ஆங்கிலமே இணைப்பு மொழி (லிங்குவா ஃபிரான்கா)
“ஒரு மொழி உலகளாவிய மொழியாக மாறுவது அதைப் பேசும் மக்களின் சக்தியால்” – இதைச் சொன்னவர், பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற மொழியியலாளர் டேவிட் கிரிஸ்டல். உலகெங்கும் சுமார் 7100 மொழிகள் இருந்ததாக அறியப்படுகிறது. அவை ஒவ்வொன்றும், தனித்தன்மையோடு, வெவ்வேறு பரிமாணங்களில், மனிதச் சமூகத்தை அழகுபடுத்திக்கொண்டிருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக இவற்றில் பல மொழிகள், அவை புழங்கப்படும் பூகோள எல்லையைக் கடந்து பிரபலமடையவில்லை. எனினும் சில மொழிகள் எல்லைகளை உடைத்து மிகப் பரவலாகப் புழங்கிவருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது ஆங்கிலம்.
ஐந்தாம் நூற்றாண்டில், ரோமானியர்களின் ஆட்சியைத் தோற்கடித்து, இன்றைய ஜெர்மனியின் வடபகுதியிலிருந்தும், டென்மார்க்கிலிருந்தும் வந்த ஏங்கிள்ஸ், சாக்ஸன்ஸ் மற்றும் ஜூட்ஸ் இனத்தவர்கள் பிரிட்டனை ஆக்கிரமித்தனர். அந்தச் சமயத்தில் பிரிட்டனில் வசித்தவர்கள் செல்டிக் என்ற மொழியைப் பேசி வந்தனர். ஆக்கிரமிப்புக்கு அஞ்சி அவர்கள் தற்போதைய ஸ்காட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ் போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். ஆக்கிரமிப்பாளர்களில், ‘இங்கலாலாண்ட்’ என்ற பகுதியிலிருந்து வந்த ஏங்கிள்ஸ் இனத்தவர்கள் பிரிட்டனில் கோலோச்சத் துவங்கியதைத் தொடர்ந்து பிரிட்டன் ‘இங்கிலாந்து’ எனவும், அவர்களது மொழியான ‘இங்கிலிஸ்க்’ பிரிட்டன் முழுதும் பரவி ‘இங்கிலீஷ்’ எனவும் உருவானதாகச் சொல்கிறது வரலாறு.
பழைய ஆங்கிலம்
கிபி ஐந்தாம் நூற்றாண்டில் பரவத் தொடங்கிய ஆங்கிலத்தின் (‘இங்கிலீஷ்’) எழுத்து, ஒலி வடிவம் இன்றைய ஆங்கிலத்திலிருந்து பெரிதளவு வேறுபட்டிருந்தது. பழைய ஆங்கிலத்தின் எழுத்துமுறை (alphabet) ‘ஃபுதார்க்’ (Futhorc) அல்லது ‘ரூனிக்’ (runic) என்றழைக்கப்பட்டது. இங்கு தான், சொல்லின் குறிப்பிட்ட பகுதிகளில் இடம்பெறுவதைப் பொருத்து ஒலி மாறுபடும் முறை உருவானது. 22 எழுத்துகள் மட்டுமே இருந்த எழுத்துமுறையில் ‘th’,’ae’,’ce’ போன்ற கூட்டெழுத்துகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் ‘&’, ‘j’, ’u’, ‘uu’(w) போன்ற எழுத்துகளும் சேர்க்கப்பட்டன. இன்றைய நவீன ஆங்கில மொழியின் பல சொற்கள் பழைய ஆங்கிலத்திலிருந்து உருவானவையே. உதாரணம் ‘water’, ‘strong’ போன்ற சொற்கள்.
இடைக்கால ஆங்கிலம்
கிபி 1056இல், இன்றைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘நார்மன்’ இனத்தவர்கள் பிரிட்டனை ஆக்கிரமித்தனர். இவர்கள் தங்களது அன்றைய பிரெஞ்சு மொழியைக் கொண்டு வந்தனர். அக்காலகட்டத்தில் அரசவை மொழியாக வழங்கப்பட்ட பிரெஞ்சு, அதிகார மற்றும் வணிக வர்க்கத்தினரின் மொழியாக விளங்கியது. அதாவது உயர் வகுப்பினர் பிரெஞ்சு மொழியையும், மற்றவர் ஆங்கிலத்தையும் பேசுவது வழக்கமானது. மெதுவே பிரெஞ்சு சொற்கள் ஆங்கிலத்தில் கலந்து, புது வடிவத்தோடு, கிபி 14ஆம் நூற்றாண்டில், ஆங்கிலம் மீண்டும் எழுச்சி பெற்றது. இடைக்கால ஆங்கிலத்தை இன்று புரிந்துகொள்வது மிகக் கடினம்.
ஆரம்பக்கால நவீன ஆங்கிலம்
இடைக்கால ஆங்கிலத்தின் உச்சரிப்பில் பல மாற்றங்கள் உருவாகிப் புதிய சொற்கள் சேர்க்கப்பட்டு 15ஆம் நூற்றாண்டில் நவீன ஆங்கில வடிவம் தோன்றியது. மொழிக்கான இலக்கணம் தோற்றுவிக்கப்பட்ட அதே நேரத்தில் அச்சு இயங்ந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டு, நவீன ஆங்கிலப் புத்தகங்கள் வெளிவந்தன. மிக வேகமாகப் பரவிய அச்சுப் புத்தகங்கள், ஆங்கிலத்தைப் பொதுமொழியாக ஏற்கச் செய்தது. தொடர்ந்து சேர்க்கப்பட்ட சொற்களும், சொற்றொடர்களும், ஆங்கிலத்தின் தரத்தை மேம்படுத்தி வந்தன. கிபி 1604ஆம் ஆண்டு முதல் ஆங்கில அகராதி வெளியானது.
பிற்கால நவீன ஆங்கிலம்
பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் மற்றும் தொழில்நுட்ப புரட்சி ஏராளமான புதிய சொற்கள் உருவாக காரணமாக அமைந்தன. மேலும் பிரிட்டன் பேரரசு உலகின் பல நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பின்பு அந்தந்த நாடுகளில் வழங்கிவந்த கலாச்சார பயன்பாட்டுச் சொற்களை ஆங்கிலம் தழுவிக்கொண்டது. இன்று வரையிலும் கூட ஏகப்பட்ட சொற்கள் ஆங்கிலத்தால் ஏற்கப்பட்டு அகராதியில் சேர்க்கப்பட்டு வருகின்றன. தமிழிலிருந்து பல சொற்கள், சில ஒலி மாற்றங்களுடன் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டதாக மொழியியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு ‘கட்டுமரம்'(Catamaran), ‘நாவாய்'(Navy/Naval), ‘கயிறு’ (Coir), ‘பரல்’ (Pearl), ‘பஞ்சு’ (Sponge), ‘பேச்சு’ (Speech) போன்ற எண்ணற்றச் சொற்கள் உதாரணமாகக் காட்டப்படுகின்றன. ‘கர்மா’ (Karma), ‘தர்மா’ (Dharma), ‘குரு’ (Guru) போன்ற சம்ஸ்கிருதச் சொற்களும் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பல மூலங்களை ஏற்று, ஒருங்கிணைத்து கட்டமைக்கப்பட்டு வரும் காரணத்தினாலயே, ஆங்கிலம் இன்று உலகின பல தேசத்தவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுமொழியாக உருவெடுத்துள்ளது.
திரிபுகள்
அமெரிக்காவில் ஆங்கிலேயர்கள் காலனித்துவம் ஏற்படும் முன்பு பொதுவான மொழி என்றொன்று இருந்ததில்லை. பூர்வகுடி சமூகங்கள் ஆங்காங்கே, வெவ்வேறு மொழிகளைப் பிரயோகித்து வந்துள்ளனர். ‘அபாச்சி’, ‘நவாஹோ’, ‘உடே’, ‘பையூட்’, ‘மோனோ’, ‘செனெகா’, ‘சூ’, ‘ஒனிடா’, ‘மிஸ்கிடா’, ‘ஒஜிப்வே’, ‘மாயன்’ என பல ஆயிரக்கணக்கான மொழிகள் புழக்கத்தில் இருந்துள்ளன. இவற்றில் சில, அச்சமூகத்தின் நிலப்பகுதிக்குள் மட்டுமே புழங்கின. இவ்வகை பூர்வகுடி மொழிகளில், மிகச் சொற்பமானவை இன்றும் பிழைத்துவருகின்றன. கிறிஸ்டோபர் கொலம்பஸின் வருகைக்குப் பின்னர் போர்சுகீஸ், பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலம், ஸ்பானீஷ் போன்ற மொழிகளும், ஆப்பிரிக்க மொழிகளும் மெதுவே பரவத் தொடங்கின. ஆங்கிலேயர்களின் காலனித்துவம் நிறுவப்பட்ட பின்பு, வடஅமெரிக்க பூர்வீக மொழிகளின் பயன்பாட்டை முடக்கினர். தங்களின் அரசியல் மேலாண்மை வசதிக்காக, தங்களது சொந்த மொழிகளை நிறுவினர். பூர்வீக மொழிகளில், குறிப்பாக மாயன் மொழியில், ஏற்படத் தொடங்கியிருந்த நூல்கள் அழிக்கப்பட்டன. பள்ளிகளில் பழங்குடியினரின் மொழிகள் விலக்கப்பட்டு, ஸ்பானிஷ், ஆங்கிலம், பிரெஞ்சு, டச்சு போன்ற மொழிகள் மட்டுமே கற்பிக்கப்பட்டது. 1787 இல் இயற்றப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டங்கள் ஆங்கிலத்திலேயே இயற்றப்பட்டன.
அமெரிக்க ஆங்கிலமும் பிரிட்டிஷ் ஆங்கிலமும்
அமெரிக்காவில் ஆங்கிலம் பரவி வந்த சமயத்தில், பிரிட்டனில் ஏற்பட்டதைப் போலவே, வேற்று, பூர்வீக மொழிச் சொற்களும் ஆங்கிலப்படுத்தப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக ‘அமெரிக்க ஆங்கிலம்’ (அல்லது அமெரிக்கன்) என்றொரு வகையான ஆங்கிலம் தோன்றியது. பிரிட்டிஷ் ஆங்கிலத்துக்கும், அமெரிக்க ஆங்கிலத்துக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லாதபோதும் சொற்களின் உச்சரிப்பிலும், எழுத்துக்கூட்டலும் (spelling) வேறுபாடுகள் மிகக்கவனமாகச் செருகப்பட்டன.
குறிப்பாக அமெரிக்க ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டல், சொல்லின் ஒலியைப் பொருத்து அமைக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் வெவ்வேறு ஐரோப்பிய மொழிகளின் பாதிப்புகள் அப்படியே நிலைத்துவிட்டன.
உதாரணத்துக்கு கீழ்வரும் ஆங்கிலச் சொற்கள் ஒரே பொருளைத் தந்தாலும் அவற்றின் எழுத்துவடிவங்கள் வேறுபட்டிருப்பதைக் காணலாம்.
American | British | Tamil |
Color | Colour | வண்ணம் / நிறம் |
dialog | dialogue | உரையாடல் |
check | Cheque | காசோலை |
meter | metre | அளவைக் குறியீடு (நீளம் / தூரம்) |
program | programme | நிகழ்ச்சி நிரல் / செயல் நிரல் |
கலாச்சாரத் தாக்கங்களினாலும், மொழி ஆளுமையாலும் பிற மொழியிலிருந்து பெறப்பட்ட சொற்களில் வேறுபாடுகள் இருப்பதையும் காணமுடிகிறது.
American | British | Tamil |
Cilantro | Coriander | கொத்துமல்லி |
Truck | Lorry | கனரக வாகனம் |
Schedule | Timetable | அட்டவணை |
Sidewalk | Pavement | நடைபாதை |
Apartment | Flat | அடுக்குமாடி குடியிருப்பு |
இப்படி எழுத்துக்கோர்வை அளவிலும், அடிப்படை சொல் அளவிலும் மாற்றங்கள் இருந்தாலும், இரண்டுமே உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது ஆங்கிலத்தை உலகளாவிய பொது மொழியாக வளரச்செய்துள்ளது.
பொதுமொழி
உண்மையில் “உலகமொழி” என்று ஆங்கிலமோ அல்லது வேறு எந்தவொரு குறிப்பிட்ட மொழியோ வரையறுக்கப்படவில்லை. ஆனால் அதிகளவில், எல்லைகளைக் கடந்து அறியப்படும்/ பேசப்படும் மொழி என்ற அடிப்படையில் ஆங்கிலம் தவிர்க்கமுடியாத இடத்தைப்பெறுகிறது. தாய்மொழி (Native speakers) அடிப்படையில் உலகில் மிக அதிகமானோர் (1.11 பில்லியன் மக்கள்) பேசக்கூடிய மொழி ‘மாண்டரின்’ என்றாலும், முதலாம், இரண்டாம், மூன்றாம் மொழி என்ற பாகுபாடில்லாமல் பார்த்தால் ஆங்கிலமே முதலிடத்தைப் பெறுகிறது. உலகெங்கும் 1.44 பில்லியன் மக்கள் அலுவல், வணிகம், கல்வி, செய்தி ஊடகம், திரைபடங்கள், இசையென எதோவொரு வடிவில் ஆங்கில மொழியைப் பயன்படுத்தி வருகின்றனர். அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், சர்வதேச வர்த்தகம், சுற்றுலா போன்ற துறைகளில் ஆங்கிலம் தவிர்க்கமுடியாத முன்னிருப்பு (default) மொழியாக அங்கம் வகிக்கிறது. இத்துறைகளின் இன்றைய உலகளாவிய, ஒருங்கிணைந்த அசுர வளர்ச்சிக்கு ஆங்கில மொழி ஒரு முக்கியக் காரணமென்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. மேலும் அரசியல் ரீதியான இராஜங்க புரிந்துணர்வு, பரிந்துரைகள், தூதரக நடவடிக்கைகளுக்கு ஆங்கிலம் இன்றியமையாததாகியுள்ளது. குறிப்பாக ‘ஐக்கிய நாடுகள் சபை’ மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகள் வடிவெடுத்த பின்பு, தொடர்பாடலுக்காக பொதுவானதொரு மொழி தேவைப்பட்டபோது ஆங்கிலம் முதன்மை பெற்றது. இது போன்ற காரணங்களால் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் முதலே ஆங்கிலம் ‘லிங்குவா ஃப்ரான்கா’ (‘lingua franca’) எனப்படும் ‘இணைப்பு மொழி’ அல்லது ‘தொடர்பு மொழி’ அந்தஸ்தைப் பெற்று வந்துள்ளது.
மொழி வளம், இலக்கண அமைப்பு, இலக்கிய வளம், தத்துவ வளம், தொன்மைத்துவம், எளிமைத்துவம் போன்ற பிரிவுகளில் ஏராளமான மொழிகள் மிகச் சிறப்பான இடங்களைப் பிடிக்கக்கூடும். ஆனால் ‘இணைப்பு மொழி’ யாக பயன்படுத்துமளவில் ஆங்கிலத்தைப் போல நெகிழ்வுத்தன்மை அற்றவையாகயிருந்தன. முக்கியமாக ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகள் பல, தனித்தன்மை மிகுந்தவையாகயிருந்தன. பிற மொழிச் சொற்களை, புதுப்புது அறிவியல், தொழில் முறை மாற்றங்களுக்குத் தேவைப்படும் சொற்களை ஏற்றுக்கொள்வதில் அவை சற்று பின் தங்கியே உள்ளன.
1879 ஆம் ஆண்டுவாக்கில், ஜோஹன் மார்டின் எனும் கத்தோலிக்க மதகுரு ஒருவர், கடவுள் கனவில் வந்து, தன்னை உலகமொழி ஒன்றை உருவாக்கப் பணித்துள்ளாரென ‘வோலோபைக்’ (Volapük) எனும் ‘உலகின் மொழியை’ உருவாக்க முயன்றார். இரண்டு வருட காலத்தில் மிகப் பெரிய ஆதரவுடன் நான்கு மாநாடுகளை நடத்தி, இம்மொழியைப் பரப்புவதில் மும்முரம் காட்டினார் அவர். ஆங்கில இலக்கண அடிப்படையில் ஜெர்மானிய, பிரெஞ்சு, ஆங்கிலச் சொற்களைக் கையாண்டாலும், உச்சரிப்பில் வேறுபாடு காட்டவேண்டுமென முனைப்பில் அவை சிதைந்துபோயின. ஏறத்தாழ அதே காலகட்டத்தில் போலந்து நாட்டின் கண் மருத்துவர் ஜேமன்ஹாஃப் ‘எஸ்பெரெண்டோ’ (Esperanto) என்றொரு உலக மொழியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். ‘காதல் மொழிகள்’ என்றழைக்கப்பட்ட லத்தின், இத்தாலிய மொழிகளை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘எஸ்பெரெண்டோ’ உலகத் தத்துவத்துவங்களை ஒன்றிணைக்க வேண்டுமென்பது அவரது நோக்கமாகயிருந்தது. ‘வோலோபைக்’ மொழிப் பரவலை ‘எஸ்பெரெண்டோ’ கட்டுப்படுத்தியது எனலாம். ஐரோப்பிய நாடுகளைக் கடந்து தென் அமெரிக்கா, கிழக்காசிய நாடுகளில் ஆங்காங்கே ‘எஸ்பெரெண்டோ’ புழக்கத்துக்கு வந்தது. இன்றும் அந்தப் பகுதிகளில் சில நூற்றுக்கணக்கானோர் அம்மொழியைப் பேசிவந்தாலும் ‘இணைப்பு மொழியாக’ அவையிரண்டுமே பரிமளிக்கவில்லை. இயற்கையான முறையில், நூற்றாண்டுகளைக் கடந்த ஆங்கிலத்தின் வளர்ச்சிக்கு ‘வோலோபைக்’, ‘எஸ்பெரெண்டோ’ இரண்டும் ஈடுகொடுக்கமுடியவில்லை என்பதே உண்மை.
ஆங்கிலமொழி வளர்ச்சி
2011ஆம் ஆண்டில் 1.05 பில்லியன் மக்களால் பேசப்பட்டு வந்த ஆங்கில மொழி, 2020 ஆம் ஆண்டு வாக்கில் 1.35 பில்லியனாக உயர்ந்தது. சீனாவின் நாற்பது சதவிகித மாணவர்கள் ஆங்கிலம் பயின்று வருகின்றனர். இந்தியாவில் ஏறத்தாழ 14 சதவிகிதம் மக்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக உள்ளனர். எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவுக்கு (316 மில்லியன்) அடுத்தபடியாக இந்தியாவில் (194 மில்லியன்) மக்கள் ஆங்கிலம் பேசும் திறன் பெற்றுள்ளனர். மேற்கத்திய நாடுகள் கணினி மற்றும் வாடிக்கையாளர் சேவைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் அவுட் சோர்சிங் செய்து வரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள பல தென் அமெரிக்க, கிழக்காசிய நாடுகளும் ஆங்கிலப் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றன. இது போன்ற பல்வேறு காரணங்களால், ஆங்கிலத்தின் ‘இணைப்பு மொழி’ எனப்படும் ‘லிங்குவா ஃப்ராங்குவா’ (‘lingua franca’) பதவியை எளிதில் பறித்துவிட முடியாது.
அதெல்லாம் சரி, திடிரென ஆங்கில மொழிப் பெருமை பேசும் அவசியமென்ன என்று நீங்கள் வியந்தால், ஏப்ரல் 23ஆம் நாளை நினைவூட்டவேண்டியது எனது கடமை. ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவு நாளான ஏப்ரல் 23, ‘ஆங்கில நாளாக’ அறிவித்து 2010 ஆம் முதல் கொண்டாடி வருகிறது ஐக்கிய நாடுகள் சபை. ஆங்கிலம் தவிர்த்து அரபியே மொழி தினம் (18 டிசம்பர்), சீன மொழி தினம் (20 ஏப்ரல்), பிரெஞ்சு மொழி தினம் (மார்ச் 20), ரஷ்ய மொழி தினம் (ஜூன் 6), ஸ்பானிய மொழி தினம் (ஏப்ரல் 23) என்று உலக மொழிகளுக்குச் சிறப்பு சேர்த்து வருகிறது.மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் பெருமைகளைக் கொண்டாடவும் ஏற்படுத்தப்பட்ட மொழித் தினத்தைப் போற்றுவோம்,
-ரவிக்குமார்
அமெரிக்க கண்டத்தில் ஆங்கிலேய காலனித்துவத்திற்கு புழங்கிய பூர்வக்குடி மொழிகளின் பட்டியல் :https://en.m.wikipedia.org/wiki/Indigenous_languages_of_the_Americas