\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ரஷ்யப் போரும் உலகப் பொருளாதாரமும்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை, போராக உருவெடுத்து, இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்; உக்ரைனில் குழந்தைகள், வயதானோர், உடல் நலம் குன்றியோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பப்பட்டு, மற்ற மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராகப் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  தங்களுடன் எல்லையைப் பகிரும் உக்ரைன் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (NATO) சேருவது ரஷ்யாவின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என ரஷ்யா அஞ்சுகிறது. கிரிமியாவை ஆக்கிரமித்து சொந்தமாக்கிக் கொண்டதைப் போல, உக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களை ஊக்குவித்து, தொடர்ந்து எல்லைப் பிரச்சனையை எழுப்பி வரும் ரஷ்யாவைக் கட்டுப்படுத்த நேட்டோ படையின் தோழமை அவசியம் என உக்ரைன் கருதுகிறது. போர் நிறுத்தம் குறித்த பேச்சு வார்த்தைகள் சுமுகமடையாத நிலையில் நாளுக்கு நாள் போரின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான ஆயுதப் போர் என்பதைக் கடந்து புவிசார் அரசியல் அடிப்படையில் இதனை உலகை அச்சுறுத்தும் பொருளாதாரப் போராகவே பார்க்கவேண்டியுள்ளது.

உணவுப் பற்றாக்குறை

ரஷ்யாவும், உக்ரைனும் உலகின் தானிய உற்பத்தியில் 30-35 சதவிகிதம் அளவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. குறிப்பாக உலகச் சோள உற்பத்தியில் 20 சதவிகிதம் அளவுக்கும், சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில்  80 சதவிகிதம் அளவுக்கும் இவ்விரு நாடுகளும் ஏற்றுமதி செய்கின்றன. உலகின் கோதுமைத் தேவையில் கணிசமான பங்கு ரஷ்யாவிலிருந்து மட்டுமே ஏற்றுமதியாகிறது. உக்ரைனின் 20 லட்சம் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்ததாலும், ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் துறைமுகங்கள் செயல்படாத நிலையாலும் இப்பொருட்களின் ஏற்றுமதி முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டது. இப்போரின் முக்கியக் களமாக மாறிவிட்ட கருங்கடல் துறைமுகங்கள் செயல்படாத காரணத்தால், இவ்வழியே செல்லும் ஏராளமான சரக்குக் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளன. துருக்கி, ஈரான், ஈராக், சிரியா, ஏமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள், எண்ணற்ற  வட ஆப்பிரிக்க நாடுகள் தானியப் பொருட்களுக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவை மட்டுமே நம்பியிருந்த நிலையில், போரின் சிக்கலால் வினியோகச்  சங்கிலி துண்டிக்கப்பட்டதால் கடும் பஞ்சத்தை சந்தித்துள்ளன. கோதுமை, சோளம், எண்ணெய்ப் பொருட்கள் 35% அளவுக்கு விலையுயர்ந்துள்ளன. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக மிக மோசமான பொருளாதாரச் சரிவைக் கண்டுவந்த நாடுகள் பலவும், போரின் காரணமாக உணவு விநியோகச் சங்கிலி துண்டிக்கப்பட்டுவிட்டதால் தத்தளித்து வருகின்றன. எகிப்து, லெபனான், துருக்கி, ஈரான், ஈராக், துனிசியா போன்ற நாடுகளில் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தினால் கிளர்ச்சிகள் எழத் துவங்கியுள்ளன. இந்நிலை தொடருமானால்  அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டு சமூகக் கட்டமைப்புகள் சிதறுண்டு போகலாம்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சவுதி அரேபியாவுக்கு அடுத்ததாக ரஷ்யா இரண்டாமிடத்தில் உள்ளது, ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, அமெரிக்கா, நெதர்லாந்து, ஃபிரான்ஸ், பெல்ஜியம், தென் கொரியா போன்ற எண்ணற்ற நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றன. தினசரி 3.6 மில்லியன் பீப்பாய் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனாதான் ரஷ்யாவின் மிகப்பெரிய வாடிக்கையாளர். தினசரி சுமார் 7 லட்சம் பீப்பாய் அளவுக்கு இறக்குமதி செய்யும் அமெரிக்காவுக்கு பெரியளவில் பாதிப்பில்லை என்றாலும் இதனால் ஏற்படும் பற்றாக்குறையை ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. சீனாவும், அமெரிக்காவும் கச்சா எண்ணெய்த் தேவைகளுக்கு மாற்று வழிகளைத் தேடிக்கொள்ளக் கூடும். ஆனால் ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஐரோப்பிய நாடுகள் தங்களது கச்சா எண்ணெய்த் தேவைக்கு ரஷ்யாவைப் பிரதானமாக நம்பியுள்ளன. 

ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யாவை நம்பி, எதிர்பார்த்திருக்கும் மற்றொரு பொருள் இயற்கை எரிவாயு எனப்படும் படிம எரிவாயு. ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, போலந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் 50% எரிவாயுத் தேவையை ரஷ்யாவிடமிருந்து பெருகின்றன. ஃபின்லாந்து, லத்திவியா, போஸ்னியா போன்ற நாடுகள் தங்களது மொத்த எரிவாயுத் தேவைக்கு ரஷ்யாவை மட்டுமே நம்பியுள்ளன. அமெரிக்காவுடன் சேர்ந்து  ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பலவும் விதித்துள்ள பொருளாதாரத்  தடைகளால், இந்நாடுகளின் இயற்கை எரிவாயுத் தேவை மிகக் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதனால் இந்நாடுகள் மின்சாரம், வெப்பச் சாதன எரிவாயுப் பற்றாக் குறையைச் சந்திக்கத் துவங்கியுள்ளன. இந்நாடுகள் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள்  மின்சாரம் மற்றும் இதர எரிவாயுத் தேவைகளுக்கு மாற்று வழியை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இம்முயற்சி வெற்றி பெறும் நிலையில் ரஷ்யப் பொருளாதாரம் மிகப் பெரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும். 

ரஷ்யாவும் உக்ரைனும் சேர்ந்து உலகின் 70% நியானை உற்பத்தி செய்கின்றன. குறைக்கடத்திகள் எனப்படும் செமி கண்டக்டர்ஸ் (Semiconductors) தயாரிக்க மிக அவசியமானது நியான். ஏற்கனவே கணினி சில்லுகள் தட்டுப்பாட்டால் வாகன உற்பத்தித் துறை மந்தமடைந்து வரும் நிலையில், நியான் குறைபாடுகள் இத்துறையை மேலும் சிக்கலாக்கும். 

கனிம வளங்கள்

ரஷ்யாவைப் பொதுவாக கனிம வளச் சுரங்கம் எனலாம். இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் தவிர தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம், ஈயம், நிக்கல், தாமிரம், அலுமினிய தாதுப்பொருட்கள் போன்றவை இங்கு அபரிமிதமாகக் காணப்படுகிறது. மிக அரிதான கனிமமாகக் கருதப்படும்பலேடியம் எனும் பிளாட்டினம் தொகுதி கனிமத் தாதுக்களும் ரஷ்யாவில் கணிசமான அளவில் கிடைக்கிறது. உலகின் 43% பலேடியம் ரஷ்யாவில் மட்டும் கிடைக்கிறது. உலோகங்கள் பிரித்தெடுத்தல் மற்றும் செறிவூட்டல், உலோகக் கலவை உற்பத்தி ஆகியவை ரஷ்ய பொருளாதாரத்தில், மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

நிதி நிறுவனங்கள் முடக்கம்

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளில் ஒன்று ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவிலுள்ள ரஷ்ய வங்கிகள்,  வர்த்தக நிறுவனங்களின் முடக்கம். இம்முடக்கம் நிதிப் பரிவர்த்தனை மொத்தத்தையும் செயலிழக்கச் செய்து ரஷ்யாவின் அன்னியச் செலாவணியை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்து வரும் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளன. அதே போல் ரஷ்யாவும் தானியம், எரிவாயு தவிர்த்த மற்ற பொருட்களின் (ஆயுதங்கள், விண்வெளி, செயற்கைக்கோள் மற்றும் அணுசக்தி தொழில்நுட்பம் உள்ளிட்டவை) ஏற்றுமதியை 2022 இறுதிவரை தடை செய்துள்ளது. ரஷ்ய நிறுவனப் பங்குகள் பல நாடுகளின் பங்குச் சந்தையிலிருந்து விலக்கப்பட்டுவிட்டன. இதனால் தனி முதலீட்டாளர்களின் பணமும் முடங்கியுள்ளது. விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற கடனட்டை நிறுவனங்களும் கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்கின்றன. மின்னணு நிதிப் பரிமாற்ற நிறுவனமான ஸ்விஃப்ட் தனது ரஷ்யக் கிளைகளை மூடிவிட்டதால் உலகின் பிற நாடுகளிலிருந்து நடைபெறும் உடனடி பணப்பரிமாற்றம் தடைப்பட்டு, வர்த்தகநிறுவனங்களின் நிதிச் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வித நிதி நெருக்கடிகளால், சமீபத்தில் ரஷ்ய நாணயமான ரூபிள், வரலாறு காணாத அளவுக்குச் சரிந்தது. மக்கள் ஏடிஎம் மையங்களில் தங்கள் பணத்தை வங்கி அமைப்புகளிலிருந்து எடுக்க முயன்றனர். கூகுள் பே மற்றும் ஆப்பிள் பே ஆகியவை  துண்டிக்கப்பட்டதால், ரஷ்யர்கள் வர்த்தக மையங்கள்,  மெட்ரோ ரயில் பாதைகளில் பணப் பரிவர்த்தனை மட்டுமே செய்யும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்

வர்த்தக முடக்கம்

நிதி முடக்கத்தின் நீட்சியாக ஏராளமான தனியார் நிறுவனங்கள், தங்களது ரஷ்ய வர்த்தகங்களை நிறுத்தி வருகின்றனர். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ஐ.பி.எம் போன்ற பெரு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டனர். இந்நிறுவனங்கள் விற்பனையை மட்டுமல்லாமல் இதுவரை வழங்கிவந்த தொழில்நுட்ப ஆதரவையும் தடுத்துள்ளனர். கூகுள், யூடியுப், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ஆகிய நிறுவனங்கள் பெரும்பாலான சேவைகளை விலக்கிக் கொண்டனர். சோனி, நிண்டெண்டோ போன்ற நிறுவனங்களும் தங்களது விற்பனை மற்றும் சேவைகளை நிறுத்தியுள்ளனர். டி.எச்.எல், ஃபெடக்ஸ், யூ.பி.எஸ் போன்றவை லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் தளவாடச் சேவைகளை தடைசெய்துள்ளன. பல சர்வதேச விமான நிறுவனங்கள் ரஷ்யா மீதான வான்வழியைத் தவிர்த்துவிட்டனர்.

மெக்டோனல்ட்ஸ், பர்கர் கிங், ஸ்டார்பக்ஸ், பெப்சி போன்ற உணவு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் வர்த்தகத்தை முற்றிலுமாகவோ, சில பகுதிகளையோ நிறுத்திவிட்டனர்.

சர்வதேச அளவில் கால்பந்து போட்டிகளை நடத்தும் ஃபிஃபா, ரக்பி போட்டிகளை நடத்தும் ரக்பி ஃபெடரேஷன், டென்னிஸ் போட்டிகளைக் கையாளும் சர்வதேச டென்னிஸ் ஃபெடரேஷன், கார் பந்தயங்களை நடத்தும் ஃபார்முலா1 போன்ற அமைப்புகள் ரஷ்ய மற்றும் பெலாரூஸ் அணி மற்றும் வீரர்களுக்குத் தடை விதித்துள்ளனர். ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளில், ஊக்க மருந்து தொடர்பான தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதற்காக ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வேலை வாய்ப்பின்மை 

பொருளாதாரத் தடைகள், போர்ச் சூழல் காரணமாக இரு நாடுகளிலும் தொழில்கள் முடங்கிய நிலையில் வேலையிழப்பு அதிகரித்துள்ளது. பல குடும்பங்கள் வருமானமில்லாமல் வீதிக்கு வந்துள்ளனர்; பலர் தங்களது சொத்து, சேமிப்பு ஆகிய அனைத்தையும் இழந்து எதிர்காலம் குறித்த கேள்விக்கு விடை தெரியாது தவிக்கின்றனர். இது சமூகச் சீரழிவுக்கு வழிவகுக்கும் அல்லது புரட்சி இயக்கங்களை உருவாக்கும். இது இந்த இருநாடுகளின் எல்லையோடு நின்றுவிடப் போவதில்லை. உக்ரைனிலிருந்து போலந்து, ரொமேனியா, ஸ்லோவோகியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் லட்சக்கணக்கானோர் தஞ்சமடைவதால், அந்த நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். 

உக்ரைனின் உட்கட்டமைப்பு / நிதித் தேவைகள்

 

எறிகணை, குண்டு தாக்குதல்களால் உக்ரைனின் நகரக் கட்டமைப்புகள், பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் சிதிலமடைந்துள்ளன. கடந்த வாரத்தில் ஒரு நாள் ரஷ்யப் படைகள் உக்ரைனில் சபோரிசியா நகரிலுள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை வெடிகுண்டுகள் வீசித் தாக்கத் துவங்கின. இதில் சில குண்டுகள் அணு உலைக்கு மிக அருகில், (சுமார் 250 அடிகள்) விழுந்துள்ளதை இங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்துள்ளன. மேலும் ரஷ்ய துருப்புக்கள் அணு ஆலையில் உள்ள முக்கிய நிர்வாக கட்டிடத்தின் மீது ராக்கெட் மூலம் இயங்கும் கையெறி குண்டுகளை தாறுமாறாகச் சுட்டு வீசுவதையும், அதனால் தீ உண்டாகிப் பரவியதை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களைச் சுட்டதையும் காணமுடிகிறது. ரஷ்யத் தரப்பில் இது திட்டமிடப்பட்ட தாக்குதல் அல்ல என்று மறுத்தாலும், உக்ரைன் இது மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றே சொல்கிறது. இந்தத் தாக்குதல்களில் ஏதேனும் பிசகு ஏற்பட்டிருந்தால் உக்ரைனில் இன்னொரு செர்னோபில் துயரம் நிகழ்ந்திருக்கும். 

உள்கட்டமைப்பு, பொருளாதார வீழ்ச்சியைச் சீரமைக்க உலக வங்கியை நாடியுள்ளது உக்ரைன். அவசரத் தேவைகளுக்காக ஒண்ணரை பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்கவுள்ளது உலக வங்கி. இரண்டாம் உலகப் போர், ஈராக் போர், ஆப்கானிஸ்தான் போர் போன்ற போர்களுக்குப் பின்னர் நடந்த பொருளாதார வீழ்ச்சி அடிப்படையில், ரஷ்யப் போர் முடிந்தாலும், உக்ரைன் 50-60 சதவித பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

உலகப் பொருளாதாரம்

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன்பே, உலகப் பொருளாதாரம் பணவீக்கம், விநியோக இடையூறுகள்,  பற்றாக்குறை பலவித அழுத்தங்களைச் சந்தித்து வந்தது. இந்தப் போர் அவ்வகை அச்சுறுத்தல்களைப் பூதாகாரமாக்கி, தீர்வுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. உலகப் பொருளாதாரத்தை நலிவடையச் செய்யும் முதல் வஸ்து எரிசக்தி. எரிசக்தி விலைகள் இந்தாண்டு இறுதி வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டேயிருந்தால், அது  உலகப் பொருளாதாரத்தை இரண்டாவது மந்த நிலைக்கு எளிதாகச் சாய்த்துவிடும். 

இந்நிலையில் அமெரிக்கா, உக்ரைனுடன் இணைந்து உயிரியல், ரசாயன ஆயுதங்களை உருவாக்கி தாக்குதல் நடத்தத் தயாராகி வருகின்றன என ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. இதனை மறுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா அல்லது நேட்டோ படைகள் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராகப் போராடாது என்று சொல்லியிருக்கிறார். அமெரிக்கா, நேட்டோ படைகள் ரஷ்யாவைத் தாக்குவது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என்று பைடன் சொல்லியிருப்பது மிக நிதர்சனமான உண்மை. 

தானியம், எண்ணெய், கனிம கச்சாப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விநியோகச் சங்கிலி அறுபடுதல் உலகப் பொருளாதாரத்தை அசைக்கப் போவது உண்மை. குறிப்பாக, தானியம் மற்றும் எண்ணெய்க்காக இவ்விரு நாடுகளையும் நம்பியிருக்கும் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும். போர் முடிந்தாலும் இரு நாடுகளுக்கும் சாதகமான உடன்படிக்கை ஏற்படாத வரையில் அண்டை நாடுகளில் சிக்கல்கள் நீடிக்கலாம்.  உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குவதும் இந்த உடன்படிக்கையைப் பொறுத்தே அமையும்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த தொற்றுநோய் மந்த நிலையிலிருந்து உலகப் பொருளாதாரம் மீண்டு, வளர்ச்சியை நோக்கிய படிக்கட்டுகளில் ஏறத் துவங்கியுள்ளன; ஒவ்வொரு நாடும் அடுத்த சில ஆண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை, கணிப்புகளை வெளியிட்டு வந்தன; தொழிற்துறை நிறுவனங்கள் அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான மூலப் பொருட்களை, தொழில் நுட்பங்களை, புதிய கண்டுபிடிப்புகளை எதிர் நோக்கியுள்ளன. இந்நிலையில் ரஷ்ய – உக்ரேனியப் போரினால் அந்நாட்டுத் தொழில்களில் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள், உலகப் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதைத் தாமதப்படுத்தலாம், ஆனால் அது தற்காலிகமானது எனக் கருதப்படுகிறது. போர் எப்போது, எவ்விதமாக முடிவடைகிறது என்பதைப் பொறுத்தே எதிர்கால உலகப் பொருளாதாரம் அமையும் என வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

  • ரவிக்குமார்.

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad