முடிவுக்கு வருகிறதா பொருளாதார உலகமயமாக்கம்?
இந்தக் கட்டுரையை நீங்கள் எந்தக் கருவியில் – கணினி, மடிக்கணினி, கைக்கணினி, கைப்பேசி – படிக்கிறீர்களோ தெரியாது, ஆனால் அந்தக் கருவியில் குறைந்தது ஐந்து நாடுகளின் உதிரிப் பாகங்களாவது கலந்திருக்கும். மிக நேர்த்தியான, இலகுவான, இன்றியமையாத பொருளாக மாறிவிட்ட கருவி, உங்கள் கைகளில் தவழ்வதற்குக் காரணமாக அமைந்தது உலகமயமாக்கல் சாத்தியப்படுத்திய பூகோள எல்லைகளைக் கடந்த விநியோகச் சங்கிலி எனலாம். இன்று நாம் அன்றாட வாழ்வில், காலையில் எழுந்ததும் பல்துலக்கும் ப்ரஷ், பேஸ்ட், குளிக்க சோப்பு, துடைக்கும் டவல், உடுத்தும் உடைகள், காலணிகள், குடிக்கும் காபி/தேநீர், உண்ணும் உணவு, பயணிக்கும் வாகனம் அனைத்திலும், முகந்தெரியாத, ஏதோவொரு தொலைதேசத்தில் வாழும் மனிதரின் உழைப்பு கலந்திருக்கிறது. ஒரு காலத்தில் உள்ளூர் தயாரிப்புகளையே பிரதானமாக பயன்படுத்திவந்த பலரும் உலகின் பிரிதோர் மூலையில் தயாரிப்பதை நுகரத் துவங்கி விட்டனர். தமிழகத்தில், சின்னப் பெட்டிக்கடைகளில் அதே ஊரைச் சார்ந்தவர் உருவாக்கிய வேர்க்கடலை உருண்டைகள் அடங்கிய கண்ணாடிக் குடுவைகள் குறைந்து அமெரிக்க பெப்சி பெருநிறுவனத்தின் ‘லேஸ்’ சிப்ஸ்கள் சரஞ்சரமாகத் தொங்குகின்றன. இதையெல்லாம் சந்தைப்படுத்தியதும், சாத்தியப்படுத்தியதும் உலகமயமாக்கல்.
உலகமயமாக்கச் சித்தாந்தம்
தனிப்பட்ட நாடுகளின் வளங்களை மையப்படுத்தும் வணிகம் 15ஆம் நூற்றாண்டில் கிறிஸ்டோஃபர் கொலம்பஸின் உலகப் பயணத்தில் தொடங்கியது என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள். ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டில் பட்டுப் பாதையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த செங்கிஸ்கானின் காலத்திலேயே உலகமயமாக்கல் கோட்பாடு முன்னெடுக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் சிலர். மசாலா, நறுமணப் பொருட்கள், தேயிலை, உலோகம், காகிதம் போன்றவை ஆரம்ப கால உலகமய வர்த்தகத்தின் முக்கியமான பண்டங்களாகத் திகழ்ந்தன. ஆனால் 1980களில், ‘ஃப்ரீ டிரேட்’ எனும் தடையற்ற வர்த்தகம், உலகமயமாக்கல் வளர்வதற்கு விதையாக அமைந்தது.
தடையற்ற சந்தையில், பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குபவர்கள் ஒருபுறமும் அவற்றை நுகர்வோர் மறுபுறமும் இருப்பார்கள். இதில் இடம்பெறும் வர்த்தகம் வழங்கல், தேவையின் (Supply & Demand) அடிப்படையில், தன்னிச்சையாக, அரசாங்கத்தின் இடையூறு, தடைகள் பெரிதுமில்லாமல் நடைபெறும். அமெரிக்கப் பொருளாதாரம் தடையற்ற சந்தை அடிப்படையில் இயங்குகிறது. அரசாங்கம் நேரிடையாக வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தாவிட்டாலும், உணவு மற்றும் மருந்து மேலாண்மை, நோய்க் கட்டுப்பாட்டுத் துறைகள் மூலம் வர்த்தகத்தை மேற்பார்வையிடுகிறது.
உலகமயமாக்கல், தடையற்ற வர்த்தகத்தின் நீட்சியாக விரிவடைந்தது. இக்கோட்பாட்டின்படி, வர்த்தகத்துக்குத் தேவையான மூலதனம், வளங்கள் அனைத்தும் பரவலாக்கப்படுகிறது. முழுமையடைந்த பொருட்களைப் பரிமாறிக்கொள்வது தடையற்ற சந்தையென்றால், அப்பொருளின் உற்பத்தித் திறனைப் பரவச் செய்வது உலகமயமாக்கல். உதாரணத்துக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த இண்டெல் நிறுவனம், சீனாவில் முதலீடு செய்து தொழிற்சாலை உருவாக்கி, சீனத் தொழிலாளிகள் மற்றும் இதர வளங்களைப் பயன்படுத்தி செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்து, தனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு, மீதமுள்ளதை சீன நிறுவனங்களுக்கும் மற்றவர்களுக்கும் விற்பனை செய்வது உலகமயமாக்கல். சீனாவின் கட்டுமான வளங்கள், மற்றும் மலிவான உற்பத்திச் செலவுகள், குறைந்த விலையில் முழுமையடைந்த செமிகண்டக்டர்களை இண்டெல் நிறுவனத்துக்குச் சாத்தியமாக்கித் தருகிறது; அதே சமயம் உதிரி பாகங்கள் தயாரிப்பு, கூடுதலான வேலை வாய்ப்புகள், வரி வருவாய் போன்றவை சீனாவுக்குச் சாதமாக அமைகின்றன. இதனால் இருதரப்பினரும் பலனடைவதோடு, அந்த செமி கண்டக்டர்கள் பொருத்தப்படும் சாதனங்களும் சகாய விலையில் கிடைப்பதால் நுகர்வோரும் பயனுறுகின்றனர்.
பல்வேறு பிராந்தியங்கள் அல்லது நாடுகளின் பொருட்கள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைத்து, அந்தந்த நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தகக் கொள்கைகளை உருவாக்குவதே உலகமயமாக்கம். தற்காலத் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பம், மேம்பட்ட போக்குவரத்துச் சாதனங்கள் போன்றவை பூகோள எல்லைகளை இளகச் செய்து, பொருளாதார அடிப்படையில் நாடுகளைப் பிணைத்து உலகமயமாக்கச் சித்தாந்தத்தைத் துரிதப்படுத்தி, வெற்றி பெறச் செய்துள்ளது. உலகின் அனைத்து விஷயங்களிலும் நன்மை, தீமை என இரு பக்கங்கள் உண்டு. உலகமயமாக்கலும் இதற்கு விலக்கல்ல.
சாதகங்கள்
- வளரும் நாடுகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
- நிறுவனங்களுக்கிடையே தொழிற் போட்டி உருவாகிறது.
- தொழில்துறை உற்பத்திச் செலவுகள் குறைகின்றன.
- பொருட்கள் மலிவடைந்து நுகர்வோர் பயனுறுகின்றனர்.
- நாட்டில் பணச் சுழற்சி அதிகரித்து பொருளாதாரம் வளர்கிறது.
பாதகங்கள்
- சமனற்ற பொருளாதாரம்
- பெருநிறுவனங்களால் உள்ளூர் சிறு/குறு வர்த்தகங்கள் முடங்குதல்
- உலகமயமாக்கப் பொருளாதாரத்தில், உலகளாவிய பெருமந்த நிலையும் ஏற்படலாம்
- தொழிலாளர்களின் உரிமைகள், நலன்கள் பாதிக்கப்படுகின்றன
- சுற்றுச்சூழல் பாதிப்புகள் வேகமெடுத்து வளர்கின்றன.
மேற்சொன்ன சாதக, பாதக அம்சங்களைக் குறித்து உலகப் பொருளாதார வல்லுனர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டு வாதிட்டு வந்தாலும், கடந்த இரண்டாண்டு நிகழ்வுகள் உலகமயமாக்கலின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.
கொரோனாக்கால பொதுமுடக்கம்
2018 ஆம் ஆண்டு காலகட்டத்தில், அதாவது கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கும் முன்பே அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையேயான வர்த்தகப்போர் உலகமயமாக்கலை லேசாக அசைத்துப் பார்த்தது. உள்நாட்டு வர்த்தகத்தைத் தூக்கிவிடவும், ஏற்றுமதி-இறக்குமதிக்கு இடையே எழுந்திருந்த வர்த்தகப் பற்றாக்குறையை (Trade deficit) நிவர்த்திக்க அன்றைய அமெரிக்க அதிபர் டானல்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினியம் போன்ற பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரை வரி விதித்தார். இது சீனாவின் ஏற்றுமதியை பெருமளவில் பாதித்தது. தொடர்ந்து ஹுவாய் போன்ற நிறுவனங்களின் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளால் வெகுண்டெழுந்த சீன அதிபர் ஜின் பிங், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, கோதுமை, பழங்கள், ஒயின் போன்ற பண்டங்கள் மீது இறக்குமதி வரியை உயர்த்தினார். இருபெரும் பொருளாதார வல்லரசுகளுக்கிடையே மூண்ட இந்த வர்த்தகப்போர் உலகமயமாக்கலின் சில அம்சங்களைக் கேள்விக்குறியாக்கியது.
தொடர்ந்து வந்த கொரோனா பொது முடக்கம் இதை மேலும் சிக்கலாக்கியது. வெவ்வேறு சமயங்களில் உலக நாடுகளில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், விநியோகச் சங்கிலி அறுபட முதன்மை காரணமாகியது. ஒருபுறம் நுகர்வோர் தேவைகள் (Demand) அதிகரித்துக்கொண்டே வர அதை எதிர்கொள்ள முடியாமல் வழங்குத்திறன் (Supply) தத்தளித்தது. இந்தச் சமயத்தில் ஒவ்வொரு நாடும், தான் எந்தளவுக்கு மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை நம்பியிருக்க வேண்டியுள்ளது எனும் சீராய்வை நடத்தத் துவங்கின. உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கவும், உலகச் சந்தையில் இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு இந்நாடுகள் உள்ளாயின. இதனால் விநியோகச் சங்கிலி அறுந்து தேவைகள்-வழங்குத்திறன் சமன் (Demand-Supply balance) நிலைகுலைந்தது. உலகமயமாக்கல் கோட்பாடு பின்னடைவைச் சந்திக்கத் துவங்கிய சமயத்தில் நோய்தொற்று சற்று கட்டுக்குள் வர, விநியோக நிலைமை சீராகும் எனும் நம்பிக்கைத் துளிர்க்கத் துவங்கியது.
ரஷ்யா-உக்ரைன் போர்
உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா முன்னெடுத்த விவகாரம், போரில் முடியுமென உலகம் எதிர்பார்க்கவில்லை. இதைக் கண்டு பதறிய பல நாடுகள் எடுத்த போர் நிறுத்த உடன்படிக்கை முயற்சிகள் இதுவரையில் தோல்வியில் தான் முடிந்துள்ளன. ஐக்கிய நாடுகளின் அனுமதியில்லாமல், இரு தனிப்பட்ட நாடுகளுக்குள் எழுந்துள்ள போரில் நேரிடையாக எந்த வேறொரு நாடும் தலையிட முடியாத நிலை. மேலும் ரஷ்யாவிடமிருக்கும் அணு ஆயுதங்கள், மூன்றாவது உலகப் போரைத் தூண்டிவிடும் அபாயமும் உண்டு.
உக்ரைன் அரசை, எப்படியாவது கைக்குள் கொண்டுவந்துவிட வேண்டுமென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளை பலவீனப்படுத்த ரஷ்யா மீது பல பொருளாதரத் தடைகளை உலக நாடுகள் விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய ராஜ்ஜியம், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து, தாய்லாந்து போன்ற நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. ரஷ்ய இறக்குமதிகளை பகிஷ்கரிப்பதுடன், அவர்கள் ரஷ்யாவில் செய்திருந்த அந்நிய முதலீடுகளும் முடக்கப்பட்டன. இந்நாடுகளிலிருந்த ரஷ்ய வங்கி, வர்த்தக, தூதரகச் செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குப் பதிலடியாக ரஷ்யாவும் பல நாடுகளுக்கான பொருள்/சேவை ஏற்றுமதியை நிறுத்திவிட்டது. குறிப்பாக ரஷ்யாவின் இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், கோதுமையை நம்பியிருக்கும் ஐரோப்பிய நாடுகள் முதற்கட்ட சேதாரங்களைச் சந்தித்துள்ளன. இவை உலகமயமாக்கப் பொருளாதாரத்தை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதே இப்போது உலக முதலீட்டாளர்கள் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய கேள்வி.
ரஷ்யாவின் படையெடுப்பு, ஏற்கனவே தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள், நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான எல்லை தாண்டிய பிணைப்பை உடைத்து இடைவெளியை அதிகரித்துள்ளது எனப் பல முதலீட்டு மேலாண்மை நிறுவனங்கள் கருதுகின்றன. உலகமயமாக்க விநியோகச் சங்கிலி துண்டிப்பு பல நாடுகள் ‘தற்சார்பு’ சித்தாந்தைச் செயல்படுத்த தூண்டியுள்ளது. இவை உலகமயமாக்கலின் நேரெதிர் ஊசலாகும். உலகச் சந்தையிலிருந்து சுலபமான, மலிவான முறையில் பொருட்களைப் பெறுவதைவிட பாதுகாப்பான, உறுதியான முறையில் பண்டங்களைப் பெறுவது எனும் எண்ணம் வலுக்கத் தொடங்கிவிட்டது.
உலகயமாக்கலின் புறந்திருப்பல் (De-globalization)
உலகமயமாக்கலிலிருந்து விடுபடுவது (De-globalization) அவ்வளவு சுலபமானதல்ல. உள்நாட்டு பொருளாதாரத்திற்கு இதன் பயன்கள் சென்றடைய பலபத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், உலகெங்கும் தற்போது நிலவும் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். உலமயமாக்கல் நுகர்வோருக்கு மலிவு விலையைச் சாத்தியப்படுத்தியது; அதிலிருந்து விடுபடுவது அதிரடியான விலையேற்றத்தை, நுகர்வோர் மீது சுமத்தும். உலகமயமாக்கல், ஒவ்வொரு நாடும் பிற நாடுகளை சார்ந்திருக்கச் செய்து, கூட்டுச்சார்பு நிலையை உருவாக்கியது. இச்சித்தாந்தம் பரவத் தொடங்கிய பின்னர், ஒவ்வொரு நாட்டின் ராணுவச் செலவும் கணிசமாகச் சரிந்துள்ளதாகச் சொல்கிறது சர்வதேச நாணய நிதியம். உலகமயமாக்கப் பொருளாதாரம் முடங்கினால் இந்நிலை தலைகீழாகும்.
இன்றைய சூழலில் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என்ற பாகுபாடின்றி, எந்த ஒரு பொருளையும், எந்தவொரு நாடும் தற்சார்பு அடிப்படையில் தயாரிக்கும் நிலையிலில்லை. உதாரணத்துக்கு, ஒரு கணினி அல்லது கைப்பேசியைத் தயாரிக்கத் தேவையான சில்லுகள் எல்லா நாட்டிலும் கிடைப்பதில்லை. அதற்குத் தேவையான கட்டுமான அமைப்பு, மூலப்பொருட்கள், தொழில்நுட்பச் செயலறிவு இயற்கையில், ஒருங்கே அமைவதில்லை. அதன் மூலப்பொருட்களையோ, உருவாக்கும் திறனையோ பிற நாடுகளிலிருந்து பெறவேண்டியுள்ளது. மாறாக, உள்ளூர் பொருட்களைக்கொண்டு இவற்றைத் தயாரிக்க முனைந்தால் நுகர்வோர் திருப்தி, சுற்றுச்சூழல் போன்றவை பெரிதும் பாதிப்படையலாம். உதாரணத்துக்கு எளிமையான முறையில் தரமான எரிபொருள் கிடைக்காத பட்சத்தில், நுகர்வோர் தரமற்ற எரிபொருட்களைப் பயன்படுத்தக்கூடும். இது, ஏற்கனவே அச்சுறுத்திவரும் புவி வெப்பமயமாதல், பசுமைக்குடில் வாயு வெளியேற்ற சிக்கல்களைப் பெரிதாக்கலாம்.
இன்னொரு கோணத்தில், பிற நாடுகளின் தயவின்றி தமக்குத் தேவையானவற்றைத் தயாரித்துக்கொள்ள புதுப்புது கண்டுபிடிப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தான் மின்வாகனத் தயாரிப்பு. ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயுக்களை நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள் இன்று மின்வாகனத் தொழில்நுட்பத்தில் முனைப்புக் காட்டுகின்றன. எனினும் இந்த முயற்சி அனைத்து நாடுகளுக்கும், அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தி வராது. எடுத்துக்காட்டாக, இந்தியா கச்சா எண்ணெய்த் தேவைகளை மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து பெற்றாலும், தனது 65 விழுக்காடு ராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து பெற்றுள்ளது. இவற்றுக்கான தொழில்நுட்ப சேவைகள், பொறுப்புறுதிக்காக ரஷ்யாவையே நம்பியுள்ளதால் இந்தியா உடனடியாக ரஷ்யாவுடனான வர்த்தகத்தைத் துண்டித்துக்கொள்ள இயலாது.
பன்னாட்டு வர்த்தகங்கள் ஒன்றோடொன்று தொடர்புடவையாக, பின்னிப் பிணைந்துள்ள சூழ்நிலையில் உலகமயமாக்க விநியோகச் சங்கிலியிலிருந்து எந்தவொரு நாடும் உடனடியாக விடுவித்துக்கொள்வது பலத்த பொருளாதாரப் பின்னடைவையே உண்டாக்கும். தற்சார்புத் தன்மையை வளர்த்துக் கொள்வது, மாற்று ஏற்பாடுகளைச் செய்வது போன்றவை மிக நெடிய தொலைநோக்குத் திட்டமாகவே அமையும். ஆனால் இன்றுள்ளதைப் போலவே உலகமயமாக்கத் தொடர்புகள் நீடிக்குமா என்பது கேள்விக்குறியே.
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் நீங்கும் வரையிலும், பதிலுக்கு ரஷ்யா விதித்த ஏற்றுமதித் தடைகள் தொடரும் வரையிலும் விநியோகச் சங்கிலிச் சிக்கல்கள் தொடரும். இந்தக் காரணங்களால், உலகமயமாக்கல் தத்துவம் முற்றிலும் முடங்கிப் போகாமல் புது வடிவெடுக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். ரஷ்யாவைத் தவிர்த்த உலக நாடுகள் வர்த்தகத் தொடர்புகளைத் தொடரக்கூடும். அதிலும் ரஷ்யாவை ஆதரிக்கும் நாடுகள், எதிர்க்கும் நாடுகள், நடுநிலை நாடுகள் என்ற பிரிவுகள் ஏற்பட்டிருப்பதால் உலகமயமாக்கக் குழுக்கள் தோன்றலாம். அதாவது ஒவ்வொரு நாடும் தனது நெருக்கமான, நட்பு நாடுகளுடனான வர்த்தகத்தை ஏற்படுத்திக் கொள்ளும். உலகமயமாக்க விநியோகச் சங்கிலியில், பொருட்கள் எதையும் தயாரித்து வழங்க முடியாமல், அதன் பலன்களை மட்டுமே அனுபவித்து வந்த சிறிய நாடுகள், இந்தவித குழுமயமாக்கப் பொருளாதாரத்திலிருந்து கழட்டிவிடப்படலாம். தொடக்க காலத்தில் உலகமயமாக்கச் சித்தாந்தம் எவ்வாறு ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்ததோ அது போலவே, உலகமயமாக்கலின் புதியத் திரிபும் சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதும் தவிர்க்கமுடியாதது.
மொத்தத்தில், உலகமயமாக்க சித்தாந்தம் செறிவுநிலையை அடைந்துவிட்டதென்பதே பொருளாதார வல்லுனர்களின் ஹேஷ்யம். எதிர்காலத்தில், குறிப்பாக ரஷ்ய-உக்ரைன் போர் எவ்விதம், எப்போது முடிவடைகிறது என்பதைப் பொறுத்தே உலகமயமாக்கலின் திரிபுகள் தோன்றும். அரசியல், பூகோள ரீதியாகப் பிரிந்துகிடந்த நாடுகளை உலகமயமாக்கப் பொருளாதாரம் எதோவொரு வகையில் நட்பு பாராட்ட வைத்திருந்தது. திரிபெடுக்கும் பொருளாதாரச் சித்தாந்தம் அந்த நட்புறவைப் பேணிக் காத்தால், அதுவும் வரவேற்கக்கூடியதே!
- ரவிக்குமார்.
Tags: Globalization, Russia, Ukraine