பலி-சிறுகதை போட்டியில் முதல் பரிசு வென்ற கதை
“என்ன குழந்தை?” என்று ‘துவாசை’ நோக்கிப் போய்க்கொண்டிருந்த பெருவிரைவு ரயிலிலில் ஒரு குரல் தெறித்தது.
மொழிப் பாகுபாடின்றி பல தலைகள் குரல் வந்த திக்கில் திரும்பின. தன்யாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என அதுவரை மனத்தில் ஆக்கிரமித்திருந்த தவிப்பு அகிலனைவிட்டுத் தற்காலிகமாக விலக, குரலுக்கு உரியவனின் மேல் பார்வையை அனுப்பினான். அகிலனுக்கும் அவனுக்குமிடையில் நான்கைந்து பேர் நின்றுகொண்டிருந்தனர். அவனுக்கும் இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த சீனர் ஒருவர் முணுமுணுத்தார். உறக்கம் கலைக்கப்பட்ட கோபம் அவரது வெளுத்த முகத்தைச் சிவப்பாக்கியது.
நறுமணத்துடன் புறப்பட்டவர்கள் நசிவுற்ற நிலையில் வீடு திரும்பும் நேரம் அது. ‘ராபிள்ஸ் பிளேஸ்’ நிலையத்தில் பயணிகள் பெருங்கொத்தாகக் குறைந்து அதே அளவில் நிறைந்தனர். இதற்கிடையில் கடுக்கும் கால்களுக்கு ஓய்வைக் கொடு என்பதைப்போலக் காலி இருக்கை ஒன்று அகிலனை அழைத்தது. யாராவது இயலாதவர்கள் நின்றுகொண்டு இருக்கிறார்களா என்று பார்வையைச் சுழற்றிவிட்டு அமர்ந்தான்.
“சொல்லுங்க மாமா… சரியா கேக்கல… கொழந்தை பொறந்திடுச்சா… என்ன புள்ள?” என்ற குரலுக்கு உரியவன் எதிரில் அகிலன் உட்கார்ந்திருந்தான்.
‘எனக்கும் இப்படி ஒரு நாள்…’ அகிலனின் மனத்தில் தோன்றிய இன்பவுணர்வை மேலே செல்லவிடாமல் எதிரிலிருந்தவனது குரல் மறித்தது.
“ச்…. இப்பவும் பொட்டப் புள்ளையா?” கைபேசியைக் காதிலிருந்து எடுத்த அவனது முகத்தில் வெறுப்பு கருமேகமாய்ப் படர்ந்தது. லேசாக நிமிர்ந்தவன் கண்களை இறுக மூடிக்கொண்டு எரிச்சலோடு தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டினான். கையை இறுக்கி மூடிக்கொண்டு தொடையில் குத்திக்கொண்டான். அவன் பக்கத்தில் நின்றிருந்தவர்கள் சற்றே விலகினர்.
‘உங்களுக்கும் பெண் குழந்தைதான் பிடிக்குமா என்று கேட்ட தன்யாவின் குரலில்தான் அன்று எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்திருந்தது?’
எதிரிலிருந்தவனுக்கு கைப்பேசி அழைப்பு விடுக்க, எடுத்துப் பார்த்துவிட்டு நிராகரித்தான். மறுபடியும் என்னை எடுத்துப் பேசு என்று அது விடாது அழைப்பு விடுத்தாலும் அவன் தன் போக்கில் உறுதியாய் இருந்தான்.
‘இவன் மனிதன்தானா? பெண் குழந்தை பிறந்ததுக்கு இப்படிக் கடுமையைக் காட்டுறானே!’
அடுத்த நிலையத்தில் இரயில் நின்றபோது ஒரு வயதானவர் வருவதைப் பார்த்த அகிலன் எழுந்துகொண்டான். இரயில் நகரத் தொடங்கியது. அவன் ஃபோனை எடுத்தான். ‘ஆண் குழந்தை பிறக்கும்கிற எதிர்பார்ப்பில் இருந்திருப்பான். பொண்ணுன்னு கேட்கவும் ஏதோ கோபத்தில் பேசிட்டான்போல’ என அவனைப்பற்றி அகிலன் நினைத்தான்.
“ம்மா… உம்மருமவ இப்பவும் பொட்டப் புள்ளையத்தான் பெத்திருக்காளாம். என்னது…? ஒனக்கு வெசயம் தெரியுமா…? இங்க பாரு… அவள வூட்டுக்குக் கூட்டிக்கிட்டு வர்ற வேலைல்லாம் வச்சிக்காத. இரு… இரு… இந்த வெட்டிப் பேச்செல்லாம் எங்கிட்ட வேணாம். அவ ஆத்தா வூட்லயே கெடக்கட்டும். எஞ்சொல்ல கேக்காம நீ மட்டும் அங்க போன… அப்புறம் தெரியும் சேதி…” மிரட்டலோடு கைப்பேசி உரையாடலைத் துண்டித்தான்.
‘அடப்பாவி… இவனை ஒரு நிமிசம் நல்லவன்னு நினைச்சிட்டனே. இவனது மனைவிக்குப் பிரசவ வேதனை போய், இப்போ இவன் கொடுக்கிற இம்சையல்லவா பெருசா தெரியும்?’
‘உன் மனைவி படும் வேதனையைவிடவா?’ என்று மனதின் மறுபக்கம் அகிலனைக் கேள்வி கேட்டது. அதுவரை எதிரே இருந்தவனைப்பற்றிய எண்ணத்தில் சலசலத்திருந்த மனது சூடு பட்டதைப்போல ஒடுங்கியது. கணப்பொழுதில் அனைத்தும் மறைய அகிலனது மனம் முழுக்க தன்யா நிரம்பினாள். ஏழாண்டுகளுக்கு முன்பு அவனுடன் திருமண பந்தத்தில் இணைந்தவள்.
“இவ்ளோ நாளா இல்லாத சந்தோசம் கிடைச்சிருக்கு. அதையும் அனுபவிக்கவிடாம பண்றீங்களே” என்ற அவளது குரல் நினைவில் எட்டிப் பார்த்தது. ‘என்னை நம்பியவள் இக்கட்டில் இருக்கிறாள். எப்படி மீட்கப் போறேன்?’ என்ற கலக்கம் அகிலனின் மனத்தில் நிறைந்தது.
“நான் கண்டிப்பா வந்துடறேன். நீ அழுவாதம்மா… நம்ம பாப்பா பாவமில்லே” உடைத்துக்கொண்டு வரும் அழுகையை காட்டிக்கொள்ளாமல் அன்று சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.
‘என்ன சொல்லியும் அவள் சமாதானமாகவில்லையே. இதே பதிலை இரண்டு வாரமாகச் சொல்லிக்கொண்டிருந்தால் அவளும் என்னதான் செய்வாள்? மொட்டவிழக் காத்திருக்கும் சின்னஞ்சிறு உயிர் அப்பாவைப் பற்றி என்ன நினைக்கும்? விடுப்பே எடுக்காம ஆண்டு முழுக்க உழைத்தால்கூட வராத வலி, ஒரு வாரம்கூட லீவு கிடைக்க வாய்ப்பில்லையெனத் தெரிந்ததிலிருந்து பிழிஞ்சு எடுக்குதே!’
‘லேக் சைட்’ நிலையத்தை ரயில் அடைய எண்ணவோட்டத்திற்கு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டு வெளியானான். ‘ஆமாம்… அந்தப் பெண் குழந்தைக்காரன் என்னானான்?’ என்ற யோசனையோடு திரும்பிப் பார்த்தான். அவன் அமர்ந்திருந்த இருக்கையில் சீனப்பெண்மணி ஒருவர், சிறிய கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு புருவத்தைச் சரிசெய்துகொண்டிருந்தார்.
எஸ்கலேட்டர் வழியாக அவன் கீழே இறங்க, கனத்திருந்த மனமும் கவலை என்ற குழிக்குள் இறங்கியது.
‘எல்லாம் இந்த அம்மாவால் வந்த வினைதானே. குழந்தை பிறக்கும்போது பிறக்கட்டும்னு இல்லாம, அவங்களுக்குப் புள்ளை பொறந்திடுச்சி. இவங்களுக்கு கல்யாணமான மறுமாசமே குழந்த தங்கிடுச்சுன்னு தன்யாவைப்போட்டு புடுங்கி எடுத்து… அந்த நச்சு சொற்களைத் தாங்க முடியாம அவ தவித்து…. ஸ்…. அப்பா…!’
‘ஆமாம், என்னைப் பெத்தவருக்காவது அறிவு வேணாம்? மருமகளை தொந்தரவு செய்ய வேணாம்னு பொண்டாட்டிகிட்டச் சொல்லத் தெரியாது? சாப்பிட்டுட்டு, பொண்டாட்டியோடு சேர்ந்து சேனலை மாத்தி மாத்தி சீரியலைப் பாக்குறது மட்டும்தான் ஒரு பெரிய மனுசனுக்கு அழகா? பொண்டாட்டி சொல்றதுக்கு தலையாட்டுறத மட்டும் பொழைப்பா வச்சுக்கிட்டு… என்ன மனுசன் இவரு…?’
‘மவனுக்குப் புள்ளையும் பொறக்கணும். மாசமானா சிங்கப்பூருல இருந்து பணமும் வரணும்… ‘நானும் எவ்வளவுதான் பொறுத்துப் போவது?’ பெற்றோர் மீது இருந்த கோபம் அகிலன் மனத்தில் வகைதொகையின்றி வளர்ந்தது.
கார்டை அடித்துவிட்டு வெளியே வந்தான். ‘டிஷ்யு பேப்பர் ஒன் டாலர்…’ என்று சக்கர நாற்காலியிலிருந்து வந்த குரல் காற்றில் கரைந்தது.
‘சிங்கப்பூரில் மட்டும் வயசானவங்க இல்லையா என்ன? அடியெடுத்து வைக்கவே சிரமப்படுறவங்ககூட யாருக்கும் சிரமம் கொடுக்க விரும்பாம ஏதோ ஒரு வகையில பொழைப்பைப் பாத்துக்கிட்டிருக்காங்க. என்னைப் பெத்தவங்க என்னன்னா மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு மருமகளுக்கு குழந்தையில்லைன்னு குடைச்சல் கொடுக்கிறாங்களே!’
‘உங்கம்மா சொன்னா உன்னோட புத்தி எங்க போச்சி?’ சமயம் பாத்து மனசாட்சி மல்லுக்கு வந்தது.
‘புத்தி இருந்ததால்தான், செயற்கைமுறை கருத்தரிப்புல அதிகமான வாய்ப்பு இருக்குதுன்னு டாக்டர் சொன்ன யோசனைக்கு சம்மதிச்சேன். ஒருவேளை உங்களால இந்தியாவுக்கு உடனே வர முடியாட்டா என்ன பண்றதுன்னு தன்யா அப்பவே கேட்டாள். சக்சஸ்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லு, அடுத்த பிளைட்ல சென்னைல இருப்பேன்னு வாக்குக் கொடுத்தேன். இப்படியொரு சூழ்நிலை உருவாகும்னு யாருக்குத் தெரியும்?’
மேம்பாலத்தைக் கடப்பதற்காக படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினான். களைத்திருந்த உடலும் மனமும் ஒத்துழைக்க மறுத்ததால் கடந்து போனவற்றை அசைபோட்டுக்கொண்டே மெதுவாகவே நடந்தான்.
செயற்கை முறை கருத்தரிப்பில் முதல் முயற்சி, கருப்பைக்கு வெளியே உருவாகி தோல்வியைத் தழுவியது. அவர்களது கொஞ்சகால நம்பிக்கை வலியோடு உதிர்ந்தது. பெரும்பாலும் முதல் முயற்சி வெற்றி அடையாது என அந்த டாக்டர் ரொம்ப சாதாரணமாகச் சொன்னார். அவ்வளவு சுலபமானக் காரியமா அது? தன்யா துடித்துப் போனாள். தனக்கு இனிமே குழந்தையே பிறக்காதோ என்ற அச்சமும் அவளை ஆட்கொள்ள அரண்டு போனாள். அந்நிலையில் மனைவியின் அருகிலிருந்து ஆறுதல் சொல்லக்கூட அவனால் முடியவில்லை. ‘ச்சே… எதற்கு இப்படியொரு வாழ்க்கை?’ என்ற வெறுப்பு ஏற்பட்டதும் அப்போதுதான்.
அந்தச் சின்னஞ்சிறு சிசு காணாமல்போனது மட்டுமின்றி அவனுடைய பல மாதச் சம்பளமும் காணாமல் போயின. வேலையிலும் முழுதாகக் கவனம் செலுத்த முடியவில்லை.
“பொண்டாட்டியை மாமியார் வீட்டுக்கு அனுப்பியதோட, பணத்தையும் அங்கேயே அனுப்புறியா?”ன்னு கைப்பேசியில் அம்மா கூப்பாடு போட்டார். அறை நண்பர்களின் உதவி இருந்ததால் பேசிய வாயை அவ்வப்போது அடைக்க முடிந்தது. ஏகப்பட்ட கடனும் ஆகிய நிலையில் சகித்துக்கொள்ள முடியா வெறுப்பில் இருந்தான்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு அடுத்த முயற்சி கூடுதல் செலவுடன் அரங்கேறி வெற்றியும் பெற்றுள்ளது. அந்தச் செய்தியை மனைவி சொன்னபோது உலகத்து சந்தோசம் எல்லாம் ஒண்ணா சேர்ந்து அவன் மேல் கொட்டுவதைப்போல இருந்தது. ‘இந்த நேரத்துல நான் தன்யாவின் பக்கத்துல இல்லாம போயிட்டேனே…!’ மனம் நிறைந்து இருந்ததால் மறு வார்த்தைப் பேச முடியலை.
“எப்போ வர்றீங்க?” மகிழ்ச்சியின் படிக்கட்டுகளில் தாவித்தாவி ஏறிக்கொண்டிருந்தவனை தன்யாவின் கேள்வி இழுத்து நிறுத்தியது.
“சீனப்புத்தாண்டு விடுமுறை முடிந்து மற்றவர்கள் திரும்பும்வரை யாரும் லீவு எடுக்கக்கூடாது” என மேலதிகாரி சொன்னது அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது. ஆனது ஆச்சு… இன்னும் ஒரு வாரம்தானே… என்ற நினைப்பில் இருந்தான். தாயகத்திற்குப் போயிருக்கும் பணியாளர்கள் விடுமுறையைக் கழித்துவிட்டு வந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தருணம். அப்போதுதானா கொரோனா என்னும் நோய் உலகில் தலையெடுக்க வேண்டும்?
செயற்கை முறை கருத்தரிப்பு பற்றிய பேச்சை எடுத்தபோதே தன்யாவின் பெற்றோர் கவலைப்பட்டனர். “மாப்பிள்ளை, இப்படி வைத்தியம் பாத்துக்கிறதுல எங்களுக்குச் சம்மதம். இப்போ நிறைய பேருக்கு இப்படிக் குழந்தை பிறக்குதுதான். ஆனா இதையெல்லாம் சம்பந்திக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாதே” என்று பயத்தைக் கவ்விக்கொண்டு தன்யாவின் அம்மாவுடைய குரல் கலவரத்தோடு கசிந்தது.
“எனக்கும் தெரியுது அத்தை. அதனால அவங்ககிட்ட சொல்லாமலே நாங்க ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறோம். நல்ல செய்தி வந்துடிச்சின்னா நான் உடனே சிங்கப்பூரிலிருந்து கிளம்பி வந்துடறேன். இந்த விஷயம் நம்மைத் தவிர யார் காதுக்கும் போகாமலிருந்தால் ஒரு பிரச்சினை வராது.”
“உங்கம்மா, அப்பாவைப்பத்தி நாங்க உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்ல…” தன்யாவின் அப்பாவிடமிருந்தும் அதே கவலை வெளிப்பட்டது.
“நீங்களாவது என்மேல நம்பிக்கை வைங்க மாமா. செயற்கை முறையில கருத்தரிப்புக்கு நிறைய செலவாகும்னு டாக்டர் சொல்றாங்க. நான் இங்க இருந்து வேலைக்குப் போனா அவ்வளவு பணத்தை எப்படிச் சம்பாதிக்க முடியும்? டாக்டர் சொல்றதைப்போலச் செய்தால், ட்ரீட்மெண்ட்டும் நடக்கும். நானும் சிங்கப்பூருல வேலை செஞ்சிகிட்டிருப்பேன். நல்லது நடந்துடிச்சின்னா உடனே வந்துடறேன்” என்று அவர் தலையில் அடிக்காத குறையாகச் சொல்லிட்டு வந்தான்.
அம்மாவின் எதிர்ப்பையும் மீறி தன்யாவை அவங்க அம்மா வீட்டில் விட்டுவிட்டுதான் சிங்கப்பூருக்கு வந்தான். அந்தக் கடுப்பை வீட்டுக்கு வந்து போகிறவங்ககிட்டல்லாம் சொல்வது மட்டுமில்லாமல் தன்யா வீட்டிலும் போய் சத்தம் போட்டுட்டு வந்திருக்காங்க. மற்ற குடுத்தனக்காரங்க எதிரில் அவமானமாகப் போனது என தன்யா சொன்னாள். இதை அவன் அம்மாவிடம் கேட்கவும் கூடாது எனச் சொல்லிவிட்டாள். ‘பாவம் தன்யா. அம்மாவின் பேச்சுக்குப் பயந்தே எல்லாத்தையும் பொறுத்துக்கிறாளே’ மனைவியின் மீது கரிசனம் பெருகியது.
‘என் உயிர்! இன்னும் எட்டே மாதங்களில் என்னைக் காணத் தயாராய் இருக்கிறது. என்னதான் அறிவியல் வளர்ந்திருந்தாலும் அறியாமையில் மூழ்கியிருப்பவர்களும் இருக்கத்தானே செய்கின்றனர்’ என்னும் எண்ணம் எழ புழுக்கம் அவனைக் கொன்றது.
‘நான் கட்டாயம் இப்பவே ஊருக்குப் போயாகணும். என்ன செய்யப் போறேன்?’ என்ற யோசனையோடு தன்னுடைய ‘புளோக்கை’ அடைந்தவன் ‘லிப்டை’ புறக்கணித்துவிட்டுப் படிக்கட்டுகளின் வழியாக மூன்றாவது மாடியை அடைந்தான். வீட்டுக்குள் போக வேண்டுமெனத் தோன்றாமல் வராண்டாவிலேயே நின்றுவிட்டான்.
“என்னடா… வேலை முடிஞ்சி அவனவன் எப்ப வந்து படுக்கையில் விழணும்னு கிடக்கிறோம். நீ என்னன்னா பைத்தியக்காரனாட்டம் இப்படி நின்னுக்கிட்டிருக்கியே… என்னாச்சிடா உனக்கு?” அறை நண்பனின் கேள்விக்குப் பதிலளிக்காது உள்ளே போனான்.
“ஊர்ல யாருக்காவது உடம்பு சரியில்லையா? எதுக்காவது உடனடியா பணம் தேவையா?” என்று மற்றொரு நண்பன் கேட்டான். அவர்களிடம் என்னவென்று சொல்வான்?
குழந்தை என்னும் சொர்க்கம் கைநீட்டி அழைத்தும், தவிப்பைப் புரிந்துகொள்ளாத நிர்வாகத்தின் மீது வன்மம் வகைதொகையின்றி வளர்ந்தது. ‘வெறுப்பைக் காட்ட வேண்டிய இடத்தில் அமைதியா இருந்துட்டு, ஆபத்பாந்தவனா உதவுற பணியிடத்து மேல எதுக்கு வன்மம்?’ என மனசு கேட்டது.
அடுத்த சில நாட்களில், வெளிநாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டது. தினமும் கேட்ட செய்திகள் அவன் இதயத் துடிப்பைக் கூட்டுவதாகவே இருந்தன.
கொரோனா தொற்றின் காரணமாய்ப் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆடம்பர ஹோட்டல், சொகுசு கப்பல் என ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்து வந்தாலும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள முடியாதது சகித்துக்கொள்ள இயலாத ஒன்றாய் ஆனது. வேலையும் வேணாம் ஒண்ணும் வேணாம் எங்களை ஊருக்கு அனுப்பினால் போதும் எனச் சிலர் முரண்டு பண்ணினர். உடனே சொந்த ஊருக்கு அனுப்பாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றுகூடச் சிலர் போராட்டம் செய்தனர். தேவைப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. சரியான காரணங்கள் இருப்பவர்கள் மட்டும் வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. அப்பாவின் சாவுக்கு என சொந்த நாட்டுக்குப் போன ஒருவனை, அவனுடனிருந்தோர் பொறாமையுடன் பார்க்கும் நிலையும் சிங்கப்பூரில் உண்டானது.
‘இப்ப ஒருமுறை இந்தியாவுக்குப் போய்ட்டு வந்துட்டால் போதும் அம்மா வாயை அடைச்சிடலாம்’ இதே யோசனை நொடிக்கு நொடி உயர்ந்து அகிலனை அலைக்கழித்தது.
“பேசாமல் அம்மாவிடம் உண்மையைச் சொல்லிட்டா என்ன?”
“சொல்றதுன்னா ட்ரீட்மெண்ட் எடுக்கிறதுக்கு முந்தியே சொல்லியிருக்கணும். இப்பப் போய் உங்கம்மாகிட்ட சொன்னீங்கன்னா நான் ஏதோ தப்பு பண்ணிட்டதா கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டிடுவாங்க.”
‘தன்யா சொல்வதும் சரிதான். விஷயத்தைச் சொன்னா அம்மா நிச்சயம் புரிஞ்சிக்க மாட்டாங்க. அதுவுமில்லாம ஊரெல்லாம் இதை வெவ்வேறு விதமா சொல்லி எங்க எதிர்காலத்தையே கேள்விக்குறியா ஆக்கிடுவாங்களே!’ விளக்கை அணைத்த பின்பும் அறையில் ஆங்காங்கே ஒளிரும் கைபேசிகள்கூடக் களைத்துப்போய் அடங்கின.
மனத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடி அகிலனை பலவாறாக மிரட்டியது. சொகுசுக் கப்பலில் இருந்தவனுக்கு விழித்திருக்கும் துன்பத்திற்கு சிகிச்சையான தூக்கம் விலகிச் சென்றுகொண்டிருந்தது.
“புருசங்காரன் சீமைக்கிப் போயிருக்க பொண்டாட்டிக்காரி இங்க புள்ளையாண்டிருக்காளாம்… கேட்டீங்களா சங்கதிய…?” அங்கம்மா போட்ட சத்தம் அடுத்த தெருவையும் தாண்டிச் சென்றது. வீட்டுக்குள்ளிருந்த தன்யாவுக்கு மாமியாரின் சொற்கள் ஒவ்வொன்றும் தீப்பந்தமாய்ப் பாய்ந்து தாக்குவதைப்போலிருந்தன. அவள் பெற்றோரோ சொற்களைத் தொலைத்தவர்களைப்போல வாசலில் நின்றிருந்தனர். அதைச் சாதகமாக எடுத்துக்கொண்டவரது பேச்சு மேலும் கீழ்த்தரமான வகையில் இறங்கியது.
தன்யாவுக்கு கல்யாணமான அன்று அவரது சுயரூபத்தை அறிந்து அவர்கள் கலங்கியது கொஞ்சமா? சீர் செய்முறையில் ஏதோ ஒன்று குறைந்தது எனக் கொஞ்சமா ஆடினார்? உப்புப்பெறாத ஒன்றுக்கே உயிர் போய்விட்டமாதிரித் துடித்தவர் இப்படியொரு விஷயத்தைக் கேள்விப்பட்டுச் சும்மாயிருக்கப் போறாரா?
“சம்பந்தியம்மா… தயவுசெய்து அள்ளிக் கொட்டாதீங்க… உங்களுக்குப் புண்ணியமா போகும். உள்ள வாங்க எல்லா வெவரத்தையும் சொல்றோம்” தன்யாவின் அப்பாவுடைய குரல் நடுக்கத்துடன் வந்தது.
“உள்ள வந்து என்ன பேசணும்? உங்க பொண்ணு ஊருமேல போன கதையை எங்கிட்ட மட்டும் ரகசியமா சொல்லப் போறீங்களா?”
தன்யா அப்பாவுடைய தாடை இறுகியது. கணவரது கையைப்பிடித்து பின்னுக்கு இழுத்த தன்யாவின் அம்மா முன்னே வந்து, “ஒரு பாவமும் அறியாத பொண்ணை இப்படி அநியாயமா பேசுறீங்களே… கடவுளே… இது அடுக்குமா?” என்று கேட்டவரது உடல் நடுங்கியது.
“ஒடம்பு தெனவெடுத்த உங்க பொண்ணு மாப்புள சம்பாதிச்சிருக்காளே… இது பாவமில்ல… ஒங்களுக்கெல்லாம் இது தப்பு இல்லன்னா….? ஒங்கள சொல்லிக் குத்தமில்ல… ஆத்தா எப்படின்னு நான் அன்னைக்கி வெசாரிச்சிப் பொண்ணு எடுத்திருக்கணும்…”
“அறிவுகெட்டத்தனமா பேசாதீங்க…”
“யோவ்… யாரப் பாத்து இந்த வார்த்தையைக் கேட்டே? ஊர மேஞ்சிட்டு வந்த பொண்ண அடக்கத் துப்பில்லாம என்ன பேச வந்தியா நீ?”
“திரும்பத் திரும்ப வார்த்தையைக் கொட்டினா நாங்க என்னதான் செய்வோம்? கொஞ்சம் நாங்க சொல்றதையாவது காது கொடுத்துதான் கேளுங்களேன்…”
“ஒங்க கதைய கேக்க நான் தயாராயில்ல… எவனோ குடுத்த புள்ளைக்கி எம்புள்ள அப்பனாக்கப் பாக்குறீங்களா? இப்பவே போய் வக்கீலைப் பாத்து அத்து வுடறதுக்கு ஏற்பாடு பண்ணுறேன்… மானங்கெட்டவள மருமவளா எடுத்ததுக்கு நான் இன்னும் என்னெல்லாம் படணுமோ…?” என்று கத்திய அங்கம்மாவின் பார்வை சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த கணவரின் மேல் விழுந்தது.
“என்னவோ அண்ட வூட்டுக்காரனாட்டம் வேடிக்க பாக்குறத பாரு… வூட்டுக்கு வந்த மவராசி குடும்பத்தோட மானத்த கப்பலேத்திட்டு நிக்குறா. என்ன ஏதுன்னு ஒரு ஆம்பள வாயத் தெறந்து கேக்க வேணாம்?”
“எதுக்கு அங்கம் இப்புடி ஆவேசமாவுற? சம்பந்திங்கதான் உள்ள வந்து பேசச் சொல்றாங்கள்ள…”
“உள்ள போயிப் பேசணுமா? போ… போயி அந்த மானங்கெட்ட கதைய காது இனிக்க இனிக்க கேட்டுட்டுப் பொறுமையா வந்து சேரு.”
நாலு கால் பாய்ச்சலில் அடுத்த தெருவைத் தொட்டுவிட்ட அங்கம்மாவைப் பின்தொடர்ந்து அவர் ஓட வேண்டியிருந்தது.
“டேய்… அகிலா நாம மோசம் போயிட்டோம்டா…” கைத்தொலைபேசியில் அம்மாவின் அலறலைக் கேட்டு அகிலன் மிரண்டான்.
“ஏம்மா… என்னாச்சி?”
“நான் என்னன்னு சொல்லுவேன்… ஏதுன்னு சொல்லுவேன்…?”
“என்னாச்சிம்மா…? அப்பாவுக்கு ஏதாவது…?”
“அவருக்கென்னடா…? குத்துக்கல்லாட்டமா நல்லாத்தான் இருக்காரு…!”
“வேற நம்ம சொந்தக்காரங்க யாருக்காச்சும் ஏதாவுதா?”
“நம்ம மானம் போவப் போவுதுடா… இனிமே நம்ம வூட்டு ஆம்பள, பொம்பள வீதியில தல நிமுந்து நடக்க முடியுமா?”
“சும்மா கடுப்ப கெளப்பாத… என்ன ஏதுன்னு மொதல்ல சொல்லு?”
“அத என் வாயால எப்புடிச் சொல்வேன்…?”
“நீ அப்பாட்ட போன குடு.”
“அந்த மனுசனுக்கு என்ன தெரியும்? அந்தக் கேடுகெட்ட விசயத்த நானே சொல்லுறேன்… உம்பொண்டாட்டி….”
“தன்யாவுக்கு என்னாச்சி?”
“எதுக்குடா இப்புடித் துடிக்கிற? தண்ணியா கட்டியான்னுட்டு?”
“தன்யாவுக்கு என்னன்னு சொல்லும்மா?”
“அந்தக் கேடுகெட்டச் சிறுக்கி எவங்கிட்டயோ புள்ள வாங்கிட்டு நிக்குறாடா… எம்மவனே… நாம மோசம் போயிட்டோமடா…”
அம்மா பேசப்பேச அகிலனின் மனத்தில் சீற்றம் பொங்கியது.
“நீ ஒண்ணும் கவலைப்படாதப்பா… சேதி தெரிஞ்சதும் நானும் உங்கப்பாவும் போய்ச் சந்தி சிரிக்க வச்சிட்டு வந்துட்டோமுல்ல…”
“உங்களுக்கெல்லாம் அறிவு இருக்குதா இல்லையா? எதுவாயிருந்தாலும் என்னைய கேக்காம எம்பொண்டாட்டிய எப்படிக் கேக்க கெளம்புனீங்க? உங்களோட இம்சையாலதான் நாங்க இந்தப் பாடுபடறோம். எம்பொண்டாட்டிக்கு மட்டும் எதுனா ஒண்ணு ஆச்சி… கெளம்பி வந்து அப்பன் ஆத்தான்னுகூடப் பாக்காம கழுத்த சீவிட்டுதான் மறு வேல பாப்பேன். நெனப்புல வச்சிக்கோங்க” என்று கைபேசியில் அம்மாவின் வாயை அடைத்தான்.
என்ன சொல்லியும் தன்யாவை சமாதானப்படுத்த முடியவில்லை. “என்னோட உயிர் உங்கிட்ட இருக்குடா. யாரோ என்னவோ சொன்னாங்கன்னு இப்படிக் கவலைப்பட்டேன்னா அது தாங்குமா? எப்புடியாவது ஊருக்கு வரத்தான் பாக்குறேன். முடிய மாட்டேங்குது. வந்தவொடனே ஒன்னைய பேசுன வாயை என்ன பண்ணனும்னு நான் பாத்துக்கிறேன்” என்றான்.
“இது நம்ம குழந்தைதானங்க?”
“என்னம்மா நீ? இப்படில்லாம் பேசலாமா?”
“இல்லங்க… எனக்கே இப்ப சந்தேகமாயிடிச்சி… உங்களைப் பாத்தாதான் என்னால நிம்மதியா இருக்க முடியும். ப்ளீஸ்… வந்துடுங்களேன்…”
“உங்கம்மா பேசிட்டுப் போனதிலேருந்து பித்துப் புடிச்சவளாட்டம் இருக்காப்பா. ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிக்கப் போறான்னு கெலியில கிடக்கிறோம். நீ எப்படியாவது கிளம்பி வந்துடுப்பா” என்று மாமனார் சொன்னவை அகிலனின் மனத்தில் இருத்திக்கொண்டிருந்தன. மனம் முழுக்க தன்யாவின் சொற்கள் திண்மையாய் நிறைந்து அவனை இமை மூடவிடாது அழுத்தின. மரணம் கையெட்டும் தூரத்தில் நின்றுகொண்டு ஒரு கை பார்க்கலாம் வா என அழைப்பதைப்போல இருந்தது.
‘வேலியாய் நின்று மனைவியைக் காக்க வேண்டிய நானே இன்று விபரீதமா ஆனேனே!’
இரவு இரண்டுமணிக்கு அகிலனின் போன் அடித்தது. “இது நம்ம குழந்தைதானங்க?” என்ற கேள்வி நினைவுக்கு வர சட்டெனப் பாய்ந்து எடுத்தான். அழைத்தது அவன் அப்பா என்று தெரிந்த பின் மூச்சு சீரானது. ‘இந்த நேரத்தில் ஏன் போனடிக்கிறார்?’ என்று எழுந்த சந்தேகத்துடன் அழைப்பை ஏற்றான். விசும்பல் சத்தம் கேட்டது. “அப்பா… அப்பா…”
“அகிலா… உங்கம்மா… உங்கம்மாவுக்கு… எப்புடிச் சொல்வேன்…?”
“அம்மாவுக்கு என்னாச்சிப்பா…?”
“பொண்ணு பாவம் சும்மாவுடாதுங்கிறது சரியா போச்சுடா…”
‘சரியானக் காரணம் இருந்தால் மட்டும்தான் நாட்டைவிட்டுப் போக முடியும்’ என்ற விதிமுறை நினைவில் எட்டிப் பார்த்ததில் அகிலனின் மனத்தில் அமைதிப் பரவலாயிற்று.
- மணிமாலா மதியழகன்
பனிப்பூக்கள் 2022 ஆம் ஆண்டு சிறுகதை போட்டியில் முதல் பரிசு வென்ற கதை.
ஒரு உயிரை மாய்ப்பது பிரச்சனைக்குத் தீர்வாகுமா?