\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஏப்ரல் மேயிலே…

“ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லை காஞ்சு போச்சுடா” பாடலை மினசோட்டாவில் இருக்கும் நாம் பாடினாலும் பொருத்தமாகத் தான் இருக்கும் போல!! ஊசியாய் குத்தும் குளிர் இல்லை அவ்வளவு தான், ஆனால் இன்னும் ஜாக்கெட் இல்லாமல் வெளியே போக முடியவில்லை. “ஜாக்கெட் ஜாக்கெட் ஜாக்கெட், ஐ டோண்ட் லைக் ஜாக்கெட், பட் ஜாக்கெட் லைக்ஸ் மீ” என்று கேஜிஎப்-2 டயலாக் பேச பொருத்தமானவர்கள் மினசோட்டாவாசிகள்.

பொதுவாக, மார்ச் மாதம் வந்தால் குளிர் போய்க் கொஞ்சம் கதகதப்பு வரும் என்பது ஐதீகம். இப்ப மார்ச் போய், ஏப்ரல் போய், மே மாதமே வந்து விட்டது. இப்பவும் வெப்பநிலை, மன்னிக்கவும், குளிர்நிலை பெரும்பாலும் 40 டிகிரி பாரன்ஹீட் என்பதாகவே உள்ளது. எப்போது ஜாக்கெட்டைத் துவைத்து உள்ளே வைப்போம் என்று தெரியவில்லை.

அலுவலக நண்பர் கலிபோர்னியாவில் இருந்து ஏப்ரல் இறுதி வாரம் வேலை விஷயமாக வந்திருந்தார். மினசோட்டா குளிர் பற்றித் தெரிந்தவர் என்றாலும், மே மாதம் ஆகப் போகுதே என்று மெல்லிய ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். ஒருநாள் மாலை காரில் போகும் போது நடுங்கிவிட்டார். குளிர் 35 டிகிரி பாரன்ஹீட் என்றிருந்தது. ‘என்னங்க இது, எங்க வீட்டு ப்ரிட்ஜ் இதை விட ஹாட்டா இருக்குமே!!’ என்றார்.

கடந்த சில வாரங்களாய், மினசோட்டாவின் தட்பவெட்பநிலை, முந்தைய ஆண்டுகளின் சராசரியை விடக் குறைவாக இருந்துள்ளது. 2013, 2018 ஆகிய ஆண்டுகளிலும் இது போன்ற அழுகாச்சி குளிர் இருந்துள்ளது. உலகம் போற போக்கைப் பார்த்தால், வருங்காலத்திலும் இது போன்ற நிலை நீடிக்கும். இன்னும் குளிர் கூடவும் வாய்ப்பு இருக்கிறது.

வெளிப்புற நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி மேற்கொள்பவர்கள் இன்னமும் காத்திருக்கிறார்கள். குளிர் ஒருபக்கம், மழை ஒருபக்கம் என இயற்கை கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. ஹீட்டரை அணைத்துவிட்டு, ஏசியை ஆன் செய்ய நினைத்தவர்கள், அதற்கும் காத்திருக்கிறார்கள்.

இப்படி வசந்தக் காலத்திற்குக் காத்திருந்தவர்கள், வசந்தந்தைக் காணாமல் நேரடியாகக் கோடைக்குச் சென்று விடுவோமோ, அல்லது அதுவும் இல்லாமல், இலையுதிர் காலத்திற்குச் சென்று விடுவோமோ என யோசிக்கத் தொடங்கிவிட்டனர். நேரடியாகக் குளிர் காலத்திற்குச் செல்லாமல் இருந்தால் சரி.

இன்னொரு பக்கம், இந்தியாவில் இருக்கும் உறவினர்கள், அங்கிருக்கும் அதிவெப்ப நிலை குறித்துப் புகாரளிக்கும் போது, நம் நிலையைக் கண்டு வருத்தப்படுவதா அல்லது மகிழ்ச்சியடைவதா என்ற குழப்பம் வந்துவிடுகிறது.

மற்றபடி, மகிழ்ச்சியடைய ஒரு செய்தி இருக்கிறது. கடந்த செப்டம்பரில் பெரும்பாலான மினசோட்டா நிலப்பகுதி வறண்டு, காய்ந்து இருந்தது. இந்த ஏப்ரலில் குளிர் மற்றும் மழையால், அந்த வறட்சி பெருமளவு அகன்றுவிட்டது என்கிறார்கள். அந்த வகையில் மகிழ்ச்சியடைவும் நமக்குச் செய்தி இருக்கிறது. கூடிய விரைவில் போர்த்தியிருக்கும் போர்வையைக் களையும் நிலை வரும் என்று நம்புவோம்.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad