விலங்கு
தமிழ் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு நல்ல தீனி போடுவது டப்பிங் செய்யப்பட்டுத் தமிழில் வெளியாகும் ஹிந்தி வெப் சீரிஸ்கள் தான். அவற்றில் கண்டெண்ட், மேக்கிங் என்று ஒரு நேர்த்தி இருக்கிறது. தமிழில் எடுக்கப்படும் வெப் சீரிஸ் என்பது எண்ணிக்கையில் குறைவுதான். அதிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரிஸ் என்பது மிகவும் குறைவு. ஆட்டோ சங்கர், நவம்பர் ஸ்டோரி, ட்ரிப்பிள்ஸ், புத்தம் புதுக் காலை, பாவக் கதைகள், நவரசா என முயற்சிகள் தொடர்ந்து அனைத்து பெரிய ஓடிடி தளங்களிலும் எடுக்கப்பட்டு வந்தாலும், அவை பெரும்பாலான மக்களை இன்னமும் சென்றடையவில்லை.
சிறுகதை – குறும்படம், குறும் புதினம் – திரைப்படம், புதினம்/நாவல் – இணையத் தொடர் என்று எழுத்து இலக்கிய வடிவங்களையும், திரைப்படைப்புகளின் வடிவங்களையும் ஒப்பிட்டுக்கொள்ளலாம். சில வெப் சீரிஸ்கள், பல சிறுகதைகள் கொண்ட தொகுப்புகளாய் (அந்தாலஜி) வருகின்றன. உதா. புத்தம் புதுக் காலை, நவரசா. பிற வெப் சீரிஸ்கள், நாவல் வடிவில் ஒவ்வொரு அத்தியாயங்களும் ஒரு எபிசோட் என்பது போல் வருகின்றன.
பிரபல இயக்குனர்கள் இணைந்து இயக்கிய வெப் சீரிஸ்கள் நல்ல கவனத்தைப் பெற்றாலும், பெருவாரியான ஒருமித்த வரவேற்பைப் பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். புதியவர்கள் இயக்கிய ஆட்டோ சங்கர், நவம்பர் ஸ்டோரி போன்றவை ஆங்காங்கு பாராட்டுகளைப் பெற்றாலும், பெரிய கவனத்தைப் பெறவில்லை. இந்த நிலையில் Zee5 தளத்தில் வெளியாகி உள்ள ‘விலங்கு’ சீரிஸ் நல்ல கவனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.
பசங்க, களவாணி என நன்றாகப் பெயர் பெற்று நடித்த விமல், கடந்த சில வருடங்களாகக் காணாமல் போனார். அதே போல், விண்ணைத்தாண்டி வருவாயா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற ஹிட் படங்களைத் தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனும் சில வருடங்களாகப் புதுப் படங்களைத் தயாரிக்காமல் இருந்தார். புதிய இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ், இதற்கு முன்னால் புருஸ்லீ என்றொரு படத்தை இயக்கியிருந்தார். அப்படியொரு படம் வந்ததா என்று கேட்கும் நிலையிலான ஒரு படம். இப்படி இருந்தவர்கள் இணைந்து உருவாக்கிய ‘விலங்கு’ என்ற இந்த வெப் சீரிஸ் இப்போது வெற்றி பெற்றுள்ளது.
வெப் சீரிஸ் வெற்றியை எப்படித் தீர்மானிக்கிறார்கள்? எத்தனை தடவை ஸ்ட்ரீம் ஆகி உள்ளது, எவ்வளவு புதுச் சந்தாதாரர்கள் வந்துள்ளனர்,, எத்தகைய மதிப்பீடு / விமர்சனத்தைப் பெற்றுள்ளது என்றெல்லாம் பார்க்கிறார்கள். அந்த வகையில் ’விலங்கு’ நூறு மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்கள். ஐஎம்டிபியில் 8+ ரேட்டிங் பெற்றுள்ளது. பெரும்பாலான விமர்சனங்களில் பாராட்டியுள்ளனர். அந்த வகையில் விலங்கு வெப் சீரிஸ் வெற்றி பெற்று உள்ளது என்று கூற வேண்டும்.
திருச்சி பக்கமுள்ள வெம்பூர் என்ற கிராமத்தில் இருக்கும் காவல் நிலையம் தான் இந்தக் கதையில் முக்கியக் களம். அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரியும் விமல், பால சரவணன், முனீஸ்காந்த் ஆகியோர் ஒரு கொலையைத் துப்பறியும் கதை தான் இது. ஒரு போலீஸ் ஸ்டேஷனின் டெய்லி ரொட்டீன் எப்படி இருக்கும் என்று இந்த வெப் சீரிஸ் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அந்தளவு டீட்டெயிலிங் காட்டியிருக்கிறார்கள்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் காட்டில் ஒரு பிணம் கிடைக்கிறது. விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, பிணத்தின் தலை காணாமல் போகிறது. அதைத் தேடி ஓடுகிறது போலீஸ் குழு. சீக்கிரமே குற்றவாளியைப் பிடித்தாலும், உண்மையில் அவனிடம் மாட்டிக்கொண்டது போலீஸ் தான் என்பது போல் ஆகிறது. சஸ்பென்ஸ், செண்டிமெண்ட் கலந்து இறுதியில் முடிக்கிறார்கள்.
போலீஸ்காரர்கள் சேர்ந்து கோவிலுக்குக் கிடா வெட்டுவது, போலீஸ் ஸ்டேஷனில் உண்மை வரவழைக்கும் ட்ரீட்மெண்ட், அங்கிருக்கும் சாதியக் கண்ணோட்டம், அவர்களுடைய ப்ரொமோஷன், ரிட்டையர்மெண்ட், சஸ்பென்ஷன் முறைகள் என்று போலீஸ் வாழ்க்கையைக் கதையில் முக்கியமாகக் காட்டுகிறார்கள். விமல் நடிப்பில் முன்னேறியிருக்கிறார் என்றாலும் அவர் மேலும் வேலையைக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. பால சரவணன் கலக்கியிருக்கிறார். ஆனால், மனிதர் வாயைத் திறந்தால் வண்டி வண்டியாய் கெட்ட வார்த்தைகள். அதற்காகவே, இதைக் குடும்பத்துடன் காண முடியாத நிலை. குடும்பத்துடன் காணக்கூடிய வெப் சீரிஸ் இருக்கிறதா என்று கேட்கும் வகையில் தான் எல்லா வெப் சீரிஸும் வருகின்றன.
மூன்றாவது எபிசோடிலேயே யார் குற்றவாளி என்று தெரிந்துவிட்டாலும், இறுதி வரை சலிப்பில்லாமல் கொண்டு செல்கிறார்கள். கடைசியில் இரண்டு கதாபாத்திரங்கள் ஆடும் மைண்ட் கேம், அதையொட்டி வரும் நிறைவுக் காட்சி என்று பிரமாதமாக முடித்திருக்கிறார்கள். விமலின் மனைவியாக வரும் இனியா, அவருடைய கர்ப்பக்காலக் காட்சிகள், குடும்பச் சண்டைகள் படத்திற்குப் பெரிதாக உதவவில்லை.
பொதுவாக, வெப் சீரிஸ்களுக்கு என்று ஒரு இலக்கணத்தை உருவாக்கிவிட்டார்கள். வன்முறை, பாலியல், கெட்ட வார்த்தைகள் கொண்ட காட்சிகளைப் படைப்புச் சுதந்திரத்துடன் இணைத்துக் கொண்டு வெப் சீரிஸ் என்றால் இதெல்லாம் இருக்க வேண்டும் என்று தேவையில்லாமலும் இதைக் கொண்டு காட்சியமைக்கிறார்கள். தேவையில்லாத பட்சத்தில் இது போன்ற போலி இலக்கணத்தைத் துறந்து, நல்ல கதைகளை வெப் சீரிஸ் வடிவத்தில் கொண்டு வரும் போது, அதற்கான வரவேற்பு பரவலாகக் கிடைக்கும். அந்த வகையில் விலங்கு வெப் சீரிஸ், தமிழ் வெப் சீரிஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க கட்டத்தை அடைந்துள்ளது. படைப்பாளிகள் இதிலுள்ள பாடத்தை அறிந்து கொண்டு, அடுத்தடுத்த நிலைக்குத் தமிழ் இணையத் தொடர்களைக் கொண்டு செல்ல முயல வேண்டும்.
- சரவணகுமரன்
Tags: vilangu