அமெரிக்கா வருபவர்களுடைய முதல் 10 வேலைகள்
பணி நிமித்தம் புதிதாக அமெரிக்கா வருபவர்கள், வந்தவுடன் முதல் வாரத்தில் செய்ய வேண்டிய 10 முக்கிய வேலைகள் இவை. அமெரிக்கப் பயணத் திட்டத்தில் உங்கள் குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ இருந்தால், தவறாமல் இதைப் பகிரவும்.
- I-9
வேலைக்குச் சேர்ந்து முதல் மூன்று நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டியது – I-9 பாரம் (Form I-9). ஒரு ஊழியரைப் பணியில் அமர்த்துவதற்கு முன் அவருடைய வேலை செய்வதற்குரிய தகுதியுடன் இருக்கிறாரா என்று அந்த நிறுவனம் சரிபார்க்கும் நடைமுறை இது. முதலில் ஊழியர் இந்த I-9 பாரத்தைப் பூர்த்திச் செய்து சமர்பிக்க வேண்டும். பாஸ்போர்ட், வேலை பார்ப்பதற்கான அத்தாட்சி ஆகியவற்றைச் சரி பார்த்து, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் மற்றொரு ஊழியர் சான்றளிக்க வேண்டும். இந்தச் சரி பார்க்கும் வேலையை, தற்போது வேறு நிறுவனத்திற்கும் அளிக்கிறார்கள். இணையம் வழி இதைச் சமர்பிக்க முடியும். ஆனால், பாஸ்போர்ட், I-797 போன்ற ஆவணங்களை நேரடியாகக் காட்ட தேவையிருக்கும்.
மேலும் தகவல்களுக்கு – https://www.uscis.gov/i-9
- SSN சோஷியல் செக்யூரிட்டி நம்பர் (Social Security Number) என்பது ஊழியர்களுக்கு அவர்களது பணிகாலத்திற்குப் பிறகு அரசு அளிக்க வேண்டிய ஓய்வூதியதை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட எண். இன்று பல இடங்களில் அந்த எண் பயன்படுகிறது. சோஷியல் செக்யூரிட்டி அலுவலகங்கள் ஒவ்வொரு ஊரிலும் பல இடங்களில் இருக்கும். உங்கள் இருப்பிடத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அலுவலகத்திற்குச் சென்று, ஒரு பாரத்தைப் பூர்த்திச் செய்து கொடுத்தால், சில வாரங்களில் வீட்டிற்கு SSN card வந்து சேரும். SSN எண்ணை பொதுவில் பகிரக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். மேலும் தகவல்களுக்கு – https://www.ssa.gov/
- வங்கிக் கணக்கு வேலைக்குச் சேர்ந்தாச்சு!! இனி அடுத்தது சம்பளம் வர வேண்டும் அல்லவா? அந்த வேலையைப் பார்ப்போம்? வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வங்கியின் கிளைகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும். உதாரணத்திற்கு, மினசோட்டாவில் வெல்ஸ் பார்கோ (Wells Fargo) வங்கியின் கிளைகள் அதிகமாக இருக்கும். சில மாகாணங்களில் சேஸ் (Chase) வங்கி கிளைகள் அதிகமாக இருக்கும். வேறு சில மாகாணங்களில் யூ.எஸ். வங்கி (US Bank) பிரதானமாக இருக்கும். உங்கள் வசதிக்கு ஏற்ப, ஒரு வங்கியைத் தேர்ந்தெடுத்து, அங்குக் கணக்கைத் தொடங்கவும். அவர்கள் கொடுக்கும் வங்கி கணக்கு எண்ணையும், ரூட்டிங் (Routing) எண்ணையும் அலுவலகத்தில் கொடுத்து, சம்பளப் பணம் வங்கியில் கிடைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்து கொள்ளவும்.
- தங்கும் இடம் புதிய ஊர். எங்குத் தங்க போகிறோம் என்பதை ஊரில் இருந்து கிளம்பும் போது யோசித்து இருப்பீர்கள். வரவிருக்கும் ஊரில் நண்பர்கள், உறவினர்கள் ஏற்கனவே இருந்தால், தங்குமிடம் குறித்த தகவல்களைக் கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ளவும். அமெரிக்கா வந்தபிறகு, உங்கள் அலுவலகம் இருக்குமிடம், நீங்கள் அடிக்கடி போகவிருக்கும் கடைகள் இருக்குமிடம், உங்கள் நண்பர்கள் இருக்குமிடம், பிள்ளைகளின் பள்ளி, வாடகை அளவு, எப்போது இருந்து வீடு தயாராக இருக்கும் ஆகியவற்றைப் பொறுத்து முடிவெடுக்கவும். ஊரில் இருந்து கொண்டு வந்திருக்கும் பெட்டிகளை ஒரு இடத்தில் நிலையாக வைத்துவிட்டால் நிம்மதி கிடைக்கும்.
- தொலைபேசி இந்தக் காலத்தில் தொலைதொடர்பு என்பது மிகவும் அத்தியாவசியமாக மாறிவிட்டது. ஊருக்கு தகவல் சொல்ல வேண்டும், நண்பர்களிடம் அவ்வப்போது பேச வேண்டும், எங்குப் போக வேண்டும் என்றாலும் டாக்ஸி பிடிக்க ஒரு ஃபோன் இருந்தால் போதும் என்ற நிலை இப்போது இருக்கிறது. அதனால் போனும், தொலைதொடர்பு சேவையும் உடனடியாகத் தேவைப்படுகின்றன. தொலைபேசி எப்படியும் கைவசம் இருக்கும். சேவையைத் தான் இங்கு வந்தபிறகு வாங்க வேண்டி இருக்கும். தற்சமயம் எல்லாத் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுமே கணக்கில்லா பேசும் நேரம், மெசெஜ் வசதி தருகிறார்கள். ஆனால், இந்தியாவில் கொடுப்பது போல் ஒருநாளைக்கு 2ஜிபி, 5 ஜிபி என்று டேட்டா அமெரிக்காவில் வழங்குவதில்லை. மாதத்திற்கு 5 ஜிபி, 10 ஜிபி என்று தான் கிடைக்கும். எந்தச் சேவை வழங்குநர், வெளிநாடுகளுக்குப் பேசும் வசதியைத் தருகிறார் என்றும் பாருங்கள். வெளிநாடுகளுக்குப் பேசும் வசதி தரும் செயலிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து வரும் OTPகளை எப்படி அமெரிக்காவில் பெறுவது என்பதையும் யோசிக்கவும்.
- International Plug Adapter இந்தியாவில் மின் உபகரணங்களைச் செயலாற்ற பயன்படுத்தும் ப்ளக்குகளை (Plug), அமெரிக்காவில் பயன்படுத்த முடியாது. இந்தியாவில் இருந்து கொண்டு வந்திருக்கும் மடிகணினி, செல்பேசி, கைக்கடிகாரம் போன்றவற்றைப் பயன்படுத்த, ஒரு இண்டர்நேஷனல் அடாப்டர் (International Adapter) தேவைப்படும். அதே போல், அமெரிக்காவில் வாங்கும் மின் உபகரணங்களை இந்தியாவில் பயன்படுத்தவும் இது பயன்படும். இதை இந்தியாவில் இருக்கும் போதே வாங்கிவிடலாம். அப்படி வாங்காதவர்கள், அமெரிக்கா வந்தவுடன் வாங்கிவிடுங்கள்.
- பள்ளி பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுடன் அமெரிக்கா வருகிறீர்கள் என்றால், அவர்களுக்கான பள்ளியைத் தேர்வு செய்வது முக்கியமானதாகும். தங்குமிடத்தைத் தேர்வு செய்வதும், பள்ளியைத் தேர்வு செய்வதும் அமெரிக்காவில் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டது. கல்வியைப் பொறுத்தவரை, ஒரு மாகாணம் என்பது நகரங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதைப் போல, பள்ளி மாவட்டங்களாகவும் (School District) பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பள்ளி மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் ஒவ்வொருவித பாடமுறை, வசதிகள், தேர்ச்சி விகிதம் எனத் தரம் மாறுபடும். இதை ஏற்கனவே இங்கிருக்கும் நண்பர்களிடம் கேட்டோ, அல்லது இதற்கென இருக்கும் இணையத்தளங்களில் ஆய்வு செய்தோ ஒரு முடிவுக்கு வாருங்கள்.
- தண்ணீர் & உணவு வந்தவுடன் ஹோட்டலில் தங்குபவர்களுக்கு ஆரம்ப நாட்களில் ஹோட்டல் உணவு போதுமானதாக இருக்கும். ஏற்கனவே ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். இதில் சமையல் வேலை வேறு கூடுதல் சுமையாக அமையக்கூடும். அப்படி ஹோட்டல் உணவு சுவை பிடிக்காதவர்கள் மற்றும் சரிப்படாதவர்கள், ஊரில் இருந்து கொண்டு வந்திருக்கும் உணவுப்பொருட்கள் கொண்டு சமைத்துச் சாப்பிடலாம். அப்படி ஏதும் கொண்டு வராதவர்கள், பக்கத்தில் வால்மார்ட், டார்கெட், இந்திய மளிகை கடைகளுக்குச் சென்று துரித உணவுப்பொருட்கள் அல்லது அரிசி, பருப்பு, காய்கறி என்று தங்கள் சமையலைத் தொடங்கலாம். அதற்கேற்ப கிச்சன் இருக்கும் ஹோட்டல் அறையைத் தேர்வு செய்ய வேண்டும். தண்ணீர் பாட்டில் எங்குக் கிடைத்தாலும், தண்ணீர் வடிகட்டும் குடுவை (Water Filter Pitcher) வாங்கி வைத்துக்கொண்டால் வசதியாக இருக்கும். ஹோட்டலோ, வீடோ கிடைக்கும் தண்ணீரைச் சுத்திகரிப்புச் செய்து குடித்த மனநிறைவு கிடைக்கும்.
- மருத்துவக் காப்பீடு அமெரிக்காவில் மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும் என்று அறிந்திருப்பீர்கள். அறியாவிட்டால் அறிந்து கொள்ளுங்கள்!! அதனால் மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியம். அலுவலகத்தில் அளிக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ஆரம்ப நாட்களிலேயே பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய மருத்துவச் செலவு எத்தகையது என்பதைப் பொறுத்து, அதற்கேற்ற திட்டத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் மருத்துவமனை போக மாட்டீர்கள் என்றாலும் மருத்துவக் காப்பீடு மிகவும் முக்கியம்.
- செலவைத் திரும்பப் பெறல் நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வரும் தங்கள் ஊழியர்களுக்கான ஆரம்பக்கட்டச் செலவீனங்களுக்குப் பொறுப்பு எடுத்துக்கொள்ளும். முதல் சில வாரங்களுக்கான தங்குமிடம், சாப்பாட்டுச் செலவு, விமானநிலையத்தில் இருந்து தங்குமிடம் செல்லும் டாக்ஸி, I-9 சரிப்பார்க்கும் இடம் & SSN அலுவலகம் போன்றவற்றுக்குப் பயணப்படும் செலவு ஆகியவற்றுக்குப் பணம் அளிப்பார்கள். இது போன்ற செலவுகளுக்கு ஆன ரசீதுகளைச் சமர்ப்பித்தால், அந்தப் பணத்தை அளிப்பார்கள். அதனால், இது குறித்த தகவல்களை நிறுவனத் தகவல் தளங்களில் பார்த்து, ஒவ்வொரு ரசீதையும் வாங்கிப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும். பிறகு, மொத்தமாகச் சமர்பித்து இதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளவும்.
இவைத் தவிர, அலுவலகத்தில் W-4 பாரம் சமர்பிப்பது, 401K வசதி இருந்தால் அதற்கு விண்ணப்பிப்பது, ஓட்டுனர் உரிமம் விண்ணப்பம் செய்வது போன்ற வேலைகள் உள்ளன. அதை அதற்கடுத்து வரும் வாரங்களில் விசாரித்துச் செய்வதற்கு நேரம் இருக்கும். உங்கள் அமெரிக்கப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
- சரவணகுமரன்
Tags: H1B, Immigration, SSN, USA, Visa
பயனுள்ள தகவல். பகிந்தமைக்கு நன்றி!