\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மனநல விழிப்புணர்வு மாதம்

மன ஆரோக்கியம் அல்லது மனநலன் என்பது ஒருவரின் உளவியல், மனவெழுச்சி, சமூகப் பார்வை ஆகியவற்றைப் பொறுத்து அமைவதாகும். ஆரோக்கியமான மனம் ஒருவரைத் தெளிவாகச் சிந்திக்கவும், ஆக்கப்பூர்வமாகச் செயல்படவும் தூண்டி அவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. உடல் நலமும், மன நலமும் ஒன்றையொன்று சார்ந்தவை. தங்கள் உடல் நலனைப் பேணிப் பாதுகாத்து, அக்கறை காட்டும் 90% மக்கள், மன நலத்தைப் பற்றிக் கவலைபடுவதில்லை என்பதே உண்மை. 

நாமெல்லோரும் அவ்வப்போது உடல் ரீதியான உபாதைகளுக்கு உள்ளாவதைப் போல மன ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகிறோம். மூளையில் ஏற்படும் சில மாற்றங்கள் மனநலக்குறைவை உண்டாக்கி, சிந்தனை, ஆற்றல், நடத்தையில் இடையூறுகளுக்கு வழிவகுக்கின்றன. யதார்த்தத்துடனான தொடர்பை, நிதர்சனத்தை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படுத்துகிறது. பெரும்பாலான சமயங்களில் இந்த அறிகுறிகள் உதாசீனப்படுத்தப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன. 

மனநலப் பாதிப்புகள்

மனநலக் குறைபாடுகளுக்குப் பல்வேறு காரணிகள் சொல்லப்படுகின்றன.  பெரும்பாலானவற்றுக்கு குறிப்பிட்ட காரணிகளைத் திண்ணமாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை.  பல சமயங்களில் இவை ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளின் கூட்டாக இருக்கவும் கூடும். இக்குறைபாடுகள் படிப்படியாக அதிகரித்து, மூளையில் வேதியியல் மாற்றங்களை உண்டாக்குகிறது. சில சமயங்களில் அதிர்வூட்டும் நிகழ்வு, விபத்து, மாரடைப்பு போன்றவை மனச் சமநிலையைப் பாதித்து உளவியல் பிரச்சனைகளுக்குத் தூண்டுவினையாக அமைந்துவிடும். 

வழக்கத்துக்கு மாறாகத் தோன்றும் கீழ்க்காணும் அறிகுறிகள் மனநலக்குறைவைக் குறிப்பதாக இருக்கக்கூடும். சூழ்நிலையைப் பொறுத்தோ, இன்னபிற காரணிகளாலோ இந்த அறிகுறிகள் வேறுபடலாம். மேலும் இவை ஓரிரு நாட்களிலோ, வாரங்களிலோ புலப்படுவதில்லை.

  • தொடரும் சோக மனநிலை.
  • குழப்பமான சிந்தனை, கவனச்சிதறல்
  • காரணமற்ற அச்சம் அல்லது குற்றவுணர்வு
  • உறவுகள், நண்பர்களிடமிருந்து விலகுதல்
  • அதிகப்படியான சோர்வு, ஆற்றலின்மை, தூக்கமின்மை
  • யதார்த்தப் பற்றின்மை அல்லது அதிகப்படியான கோபம்
  • மனப்பிரமை, மனஅழுத்தம்
  • போதைப் பொருட்களுக்கு அடிமையாதல்
  • உணவுப் பழக்கத்தில் முக்கிய மாற்றங்கள்

சில நேரங்களில் மனநலக் கோளாறின் அறிகுறிகள் வயிற்று வலி, முதுகுவலி, தலைவலி அல்லது வேறு விவரிக்க முடியாத உடல்ரீதியான பிரச்சனைகளைத் தரவும் கூடும்.

மனநலக் குன்றுக்குப் பலியாகும் சமூகம்

அமெரிக்காவில், 2018 ஆம் ஆண்டு பொதுமக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், 19 சதவிகிதத்தினர் மனநலக் குறைவுக்கு உள்ளாகியிருப்பதாகக் கண்டறியப்பட்டது. 2020 ஆம் ஆண்டு, குறிப்பாகக் கோவிட் பெருந்தொற்று பரவத் தொடங்கிய பின்பு, இது 21 சதவிகிதமாக அதிகரித்தது. அதாவது ஐந்தில் ஒரு அமெரிக்கர் மன அழுத்தம், பதட்டம், அச்சம் போன்ற மனநலக் குறைபாடுகளுக்கு உள்ளாகியிருந்தார். சமூகத் தனிமைப்படுத்தல், அன்புக்குரியவர்களின் இழப்பு, வேலையின்மை, நிதிக் கவலைகள் போன்றவை விரக்தி மற்றும் உளச்சோர்வு ஏற்படக் காரணமாகயிருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

வாழ்க்கையில் இளமைப் பருவம் என்பது ஒரு தன்னேரில்லாத சிறப்பான காலமென்றாலும், சற்றே சிக்கலானதும் கூட.  பெற்றோரின் அரவணைப்பிலிருந்து விடுபட்டு, தன்னந்தனியாக உலகை எதிர்கொள்ள முனைந்திடும் பதின்ம வயதினர் தங்கள் கற்பனைக்கு நேர்மாறான நிதர்சனங்கள் முகத்தில் வந்து அறையும்பொழுது நிலை குலைந்து போகிறார்கள். சமூக, குடும்ப ஏற்றத் தாழ்வுகளை உணர்தல், உடல் மாற்றங்கள், பாலினக் கிளர்ச்சி எல்லாமாகச் சேர்ந்து மூளையில் உண்டாக்கும் வேதியியல் நிகழ்வுகள் இளம் பருவத்தினர் மனநலப் பிரச்சனைகளுக்கு உள்ளாவதற்கு முதன்மைக் காரணமாக அமைந்து விடுகின்றன.

உலகளவில், 10-19 வயதுடையவர்களில், ஏழில் ஒருவர் மனநலக் குன்றை அனுபவிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உணர்ச்சி மிகுதல் (Emotional disorders), மனப்பதற்றம் (anxiety disorder), மனச்சோர்வு (Depression) போன்றவை இவ்வயதினரை அதிகம் பாதிக்கிறது. சமூக விலகல் காரணமாக உண்டான மனச்சோர்வு கோளாறுகள் இவ்வயதினரை மிக ஆழமாக பாதிக்கிறது. இதன் நீட்சியாக அல்லது மனச்சோர்வுக்கு வடிகாலாக, மாயத்தோற்ற எண்ணங்கள் (hallucination) அல்லது மருட்சி நோய் (delusional paraphernalia) போன்ற மனப் பிறழ்வுகள் உண்டாகலாம். செவிவழி பிரமைகளாக (auditory hallucination/ schizophrenia) மூலம் உருவெடுக்கும் இச்சிக்கல்கள் தற்கொலை வரையிலும் இட்டுச் செல்வதுண்டு.

குழந்தைகள் பெரியவர்களின் மனநிலையை எளிதில் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்கள். மனச்சோர்வு, கவலை, மகிழ்ச்சி எதாகிலும், பெற்றோரின் மனநிலையில் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறார்கள். சமூகச் சூழல் மாற்றங்கள், போர், பொருளாதார பாதிப்புகள் என்று பெரியவர்களை நேரடியாகத் தாக்கும் மனச்சோர்வுகள், குழந்தைகளையும் மறைமுகமாகத் தாக்குகின்றன. அவை குழந்தைகளின் அடிமனதில் மிக ஆழமாகப் பதிந்து விடுகின்றன. வறுமை அல்லது மிதமிஞ்சிய செழுமை, சமூகவியல் வன்முறை, மரணங்களை அனுபவிக்கும் குழந்தைகள் மனநோய்க்கு துல்லிய இலக்காகிப் போகின்றனர். ரஷ்ய-உக்ரைன் போரின் கொடுரங்களில் சிக்குண்டு, சிதறி பெற்றோரைத் தொலைத்துவிட்டு வளர்ப்பு நாயின் அரவணைப்பில் அகதி முகாமில் இருக்கும் 7 வயது சிறுமி; டெல்லியில் ஜஹான்கிர்புரி பகுதியில், தான் வசித்துவந்த குடிசை வீட்டை அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளிய போது தனது சிறிய உண்டியலிலிருந்து சிதறிப்போன காசுகளை பொறுக்கிய 9 வயது சிறுவன் – உலகெங்கிலும் இவர்களைப் போலக் கோடிக்கணக்கான அப்பாவிச் சிறுவர்கள் உளவியல் ரீதியான மனநோய்க்கு உள்ளாகிறார்கள். வருங்காலச் சிற்பிகளான இவர்கள் இன்று எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, அரசியல், மத, இனச்  சிக்கல்கள் நாளைய சமூகத்தை, உலகத்தை கட்டியெழுப்பப் போகிறது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் மனநல பாதிப்புகளும் 

இணையத் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்திய சமூக ஊடகங்களின் ஆதிக்கம் போலிச் செய்திகளின் சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது. ஹிட்லரின் நாஜிப் படையில் கொள்கை பரப்புச் செயலாளராகயிருந்த ஜோசப் கோயபல்ஸ் உண்மையற்ற செய்திகளை, அழகான சொற்களால் புனைந்து, மக்களை நம்ப வைப்பது போல ஏற்ற இறக்கங்களோடு பேசுவதில் வல்லமை பெற்றவராகத் திகழ்ந்தவர். இவரது பிரச்சார முறையான ‘கோயபல்ஸ் பிரச்சாரத்தை’ விஞ்சும் ஊடகங்கள் இன்று பெருகிவிட்டன. சதி கோட்பாடுகள் மற்றும் வதந்திகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதன்  மூலம் மக்களை அதன் உண்மைத்தன்மையை ஆராயவிடாமல் திசை திருப்பி மழுங்கடிக்கும் ஊடகங்களும், சமூக ஊடகச் செயலிகளும் பூதாகாரமாக வளர்ந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு இறுதியில், அமெரிக்க உளவியல் சங்கம் (American Psychological Association) நடத்திய ஆய்வில், 66 சதவிகித அமெரிக்கர்கள் நாட்டின் எதிர்காலம் குறித்த மன அழுத்தத்தில் உள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலோனோர் தொடர்ந்து தங்களுக்குப் பகிரப்படும் நம்பகத்தன்மையற்ற ஊடகங்கள் மூலமாகச் செய்திகளை நுகர்வதும் தெரியவந்தது. நம்மில் பலர், வதந்திகளையும், சதிக் கோட்பாடு குறித்த செய்திகளையும் எளிதில் கிரகித்துக் கொள்கிறோம். அச்செய்திகளின் பின்னாலிருக்கும் உண்மைத் தன்மையை, யதார்த்தத்தைத் தெரிந்துகொள்வதில் நேரம் செலவிட நாம்  விரும்புவதில்லை. 

குறிப்பாக, கொரோனாத் தொற்று உச்சத்திலிருந்த சமயத்தில் பரவிய சமூகச் செய்திகள் பெரும்பாலானோரை அச்சத்தில் தள்ளியது எனலாம். சீனாவில் மட்டும் இத்தொற்று பரவியிருந்த காலத்தில், வீதிகளில் நடந்து செல்வோர், பேருந்துக்காகக் காத்து நிற்போரெல்லாம் கொரோனா நோய் தாக்கப்பட்டு சுருண்டு விழுந்து இறப்பதாக காணொளிகள் சமூக ஊடகவெளியில் பரப்பப்பட்டன. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எரிசாராயம் கொரோனா தொற்றைத் தடுக்கும் என்ற பொய்யான தகவலை நம்பி ஈரானில் ஒரு மாநிலத்தில், பலர் அதைக் குடித்து உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாயின. 

இது போன்ற தவறான தகவலும் பொய்யான தகவலும் (Misinformation and disinformation) மனநலப் பிரச்சினைகளை அதிகப்படுத்தலாம் அல்லது புதிதான மனஅழுத்தங்களை உருவாக்கலாம். பேரச்சத் தாக்குதல் (panic attacks), வெறித்தனமான கட்டுப்பாடுகள் (Obsessive Control Disorder OCD), அச்சக்கோளாறுகள் (phobias) போன்ற உளவியல் நோய்களை இவ்விதச் செய்திகள் எளிதில் தூண்டிவிடுகின்றன. கொரோனா காலத்தில் அடிக்கடி கைகழுவுதல், சுத்தம் செய்தல் போன்ற கட்டுப்பாடுகள் பலவிதத்திலும் வளர்ந்து, பலர் இன்று OCD தொடர்பான மனநோய்க்கு ஆளாகியுள்ளனர். 

அதிகப்படியான தவறான மற்றும் பொய்த் தகவல்கள் ஏற்படுத்தும் மற்றுமொரு பாதிப்பு  மனப்பதற்றம் (Anxiety). மனப்பதற்றம் குறித்த அறிகுறிகள் பெரும்பாலும் உடல்வழியாகவே வெளிப்படுகின்றன. அதிகப்படியான உடல் சோர்வு, இதயப் படபடப்பு, வியர்த்துக் கொட்டுவது, உள்ளங்கை மற்றும் பாதம் சில்லிட்டுப் போதல் போன்ற அறிகுறிகள் உடல் ரீதியான கோளாறு என்ற மாயை உருவாகக் காரணமாகிவிடுகின்றன. இதனால் மனப்பதற்றத்தால் பாதிக்கப்பட்ட பலரும் உடல் சம்பந்தப்பட்ட பல்வேறு மருத்துவர்களை அணுகி இறுதியாக மனநல மருத்துவரை அணுகிறார்கள். 

மனநல பாதுகாப்பு 

மனநலக் குறைபாடு குறித்த அறிகுறிகள் தென்பட்டாலும் பலரும் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. படித்து முன்னேறிய சமூகத்தினரிடமும் மனநலம் குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. மாறாக விஞ்ஞான வளர்ச்சி விரிவடைந்த இன்றைய சூழலில் கூட மனநலக் குன்று சமூகத்தில் இழிவானதாகக் கருதப்படுவதால், பலரும் இந்த அறிகுறிகளை வெளிப்படுத்துவதுமில்லை, மனநல நிபுணர்களை அணுகுவதுமில்லை. தீர்க்கப்படாத உளநோய் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது; தற்கொலைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

மனநோய் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள எந்த உறுதியான வழியுமில்லை. இருப்பினும் மனநலக் குன்று குறித்த அறிகுறிகள் தென்பட்டால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி, மன நெகிழ்வை அதிகரிக்கும் முறையான மனநலப் பயிற்சிகள் உதவக்கூடும். போதுமான அளவுக்குத் தூக்கம், ஆரோக்கியமான உணவு, முறையான உடற்பயிற்சிகள் மனநலத்தைப் பாதுகாக்க உதவக்கூடும். மனப் பதற்றத்தைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மூச்சுப் பயிற்சிகள் உதவலாம். வயதுக்குத் தகுந்தவாறு, குறிப்பிட்ட இடைவெளியில் உடல்நலத்தைப் பரிசோதித்துக் கொள்வது போல மனநலப் பரிசோதனையும் அவசியம். உலகம் எதிர்கொண்டு வரும் பேரழிவு மற்றும் போர்கள் கடுமையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். பொதுவாகவே இத்தருணங்களில் உடல்நலத் தேவையைவிட, நீண்ட கால மனநலத் தேவை மிக அவசியம்.

அமெரிக்காவில், 1949ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், மனநலம் குறித்த விழிப்புணர்வு மாதமாக அங்கீகரிப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனநோய் குறித்த இழிவான கருத்துகளை, களங்கத்தைக் குறைக்கவும் ‘மெண்டல் ஹெல்த் அமெரிக்கா’ (Mental Health America – MHA) எனும் அமைப்பு முன்னெடுத்து நடத்தி வருகிறது.  பல மனநல  அமைப்புகள், நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படுத்தும் விழிப்புணர்வு முகாம்களை அமெரிக்க உடல்நலம் மற்றும் மனித சேவைகள் துறை (Health and Human Services (HHS)) பொருளுதவியளித்து, ஊக்கப்படுத்தி வருகிறது. இம்மாதம் முழுதும் அனைத்து மாநிலங்களிலும், மாவட்ட அளவில் பல்வேறு ஆலோசனை  முகாம்கள். கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மினசோட்டாவில் ‘நேஷனல் அலையன்ஸ் ஆஃப் மெண்டல் இல்னெஸ்’ (National Alliance on Mental Illness) இந்நிகழ்வுகளை ஒருங்கிணைத்து  வருகிறது. இது குறித்த மேலதிக விவரங்களை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம். 

https://namimn.org/nami-offers-free-peer-support-groups/

-ரவிக்குமார்

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad