விக்ரனுபவம்
முதல் விக்ரம் 1986 இல் வெளியானது. அந்தக் காலத்தில் முன்னணி நாயகர்களின் திரைப்படங்கள் பலமுறை மீண்டும் மீண்டும் வெவ்வேறு திரையரங்குகளில் திரையிடப்படும். அப்படி விக்ரம் (1986) மீண்டும் தூத்துக்குடி ‘மினி சார்லஸ் தியேட்டரில்’ வெளியான சமயம், அண்ணன்மார்களுடன் ஓர் இரவுக்காட்சிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அச்சமயம் அப்படம் எனக்குப் பிடித்திருந்தது. ராக்கெட், கடத்தல், ஜேம்ஸ் பாண்ட் டைப் போலீஸ், கேட்ஜட்ஸ், சலோமியா, டிம்பிள் கபாடியா எனப் பிரமிக்க நிறைய விஷயங்கள் படத்தில் இருந்தன. இடைவேளையில் ரசிகர்களின் ‘ஒன்ஸ்மோர்’ வேண்டுகோளுக்கிணங்க, ‘வனிதாமணி’ பாடல் மீண்டும் ஒளிப்பரப்பட்டது நினைவில் இன்னமும் நிற்கிறது.
‘ஒன்ஸ்மோர்’ என்றவுடன் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. சிங்கப்பூரில் நடந்த இளையராஜாவின் இசைக் கச்சேரியில் விக்ரம் படத்தில் வரும் ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ பாடலுக்கும் ரசிகர்களிடம் இருந்து ‘ஒன்ஸ்மோர்’ ஏகோபித்த குரலில் எழுந்தபோது, இளையராஜா அவர்கள் அதற்குச் சம்மதித்து, பாடலின் இறுதி இசைக்கோர்வையை மீண்டும் இசைக்கச் செய்தார். என்னவொரு கொண்டாட்டச் சூழலது!! காணாதவர்கள் வாய்ப்பிருந்தால் யூ-ட்யூபில் அதைக் காணுங்கள்.
2022இல் இப்போது மீண்டும் ஒரு விக்ரம் ‘ஒன்ஸ்மோர்’. விக்ரம் என்ற பெயரில் அதே கதாபாத்திரம் கொண்டு, முற்றிலும் வேறொரு களத்தில் செம பரபரப்பான படத்தைத் தந்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படம் வருவதற்கு ஒரு வாரம் முன்பு, இது விக்ரமின் தொடர்ச்சியாக இருக்குமோ என்று அந்த 1986 விக்ரமை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். பல காட்சிகளின் வசனங்கள் நினைவில் இருந்தது. கதாபாத்திரங்கள் பேசுவதற்கு முன்பே நான் சொல்லியதைக் கண்டு வீட்டில் இருப்பவர்கள் திகைத்தனர். எழுத்தாளர் சுஜாதா எழுதிய அப்படத்தின் சில வசனங்கள், இப்போதுள்ள படங்களில் வந்திருந்தால், அவரைச் சமூக வலைத்தளங்களில் பந்தாடியிருப்பார்கள்.
அப்படத்தை மீண்டும் பார்த்துவிட்டதால், 2022 விக்ரமிற்குத் தயாராகிவிட்டோம் என்று நினைத்தால், படம் வெளிவருவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு இயக்குனர் ‘கைதி’ திரைப்படத்தை மீண்டும் பார்த்துவிட்டு வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். என்னங்கடா இது, கடைசி நேரத்தில் பரீட்சைக்கு முன்பு லீக் ஆன கேள்வி போல இருக்கிறதே என்று அதையும் பார்த்துவிட்டு, தியேட்டருக்குச் சென்று முதல் நாள் முதல் காட்சியில் அமர்ந்தால், அங்கு ஓர் அதிர்ச்சி.
படத்திற்கு முன்பு காட்டும் விளம்பரங்கள் அனைத்தும் நன்றாக ஓடியது. படம் தொடங்கும் முன்பு காட்டப்படும் அறிவிப்பு, அப்படியே பல நிமிடங்களுக்குத் தொடர்ந்தது. பிறகு, தியேட்டர் ஊழியர் வந்து மேலும் சில நிமிடங்கள் தயவுகூர்ந்து பொறுமை காக்கச் செய்தார். அதன் பின்னர், படத்தைத் தரவிறக்கம் செய்வதில் பிரச்சினை என்று மன்னிப்பு கேட்டு, படத்திற்கான கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, மேலும் இலவசமாக ஒரு டிக்கெட் கொடுத்து வழியனுப்பி வைத்தார். ‘லேக்வில்’ இல்லையென்றால் என்ன, ‘பர்ன்ஸ்வில்’ செல்வோம் என்று பக்கத்தில் அடுத்த தியேட்டருக்குப் படையெடுத்தோம். நம்மூர் போல், பத்து நிமிடப் பயணத்தில் இன்னொரு தியேட்டருக்குச் சென்று, விட்ட படத்தைத் தொடரச் செய்யும் நிலை, தமிழ்ப் படங்களுக்கு அமெரிக்காவில் வந்திருப்பதற்காக பைடனுக்கு நன்றி சொல்லிவிட்டுப் படத்தைப் பார்த்தோம்.
படத்தின் தொடக்கத்திலேயே கமலைக் கொன்றுவிடுகிறார்கள். படத்தின் இடைவேளை வரை ஃபகத் ஃபாசில் துப்பறிகிறார். அந்தத் துப்பறியும் காட்சிகளினூடே கமலை அங்கங்கு காட்டுகிறார்கள். இது கமல் படமா, ஃபகத் ஃபாசில் படமா என்று சந்தேகம் வந்துவிடுகிறது. அந்தளவுக்கு ஃபகத் திரையை ஆக்ரமித்துவிடுகிறார். பாதி நடிப்பை தன் கண்கள் கொண்டே காட்டிவிடுகிறார். இடைவேளையின் போது தான் கமல் தன் முதல் வசனத்தைப் பேசுகிறார். இது இடைவேளையா, உச்சக்கட்ட இறுதிக்காட்சியா என்பது போல் அந்தக் காட்சியில் மிரட்டிவிடுகிறார்கள்.
அதற்குப் பிறகு, கமலின் கதாபாத்திரம் குறித்த சஸ்பென்ஸை உடைக்கிறார்கள். கமலைச் சுற்றிலும் விஜய் சேதுபதி, ஃபகத், நரேன், செம்பன், காளிதாஸ், சந்தானபாரதி, இளங்கோ குமரவேல், காயத்ரி, ஸ்வதிஸ்டா என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். கமலுக்குப் பேரனாக இன்னொரு குட்டி விக்ரம். இதில் சிலர் துணை கொண்டு, பலரிடம் இருந்து பேரனைக் காப்பாற்றி, போதை கடத்தல் கும்பலின் ஒரு குழுவைப் போட்டு தாக்குவது இந்த விக்ரமின் மீதி கதை. இறுதியில் சூர்யா பலமான அதிரடி எண்ட்ரி கொடுத்து, அடுத்தப் பாகத்திற்குச் சூடு கிளப்பிவிட்டுச் செல்கிறார்.
‘பிக் பாஸ்’ கமல், ‘மநீம’ கமல் எனக் கமலை அடிக்கடி திரைப்படங்களுக்கு வெளியே பார்க்க முடிந்தாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கில் காண முடிந்தது மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. தமிழின் மகத்தான நடிகன் தொடர்ந்து திரைப்படங்களில் பங்களிக்க வேண்டும். வெற்றிகள் பெற வேண்டும் என்பது பெரும்பாலான ரசிகர்களின் விருப்பம். அந்த விருப்பமே இத்திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியாகப் பிரதிபலித்துள்ளது என்று நினைக்கிறேன். அரசியல்தளத்தில் சமீபத்தில் அவர் அடைந்த தோல்வி, பின்னடைவு ஆகியவற்றுக்கு இந்த விக்ரம் வெற்றி ஆறுதல் கொடுத்திருக்கும்.
வில்லனாக விஜய் சேதுபதி. ரஜினி, விஜய், கமல் என்று மாஸ் ஹீரோக்களுக்கு இணையான மாஸ் வில்லனாகப் பட்டையைக் கிளப்புகிறார் விஜய் சேதுபதி. இப்போது தான் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்று ரொமான்ஸ் செய்தவர், இதில் ‘போற போக்குல மூணு கல்யாணம்’ செய்து குடும்பஸ்தனாக, வேட்டி வகையறா சந்தனமாக நகைச்சுவை கலந்த வில்லத்தனம் செய்திருக்கிறார். வழக்கம் போல் இல்லாமல், நடிப்பிலும், நடையிலும் வித்தியாசம் காட்ட முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். குறுகிய காலத்தில் என்னவொரு வெரைட்டியான சினிமா பயணம்!!
படத்தின் இன்னொரு ஹீரோ – இசையமைப்பாளர் அனிருத். தனது திரையுலகப் பயணத்தின் உச்சத்தில் இருக்கிறார். இரண்டு வாரத்திற்கு ஒரு பெரிய படம் வருகிறது. அதில் இவரது இசை இருக்கிறது. அந்தப் படத்திற்கு இவரது இசை பலமாகவும் இருக்கிறது. இவரது பாடல்கள் படத்தின் மேல் எதிர்பார்ப்பைக் கிளப்பிவிடுகிறது. இவரது பின்னணி இசை படத்தின் வெயிட்டை ஏற்றிவிடுகிறது. அனிருத் தொட்டது துலங்குகிறது. அந்த வழக்கம் இதிலும் தொடர்கிறது.
சின்னக் கதாபாத்திரத்தில் வரும் வசந்தி என்றொரு புது நடிகை கூட மனதில் நிற்கும் நடிப்பை வழங்கிவிட்டுச் செல்கிறார். சண்டைக்காட்சிகள் அமர்க்களமாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் ‘போதும்டா’ என்ற உணர்வைக் கொடுக்கிறது. விதவிதமான துப்பாக்கிகள், பீரங்கிகள் என்று ‘டூ-மச்’ ஆக்ஷன் காட்சிகள். படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் என்றாலும், இண்டர்வெல் இல்லாத அமெரிக்கத் தியேட்டரில் கூட, தொடர்ச்சியாக முழுப்படத்தையும் நெளியாமல் பார்க்க முடிகிறது. படத்தின் திரைக்கதை அப்படிக் கச்சிதமாக இருக்கிறது.
ஒரு படத்தில் வரும் கதாபாத்திரம் இன்னொரு படத்தில் தலையைக் காட்டுவது என்பதைத் தமிழ் சினிமாவில் அவ்வப்போது பார்த்திருக்கிறோம். அதைச் ‘சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ என்ற பெயரில் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர் லோகேஷ். வருங்காலத்தில் இப்பாணி தனது படங்களில் தொடர்ந்து இடம்பிடிக்கும் என்று வாக்களித்திருக்கிறார். விக்ரம் கமல், கைதி தில்லி கார்த்தி, ரோலக்ஸ் சூர்யா என மேலும் பல மல்டி ஸ்டாரர் படங்கள் வரவிருக்கின்றன. பார்க்கலாம், இன்னும் என்னென்ன மேஜிக் காட்ட போகிறார்கள் என்று!!
- சரவணகுமரன்