ஹிருதயம்
இன்றைய இணைய உலகில் கொண்டாட்டங்களுக்குப் பெரிய காரணங்கள் தேவையில்லை. மனிதர்களுக்கு மட்டும் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடுவதில்லை. படங்களுக்கும் ஆண்டுவிழா கொண்டாடுகிறார்கள். அப்படிச் சமீபத்தில் ”பூவே உனக்காக” படம் வெளியாகி 26 ஆண்டுகள் எனச் சில பதிவுகளைக் காண முடிந்தது. அப்படத்தைத் திரையரங்கில் பார்த்த நினைவுகள் வந்தன. அவ்வயதில் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளை ரசித்தது நினைவுக்கு வந்தது. படத்தின் இறுதிகாட்சியில் விஜய் பேசும் வசனங்களுக்குத் திரையரங்கம் ஆர்பரித்தது நினைவுக்கு வந்தது. ஊருக்குள்ளே இவ்வளவு காதல் தோல்வி கேசுகள் இருக்கிறார்களா என்று புரியாத வயதில் நினைத்துக்கொண்டேன்.
படத்தின் இறுதிகாட்சியில் விஜய்யை ஒருதலையாகக் காதலித்த நாயகி கேட்பார். ”ஏன், தோல்வியடைந்த காதலையே நினைத்துக்கொண்டு இருக்கீங்க, வேற கல்யாணம் செஞ்சுக்க வேண்டியது தானே, எத்தனை பேர் அப்படிக் கல்யாணம் செஞ்சிட்டு இருக்காங்க” என்று. அதற்கு விஜய் கேட்பார். “அப்படிக் கல்யாணம் செஞ்சிகிட்டவங்க, சந்தோஷமாகத் தான் இருக்காங்களா?”. அப்பக்கூடப் புரியலை. எதற்கு இந்த வசனங்களுக்கு இப்படிக் கைத்தட்டல் என்று. பிறகு புரிந்தது. அப்படி இல்ல, எப்படிக் கல்யாணம் செஞ்சிகிட்டவங்களும் சந்தோஷமா இருக்கிறது இல்ல’ன்னு!! 🙂
அது போல் அக்காலத்தில் நிறையப் படங்கள் வந்து உபதேசம் செய்து கொண்டிருந்தன. ‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என வீரப்பா ஃபார்மூலாவைக் காதல் வாழ்க்கைக்கு அப்ளை செய்யச் சொன்னார்கள். காதலைச் சொல்லத் தயங்கிய நாயகர்கள், ஒருதலையாக (மற்றும் தறுதலையாக) காதலித்த நாயகர்கள், சோகதாஸ் காதலர்கள் என்று காதல் ஒருகாலத்தில் ரொம்பச் செண்டியாக இருந்தது. காதலை நிரூபிக்க நாக்கை வெட்டிக்கொள்ளும் தாலிபானிசத்தைக் கூடக் காண நேர்ந்தது.
தாங்கள் காதலித்த பெண்ணுக்கு வேறு காதலோ, அல்லது கல்யாணம் ஆகப் போவது தெரிந்தோ, திரும்பவும் பின்னால் துரத்தும் அடுத்த வகைக் காதல் (யூத், ரெமோ) பிறகு வந்து சேர்ந்தது. அதாவது ‘பூவே உனக்காக’ போல் ஒரு பையைத் தோளில் போட்டுக்கொண்டு சோகமாகத் திரும்பி போகாமல், விரட்டி விரட்டி பலாத்காரக் காதல் புரிவது. ஆனால், “ஒரு நாடு, ஒரு தேர்தல்” என்பது போல் அந்த “ஒரு காதல், ஒரு திருமணம்” பார்மூலாவை மட்டும் விடாமல் பிடித்துக்கொண்டிருந்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு வெளியான 96 படம் வரை இதைக் காண முடிந்தது. அதில் இறுதிக்காட்சியில் விஜய் சேதுபதி காதலியின் உடையை (அந்தப் பேமஸ் மஞ்சள் குர்தாவும், ஜீன்ஸும் தான்!!) பெட்டிக்குள் வைத்துக்கொண்டு அதிலேயே சந்தோஷப்பட்டுக் கொள்வார்.
இக்கொடுமைகளில் இருந்து நிம்மதியளிக்கும் வகையில், தோல்வியடைந்த காதலுக்கு/கல்யாணத்துக்கு மருந்திடும் வகையில் இன்னொரு காதல்/கல்யாணம் நிகழும் கதைகளைக் காட்டினார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் இன்னொரு காதல் என்பது குற்றம் அல்ல, நார்மல் தான் என்று காட்டினார். சேரனின் ஆட்டோகிராஃப், தங்கர்பச்சானின் அழகி ஆகிய படங்களின் நாயகர்கள் பிற்பகுதியில் குற்றவுணர்ச்சியில் தவிப்பார்கள். கௌதமின் நாயகர்களுக்கு அந்தக் குற்றவுணர்ச்சி வராமல் தவிர்க்க, கௌதம் அவர்களது முன்னாள் காதலிகளைக் கதையில் போட்டு தள்ளியிருப்பார்!! என்றாலும், ஒரு மனிதன் கடக்கும் பல காதல்கள் என்பதைக் குறிப்பிடும் போது கௌதமைத் தவிர்க்க முடியாது.
அந்த வழியில் ஒரு மனிதன் வாழ்க்கையில் வரும் பல காதல்களைக் கேஷுவலாகக் காட்டும் ஃபீல் குட் படமாக ‘ஹிருதயம்’ படத்தை இயக்கியுள்ளார் மலையாளத் திரைப்பட இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன். (எப்பாடி, எவ்ளோ பெரிய இண்ட்ரோ?!!). இயக்குனர் வினீத், பிரபல மலையாளக் கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்களுடைய மகன். இவரும் அவருடைய தந்தையைப் போல மலையாளப் படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்களித்து வருகிறார்.
இது ஒரு மலையாளப் படமாக இருந்தாலும், படத்தின் பெரும்பகுதி சென்னையில் நடப்பதால், தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பல கல்லூரிகளில் படிக்கும் மலையாள மாணவர்களைப் பார்த்திருப்போம். அப்படிச் சென்னையில் இருக்கும் கேசி டெக் பொறியியல் கல்லூரியில் படிக்க வரும் அருண் நீலகண்டனின் வாழ்க்கையில் வரும் காதல்கள் பற்றிய கதை தான் இது. அருணாக நடித்திருப்பவர், நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ். இவர் கமலஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரியில் முதலாண்டில் உடன் படிக்கும் தர்ஷனாவை காதலிக்கிறார் அருண். தர்ஷனாவும் இவரைக் காதலிக்கிறார். பிறகு, இவர்களுக்குள் சண்டை வருகிறது. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு இன்னொரு காதலுக்குள் விழுகிறார்கள். அடிபடுகிறார்கள். எழுகிறார்கள். படித்து முடித்து வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்குச் செல்கிறார்கள். இந்த முதல் காதல் அவர்களுடைய வாழ்வின் அடுத்தக் கட்டத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதை அவர்கள் எவ்வாறு கடக்கிறார்கள் என்பதைச் சோகத்தில் பிழியாமல், லைட்டாக நெகிழ வைத்து, நன்றாகச் சிரிக்க வைத்துக் காட்டியிருக்கிறார்கள்.
படத்தின் இரண்டாம் பாதியில் இன்னொரு நாயகியான கல்யாணி ப்ரியதர்ஷன் வருகிறார். இவர் இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள். (ஐயோ, எத்தனை வாரிசுகள்!!). பிரணவ், தர்ஷனா மற்றும் கல்யாணி இருவரிடையே காட்டும் மனப்போராட்டங்கள் பிரமாதம். தர்ஷனாவின் திருமணத்திற்கு ப்ரணவ், மனைவி கல்யாணியுடன் செல்லும் போது, தர்ஷனா நிறையச் சம்பாதிக்கும் தகவலறிந்து, “அவளைக் கல்யாணம் செய்திருந்தால், நான் கோடீஸ்வரனாயிருப்பேனே” என்று அங்கலாய்க்கும் போது, கல்யாணி காட்டும் ரியாக்ஷனாகாட்டும், ப்ரணவ் தர்ஷனாவிடம் பேசும் போது, ப்ரணவ் கையைக் கல்யாணி கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நிற்பதாகட்டும், இப்படி மனதைக் கவரும் காட்சிகள் படமெங்கும் இருக்கின்றன.
பெரிய ட்விஸ்டுகள் எதுவும் இல்லாமல், பல சுவாரஸ்யமான காட்சிகளின் தொகுப்பே இப்படம். கௌதம் படம் போல் ஆரம்பிக்கும் இக்கதை, நடுவில் ரஞ்சித் படம் போல் செல்லும் இடத்தில் வரும் செல்வா கதாபாத்திரமும் நம்மைக் கவர்கிறது. துணி இஸ்திரி போடுபவரைக் காதலிக்கும் அவரிடம் ப்ரணவ், அது குறித்துக் கேட்கும் போது, “பணம், தகுதி பார்த்து காதலிக்க நான் மலையாளி இல்லை, தமிழன்” என்று சொல்லும் காட்சியை, ஒரு மலையாளப் படத்தில் காண ஆச்சரியமாக இருந்தது.
இத்திரைப்படம் பல நாஸ்டால்ஜிக் நினைவுகளைக் கிளறிவிடுகிறது. ஏதேனும் ஒரு காட்சியேனும் நமக்கு நெருக்கமானதாக இருந்துவிடுகிறது. அது போன்ற நாஸ்டால்ஜிக் பாடல் கேட்கும் அனுபவத்தைக் கொடுப்பதற்காக, இப்படத்தின் பாடல்களைக் கேசட்டிலும், சிடியிலும் வெளியிட்டு உள்ளனர். இந்தியாவில் பாடல் கேசட்கள் தயாரிப்பு முற்றிலும் வழக்கொழிந்து போனதால், இதற்காக ஜப்பானில் இருக்கும் ஒரு நிறுவனத்துடன் இணைந்து கேசட் தயாரித்துள்ளனர்.
பல காதல்களைக் காட்டும் இப்படத்தின் இறுதியில் எந்தவொரு கதாபாத்திரமும் இன்னொரு கதாபாத்திரத்திடம் வெறுப்பைக் காட்டுவதில்லை. திரைப்படங்கள் காலத்தைப் பிரதிபலிப்பவை. அப்படி எடுத்துக்கொண்டால், காதல் தோல்விகள் வாழ்க்கையை முடித்து வைப்பவை அல்ல, அதைக் கடப்பதும், வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்குவதும் எவ்வளவு அழகானவை என்பதை இப்படத்தில் காணும் போது சமூகத்தை நினைத்து நிம்மதி வருகிறது. நேரமிருந்தால் நிச்சயம் இப்படத்தைக் காணலாம். படம் ஹாட் ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.
- சரவணகுமரன்