\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இலங்கை நிலவரம்

-பொருளாதாரத்தை நிலைப்படுத்த பல மாதங்கள் ஆகலாம்-

இலங்கைத்தீவின் கடன்களை மறுசீரமைக்கவும், உதவி நிதிகளை மீளளிக்க முடியாமையாலும் பல மில்லியன் கணக்கான குடிமக்கள் அன்றாட வாழ்விற்கே போராடிக்கொண்டிருக்கின்றனர். இதை நாம் சாதாரண இலங்கைக் குடிமகன் வாழ்வு நிலை பற்றி எடுத்துப்பார்த்தால் பல உண்மைகள் தெரியவரும். அந்தோனிப்பிள்ளை யோசெப்பு மூன்று ஆண் மகன்மாரை உடைய அப்பா. இவர் சராசரி இலங்கை வாழ்வில் சிறந்த ஒரு தந்தையும், தமது குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள கடினமாக உழைத்து வாழும் குடிமகனும் ஆவார். பகலில் சிறிய உணவகத்தில் மேலாளர்/மனேஜர் ஆக வேலை பின்னர் இரவில் வாடகைக் கார் செலுத்தி உழைத்து வந்தார். இந்த இரண்டு உழைப்புக்களையும் வைத்து தனது குடும்பத்தையும், தனது நோய்வாய்ப்பட்ட வயோதிப தாயாரையும் பார்த்து வந்தார். ஆனால் இலங்கைப் பொருளாதார முடுக்கல்களால் தமது இரண்டு வேலைகளையும் இழந்து விட்டார் பாவம் யோசேப்பு. இன்று அவர் தெருவில், அவர் தம்மைப் போன்ற வாழ்வு நிலையில் உள்ள மற்றய மக்களுடனும் சேர்ந்து அமைதியாக தமது உரிமைப் போராட்டத்தையும், தற்போதைய சனாதிபதி மற்றும் இலங்கையை ஆழும் குடும்பம் அகற்றிடவும் குரல் கொடுத்து வருகிறார்.

கடந்த வாரம் வியாழக் கிழமை (மார்ச் 31, 2022) அன்று இலங்கை சனாதிபதி கோத்தபய வீட்டின் முன்னே எதிர்ப்புக்கரகோஷம் போட்ட போது யோசேப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நன்றாக நயப்புடைப்புக்கும் உள்ளானார். பல ஆத்திரம் மிக்க மக்கள் “Gota go home! கோத்தா வீடு செல் !” என இலங்கை சனாதிபதி கோத்தபாயாவை நிரந்தமாக வீட்டுக்கு போகுமாறு கோஷமிட்டனர். இதை காவல்துறையினர் ஆயுதகோல்களால் அடித்தல், அச்சுறுத்தல், கண்ணீர்ப் பூகை விசிறுதல், தண்ணீர் பிரங்கிகளால் குறிவைத்து குடிமக்களைத் தாக்குதல் போன்றவற்றைக் கையாண்டு எதிர்க்கும் குழுவை அகற்ற முனைந்தனர்.

“கோத்தா வீடு செல்” என்ற கரகோஷம் அந்த இடத் தெருக்களில் சுமார் 5000 இற்கு மேற்பட்ட மக்கள் ஒரே குரல் ஆகின. இது நாட்டின் சகல பகுதிகளிலும் மாதங்களாக இலங்கைத் தீவின் பொருளாதார வீழ்வு, அதனால் வதையுறும் மக்கள் அமோக கோரிக்கை, கதறல் ஆகிவிட்டது. இந்தப் பொருளாதார வீழ்ச்சி இலங்கை நாட்டின், 1948இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இன்று வரை நிகழ்வுறாத பாரிய மக்கள் வாழ்வுத்தாக்கமோ ஆகும். இன்று மக்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்கும் போகாமல் பல மணி நேரம் இரவு, பகல் பார்க்காமல் பல மைல்கள் சமைக்க எரிவாயு, மண்ணெய், வாகனம் ஓட, விவசாயம், எரிபொருள், பால்மா, உணவு மற்றய அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக் கொள்ள அணிவரிசையில் நிற்கிறார்கள்.

மேலும் மருந்து வகைகள் யாவற்றிற்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கையில் அத்தியாவசிய மருந்துக்கள் எதுவும் உற்பத்தி செயப்படாததால் வெளிநாட்டுச் செலவாணி இன்மையால் இறக்குமதியும் செயப்படவில்லை. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் மயக்க மருந்து இல்லாமையால் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளும் ஒத்திப்போடப்பட்டுள்ளது. பல் வைத்தியமும் சாதாரண பரிபாலனை கூட செய்யமுடியாமல் இயங்கத் தேவையான அத்தியாவசிய இயந்திரங்கள், மருந்துக்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதை விட பள்ளிக்கூடங்கள்கூட சாதாரண பரீட்சைக்கு மாணவர்கள் கேள்விகளை அச்சிட காகிதம் வாங்கக்கூட காசு இல்லாமல் ஒத்திப்போட வேண்டியதாயிற்று. சென்ற சனிக்கிழமை கல்வி அமைச்சு தவணை பரிசோதனைகள் மாத்திரம்தான் வைக்கலாம் என்றும் கூறியது. ஆனால் பிள்ளைகள் பயணம் செய்யும் பேரூந்துகளுக்கு டீசல் எரிபொருள் இன்மையால், பாடசாலைகள் கைச்செலவிற்கும் காசில்லாமல் தவணை இறுதிப் பரீட்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

“நாங்கள் பசியுடன் இருக்கிறோம், வருமானம் இன்றி சோர்வடைகிறோம், மனம் வெறுத்த நிலையில் மேலும் எமது வாழ்வைப் பற்றி நினைத்துப் பயப்படுகிறோம்” என்றார் அமைதியான யோசேப்பு. இவர் வாழ்வு உணவுப் பொருட்கள் விலைவாசியால் உணவகம் தொழிற்பட முடியாது பூட்டப்பட்டு தமது தொழிலை இழந்தார், மேலும் வாடகைக் கார் ஓட்டவும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் அதையும் இழந்து விட்டார். நான் தெரு வந்து போராடும் குடிமகன் அல்ல. எனது மகன்மார் நல்ல பள்ளியில் கல்வி கற்கிறார்கள் அவர்களுக்கு நல்லதொரு உதாரணமாக நான் இருக்க விரும்புகிறேன். ஆனால் எவ்வாறு எனது குடும்பத்திற்கு உணவளிப்பது, பிள்ளைகளை படிப்பிப்பது, எனது வருத்தமுற்ற தாயாரிற்கு மருந்து வாங்குவது போன்ற வற்றிற்கு வழி தெரியவில்லையே. எமக்கு எதிர்காலம் ஒன்று உள்ளதா என்றும் தெரியவில்லையே என்று அங்கலாய்த்தார் யோசேப்பு.

சனாதிபதியின் இல்லத்திற்கு வெளியே அமைதியான போராட்டம் படிப்படியாக கலகங்களாக வெடித்தன. இது இலங்கையின் சிறுபான்மை மக்கள் இரத்தம் தோய்ந்த கடந்த காலத்திலிருந்து வேறுபட்டதாக இருந்தது. இந்த முறை, வாழ்க்கையின் அனைத்து தரப்பு மக்கள், மதங்கள் மற்றும் இன பின்னணியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு, சனாதிபதியை பதவி விலகுமாறும், குறிப்பாக இலங்கை தமது சொத்தாக நினைத்து ஆழும் ராஜபக்ஸே குடும்பத்தாரை வெளியேறுமாறும் கேட்டுக்கொண்டனர். பொருளாதார உற்பத்தி உள்ளூரில் கைவிட்டு இறக்குமதியை நம்பியிருக்கும் இலங்கை நாட்டில் பால்மா, அரிசி, மாவு, எரிபொருள் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் மற்றும் சேவைகள் மறுக்கப்பட்ட குடிமக்களால் மக்களால் ஒருமித்து சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் காகித அட்டைகள்/ பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இறுதியில், கடந்த வாரம் அரசாங்கம் ஏற்கனவே ஒரு மாதமாக இருட்டடிப்புகளால் பாதிக்கப்பட்டு, விரக்தியின் விளிம்பில் இருந்த ஒரு நாட்டிற்கு 13 மணி நேர மின்வெட்டை அறிவித்ததுதான் கடைசி மக்களின் பொறுப்பிழப்பு எனலாம். மார்ச் மாதத்தில் மட்டும், 1,000 க்கும் மேற்பட்ட சிறிய உணவகங்கள் வணிகத்தை விட்டு வெளியேறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன?

கடந்த வியாழனன்று (மார்ச் 31, 2022) இரவு நடந்த கலவரங்களைத் தொடர்ந்து, இராஜபக்சே அரசாங்கம் விரைவாக ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியதுடன்,  நாட்டின் பாதுகாப்பை அவசரகால சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது. சனாதிபதி கோத்தா ராஜபக்சே பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி ஒன்றை உடன் பிரகடனப்படுத்தினார். இது ராஜபக்சே சகபாடிகளுடன் உருவாக்கிக்கொண்ட அண்மை யாப்பு. சனாதிபதிக்கு தான் தோன்றித் தனமாக அமோக தனிப்பட்ட அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன.  “பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளை பராமரித்தல் ஆகியவற்றின் நலன்களுக்காக” ஒழுங்குவிதிகளை உருவாக்குவதற்கான அதிகாரத்தை அவருக்கு வழங்குகிறது.

இதன் முன்னர் இப்பேர்பட்ட கையாளல்கள் வெவ்வேறு விதமாக ஒருகாலத்தில் இலங்கைத் தமிழ், முஸ்லீம் மக்களுக்கும் எதிராக உபயோகிக்கப்பட்ட ஒரு யுக்தியே ஆகும். இன்று அது சிங்கள் மக்கள் உட்பட யாவரிற்கும் மேலாக தம்தமது பலத்தை உறுதி செய்து கொள்ள உபயோகிக்கப்பட்டது. எனவே அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ், சனாதிபதி பிடியாணைகள் இல்லாமல் கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களுக்கு அதிகாரமளிக்க முடியும், எந்தவொரு சொத்துக்களையும் உடைமையாக்கிக் கொள்ள முடியும் மற்றும் எந்தவொரு வளாகத்தையும் சோதனையிடலாம். இது ஒரு சனநாயகத்தை நம்பியிருக்கும் நாட்டில் ஆட்சியாதிக்க கொள்கையுடையோர் கையாளும் தந்திரமாகும்.

சனிக்கிழமை (ஏப்ரல் 2, 2022) மாலை, அரசாங்கம் நாட்டை மேலும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவின் கீழ் வைத்தது. இது ஞாயிறன்று திட்டமிடப்பட்டிருந்த நாடு தழுவிய போராட்டத்தை நிறுத்துவதற்கான ஒரு முயற்சி என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கூறுகின்றனர். ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், அரசாங்கம் அனைத்து சமூக ஊடகங்களையும் முடக்கியதை அடுத்து ஞாயிறன்று  (ஏப்ரல் 3, 2022), மத்திய கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்து நின்றனர். “கோத்தா வீட்டுக்குப் போ” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் கோஷமிட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அணிவகுப்பை முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்புப் படையினரைக் கேட்டுக்கொண்டார். “குடிமக்கள் இப்படி வாழ முடியாது. இராஜபக்சே தம்மை பொதுமக்களின் சீற்றத்தில் இருந்து காப்பாற்றவே இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தமது கருத்தை வெளியிட அவர்கள் அமைதியாக அணிவரிசையில் முன்னேறிச் செல்லட்டும்” என்று சஜித் பிரேமதாச கேட்டார். ஆயினும் இராணுவத்தினால் அந்தக் கோரிக்கைக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

இதில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் , தனது சனாதிபதி ஏற்புரையில், நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் “சிங்கள பெரும்பான்மை வாக்குகளால்” தான் பதவிக்கு வந்ததாக கோத்தபய ராஜபக்சே கூறினார். ஆயினும் இம்முறை பொதுமக்களின் சீற்றம், இராஜபக்சேக்களின் கொடூர கரங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினரிடமிருந்து மட்டுமன்றி, ஒட்டுமொத்த இலங்கை நாட்டின் பொது மக்களிடமிருந்தும் வெளிப்படுகிறது.

இலங்கைத் தமிழ்-முஸ்லீம் மக்களால் ஒருபோதும் மறக்க முடியாத இன்னுமொரு விடயம் என்னவென்றால், சனாதிபதி கோத்தபயாவும் அவரது சகோதரரும் தற்போதைய பிரதம மந்திரியும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் மூன்று தசாப்தகால தமிழ் மக்கள் மீதான இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் போதும், பின்னர் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக இனவெறுப்பு மற்றும் மனித உரிமை மீறல்களை தூண்டியதற்காகவும் போர்க்குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இன்று இலங்கை மக்கள் கூறுவது என்னவென்றால் “ராஜபக்சேக்கள் எங்கள் அனைவரையும் வெளியேற்றியுள்ளனர் என்பதை உணர்ந்ததில் இருந்து கோபம் எழுகிறது” என்பதேயாகும். “அவர்கள் எங்களை தங்கள் பிரித்தாளும் கொள்கையில் பயன்படுத்தியுள்ளனர், நம்மிடமிருந்து திருடப்பட்டு, எங்கள் நாட்டை சீரழித்துள்ளனர், இப்போது நமக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் எதிர்காலம் உள்ளது. ராஜபக்சேக்கள் அனைவரும் வெளியை செல்ல வேண்டும்” என்று வியாழக்கிழமை பேரணியில் கலந்து கொண்ட சிங்களக் குடிமகன் ஒருவர் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் முழுதும் ராஜபக்சேக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ராஜபக்சே வம்சம் மத்திய அமைச்சரவையில் ஒன்பது வர்த்தக அமைச்சுகளையும் ஏழு உயர்மட்ட அமைச்சரவை பதவிகளையும் கொண்டுள்ளது. கோத்தபய ராஜபக்சே ஜனாதிபதியாக பதவி வகிக்கும் அதேவேளை, பிரதமர் அவரது மூத்த சகோதரரும் முன்னாள் சனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சே ஆவார். நிதி அமைச்சர் அவரது மூன்றாவது சகோதரர் பசில் ராஜபக்சே. அதே சமயம் ராஜபக்சே உடன்பிறப்புகளில் மூத்தவரான சமல் ராஜபக்சே நாட்டின் தற்போதைய வெளியுறவு அமைச்சராக உள்ளார். இத்துடன் நிற்கவில்லை இலங்கை ஆழுமை அட்டவணை தொடருகிறது. பிரதமரின் மூத்த மகனான நாமல் ராஜபக்சே இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும், அவரது இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே அவரது பணியாட்டொகுதித் தளபதியாகவும் உள்ளனர். ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் அதிக அளவில் களத்தில் இறங்கியுள்ள நிலையில், இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் 75 வீதமானவை இந்த வம்சத்தின் கையிலேயே உள்ளன. இலங்கையின் சென்ற இரண்டு தசாப்தத்திற்கு மேலாக ஏறிய கடன்கள், பொருளாதார நெருக்கடிக்கு நேரடிக்காரணம் இந்த ராஜபக்சே வம்சம்தான். ராஜபக்சே முதலும் கடன்கள் இருந்தன, இவர்கள் மாத்திரம் இலங்கை நிலமையை உருவாக்கவில்லை என்று காரணம் காட்டும் ஒரு சிலர் உண்டு. ஆயினும் தற்போத குடிமக்கள் வேதனைகளுக்கு, அதற்குத் தீர்வு காண வேறு எதுவும் பேசிப் பலனில்லை.

இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தனது பொருளாதாரத்தைப் பார்த்துக் கொள்ளவில்லை என்று உள்நாட்டு புத்திஜீவிகள் சிலர் சொல்வார்கள். குறிப்பாக ஆட்சிக்கு வந்துள்ள ஒவ்வொரு அரசாங்கமும் மக்களை தம் வாக்காளர்களாகவே கருதி, ஏதாவது ஒரு வகை சிறு சலுகைகளை அவர்களுக்கு வழங்கி விட்டு, அதன் விளைவாகத் தங்களைத் தாம் செழுமைப்படுத்திக் கொண்டுள்ளன என்பது மறைக்க முடியாத இலங்கைச் சரித்திரம். இதன் பரிவிளைவு என்னவென்றால், நாட்டில் அரசியல்வாதிகளும், அவர்கள் நாட்டின் பொருளாதாரம் பற்றிச் சிந்திக்காமையும், இலங்கை எப்போதும் சம்பாதித்ததை விட அதிகமாக செலவழித்தவாறே உள்ளது. இதன் விளைவாக நாடு ஒட்டு மொத்த பற்றாக்குறைகளை உருவாக்கியுள்ளது. இலங்கையின் கடந்த கால ஊழல் அரசாங்கங்களில், ராஜபக்சே குடும்ப ஆட்சி முதலிடத்தில் உள்ளது. 2015ல் முடிவடைந்த மஹிந்த ராஜபக்சேயின் சனாதிபதி பதவிக்காலத்தில், குடும்பம் தமது செல்வத்தை பலப்படுத்தத் தொடங்கியது.

இலங்கை சாதாரண பொதுமக்களுக்குத் தெரிந்ததோ இல்லையோ 2007 ஆம் ஆண்டில், அப்போதைய பலசாலியான ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சே கடன் வாங்குவதற்கான ஒரு முக்கியமான கொள்கை முடிவை எடுத்தார். இது பற்றி பொதுமக்கள் விவரமாக தெரிந்து கொள்ளவில்லை. பொதுமக்களுக்கு தாம் தமிழீழ விடுதலைப் புலிகளை வெல்லுகிறோம் என்ற வெளிப்படைப் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் போது சிங்கள பெரும்பான்மையினர் இது நல்ல விடயமே என்று சொல்லி இருந்து விட்டனர். 

ஆயினும் பின்னணியில் சூசகமாக இலங்கை அரசாங்க கடன் பத்திரங்கள் பொதுமக்கள் சார்பில் மூலதனச் சந்தைகளில் விற்கப்பட்டன. பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும், அந்த கடன் வாங்குவது தொடர்கிறது. இது  இன்று இலங்கையின் கடனில் சுமார் 38 சதவீதமாகும். மக்கள் பெயரில் எடுக்கப்பட்ட இந்தக் கடன்கள் நாட்டிற்கு மலிவாக வரவில்லை. மேலும் அவை ராஜபக்சேவின் கூட்டாளியான  தந்திரமிக்க சீனாவிடமிருந்து வந்தவை.  இவை அண்மித்து இருக்கும் குடும்ப, கலாச்சார, சமூக தொடர்புள்ள இந்தியாவைத் தவிர்த்து அப்பால் சென்று தமது தேசத்தை ஒரு சுயநலமாக அடவு வைத்து தமது ஆட்சியைத் தொடரும் குறிக்கோளுடன் அமைக்கப்பட்டன. இந்த சுயநல விடயத்தைச் சற்றுக் கூர்ந்து பார்க்கலாம். 

மஹிந்த ராஜபக்சே சனாதிபதியாக இருந்தபோது, சீனா இலங்கையில் அனைத்து புதிய உட்கட்டமைப்புத் திட்டங்களிலும் 70 சதவீதத்தில் ஈடுபட்டது. அக்காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு சீனா குறைந்தபட்சம் 14 பில்லியன் அமெரிக்க டொலர்களை புதிதாக கடனாக வழங்கியது, அவற்றில் பெரும்பாலானவை ராஜபக்சே குடும்பத்தின் பைகளில்  உள்ளன என்று பொதுமக்களும், விபரந் தெரிந்த அரசு உத்தியோகஸ்த்தரும் கருதுகிறார்கள். ஆனால் அப்போது யாரும் பெரிதாக இது பற்றி பயத்தினால் குரல் கொடுக்கவில்லை.

தமிழ் மக்களைக் கொன்று குவித்த போரில் அந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சீனர்கள் பாதுகாப்பு தருவார்கள் என்று ராஜபக்சேக்கள் எதிர்பார்த்தனர். சீனாவும் பொதுவாக அதைக் கண்டு கொள்ளவில்லை காரணம் சீனாவின் பிராந்திய ஆக்கிரமிப்பு, பொருளாதார நோக்கு வேறாகும். பல தேவையற்ற அலங்கார, தமது பேரை, அடயாளத்தை விளம்பரம் செய்யும் பல திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் அவர்கள் சீனர்களிடமிருந்து பணத்தைப் பெற்றனர். இப்போது இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை, ஏனென்றால் அந்நியச் செலாவணி இல்லை. தற்போது இலங்கையின் 35 பில்லியன் டொலர் (இந்தத் தொகை உண்மையில் 50 பில்லியன் டொலரிற்கும் அதிகம் என்றும் கூறிக் கொள்ளப்படுகிறது.) வெளிநாட்டுக் கடனில் சுமார் 10 வீதத்தை சீனா கொண்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், தற்போதைய கோத்தபய ராஜபக்சே சனாதிபதியாக அதிகாரத்திற்கு வந்தவுடன், எதுவித நீண்டகால பொருளாதார நோக்கின்றி அவர் சில தவறான கொள்கை முடிவுகளை எடுத்தார். அவர் வருமான வரிக் குறைப்புக்களை அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே நாடு கடனில் ஓடியவாறு இருக்கையில், இதில் மதிப்புக் கூட்டு வரியை Value Added Tax பாதியாகக் குறைத்து அரசாங்கம். மேலும் வருமான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் அதிக பணத்தை அச்சிடத் தொடங்கியது, இது அதிக பணவீக்கத்திற்கு வழிவகுத்தது. இதை யதார்த்தமாக நாட்டின் நன்மை கருதி எடுத்துப்பார்த்தால் விடயம் தெளிவுறும். இது மிகவும் அகங்காரமான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட முடிவாகும். குறிப்பாக இலங்கை ஏற்கனவே உலகிலேயே மிகக் குறைந்த வரி வீதங்களில் ஒன்றைக் கொண்டிருந்தது என்பதைக் கருத்தில் கொண்டு, இப்பேர் பட்ட முடிவு எடுப்பதில் எவ்வித அர்த்தமும் இருக்கவில்லை என்பது அம்பலமாகிறது. இந்த மூடத்தனமான முடிவுகளின் பின்னர் கொரோணா COVID-19 தொற்றுநோய் இலங்கை அதன் முக்கிய வருமான ஆதாரமான அதன் சுற்றுலா தொழில்துறையிலிருந்து சுமார் 4 பில்லியன் டாலர்களை இழந்தது.

பாரிய கொரோணா தொற்றுநோய் காரணமாக இலங்கை சர்வதேச சந்தைகளில் இருந்து கடன் வாங்குவதும் சாத்தியமற்றதாகிவிட்டது. அதே சமயம் அரசாங்கம் அதன் கையிருப்புகளான சுமார் 7.5 பில்லியன் டாலர்களை நாட்டின் இறக்குமதி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பாரிய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும் தொடர்ந்து பயன்படுத்தியது. இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கிய நிலையில், சனாதிபதி ராஜபக்சே கடந்த ஆண்டு ஆலோசகர்களின் ஆலோசனைக்கு எதிராக மற்றொரு மோசமான முடிவை எடுத்தார்.  இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை உரங்கள் மீது ஒரு முழுமையான தடையை விதிக்கப் பட்டது. இது நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது.

இங்கிருந்து இலங்கை எங்கு தான் செல்ல முடியும்?

அன்றாட செலவுப் பற்றாக்குறையை நிரப்பவும்,இலங்கை அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முனைந்தது. இந்த நோக்கத்திற்காக, இலங்கை கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முனைந்தனர். ஆயினும் பாரிய கடன் கொடுப்பாளியாகிய சீனா இதற்கு செவி மடுத்தாகத் தெரியவில்லை என்று விபரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்பு பல தடவை மறுத்தும், கடந்த மாதம், சனாதிபதி கோத்தபய இராஜபக்சே இறுதியாக ஒப்புக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்திடன் மீண்டும் உதவி கேட்பதற்கு சம்மதித்தார். முன்னர் சர்வதேச நாணயத்தை அணுகத் தவிர்த்துக் கொண்ட ஒருகாரணம் இங்கிருந்து வரும் நிதியுதவையை தமது சுயநல தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாமை என்றும் கருதப்படுகிறது. இலங்கை இப்போது கடன்களை மறுசீரமைப்பதில் சிக்கித் தவிக்கும் நிலையில், கடன் கொடுத்தவர்களுடன் நீண்ட காலத்திற்கு பணம் செலுத்துவதற்கு உடன்படிக்கைக்கு வருவது, நிதியைப் பெறுவது மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதிக்கான சர்வதேச சந்தைகளை அணுகுவதற்கான அனுமதியைப் பெறுவது, இலகுவாக அமையப் போகும் விடயம் அல்ல. குறிப்பாக இலங்கை உரிய காலத்தில் அருகாமல் கடைசி நேரத்தில் சென்றமை அதற்கான பரிவிளைவுகளையும், மாதக் கணக்கான பிந்தல்களையும் எதிர்பார்க்கலாம். இது முழு இலங்கைப் பொதுமக்களும் வேண்டியோ வேண்டாமலோ, தகுதியற்ற சுயநல அரசியல்வாதிகளால் தாங்கிக்கொள்ள வேண்டிய முடிவற்ற வேதனையாகவே இருக்கிறது. ஆனால், அது பொருளாதாரம், அன்றாட வாழ்வு இலங்கை மக்களுக்கு மேம்படுவதற்கு முன்பு அது மோசமாகிவிடலாம். துப்பாக்கி, ஊரடங்குச் சட்டம், வலுக்கட்டாய அடக்கல்களை கோத்தபயா அரசாங்கம் சில காலம் உபயோகிக்கலாம் ஆயினும் பசித்த அந்தோனிப்பிள்ளை யோசேப்பு போன்ற பொது மக்கள் அவர்கள் அன்றாட வாழ்வுக்கான புரட்சி இலகுவில் தணிந்திடும் போல தெரியவில்லை.

    வேலிக்குருவி-

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad