‘சேது’ திரைப்படம், அவருடைய திரைப்பயணத்திற்கு வெளிச்சம் கொடுத்தது. அதன் பின்னர், அடுத்த ஐந்து வருடங்கள் விக்ரமின் பொற்காலம் எனலாம். தில், ஜெமினி, தூள், சாமி எனக் கமர்ஷியலாக ஹிட் மேல் ஹிட் அடித்தார். அன்னியனுக்குப் பிறகு திரும்பவும் வெற்றிகள் குறைந்தன. 2011ஆம் ஆண்டு வெளியான ‘தெய்வத்திருமகள்’ ரசிகர்களிடையே பாராட்டைப் பெற, அதற்குப் பிறகு வெளியான எந்தத் திரைப்படமும் பெரிதான வரவேற்பைப் பெறவில்லை. அதே சமயம், அவருடைய உழைப்பு, எந்தத் திரைப்படத்திலும் குறைவில்லாமல் இருந்தது. குறிப்பாக, 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ஐ’ திரைப்படத்தைச் சொல்ல வேண்டும். படம் தோல்வியடைந்தாலும், அப்படத்திற்கு அவர் அளித்த அர்பணிப்பு அபாரமானது. அதனால், அவருடைய நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்திற்கும் இன்றும் எதிர்பார்ப்பு உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், அவருடைய மகளுக்குத் திருமணம் ஆனது. தாத்தாவானார். அவருடைய மகனும் படிப்பை முடித்துவிட்டு நடிக்க வந்துவிட்டார். அதனாலோ என்னவோ, அவருடைய திரைப்பயணத்தின் வேகம் குறைந்தது. இதோ, இத்திரைப்படத்தில் அவருடன் இணைந்து அவருடைய மகனும் திரையைப் பங்குபோட வந்துவிட்டார். இதுவே, சில வருடங்களுக்கு முன்பாக இருந்தால், அந்தக் கதாபாத்திரத்திலும் அவரே நடித்திருக்க வாய்ப்புண்டு. தியாகராஜன் – பிரசாந்த் குடும்பத்திற்கு உறவு என்றாலும், ஆரம்பக்காலத்தில் சொந்த முயற்சியால் மட்டுமே வாய்ப்பு பெற்று நடித்துக்கொண்டிருந்தார். அதனால், சினிமா பின்னணி இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த விக்ரம் மீது ரசிகர்களிடையே ஒரு பரிவு இருந்தது. கால ஓட்டத்தில், இன்று முடிந்தவரை தனது மகனை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்.
”கோலிவுட்டின் டராண்டினோ” கார்த்திக் சுப்புராஜ் இத்திரைப்படத்தில் காந்தியத் தத்துவத்தைக் கூறுபோட்டு கதை எழுதியிருக்கிறார். படத்தில் விக்ரமின் அப்பா, காந்தியின் கொள்கையைப் பின்பற்றும் ஒரு சுதந்திரப் போராட்டக் காலத்து ஆள். மதுவிலக்குக்காகப் போராட்டங்கள் செய்கிறார். அவருடைய மகனுக்கு ’காந்தி மகான்’ என்று பெயர் வைத்து, காந்தியத் தத்துவங்களைப் போதித்து, அடித்து(!) அதன் வழியில் நடக்கச் சொல்கிறார். அது போலவே, வாழ்ந்து வரும் மகான் தனது நாற்பதாவது வயதில் வாழ்க்கையில் சலித்துப்போய், வீட்டிற்குத் தெரியாமல், பார் சென்று தண்ணியடிக்கிறார். அங்குச் சத்யவான் (பாபி சிம்ஹா), அவருடைய மகன் ராக்கி (சனத்) ஆகியோரோடு இணைந்து சீட்டு, சூதாட்டம், குத்தாட்டம் என்று பிடித்தவற்றைத் தொட்டு பழகுகிறார். இது வீட்டிற்குத் தெரிந்து அவருடைய மனைவி சிம்ரன், அவருடைய மகனை அழைத்துக்கொண்டு, தந்தை, சகோதரன் ஆகியோரோடு வேறு ஊருக்குச் சென்று விடுகிறார்.
சாராயம் விற்கும் சத்யவானுடன் இணைந்து விக்ரம், தமிழ்நாட்டில் சாராயச் சாம்ராஜ்யத்தை வளர்த்தெடுக்கிறார். மதுவிலக்கு, சிண்டிகேட், அரசு மது விற்பனை என்று தமிழ்நாட்டின் மது வரலாற்றையும் இதனூடே சுவாரஸ்யமாகக் காட்டுகிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, விக்ரமை எதிர்த்து அவருடைய மது சாம்ராஜ்யத்தை அழிப்பதற்கு அவர் முன் வந்து நிற்பவர் அவருடைய மகனான துருவ் விக்ரம். போலீஸ் அதிகாரியான துருவ் சில திட்டங்கள் போட்டு, விக்ரமையும், பாபியையும் எதிரெதிரே நிற்க வைக்கிறார். பதிலுக்கு, விக்ரம் போடும் திட்டங்கள் மீதி திரைப்படம். குடும்பம், நட்பு இடையேயான போராட்டத்தையும், காந்திய மதுவிலக்குக் கொள்கை, மது வணிகம் இடையேயான முரணையும் வைத்து திரைக்கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
படிபடியாகச் சாராய வணிகத்தில் விக்ரம்-பாபி வளரும் முன்பகுதி கதை விறுவிறுவெனச் செல்கிறது. படத்தின் நடுவே அறிமுகமாகும் துருவ் கதாபாத்திரம் மூலம் கதையில் பரபரப்புக் கூடுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த விறுவிறுப்பையும், பரபரப்பையும் இறுதிவரை தக்க வைக்க முடியாமல், யூகிக்கக்கூடியக் காட்சிகளை வைத்துப் படம் முடிகிறது. கார்த்திக் சுப்புராஜ் பாணி ட்விஸ்ட் என்பது அவருடைய ஆரம்பப் படங்களில் சுவாரஸ்யமாக இருந்தது. தற்போது, அது எளிதில் யூகிக்கக்கூடியதாகப் போய்விட்டது.
பல காலக்கட்டங்களைக் கதையிலும், காட்சியிலும் காட்டியிருப்பது இண்ட்ரஸ்டிங். விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா, துருவ் ஆகியோரது பவர் பெர்ஃபார்மஸ் படத்திற்குப் பலமளிக்கிறது. சனத்திற்கும் முக்கியக் கதாபாத்திரம். சின்ன விஜயகாந்த் போல் காட்சியளிக்கிறார். விக்ரமிற்கு இணையான கேரக்டர், பாபியுடையது. விக்ரமை மீறிக்கொண்டு பலவகை மேக்கப்பில் வருகிறார். எப்போது துருவ் வருவார் என்று காத்திருந்தால், பாதிப் படத்திற்கு மேல் தான் வருகிறார். சில காட்சிகளில் அலட்டல் இல்லாமலும், பல காட்சிகளில் ஓவர் அலட்டலுடன் நடித்திருக்கிறார். இரண்டாவது படமான இதிலும் அவருக்குக் கரடுமுரடான கேரக்டர். அந்த மீசை ரொம்பவே திக். கொஞ்சம் லைட்டான, சாஃப்டான கேரக்டரில் அவர் நடித்துப் பார்க்க வேண்டும்.
இவர்கள் தவிர, அரசியல்வாதி ஞானமாக வரும் ‘சார்பட்டா’ புகழ் முத்துக்குமார், விக்ரமின் தந்தையாகக் கொஞ்ச நேரமே வரும் ஆடுகளம் நரேன், மாமனாராக வரும் கஜராஜ் என நடிப்பிற்குக் குறைவில்லாமல் அனைவரும் நடித்திருக்கிறார்கள். சில இடங்களில் ஏன் இப்படி நடிக்கிறார்கள் என்று தோன்றாமல் இல்லை. உதாரணத்திற்கு, தனது அடியாட்கள் என்கவுண்டர் செய்யப்படும் போது, விக்ரம் காட்டும் ரியாக்ஷன்கள் என்னதிது எனத் தோன்ற வைக்கிறது.
சந்தோஷ் நாராயணன் அவருடைய வழக்கமான பாணியில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்திருக்கிறார். அந்தப் பழைய கிக் இல்லை. தனிப் பாடலை விடப் பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் பெட்டராக இருக்கின்றன. நம்மூரில் நடக்கும் கதையென்றாலும், கார்த்திக் சுப்புராஜின் படங்களில் கலர் வேறொன்றாக இருக்கும். அப்படி வேறு ஒரு உலகத்தை இப்படத்திலும் காட்சியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. ஒரு சண்டைக்காட்சியில் அவரும் ஒரு அடியாளாக மாறி படம் பிடித்திருக்கிறார்.
கா.சு. தனது ரஜினி அபிமானத்தை அண்ணாமலை, அன்பு சாம்ராஜ்ஜியம் என வசனங்கள் மூலம் இதிலும் காட்டி வழக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார். படத்தின் பல காட்சிகளில் பின்னணியில் போட்டோ ஃப்ரேமில் வந்து கவனம் பெறுகிறார் காந்தியார். தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம் இருந்து என்ன பிரயோஜனம் என்று காந்தியின் விரலைக் கொண்டு, மதுவிலக்குப் போராட்டம் என்ற காந்தியின் கண்ணையே குத்தியிருக்கிறார் இயக்குனர். என்ன தான் முடிவு அவர்களுக்குச் சாதகமா இல்லையென்றாலும், குடிகாரர்கள் கொண்டாட வேண்டிய படமிது. மற்றவர்கள்? சோர்ந்து போகும் திரைக்கதை, தெரிந்து போகும் ட்விஸ்ட் தவிர்த்து, காட்சியமைப்புகள், கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு, பேசுப்பொருள் ஆகியவற்றுக்காக ஒருமுறை பார்க்கலாம். தீவிர திரை ரசிகர்கள் குறியீடுகள் தேடி பலமுறை பார்க்கலாம்.
- சரவணகுமரன்
Tags: mahaan