\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இரு ஆசிய நாடுகளின் நெருக்கடி – பாடமும் படிப்பினையும்

கடந்த இரண்டாண்டுகளாக நோய்தொற்றின் பிடியில் சிக்கித் தவித்த உலகநாடுகள், அப்பிடியில் லேசானத் தளர்வு ஏற்பட்டுத் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முனைந்த வேளையில் வேறுவடிவிலான சிக்கலுக்குள் சரியத் தொடங்கியுள்ளன. இம்முறை உலகை அச்சுறுத்துவது போர் மற்றும் பொருளாதார நெருக்கடி. ஆயுதங்கள் கொண்டு வெறித்தனமான போர் நடவடிக்கைகளால் சில நாடுகள் வீழ்ச்சியுற, பொருளாதார ஸ்திரமின்மையால் சில சிறிய நாடுகள் பேரின்னல்களைச் சந்தித்து வருகின்றன. அவற்றில் குறிப்பிடவேண்டியவை இலங்கையும், பாகிஸ்தானும்.

இலங்கை

இலங்கையின் நெருக்கடிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இலங்கையின் பொருளாதாரம் 3T எனப்படும் துணிமணி, தேயிலை ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறையை (Textile, Tea, Tourism) அடிப்படையாகக் கொண்டு இயங்கிவந்தது. 2019ஆம் ஆண்டு, ஈஸ்டர் தினத்தன்று, தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு 250க்கும் மேற்பட்டோர் பலியானதிலிருந்தே இலங்கையின் சுற்றுலாத் துறை சுணக்கம் கண்டது. மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் பலவும் இலங்கைச் செல்வது பாதுகாப்பற்றது என்று அறிவித்த நிலையில், சுற்றுலா வணிகம் ஏறக்குறைய 70% வீழ்ச்சியைச் சந்திக்கவேண்டியிருந்தது. தொடர்ந்து வந்த நோய்த்தொற்று, முற்றிலுமாக சுற்றுலா வருமானத்தை முடக்கிப்போட்டது. அதே சமயத்தில் இலங்கை தங்களின் அத்தியாவசியச் சேவை மற்றும் பொருட்களை தொடர்ந்து இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்தததால் அதன் அந்நியச் செலாவணி இருப்பு வேகமாகக் கரைந்துவந்தது. இதன் விளைவாக இலங்கையின் மற்ற இரு (துணிமணி, தேயிலை) ஏற்றுமதி வருவாயும் குறையத்துவங்கியது. துணிமணி ஏற்றுமதிக்குத் தேவையான துணிகள் இன்னபிற உதிரிகளை இறக்குமதி செய்யவேண்டிய கட்டாத்திலிருந்தது இலங்கை. ஏற்றுமதியை அதிகரிக்க, இறக்குமதியையும் அதிகரிக்க வேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்ட இலங்கை, அந்நியச் செலாவணி இருப்பையும் சமன்படுத்தத் தவித்து வந்தது. 

2009 உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த எண்ணிய இலங்கை சில அதிரடி வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டது. அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்புத் துறைமுக நகரம் போன்றத் திட்டங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இத்திட்டங்களுக்கு கட்டுமான உதவியோடு பொருளுதவியும் அளிக்க சீனா முன்வந்தது. இரண்டு தவணைகளில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு $1.17 பில்லியன் கடனுதவி தந்தது சீனா. இத்துறைமுகம் கணிசமான வருவாய், வேலைவாய்ப்பை ஈட்டித்தரும் என்ற எதிர்பார்ப்பில் மண்விழ, மிகப்பெரிய கடன்சிக்கலுக்கு உள்ளானது இலங்கை. “கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற அருணாச்சலக் கவிராயர் வரிகள் நினைவுக்கு வந்த நிலையில், இலங்கையின் அப்போதைய அதிபர், அத்துறைமுகத்தின் 99 ஆண்டுகால  உரிமையை சீனாவுக்கு கொடுத்துவிட்டார். கொழும்புத் துறைமுக நகருக்கும் இதே கதைதான். சுமார் $15 பில்லியன் செலவில் உருவாக்கப்பட்டு வந்த இந்நகரம் உருவாகவும் சீனா பெருமளவில் கடன் வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் பல இலட்சம் பயணிகள் பயனுறக்கூடும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட ‘மத்தல ராஜபக்‌ஷே விமான நிலைய’த்தை  2019இல் வெறும் 1600 பயணிகள் மட்டுமே பயன்படுத்தியிருந்தனர். இப்படி இலங்கை முன்னெடுத்த நவீனமயமாக்கல் திட்டமெதுவும் எதிர்பார்த்த வகையில் கைகொடுக்கவில்லை. நாட்டின் கையிருப்புத் தேய்ந்ததுதான் மிச்சமானது. 

இயற்கை வேளாண்மை என்பது நல்லநோக்கமென்றாலும் அதை நடைமுறைப்படுத்திய விதத்தில் இலங்கை அவசரப்பட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அந்நியச் செலாவணியைக் கட்டுக்குள் வைக்கவேண்டிய அழுத்தத்தில், உரங்கள் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது. எப்படியோ, தடாலடியாக மாற்று ஏற்பாட்டுக்கான கால அவகாசமின்றி கொணரப்பட்ட வேதி உரம், பூச்சிக்கொல்லித் தடைகள் விளைச்சலை வெகுவாகக் குறைத்துவிட்டது. 

2019ஆம் ஆண்டு அதிபர் தேர்தலைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட வரிச்சலுகைகள் தவறான பாதையில் இட்டுச்செல்லுமென அன்றே உலக வங்கி எச்சரித்திருந்தது. தனிநபர் வருமான வரியை 24 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக குறைத்தது; விவசாயம், மீன்பிடி, கால்நடை மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வருமான வரியிலிருந்து விலக்கியது ஆகியவை சரியானதல்ல என்று பல முதலீட்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டின. சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையில் 7 சதவிகிதமாக உயர்ந்துவிட்டிருந்த நிதிப் பற்றாக்குறையை 3.5 சதவிகிதமாகக் குறைக்கவேண்டுமென நிர்பந்தித்தது. இவ்வாறாக அளிக்கப்பட்ட வரிச்சலுகைகளால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுக்கு 1 முதல் 1.5 சதவிகிதம் வரை அரசாங்க வருமானத்தை குறைக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வரியிழப்பு ஏற்பட்டது. 

நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட, கருவூலப் பத்திரங்கள், இலங்கை அபிவிருத்திப் பத்திரங்கள் போன்ற அரசாங்கப் பத்திரங்கள் மூலம் நிதி சேகரிக்கத் தொடங்கியது அரசு. அது மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிடமிருந்து கடன் பெற்றது. அவற்றில் ஜப்பான். சீனா முதன்மையானவை. இரு நாடுகளும் தலா $3.5 பில்லியன் அளவுக்குக் கடனுதவி செய்துள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கி $4.5 பில்லியன் கடனாக அளித்துள்ளது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியமும் கடன் வழங்கியுள்ளன. தொழிற்துறை உற்பத்தி பெரிதாக இல்லாத நிலை, துவண்டுபோன வேளாண்துறை, முடங்கிப் போன ஏற்றுமதிகள், கழுத்துவரை பெருகியிருந்த கடன்,  இவையாவும் ஒன்று சேர்ந்து இலங்கையின் பொருளாதாரத்தை அதள பாதாளத்துக்குக் கொண்டுசென்று விட்டது. தவறான நேரத்தில் அரசு பணநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது பணவீக்கத்துக்கு வித்திட்டது. பணவீக்கம் வளர்ந்ததினால் வழங்கு-தேவை (supply and demand) சமனற்ற நிலை ஏற்பட்டது. மிகக் குறுகிய காலத்தில், அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட தவறான முடிவுகளால் அல்லது ஏற்பட்ட தவறான விளைவுகளால் டாமினோஸ் விளைவைப் போல தொடர்சரிவுகளை உண்டாக்கின.

ஏற்கனவே தள்ளாடிக்கொண்டிருந்த இலங்கைப் பொருளாதாரம் ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்படுத்திய அதிர்வலைகளால் நிலைகுலைந்தது. அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யமுடியாதிருப்பதால் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். அதிபர், பிரதமர், நிதியமைச்சர் போன்ற மிக முக்கியப் பதவிகளை ஒரே குடும்பத்தினர் வகித்தது, பெரும் ஊழலுக்கு வழி வகுத்தது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். அதே நேரம் உடனிருந்த மந்திரிகள், அரசு அதிகாரிகள் இவர்கள் எடுத்த தவறான முடிவுகளை இடித்துரைக்காமல் போனதும் இன்றைய நெருக்கடிக்கு காரணமாய் அமைந்துவிட்டது. பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷாவைத் தவிர மற்ற அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். நிதியமைச்சர் ஃபசில் ராஜபக்‌ஷா தலைமறைவாகிவிட்டார். இந்த இக்கட்டான நிலையில், தேசிய அரசு எனப்படும் அனைத்துக் கட்சி அரசு இடைக்காலப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளது.  இதிலும் ஆளூம் கட்சியினரே முக்கியப் பொறுப்புகளை நிர்வகிக்கப் போவதாகச் சொல்லியிருப்பது குழப்பத்தை எற்படுத்தியுள்ளது. 

 

இலங்கை இச்சிக்கல்களிலிருந்து வெளிவருவது எளிதான காரியமல்ல. இந்த சவாலான நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆதாயமடைய சில நாடுகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. மிகக் கவனத்துடன் இதை அணுகவேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு. மேலும் பல நாடுகள், நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்காமல், இருக்கும் கடன்களைச் சீராய்வு செய்து சர்வதேச நாணய நிதியம் போன்ற தலைமை அமைப்பிடம் கடன் வாங்குவது நிலையைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். இந்த ஒப்பந்தத்துக்குச் சர்வதேச நாணய நிதியம் சில நிபந்தனைகள் விதிக்கக் கூடும். ஆனால், தனிப்பட்ட நாடுகள், நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவது நாட்டை அடகு வைப்பதுக்குச் சமமாகும்.  எது எப்படியாயினும், நாட்டின் நலனை முன்வைத்து தீர்க்கமான, தெளிவான, நிதானமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஸ்திரமான அரசு அமைவது மிக முக்கியம். 

பாகிஸ்தான்

மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானில் அதிரடியான அரசியல் களேபரங்கள் நடந்து, புதிய பிரதமர் பதவியேற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார். இம்ரான் கான்  பலவித சூழ்ச்சிகள் செய்து அந்தத் தேர்தலை வென்றார் என அப்போதெ கண்டனங்கள் எழுந்தன. ஆனால் ஊழலற்ற அரசை அமைப்பதாக வாக்குறுதி தந்திருந்த இம்ரான் மீது சிறிதளவு நம்பிக்கை வைத்திருந்தனர் மக்கள். அவரது கிரிக்கெட் ரசிகர்கள் அளித்த ஆதரவு அவரை வெற்றிபெறச் செய்தது என்றும் சொல்லலாம். பதவியேற்ற பின் எல்லோரும் சொல்வது போல் “புதிய பாகிஸ்தான் பிறந்தது” என்ற அவரது பேச்சு சில மாதங்களிலேயே காற்றில் பறந்தது.

பஞ்சாப் மாநில முதவராக நியமிக்கப்பட்ட, இம்ரான் கானின் ஆதரவாளரான உஸ்மான் புஸ்தார் ஏகப்பட்ட ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மக்களும், எதிர்க்கட்சியினரும் புகார் செய்யத் துவங்கினர். அதிகாரிகள் நியமனத்தில் பெருமளவில் லஞ்சம் பெற்றுக் கொண்டு யதேச்சிகாரமாக முடிவெடுத்த விஷயங்கள் வெளியில் கசிந்தன. ஆனால் இம்ரான் அவரைக் கண்டிக்காமல், அவர் மீது சுமத்தப்பட்ட புகார்களை அலட்சியம் செய்து வந்தார். இம்ரானின் உறவினர்கள் பலரும் ஊழலில் சிக்கினர்; அதோடு அவர்கள் உடனடியாக வெளிநாடு தப்பிச் செல்லவும் இம்ரான் துணைநிற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இம்ரானின் பாராமுகம் சொந்தக் கட்சியினரிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தியது. 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் அவரது அரசு பின்னடைவைக் கண்டது. கூடவே நாட்டில் தோன்றிய பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற தொடர் சரிவுகள் பாகிஸ்தான் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்தது. இச்சிக்கல்களை நிர்வகிக்கும் பக்குவமும், அனுபவமும் இல்லாது தவித்தது பாகிஸ்தான் அரசு. 

இந்தப் பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராட சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சீனாவிடமிருந்து நிதி உதவியை நாடியது பாகிஸ்தான். சரியான கொள்கைகள், திட்டமிடல் இல்லாமல் அந்தக் கடன்கள் எதிர்பார்த்த பலன்களை வழங்கவில்லை. பாகிஸ்தானின் மொத்த கடன்களில் 25% வழங்கிய சீனாஒரு கட்டத்துக்கு மேல் கடனுதவி செய்ய மறுத்துவிட்டது. சீனாவிடமிருந்து நிதியுதவி கிடைக்காதுபோனதால், சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி எதிர்பார்த்தது இம்ரானின் அரசு. சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க ஏராளமான நிபந்தனைகள் விதித்தது. வரிச் சலுகைகளை நீக்கவும், வங்கி வட்டி விகிதத்தை கூட்டவும் அந்நிதியம் இட்ட நிபந்தனைகளை செயல்படுத்தத் தடுமாறியது அரசு. பல நாடுகளில் பரிசோதிக்கப்பட்டு தோல்வியடைந்த மேலிருந்து கீழிறங்கும் டிரிக்கிள் டவுன் (Trickle down) எனும்   அடுக்குப் பொருளாதார கொள்கை பாகிஸ்தானிலும் தோற்றது. தொழில்துறை வளரும் என்ற நம்பிக்கையில் உயரடுக்கு தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்ட வரித் தள்ளுபடி, சலுகைகள் லாபங்களாக மாறி வெளிநாடுகளுக்கு இடம் மாறியதே தவிர எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்கவில்லை. சர்வதேச நாணய நிதியம் மறுத்துவிட்ட நிலையில் பாகிஸ்தான் ஐக்கிய அரபு நாடுகளிடமிருந்து கடன் பெற்றது. சர்வதேச நாணய நிதியம் போன்று கடுமையான நிபந்தனைகள் இல்லையென்றாலும், வட்டி விகிதம் அதிகமானது. 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முதன்மை காரணமாகச் சொல்லப்படுவது தொலைநோக்கற்ற, பொருளாதார ரீதியாக வளர்ச்சிக்குச் சாத்தியமில்லாத திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தது. குவாடர்-காஷ்கர் ரயில்பாதை திட்டம் போன்ற அதிகப் பயனற்ற உள்கட்டமைப்புகள் வளர்ச்சிக்குப் பதிலாக நஷ்டத்தையே கொடுத்தன. சீன நிறுவனங்களின் பொருளுதவியுடன் நிறைவேற்றப்பட்ட இத்திட்டம் எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. மாறாக சீன நிறுவனத்தின் நெருக்கடிக்கு உள்ளாகத் தொடங்கியது பாகிஸ்தான். கொரொனா முடக்கத்தால் ஒருபுறம் இறக்குமதிகள் அதிகரிக்க மறுபுறம் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதையும், அத்தியாவசியமில்லாத பொருட்களை ஏற்றுமதி செய்வதையும் அடிப்படை வர்த்தக அமைப்பாக வைத்திருந்ததுதான். இந்த ஏற்றத்தாழ்வுகளால் வர்த்தகப் பற்றாக்குறை (trade deficit )அதிகரித்து டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மளமளவெனச் சரிந்தது.

இவை ஒருபுறமிருக்க, அண்மையில் அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானிலிருந்து பின்வாங்கியது, நாட்டின் பாதுகாப்பைச் சிக்கலுக்குள்ளாக்கத் தொடங்கியது. இம்ரான் பதவியேற்ற காலத்தில் அமெரிக்க அதிபராகயிருந்த டானல்ட் டிரம்புடன் இணக்கமான நட்பையே கொண்டிருந்தார். ஜோ பைடன் பதவியேற்றவுடன் பல நாட்டுத் தலைவர்களுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய போது, இம்ரான் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆஃப்கன் குறித்த பைடனின் செயல்கள், ஏற்கனவே வீம்புடனிருந்த இம்ரானை மேலும் சீண்டிப் பார்த்தது. அமெரிக்காவின் ‘டிரோன் புரோகிராம்’ சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, எந்த நாளும் நம்ப முடியாத நாடு அமெரிக்கா எனப் பறைசாற்றி வந்தார் இம்ரான். ஆனால் அமெரிக்கப் போர்த் தளவாடங்களை நம்பியிருக்கும் பாகிஸ்தான் ராணுவம் இக்குற்றச்சாட்டுகளைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.  

இதனிடையே கராச்சியிலிருந்து, லாகூருக்கு எரிவாயுக் குழாய் பாதை அமைக்க ரஷ்யாவுடன் கூட்டு ஒப்பந்தத் திட்டமொன்றை முன்னெடுத்து வந்தது பாகிஸ்தான். இதனைத் துரிதப்படுத்த இம்ரான் தவறான நேரத்தில் ரஷ்யாவில் விளாடிமிர் புதினைச் சந்தித்தது மேற்கத்திய நாடுகளுக்குத் தவறான சமிக்ஞை கொடுத்துவிட்டது. ரஷ்யாவின் உக்ரைன் மீதான போரைக் கண்டிக்குமாறு உலகநாடுகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் வைத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது, அந்நாட்டின் மீதான பார்வையை மாற்றியது. 

பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம்,  அந்நியச் செலாவணி பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் அந்நியக் கடன் என அடுக்கடுக்கான பிரச்சனை சூறாவளியில் சிக்குண்டு சுழன்ற இம்ரானின் அரசு மீது நம்பிக்கையிழந்த கூட்டணி கட்சிகள் பின்வாங்கி ராஜினாமா செய்த நிலையில் அவரது அரசு பெரும்பான்மையிழந்தது. அரசியலமைப்பு ரீதியாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், தனது சகாவான துணை சபாநாயகரின் உதவியோடு அதைத் தாமதப்படுத்தினார் இம்ரான். கையோடு ஒட்டுமொத்த அமைச்சரவையுடன், தானும்  ராஜினாமா செய்து பச்சாதாப ஆதரவு பெற முனைந்தார். இடைக்காலப் பிரதமராகத் தொடர்ப்ந்த இம்ரான் மீது ஏப்ரல் பத்தாம் நாள் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பு  வெற்றிபெற்றதினால் நிரந்தரமாக பதவியிழந்தார் இம்ரான். மேற்கத்திய நாடுகள், அரசியல் துவேஷத்தினால் எதிர்க்கட்சியினரைத் தூண்டிவிட்டு தனது அரசைக் கவிழ்த்துவிட்டதாகக் குற்றம் சாட்டிவருகிறார் இம்ரான். அடுத்தடுத்து  நடந்தேறிய சம்பவங்களும் இம்ரான் சொல்வதைப் போல அமெரிக்கா துல்லியமாகத் திட்டமிட்டு இம்ரானைப் பழிவாங்கிவிட்டதாக ஒரு சாராரை நம்பவைத்தது.  

இன்று புதிதாகப் பதவியேற்றிருக்கும் பிரதமர் செபாஸ் ஷெரீஃப் முன்பு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. அவர் முன்னெடுக்கும் முயற்சிகள் கசப்பாகயிருக்கலாம்; அவை அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கலாம் அல்லது மேலும் வீழ்ச்சியடையச் செய்யலாம்.  

அடுத்தடுத்து இரண்டு ஆசிய நாடுகள், குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகள், பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானது துரதிர்ஷடவசமானது. உற்று கவனித்தால் இரண்டு நாடுகளின் பொருளாதாரச் சரிவுக்கு பொதுவான சில அம்சங்கள் இருப்பதைக் காணமுடிகிறது.

  1. கொரோனா பெருந்தொற்று ஒரு காரணமாக இருந்தாலும், அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும், அவசரக்கால ஒதுக்கீட்டு நிதி சரிவர நிர்வகிக்கப்படாதது.
  2. நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தெளிவாகத் திட்டமிடப்படாத தவறான பொருளாதாரக் கொள்கைகள்.
  3. உள்நாட்டு தொழிற் உற்பத்தியை அதிகரிக்க முனையாதது.
  4. அரசியல் , அதிகார மட்ட ஊழல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் கட்டுப்படுத்தத் தவறியது.
  5. அந்நிய நாடுகளிடம் மற்றும் சர்வதேச நிதியங்களிடமிருந்து பெறப்படும் கடன்கள் உற்பத்திப் பணிகளில் பயன்படுத்தப்படாததால், முதலீட்டு வருவாய் (Return on Investment) ஈட்டாமல் கரூவூலச் சுமையாக மாறியது.
  6. சராசரி மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், பொருளாதாரத் தேவைகளைக் கருத்தில் கொள்ளாத பெரும்பொருளியல் (Macroeconomics) கொள்கையை ஊக்குவித்தது. பெருநிறுவனங்களுக்கும்  உயர் வருவாய் உள்ளவர்க்கும் அளவுக்கு மீறிய கடன் சலுகைகள் வழங்கியது.
  7. பணவீக்கத்தையும் அதன் விளைவான விலைவாசி உயர்வையும் கண்காணிக்க மறந்தது.
  8. திறனற்ற நிதிமேலாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத அதிகாரத்துவம்.

கொரோனா பெருந்தொற்று உலகில் பொருளாதார சிக்கல்களை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்பட்டதுதான். இவ்விரு நாடுகளும் பெருந்தொற்றுக்கு முன்னரே சில நெருக்கடிகளைச் சந்தித்தன; பெருந்தொற்று அதற்கு விசிறிவிட்டது எனலாம். இந்நாடுகள் சீனாவின் சூழ்ச்சிக்கு இரையாகிவிட்டன என பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிடமுடியாது. அவை சீனாவிடம் பெற்ற கடனுதவிகளை உரியவகையில் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மை. வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றுக்கும், இலங்கை மற்றும் பாகிஸ்தானின் நெருக்கடிகள் பாடமாக அமையக்கூடும். அரசியல் வெற்றியை மட்டுமே முன்னிறுத்தி வியூகங்கள் அமைக்காமல், மக்களின் நலனை, நாட்டின் உண்மையான வளர்ச்சிக்குத் தேவையானவற்றைத் திட்டமிட்டு நிறைவேற்றுதல் அவசியம். பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் அமையவுள்ள புதிய அரசாங்கங்கள் வளர்ச்சிக்கு நிதானமாக,  தெளிவாகத் திட்டமிட்டு இந்த நெருக்கடிகளிலிருந்து வெளிவருமென நம்புவோம். 

  • ரவிக்குமார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad